எனது பார்வையில் அண்ணா

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

மலர் மன்னன்


(நவம்பர் 14, 2006 அன்று தஞ்சாவூரில் அண்ணா மன்றத்தினரின் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாக் கூட்டத்தில் சிறப்புரையாக நிகழ்த்தப்பட்ட பேச்சின் சுருக்கம்)

(தஞ்சை வழக்கறிஞர் வி எஸ் ராமலிங்கம் , மலர் மன்னன்)

இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கும் தஞ்சை வழக்கறிஞர் வி எஸ் ராமலிங்கம் அவர்கள் பேசுகையில் எனது பேச்சைக் கேட்கக் கூட்டத்தினரைப் போலவே தாமும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பதாகச் சொன்னார்கள். ஆர்வத்துடன் கேட்கும் அளவுக்குக் கவர்ச்சிகரமாகப் பேச என்னால் இயலாது என்றாலும், பல கருத்துகளை உங்கள் சிந்தனைக்குத் தர முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எனக்கு புத்திசாலிகள் தேவையில்லை, முட்டாள்கள்தான் தேவை; அவர்கள் அனைவருக்குமாக நான் ஒருவனே சிந்தித்துக்கொள்வேன் என்று மிகவும் வெளிப்படையாகவே சொன்னார், ஒரு தலைவர். அப்படிப்பட்ட தலைவரிடம் மிக மிக விசுவாசமான தொண்டராக இருந்தவர் அண்ணா. ஆனால் அண்ணாவே ஒரு தலைவராகப் பரிணாமமடைந்தபோது, எனக்குச் சிந்திக்கத் தெரிந்தவர்கள்தான் தேவை என்று சொன்னார். இது அண்ணாவின் பரிமாணம்.

அண்ணாவின் பரிணாமம் (எவல்யூஷன்), அண்ணாவின் பரிமாணம் (டைமென்ஷன்) இரண்டையுமே நாம் ஆராயக் கடமைப் பட்டிருக்கிறோம்.

அண்ணா மிகவும் சாதாரணமான ஒரு நகரத்தில், மிக மிகச் சாதாரணமான குடும்பத்தில், பிள்ளையை ஓரளவு படிக்கவைத்தால் உத்தியோகம் தேடிக்கொண்டு குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என்பதற்காகவே மிகுந்த சிரமங்களுக்கிடையே பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்ட குடும்பத்தில், பிறந்தவர். அவருக்கு அமைந்த சுற்றுப்புறச் சூழலும் சாதகமானது அல்ல. கல்வியறிவோ அதனால் பெறக்கூடிய தெளிவோ இல்லாத குடும்பமும் சுற்றுப்புறமும்தான் அவருக்கு அமைந்தன. வாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்த குழந்தை அல்ல. கல்வி தொடர்பாக அறிவுரையும் ஆலோசனையும் வழங்கக் கூடியவர் ஒருவர்கூடக் குடும்பத்திலோ அருகாமையிலோ இல்லாத சூழல். எதையும் தானாகவேதான் தேர்ந்து தெளிந்து முடிவெடுத்து தனது வாழ்க்கையினை அமைத்துக் கொண்டாகவேண்டிய நிலையில் இருந்தவர் அண்ணா.

(கூட்டத்தினர்)

பள்ளிப்படிப்பு முடிந்தபின் சிறிது காலம் நகராட்சியில் குமாஸ்தா வேலைக்குச் சென்றவர். எப்படியோ ஒரு நல்வாய்ப்புக் கிட்டி, கல்லூரியில் கல்வியைத் தொடரும் சாத்தியம் கிடைத்தவர். அப்படிப்பட்டவர்தான் கல்லூரிப் பருவத்திலேயே ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் கருத்துச் செறிவுடன் மொழிச் சிறப்பும் அமையும் உரைகளை நிகழ்த்தி, ஆசிரியர்களை வியக்கவைத்தும் பாராட்டச் செய்தும் தனது தகுதியை மெய்ப்பித்தவர். மிகச் சாதாரணமான நகரத்திலிருந்து மிக மிகச் சாதாரணமான கும்பத்தைச் சேர்ந்த, மிக மிகச் சாதாரணமான சூழலிலிருந்து வந்த ஒரு இளைஞனுக்கு இது எப்படி சாத்தியமாயிற்று?

ஆன்மிக உணர்வுள்ள என்னைப் போன்றவர்கள் இதைத்தான் கருவிலே திரு என்போம். அறிவியல் நாட்டம் உள்ளவர்கள் மரபணு என்று சொல்லலாம். அண்ணாவின் முன்னோர்களில் எவரோ சிறந்த ஞானியாக இருந்திருக்க வேண்டும் என்றுதான் இதற்குப் பொருள். இதுதான் அண்ணாவின் பரிணாமத்திற்குத் தொடக்கம்.

