பாவண்ணன்
கேபிள் இணைப்பு வேலையில் எங்களுக்குத் துணையாக இருக்கும் இளைஞன் ராஜீவ். சுறுசுறுப்புக்குப் பேர்போனவன். வேலைக்குப் புறப்படும் முன்னர் ஒவ்வொரு நாளும் என்னென்ன எடுத்துச் செல்லவேண்டும் என்று சரிபார்த்துக்கொள்ள ஒரு பட்டியலை நான் அவனிடம் எழுதித் தந்திருந்தேன். அதன்படி எல்லாவற்றையும் சரியாக எடுத்துவைத்துவிடுவான் அவன். வேலைக்கு என்று புறப்பட்டபின்னர் ஒரு வத்திக்குச்சி வேண்டும் என்று சொன்னாலும்கூட முப்பதுமைல் தொலைவுக்கு வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தால்தான் கிடைக்கும். அத்தகைய ஒரு வனாந்தரத்தில் நாங்கள் வேலைசெய்துவந்தோம். இப்படி ஒவ்வொன்றுக்கும் அலைந்த அனுபவம் ஏற்கனவே இருந்ததால் நானே இப்படி ஒரு பட்டியலை எழுதித் தயாரித்து அவனிடம் தந்திருந்தேன். அப்பட்டியல் அவனுக்கு வேதப்புத்தகம் மாதிரி. அந்த வேலையை அவன் ஒப்புக்கொண்டபிறகு ஒருநாளும் பிழை ஏற்பட்டதில்லை.
அன்று சம்பளநாள். மாலையில் எல்லாருமே வேலையை விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தோம். காலையில் வாங்கிய சம்பளப்பணம் கையிலிருந்தது. வண்டி நகரின் மையத்தில் ஊர்ந்துகொண்டிருந்தபோது சிறிதுநேரம் வண்டியை நிறுத்தமுடியுமா என்று கேட்டான் அவன். வண்டியை ஓரம் காட்டி நிறுத்தியதும் அருகிலிருந்த முனியாண்டி விலாஸ்க்குள் ஓட்டமாக ஓடிச்சென்று சில நிமிடங்களில் திரும்பி வந்தான். விளையாட்டுக்காக ‘என்னப்பா இது ? ‘ என்று கேட்டேன். அவன் ‘எங்க அம்மாவுக்கு சார். இந்த ஓட்டல் பிரியாணின்னா அவுங்களுக்கு உயிரு சார் ‘ என்றான் ராஜீவ்.
‘சரி, வீட்டுலயே வாங்கி சமைச்சி தரலாமில்லயா ? எதுக்கு ஓட்டல்ல வாங்கணும் ? வெள்ளாட்டுக் கறியோ செம்மறியாட்டுக்கறியோ, எதப்போட்டு சமைக்கறான்னு நம்மால எப்படி கண்டுபிடிக்க முடியும் ? ‘ என்றேன் நான். ‘வீட்டுலயும் மாசத்துக்கு ஒருதரம் ரெண்டுதரம் செஞ்சிக் குடுக்கறதுதான் சார். ஆனாலும் இந்த ஓட்டல்ல செஞ்சதுன்னா அவுங்களுக்கு ஒரு பிரியம் சார். எப்படியோ அப்பா காலத்துலேருந்து இப்படி பழகிட்டாங்க. மாசத்துக்கு ஒருதரம் சம்பளத்தன்னிக்கு வாங்கிப்போய் குடுத்தா ஆசையா சாப்பிடுவாங்க ‘ என்றான் ராஜீவ். அவன் தனக்குள் தன் தாயின் உருவத்தைப் பார்ப்பதை முகத்தை நோக்கிதுமே புரிந்தது.
பிறகு சம்பளநாளன்று ஊருக்கு வெளியே வேலைக்குச் செல்லவேண்டிய நிலைமை உருவாகும்போதெல்லாம் திரும்பும்போது முனியாண்டி விலாஸ் அருகே வண்டியை நிறுத்துவது வழக்கமாகிவிட்டது. என்னிடம் இரண்டு ஆண்டுகள் வேலைசெய்தான் அவன். பிறகு வேறொருவரிடம் மாற்றப்பட்டான். ஆறேழு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் எனக்குத் துணையாக வந்தான். அவனைப் பார்த்ததுமே எனக்கு அவன் தாயின் நினைவுதான் வந்தது. ‘உங்க அம்மா எப்படி ராஜீவ் இருக்காங்க ? ‘ என்று கேட்டேன். ‘நல்லா இருக்காங்க சார் ‘ என்றான். ‘இன்னும் முனியாண்டி விலாஸ் பிரியாணி வாங்கித் தரீங்களா ? ‘ என்றும் கேட்டேன். அவனுக்குத் தன் தாயைப்பற்றி விசாரித்தது மிகவும் சந்தோஷம் தந்தது. சம்பளத்தன்று முனியாண்டி விலாஸ் பக்கம் வண்டியை நிறுத்துவது மீண்டும் தொடங்கியது.