நான் சில கருத்துகளை தனித் தனிக் கூறுகளாக உங்கள் முன்பு வைக்கிறேன். பிற்பாடு அவற்றைத் தொகுத்து மொத்தமாக ஒரு முடிவை நாம் எடுக்கலாம்.

நமது வாழ்க்கையில் நாற்பது வயது என்பது ஒரு மையமான பகுதி. இளமையின் வேகமும், முதுமையின் விவேகமும் சங்கமிக்கும் கட்டம். இளமையின் ஆவேசமும் அவசரமும் இருக்காது. அதே சமயம் முதுமையின் தளர்ச்சியும் வந்திருக்காது. நாற்பது வயதிற்குள் ஒருவன் தனது வாழ்க்கையினை அமைத்துக்கொண்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் சிரமம். நாற்பது வயதில் ஒருவன் நிதானத்திற்கு வந்து எதைப்பற்றியும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்து, அதில் உறுதிப்பாட்டுடன் நின்றுவிடுவான். அந்த முடிவிலிருந்து அவனை மாற்றுவது எளிதல்ல. நாற்பது வயதுவரை ஒருவன் கட்டுப்பாடாக இருந்து பழகிவிட்டால் அதன்பின் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து அவனை விலகச் செய்வது இயலாது. நாற்பது வயதுவரை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி வாழ்ந்து பழகிவிட்டால் அதன் பிறகு கட்டுப்பாடாக வாழ முற்படுவது எளிதாக இருக்காது.

எதற்காக இந்த நாற்பது வயதைப் பற்றி விரிவாகப் பேசுகிறேன் என்றால், 1909 ல் பிறந்த அண்ணா அவர்கள் தனது இளமைத் துடிப்பு மிக்க 2526 வயதில் யார் எனக்கு முட்டாள்கள்தான் தேவை என்றாரோ அவரிடம் தொண்டனாகப் போய்ச் சேர்ந்து, 1949 வரை, அதாவது தனது நாற்பதாவது வயதுவரை தான் தலைவனாகத் தேர்ந்துகொண்டவரிடம் மிக மிக விசுவாசமாகப் பணியாற்றியவர். தலைவன் சுபாவம் அறிந்து, அடக்கமும் பொறுமையுமாக நாற்பது வயது வரை இருந்து பழகிவிட்டவர். அண்ணாவே ஒருமுறை சொன்னதுண்டு, நாற்பது வயது வரை அடங்கியும் பணிந்தும் ஆசாபாசமின்றியும் இருந்து பழகிவிட்டேன் இனி எவராலும் என்னை ஆசைகளுக்கு ஆட்படுத்த முடியாது என்று.

அண்ணா தனக்கெனத் தேர்ந்தெடுத்துக்கொண்ட தலைவர், அண்ணாவுக்கு உரிய வாய்ப்பளித்து அவரை மேலே உயர்த்தும் எண்ணங்கொண்டவராக இல்லை. வட மாநிலங்களில் அந்தத் தலைவர் சுற்றுப் பயணம் செய்தபொழுது, தனது தேவைக்காக அண்ணாவையும் உடன் அழைத்துச் சென்றார். தான் தமிழில் பேசுவதைச் சரியான முறையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்ல அண்ணாதான் பொருத்தமானவர் என்பதை அறிந்திருந்ததால்தான். அறிவார்ந்த சபைகளில் தலைவர் பேச, அதனை அழகான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்வார், இளைஞரான அண்ணா. அதனைக் கேட்டவர்கள், நீங்கள் மொழிபெயர்த்துச் சொல்வதே இவ்வளவு சிறப்பாக உள்ளதே, நீங்களாகவும் சிறிது பேசுங்களேன்; உங்களால் மேலும் விளக்கமாக எடுத்துச் சொல்ல முடியும்போலிருக்கிறதே என்று வேண்டினார்கள். என்ன கேட்கிறார்கள் என்று தலைவர் கேட்க, என்னையும் சிறிது பேசச் சொல்கிறார்கள் என்று தெரிவித்தார் அண்ணா. நீ பேச வேண்டியதில்லை, எனக்கு சுயமாகக் கருத்து எதுவும் சொல்லத் தெரியாது, தலைவர் பேசுவதை அப்படியே மொழிபெயர்த்துச் சொல்வதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன் என்று சொல்லிவிடு என உத்தரவிட்டார், தலைவர். அண்ணாவும் மிகுந்த விசுவாசத்துடன் தனது தலைவர் சொன்னதை அப்படியே சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொண்டார். இதுதான் போகுமிடங்களில் எல்லாம் இளைஞரான அண்ணா நடந்துகொண்டவிதம்!

அண்ணாவின் தகுதி நன்கு தெரிந்திருந்ததால்தான், வாய்ப்புக் கொடுத்தால் இந்தத் தொண்டன் தன்னையே மிஞ்சிவிடுவானே என்று அந்தத் தலைவர் அண்ணாவுக்குப் பேசும் வாய்ப்பினை மறுத்தார். ஆனால் பிறகு விதையானது மண்ணைக் கீறிப் பிளந்துகொண்டு முளைத் தெழுவதுபோல் அண்ணா தனக்கு இயற்கையாக அமைந்த தலைமைப் பண்பின் காரணமாகத் தலைவனாக உயர்ந்து நின்றார்.

பதவி தருகிறேன் என்னைத் தலைவனாக ஏற்றுக்கொள் என்று எவருக்கும் ஆசை காட்டி ஆள் சேர்க்கவில்லை, என்னைத் தலைவனாக ஏற்காவிட்டால் ஆளைவிட்டு அடிப்பேன் என்று எவரையும் மிரட்டவில்லை. இயல்பாகவே தனக்கு அமைந்த தலைமைப் பண்பின் பயனாகப் பிறரால் தலைவனாக மனமுவந்து ஏற்கப்பட்டவர் நமது அண்ணா!

இதுதான் அண்ணாவின் பரிணாமம், பரிமாணமுங்கூட! எனக்கு முட்டாள்கள்தான் தேவை என்று சொன்ன தலைவரிடமிருந்து, எனக்குச் சிந்திக்கும் திறன் படைத்தோர் தேவை எனக் கேட்டுக்கொண்டு வெளிப்பட்ட தலைவர் அண்ணா! நாற்பது வயதுவரை அடங்கிப் பணிந்து பக்குவப்பட்டு, தேர்ந்து தெளிந்த உறுதிப்பாடு மிக்கவராக வெளிப்பட்ட தலைவர் அண்ணா!

தன்னம்பிக்கை உள்ள தலைவனுக்குத்தான் தனது தொண்டர்களின் திறன் அறிந்து அவரவர் திறமையை ஊக்குவித்து முன்னுக்குக் கொண்டுவரும் துணிவு இருக்கும். அத்தகைய தன்னம்பிக்கை உள்ளவராக இருந்தவர் அண்ணா. அவரவர் திறமைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் முன்னேறத் தமது கட்சியில் அனைவருக்கும் வாய்ப்பளித்தவர் அவர்.

அண்ணாவின் தலைவர் எனக்கு முட்டாள்கள்தான் தேவை என்றார். அண்ணாவோ தனக்குச் சிந்திக்கத் தெரிந்தவர்கள்தான் தேவை என்றார். இதோ, இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்கும் தஞ்சை வழக்கறிஞர் வி எஸ் ராமலிங்கம் அவர்கள் சென்னையில் அண்ணா இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசும்போது அண்ணாதான் என் தலைவர், ஈ வே ரா அவர்கள் அல்ல என்று சொன்னார். சுயமரியாதை உள்ள ஒருவன் வேறு எப்படிச் சொல்வான்? ராமலிங்கம் சொன்னதில் தவறென்ன?

மனித வாழ்வில் நாற்பது வயது என்பது ஒரு மையமான பகுதி என்று சொன்னேன். அந்த நாற்பது வயதில் ஒருவனுக்கு ஏற்படுகிற தீர்மானம் உறுதி வாய்ந்ததாக இருக்கும் என்றும் சொன்னேன். வேகமும் விவேகமும் சங்கமிக்கும் கட்டம் அது என்பதால்.

நாற்பதாவது வயதில் அண்ணா ஒரு முடிவு எடுக்கிறார். துடிப்புள்ள இளமை தொடங்கி, பக்குவமடைந்த நாற்பது வயது வரை யாரை மிக விசுவாசத்துடன் தனது தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தாரோ அவரைவிட்டுப் பிரிந்து, அவரது இயக்கத்திலிருந்து வெளியேறுவது என முடிவு செய்கிறார். அதற்குரிய முக்கியமான காரணங்களுள் ஒன்று தேசிய உணர்வின் அடிப்படையிலே அமைந்தது. 1947 ஆகஸ்ட் பதினைந்தை துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்றார், தலைவர். இல்லை, அது துக்க தினம் அல்ல என்றார், அதுகாறும் ஒரு வார்த்தைகூடத் தலைவரை மறுத்துப் பேசி அறியாத அண்ணா.