‘ஒங்களுக்கும் ஒரு கால் பிளேட் வாங்கியாரட்டுமா சார் ? சும்மா ருசி பாருங்க. ரொம்ப நல்லா இருக்கும் ‘ என்று சொன்னான் ராஜீவ் ஒருநாள்.
‘அதெல்லாம் வேணாம் ராஜீவ். நான் அசைவம் சாப்படறதில்ல. ‘
அவன் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தான். நம்ப முடியாமல் ‘உண்மையாவா சார் ? ‘ என்று கேட்டான்.
‘ஆமாம்பா. சின்ன வயசிலேருந்து எப்படியோ அது புடிக்காத பொருளாயிடுச்சி. சாப்ட்டதில்ல. ‘
‘வீட்டுல ? ‘
‘அவுங்களுக்குப் பழக்கமுண்டு. ஆனாலும் எனக்காக அவுங்களும் சாப்படறத விட்டுட்டாங்க. எவ்வளவு சொன்னாலும் கேக்கறதில்ல. ‘
அந்த ராஜீவை நாங்கள் வெகுவிரைவில் இழக்கநேர்ந்தது. சரக்குகளை ஏற்றிச்சென்ற ஒரு வாகனத்துடன் துணையாக குண்டக்கல் என்னும் ஊருக்குச் சென்றபோது எதிரே எரிபொருளுடன் வந்த டேங்கர் லாரி நேருக்குநேர் மோதி வண்டி கவிழ்ந்தது. உருக்குலைந்து நசுங்கிய வாகனத்துக்கு அடியிலிருந்து அவன் உடலை அலங்கோலமாக எடுக்கவேண்டியிருந்தது. அவனது இறுதிஊர்வலத்தில் அனைவரும் கலந்துகொண்டோம். தளர்ந்த உடலுடன் அழவும் தெம்பில்லாமல் தாரைதாரையாகக் கண்ணீர் பெருகிய கண்களுடன் அவன் உடல் கிடத்தப்பட்டிருந்த கட்டிலருகே உட்கார்ந்திருந்தவர் அவன் அம்மா என்பதைப் பார்த்ததுமே புரிந்துகொண்டேன். வரும் முதல்தேதி அவளுக்கு முனியாண்டி விலாஸ் பிரியாணிப் பொட்டலத்தை வாங்க ராஜீவ் இருக்கமாட்டான் என்னும் செய்தி மின்னலைப்போல மனத்துக்குள் ஒருகணம் ஓடியது. அதற்கப்புறம் முனியாண்டி விலாஸ் பக்கமாக வண்டி செல்லும்போதெல்லாம் ராஜீவ் நினைவும் அவன் தாயார் நினைவும் தவறாமல் வந்துவிடும்.
தாயாரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவதில் பிள்ளைகள் அடையும் பேரின்பத்தைப்பற்றிப் பல கதைகள் உண்டு. ஐம்பது வயதிலும் வீட்டைவிட்டுக் கிளம்பும் முன்னர் தன் அம்மாவின் அறைக்குச் சென்று ஏதாவது வேணுமாம்மா என்று கேட்டுவிட்டுப் புறப்படும் பல நண்பர்களைப் பார்த்திருக்கிறேன். டில்லிக்கு ராஜாவானாலும் தல்லிக்குப் பிள்ளை என்பது பழமொழி. ராஜா அந்தஸ்தில் ஒருவன் இருந்தாலும் வணங்கியும் பிரியத்தோடும் அவன் தன் தாயாரிடம் மட்டுமே பேசமுடியும். பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போகவேண்டும் என்று தாயாக வளர்த்த கைகேயி சொன்னதும் துணைவியான சீதையும் உடன்பிறப்பான லட்சுமணனும் உடன்வர அன்றலர்ந்த தாமரைபோன்ற முகத்துடன் ராமன் காட்டுக்குச் சென்றதைப் படிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். தாயின் சொல்லுக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. தாய் ஒன்றைக் கேட்டு நிறைவேற்ற முடியாமல் போகும் நிலையை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. மனைவியைத் தள்ளிவிட்டு வாழத்துாண்டும் தாயார்களும் அதைச் சிரமேற்கொண்டு செயல்படுத்தும் புத்திரர்களும் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். தம் வார்த்தைகளைப் பெற்றெடுத்த பிள்ளைகள் மீறமாட்டார்கள் என்கிற அதீத நம்பிக்கையின் விளைவாகச் சில தாயார்கள் அவ்விதமாகக் கோணலாக யோசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
தாயின் விருப்பத்தை நன்றாக அறிந்துவைத்திருந்தும் நிறைவேற்றமுடியாத சூழலில் சிக்கித் தவிப்பவர்களின் மனநெருக்கடிகளை வார்த்தையால் வடித்துவிடமுடியாது. எல்லா நெருக்கடிகளையும் விளையாட்டுப்பேச்சு பேசியோ சிரித்தோ சமாளித்து விடலாம். அவை அனைத்தும் தற்காப்பு ஆயுதங்களாக நிச்சயம் உதவக்கூடும். ஆனால் ஒரு தாயின் குறைந்தபட்ச விருப்பத்தைக்கூட நிறைவேற்ற வழியின்றி மனம்குன்றிப்போகிறவன் தன் எல்லா ஆயுதங்களையும் இழந்த நிராயுதபாணியாகக் குலைந்துபோகிறான். அதுபோன்ற எண்ணங்களில் மனம் மிதக்கும்போதெல்லாம் திலீப்குமாரின் மூங்கில் குருத்து என்னும் கதையையும் தொடர்புபடுத்தி நினைத்துக்கொள்ளும்.