மீண்டும் நாற்பது வயது என்கிற கருத்துக் கூறுக்கே வருகிறேன். அண்ணா அவர்கள் மறைந்து முப்பத்தாறு ஆண்டுகளாகிவிட்டன. இன்று அண்ணாவை அறியாத முதல் தலைமுறைக்கே ஏறத்தாழ நாற்பது வயதாகப் போகிறது. இன்றைக்கு நம் செம்பியன் வயது இளைஞர்களுக்கு (தஞ்சை வழக்கறிஞர் வி எஸ் ராமலிங்கம் அவர்களின் மகன் ) அண்ணா அறிமுகமாவது எவ்வாறு? அவர்களின் உள்ளத்தில் பதியும் அண்ணாவைப் பற்றிய அழிக்கமுடியாத சித்திரம் எத்தகையதாக இருக்கும்?

ஊருக்கு ஊர் அண்ணா சிலைகள், அண்ணாநகர்கள், அண்ணா சாலைகள் என்று வெறும் அடையாளத்திற்கான பெயராகத்தானே அது இருக்க முடியும்? அண்ணா நகர் என்றோ, அண்ணா சாலை என்றோ, அண்ணா சிலை என்றோ குறிப்பிடுகையில் அது ஓர் இடத்தைச் சுட்டுவதற்கான அடையாளமாக இருக்குமேயன்றி அண்ணாவை நினைவு கூர்வதாகவா இருக்கும்?

இந்நிலையில் அண்ணாவைப் பற்றிய புரிதல் ஒரு நாற்பது வயது முதிர் இளைஞனுக்கு எந்த வகையில் கிடைக்கும்? அப்படிக் கிடைக்கிற புரிதல் அந்த நாற்பது வயது முதிர் இளைஞனின் மனதில் எவ்வளவு உறுதியாகப் பதிந்துபோகும்?

இன்று அண்ணாவைத் தமது தலைவர் என்று உரிமைகொண்டாடும் கட்சிகளின் நோக்கையும் போக்கையும் வைத்துத்தானே அந்த நாற்பது வயது இளைஞன் அண்ணாவைப் பற்றிய புரிதலைப் பெற இயலும்? இப்படிப் பார்க்கிறபோது அந்தக் கட்சிகளின் நடத்தை அண்ணாவின் இயல்பிற்கும் அவர் வலியுறுத்திய தன்மைக்கும் ஏற்ப இருப்பதாகக் கூறமுடியுமா? அண்ணாவின் பெயருக்கு எவ்விதக் களங்கமும் நம்மால் ஏற்பட்டுவிடலாகாது என்கிற பொறுப்புணர்ச்சி அவற்றுக்குச் சிறிதளவாவது இருக்கவேண்டாமா? என்ன இருந்தாலும் அவர்கள் இன்று அனுபவித்து மகிழ்வன எல்லாம் அண்ணா போட்ட பிச்சையே அல்லவா?

1967ல் அண்ணாவின் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிவிடலாகாது என்று அரும்பாடு பட்டு அலையோ அலையென்று அலைந்தவர்தானே ஈ வே ரா அவர்கள்? பிறகு அதையும் மீறி அண்ணா ஆட்சிக்கு வந்தார். தமக்கே உரிய பெருந்தன்மையின் காரணமாகத் தமது ஆட்சியைத் தமது தலைவருக்குக் காணிக்கையாக்குவதாகக் கூறினார். அதற்காக அது
ஈ வே ரா அவர்கள் போட்ட பிச்சையாகிவிடுமா என்ன? அவரிடமிருந்து கொள்கை ரீதியாக மாறுபட்டுத்தானே அண்ணா தனிக் கட்சி தொடங்கி, ஆட்சியையும் சரியான வியூகம் அமைத்துக் கைப்பற்ற முடிந்தது? ஆக அண்ணாவுக்குப்பின் அவர் பெயர் சொல்லி செல்வாக்குப் பெற்றுவந்தவர்களுக்கு அது அண்ணா போட்ட பிச்சையேயன்றி வேறென்ன? இந்த உண்மையை ஏன் மறைக்க வேண்டும்?

அண்ணா சிலை, அண்ணா சாலை, அண்ணாநகர் என்பனவெல்லாம் உங்களுக்குத் தாம் ஏறி நின்றுகொள்வதற்கு உதவும் வெறும் பீடங்களேயன்றி வேறென்ன? உங்களுடைய நடத்தையல்லவா அண்ணாவைப் பற்றிய ஓர் தீர்க்கமான அபிப்பிராயத்தை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்படுத்தும்? அது அண்ணாவுக்குப் பெருமை சேர்க்கிற விதமாகவா இருக்கிறது?

தலைமை வகித்துப் பேசிய வழக்கறிஞர் ராமலிங்கம் அவர்கள் எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம் என்று குறிப்பிட்டார்கள். அப்படி ஏதும் இருக்குமா என்று இப்போது பார்க்கலாம்.

இந்திசீனி பாய் பாய் என்று அன்றைய பிரதமர் நேருவும் அவரால் நமக்கு வாய்த்த பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனனும் முழங்கித் திரிந்தபோது, முதுகில் குத்துவதுபோல கம்யூனிஸ்டு சீனா நம்பிக்கை துரோகம் செய்தது. நாம் சிறிதும் எதிர்பாராத வண்ணம் அது ஆக்கிரமிப்புச் செய்து அஸ்ஸாம் வரையிலுமே அதன் படை முன்னேறிவிட்டது. சரியான குளிர்கால இமயமலைச் சாரலில் நமது ராணுவ வீரன் கிழிந்துபோன காலணிகளோடும், பொத்தல்விழுந்த கம்பளிச் சட்டை அணிந்தும், பழங்காலத் துப்பாக்கி பீரங்கி சாதனங்களோடும் எதிரியைச் சமாளித்து இறுதிவரை போராடி மடிந்தான். சீன ஆக்கிரமிப்பின்போது ஆயிரக்கணக்கான இளம் பாரத சிப்பாய்களும், இளநிலை ராணுவ அதிகாரிகளும் முதுநிலை அதிகாரிகளும் நேருமேனன் மெத்தனப் போக்கால் அனாவசியமாகப் பலியாயினர். இந்த இக்கட்டான தருணத்தில்தான் அண்ணா அவர்கள் தமது கட்சியின் உயிர்நாடியான திராவிட நாடு பிரிவினைக் கொள்கையினைத் துணிந்து கைவிட்டு பாரத தேசத்தின் ஒற்றுமைதான் இன்றைக்கு முக்கியம் என்கிற முடிவினை எடுத்தார்கள்.

அண்ணா அவர்கள் தி மு கவின் ஜீவாதாரமான பிரிவினைக் கொள்கையையே துணிந்து கைவிட்டாரே, அதனைப் பாராட்ட வேண்டாமா? எந்த தேசியக் கட்சியாவது பத்திரிகையாவது மனமார அண்ணாவைப் பாராட்டியதுண்டா அதற்காக? மாறாகக் கேலியும் கிண்டலும் செய்தார்கள், அண்ணா பயந்துகொண்டு பிரிவினைக் கொள்கயைக் கைவிட்டார் என்பதாக!

பிரிவினை கோருவது சட்டப்படிக் குற்றம் அவ்வாறு எந்த அரசியல் கட்சியாவது கோருமேயானால் அது தேர்தலில் போட்டியிடத் தடைவரும் என்று ஆலோசிக்கப் பட்டு வருவதாகப் பேச்சு எழுந்தது. வெறும் வதந்திதான், திட்டவட்டமான தீர்மானம் ஏதும் இல்லை அதற்கு. எங்கே தனது கட்சிக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போய்விடுமோ என்று அஞ்சி, பதவி ஆசையின் காரணமாக அண்ணா திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை முந்திக்கொண்டு அவசர அவசரமாகக் கைவிட்டாராம், இன்றைக்கும் கிண்டலாகச் சொல்கிறார்கள், பத்திரிகையாளர் சோ உள்பட!

யாரிடம் பூச்சாண்டி காட்டுகிறார்கள்? அப்படியொரு சட்டம் இயற்றுவது லேசான காரியமா? அப்படியே இயற்றினாலும் அது நிற்குமா? இதோ சட்ட நுணுக்கம் தெரிந்த வழக்கறிஞர்
வி எஸ் ராமலிங்கம் பக்கத்திலேதான் இருக்கிறார், அவரே சொல்லட்டும்!

நமது பாரதம் பல மாநிலங்களின் கூட்டமைப்பு என்றுதான் நமது அரசியல் சாசனம் அடையாளப்படுத்துகிறது. நமது மைய அரசை ஒன்றுபடுத்தப் பட்ட அரசு என்கிறது.
இட் ஈஸ் எ பெடரல் செட் அப்! இட் ஈஸ் எ யூனியன் கவர்ன்மென்ட்! இட் ஈஸ் ஸெட் அஸ் இன்டியன் யூனியன்! பிரிவினை கோரும் அரசியல் கட்சிக்குத் தேர்தலில் போட்டியிடும் தகுதி இருக்காது என்று அவசரச் சட்டமே பிறப்பித்தாலும் இரன்டு மாதங்களுக்குப்பின் மசோதாவாக அதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் முன்பாகவும் வைத்து நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் அனுமதியையும் பெற்றான பிறகுதானே சட்டமாக அமுலுக்குக் கொண்டுவர முடியும்? அப்படியே வந்தாலும் அதனை ஆட்சேபித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்காட முடியாதா? சட்டமும் நடைமுறையும் தெரிந்த நீதிபதிகள் இந்தச் சட்டம் நமது அரசியல் சாசனத்திற்கு முரணாக உள்ளது, ஆகவே இது செல்லாது எனத் தீர்ப்பளித்துவிட மாட்டார்களா? இந்தச் சட்டம் சாசனம் உத்தரவாதம் அளித்துள்ள ஜீவாதார உரிமையான தேர்தலில் போட்டியிடும் உரிமையை எனக்கு மறுக்கிறது; சட்ட மன்றத்தினுள்ளேயோ நாடாளுமன்றத்தினுள்ளேயோ நான் ஓர் உ றுப்பினனாக நுழைவதானால் பாரதத்தின் இறையாண்மையை ஒப்புக்கொண்டு அதற்கு ஊறு நேராதவாறு நடந்துகொள்வேன் என்று வாக்குறுதி அளித்த பிறகுதான் நுழைய முடியும் என்கிற நிலைமை இருக்கையில் இந்தச் சட்டம் அவசியமற்றது, முரணானது என்று ஒருவன் வாதாடி அதில் வெற்றியும் பெறமுடியாதா? வழக்கறிஞர் ராமலிங்கம் அவர்களே சொல்லட்டும்! யாரிடம் பூச்சாண்டி காட்டுகிறார்கள்? அண்ணாவிடமா? அன்றைக்கு அவர் என்ன நாதியிலாத, ஊர் பேர் தெரியாத அனாதையாகவா இருந்தார்? எத்தனை லட்சம் தம்பிமார்கள் அவருக்குப் பின்னால் அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டு நின்றிருந்தார்கள் அன்றைக்கு? இதையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

திராவிட நாடு கோரிக்கை திமுகவின் உயிர் நாடியான கொள்கையாயிற்றே, நமது கட்சியின் இருத்தலுக்கே திராவிட நாடு கோரிக்கைதானே காரணம், இதனைக் கைவிட்டுவிட்டு எப்படி மக்கள் மத்தியில் முகத்தைக் காட்டுவது, அப்படியே காட்டினால் எந்த அளவுக்கு மக்கள் நம்மை எள்ளி நகையாடாமல் ஏற்றுக்கொள்வார்கள் என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்து எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து அண்ணா அவர்கள் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுவதாக மிகமிகத் துணிவோடு பகிரங்கமாக அறிவித்தார்கள்! இது அவரைப் பொருத்தவரை மிகப் பெரிய தியாகமே அல்லவா? தேச நலன் கருதி, தேசிய உணர்வு மேலோங்கியதன் விளைவாக அல்லவா அண்ணா அவர்கள் திராவிட நாடு கோரிக்கை
யினைக் கைவிட்டார்கள்? இதனைப் பாராட்ட மனம் இல்லையென்றாலும் ஏளனம் செய்யாமலாவது இருப்பதல்லவா நாகரிகம்?

தேசியக் கட்சி எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் கட்சிகள் அண்ணாவின் தேசிய உணர்வைப் பாராட்டி ஒரெயொரு கூட்டமாவது போட்டனவா? அண்ணாவிடம் அந்த இக்கட்டான தருணத்தில் தேசிய உணர்வே மேலோங்கியிருந்ததை நான் கண்டுகொள்கிறேன். தேச நலன் கருதியே அவர் தமது கட்சியின் ஜீவாதாரமான கொள்கையையே துணிந்து கைவிட முன் வந்தார் என்கிறேன். இப்போது நீங்களே முடிவு செய்யுங்கள் எனக்கும் வழக்கறிஞர் ராமலிங்கம் அவர்களுக்குமிடையே எங்கே இருக்கிறது கருத்து வேறுபாடு?

இனி இன்னோரு கருத்துக் கூறை உங்கள் முன் வைக்கிறேன்.

அண்ணா அவர்களுக்கு நமது பாரம்பரியம், நம்முடைய அடிப்படைக் கலாசாரம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த முன்னெச்சரிக்கை இருந்தது. எங்கே வாக்குகள் விழாமல் போய்விடுமோ என்கிற கவலை இன்றி நமது கலாசாரப் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிப்பவராக அண்ணா அவர்கள் இருந்தார்கள். எனவேதான் கன்னியாகுமரி மாவட்டத்தை பாரதத்தின் அடிப்படையான கலாசாரத்திற்கு மாறாகக் கிறிஸ்தவ கலாசாரமயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதைப் புரிந்துகொண்டு, அதற்கு மாற்றாக குமரிமுனையில் விவேகானந்தர் நினைவாலயம் அமைப்பதற்கான நடவடிக்கையினை தமது கட்சியின் அதிகாரப் பூர்வமாகவே ஆதரித்தார்கள். தேசியம் பேசிய காங்கிரஸ் கட்சியோ அதற்கு முற்றிலும் மாறாக, கிறிஸ்தவ வாக்கு வங்கியை இழக்க நேரிடுமோ என்று அச்சப்பட்டுக் கொண்டு விவேகானந்தர் நினைவாலயம் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது!

தேர்தலில் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் வாக்குகளைப் பற்றிக் கவலைப்படாமல் தேசிய கலாசாரப் பாதுகாப்பிற்கு அவசியமானதை அண்ணா அவர்கள் துணிந்து மேற்கொண்டார்கள். அதேபோல பச்சைத் துரோகமான சீன ஆக்கிரமிப்பின்போது அண்ணா தேசிய உணர்வு மிக்கவராகத் தமது கட்சியின் அடிப்படைக் கொள்கையினையே துறக்க முன்
வந்தார்கள். இதனையே ஓர் ஆதார பலமாகக் கொண்டு இன்றைய சூழ்நிலையில் அண்ணா அவர்கள் இருப்பார்களேயானால் எத்தகைய முடிவினை எடுப்பார்கள் என்று சிந்தித்துப் பார்க்கிறேன். உங்களையும் இவ்வாறே சிந்தனை செய்து ஒரு முடிவுக்கு வருமாறு வேண்டுகிறேன். ஏனெனில் சிந்திக்கச் சொன்ன தலைவர்தானே அண்ணா அவர்கள்?
சிந்தித்துப் பார்க்கத் தெரியாத முட்டாள்கள்தான் தனக்குத் தேவை என்று சொன்னவர் அல்லவே அவர்?

ஆக, இன்று அண்ணா இருந்தால் தேசிய உணர்வு மிக்க அவர், எங்கே தமது கட்சிக்கு வாக்குகள் விழாமல் போய்விடுமோ என்றெல்லாம் கவலைப்படாமல் தேச நலனையே கருத்தில் கொண்டு எடுக்கக்கூடிய முடிவு என்னவாக இருக்கும்?

இன்று நமது நாடு எதிர்கொண்டுள்ள தலையாய பிரச்சினை என்ன? நமது நிதி ஆதாரங்கள் யாவும் வேறு வழியின்றி வீணடிக்கப்படுவது எதன்பொருட்டு? எதன் விளைவாக நமது நிதியின் மிகப் பெரும் பகுதியையும் பெரும்பாலான மனித ஆற்றலையும் பாதுகாப்பிற்காகச் செலவிட்டு, மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்?

ஒன்று முகமதிய பயங்கர வாதம், மற்றொன்று கிறிஸ்தவ பயங்கர வாதம். இந்த இரு பயங்கர வாதங்கள்தாம் இன்று நம்மைப் பெரும் சோதனைக்குள்ளாக்கியிருக்கின்றன. முன்பு நமது தேசத்தின் எல்லைக்கும், கலாசாரத்திற்கும் பேரிழப்பு நேரிடும் என்கிற அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, அற்பமான அரசியல் ஆதாயம் கருதாமல் துணிவுடன் வெளிப்படையாக முடிவுகளை எடுத்த அண்ணா அவர்கள் இப்போதும் எது பற்றியும் தயக்கம் காட்டாமல், எங்கே தமது கட்சிக்கு வாக்குகள் விழாமல் போய்விடுமோ என்கிற கவலை இன்றி, முகமதிய, கிறிஸ்தவ பயங்கரவாதங்களை மக்கள் முன்பாக பகிரங்கப்படுத்தி அவற்றைக் கண்டிக்கத் தவறமாட்டார்கள் என்னும் எனது சிந்தனையினை உங்கள் முன் வைத்து நீங்களும் இதன் அடிப்படையில் சிந்தித்து ஒரு முடிவினை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, நான் நீண்ட நெடுநேரம் பேசிவிட்ட போதிலும் மிகவும் பொறுமையாக எனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தமைக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து எனது பேச்சை முடித்துக் கொள்கிறேன்.

(இக்கூட்டத்தில் மலர்மன்னன் பேச்சு இரண்டு மணி நேரத்திற்கும் சிறிது கூடுதலாகவே நீடித்தது. முகமதிய பயங்கர வாதம், கிறிஸ்தவ பயங்கர வாதம் என மலர்மன்னன் அடையாளப் படுத்தியபோது, பாபர் மசூதி இடிப்பு ஹிந்து பயங்கர வாதம் என ஒப்புக் கொள்கிறீர்களா எனக் கூட்டத்திலிருந்து ஒருவர் குரல் எழுப்பினார். அதனையே ஒரு நல்வாய்ப்பாகக் கொண்டு பாபர் நினைவு மண்டபம் ஒரு மசூதிக்கான தகுதிகளைப் பெற்றிருக்கவில்லை என்ற உண்மையினையும், தில்லிக்கு அருகே பானிப்பட்டில் இப்ராகிம் லோடி என்கிற பாரதத்தில் குடியேறிவிட்ட முகமதிய சுல்தானுக்கும் பாபர் என்கிற அந்நிய முகமதியனுக்கும் நடந்த போரில் பாபர் வெற்றி பெற்றதற்கு அடையாளமாக அவனது தளகர்த்தன் எழுப்பிய நினைவு மண்டபம்தான் அது என்கிற வரலாற்றுச் செய்தியினையும் மலர் மன்னன் விளக்கினார். ஹிந்துக்களை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே
ஹிந்துக்கள் புனிதத் தலமாகக் கருதும் அயோத்தியில் அது கட்டப்பட்டது என்றும் மலர்மன்னன் தெரிவித்தார். 1857 ல் நவாப் வாஜித் அலி ஷா ஹிந்துக்களின் ஆதரவை முன்னிட்டு பாபர் மண்டபத்தையொட்டி அவர்கள் குழந்தை ராமனை வழிபட இடமளிக்கவே, முகமதியர் வீம்புக்காகவும், தமது மேலாதிக்கத்தை உறுதி செய்யவும் மண்டபத்தினுள் தொழுகை தொடங்கினார்கள் என்ற வரலாற்றுத் தகவலை மலர் மன்னன் வெளியிட்டார். அயோத்தியில் பாபர் மண்டபம் இருந்த வட்டாரம் காலங் காலமாக ஜன்மஸ்தான் என்றே வருவாய்த் துறை மற்றும் பல ஆவணங்களில் வழங்கப்பட்டுவருவதாகவும் அங்கேயுள்ள துணை அஞ்சலகம் ஜன்மஸ்தான் துணை அஞ்சலகம் என்றுதான் குறிப்பிடப்படுகிறது என்றும் சுட்டிக் காட்டிய மலர்மன்னன், அயோத்தியின் ஓர் பகுதி ஜன்மஸ்தான் என்று அழைக்கப்படுமானால் அது யாருடைய ஜன்மத்தலமகாக இருக்கக்கூடும், நிச்சயமாக பாபரின் ஜன்மத்தலமாக இருக்காது அல்லவா என்றார். ஐநூறு ஆண்டுகள் பழமையான சிதிலமடைந்த பாபர் மண்டபம் இடிக்கப்பட்டதை இதுவரை நம் நாட்டில் ஏறத்தாழ எழுபதாயிரம் அப்பாவி மக்களின் உயிரைக் குடித்துப் பலரின் உடல் சிதைத்து, பல அப்பாவிகளைக் கடத்திச் சென்று நிதானமாகக் கழுத்தை அறுத்துக் கொன்றதோடு ஐயாயிரம் கோடிக்கும் அதிகமான உடமைகளையும் நாசம் செய்த முகமதிய பயங்கரவாதச் செயலுடன் ஒப்பிட்டு ஹிந்து பயங்கர வாதம் எனப் பேசுவது முறையல்ல என்றும் மலர்மன்னன் கூறினார். வேண்டுமானால் வன்முறையாக ஒரு பழங்காலக் கட்டிடம் இடிக்கப்பட்டது என்று சொல்லலாமேயன்றி அது பயங்கரவாதச் செயல் அல்ல என்று அவர் விளக்கினார். அப்போது புதுக்கோட்டையிலிரு ந்து தன் தோழர்களுடன் வந்திருந்த நீண்ட கால தி மு க முன்னணி உறுப்பினரும், அண்ணாவின் அபிமானியுமான சோமு, இது இந்து தேசம் இந்துக்களை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே முகமதிய மன்னர்கள் இந்துக்களின் புனிதத் தலங்களில் தமது மசூதிகளையும் வெற்றி மண்டபங்களையும் கட்டினார்கள் என்ற வரலாற்று உண்மையை மறுக்க முடியாது என உரத்த குரலில் அறிவித்தார். அறுபத்து ஐந்து வயதான புதுக்கோட்டை சோமு வரலாற்றில் கல்லூரிப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. புதுக்கோட்டையிலும் அண்ணா பிறந்த நாள் கூட்டம் ஏற்பாடு செய்யத் தாம் விரும்புவதாகவும் அதில் சிறப்புரையாற்ற மலர்மன்னன் வரவேண்டும் என்றும் சோமு கேட்டுக் கொண்டார். அதற்கு மலர் மன்னன் ஒப்புக் கொண்டார். தாம் நீண்ட நேரம் பேசிக்கொண்டே போவதால் எப்போது நிறுத்த வேண்டும் எனக் கூட்டத்தில் ஒரேயொருவர் சொன்னாலும் போதும், பேசுவதைத் தாம் நிறுத்திக் கொள்வதாக மலர் மன்னன் இடையிடையே கூறி வந்தார். அவர் அவ்வாறு கூறியபோதெல்லாம் தொடர்ந்து பேசுங்கள், நிறுத்தவே தேவையில்லை என்று கூட்டத்தினர் பதில் அளித்து அவரை ஊக்குவித்தனர்).


Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்