கோவையில் மராத்திக்காரரான கிருஷ்ணாஜிராவின் தையல் கடையில் பதினைந்து ரூபாய் வாரக்கூலிக்குக் கணக்கெழுதிக்கொண் டிருக்கும் ஒரு சிறுவனுடைய பார்வையில் விரிகிறது அக்கதை. தியாகராஜா புதுவீதியில் இட்லி விற்கும் ஒரு விதவைப் பெண்ணின் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கிறது அவனுடைய குடும்பம். மூலவியாதி முற்றி அவன் அப்பா இறந்துவிட்டார். வயதான அம்மாதான் எல்லாரையும் கவனித்துக்கொள்கிறாள். அக்காவை நீலகிரியில் கட்டிக் கொடுத்திருக்கிறது. தம்பிப் பையன் ரெடிமேட் பேக்டரியில் மாதச் சம்பளம் ஐம்பது ரூபாய்க்கு வேலை செய்கிறான். இரண்டு சிறுவர்களின் வருமானத்தை ஆதாரமாகக் கொண்டுதான் அக்குடும்பம் நடக்கிறது.
அன்று சனிக்கிழமை. மறுநாள் அந்தச் சிறுவனுடைய அப்பாவுக்குத் திவசம். திவசம் செய்விக்க ஒரு பிராமணனை அழைத்திருக்கிறாள் அம்மா. திவசச் செலவுக்குப் பணமில்லை. சாப்பாட்டுக்கு அரிசியும் அன்றோடு தீர்ந்துபோயிருக்கிறது. சம்பளப்பணம் வாங்கிவந்தால்தான் எல்லாவற்றுக்கும் சரியாக இருக்கும் என்று காலையிலேயே அம்மா சொல்லியனுப்பியிருக்கிறாள். ஆனாலும் அன்று கடையில் வசூல் அவ்வளவு பிரமாதமாக இல்லை. கடையில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் கூலி கொடுக்க சுமார் இருநுாறு ரூபாயாவது வேண்டும். பிற்பகல் மூன்று மணிவரை பதினைந்து ரூபாய்கூட வசூலாகவில்லை. எல்லாருமே கூலியைப் பற்றிய பீதியுடன் அரைமனத்துடன் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
வெளியே போயிருந்த கிருஷ்ணாஜிராவ் சாயங்காலமாக கடைக்குத் திரும்புகிறார். வரும்போதே அவருக்கு எரிச்சல் ஊட்டுகிறமாதிரி கடையில் சில சம்பவங்கள் நடைபெற்றுவிடுகின்றன. கடை ஊழியரைக் கன்னாபின்னாவென்று திட்டுகிறார். எதிர்வீட்டிலிருந்து ராணி புத்தகத்துடன் திரும்பிவரும் மகளையும் திட்டுகிறார். அவளுக்கு அடியும் விழுகிறது. ஏழுமணிவரையிலும் கூட பணம் வசூலாகவில்லை. ஒருவித மனச்சோர்வுடன் டா குடித்துவருவதாக அனுமதி வாங்கிக்கொண்டு வெளியே செல்கிறான் சிறுவன். திரும்பும் சமயத்தில் ராவ் உற்சாகத்துடன் இருப்பதாகத் தோன்றுகிறது. கூலிக்கான பணம் வசூலாகியிருப்பதற்கான தடயங்கள் தென்படுகின்றன.
ஒன்பதரை மணிக்கு எல்லாருக்கும் கூலி பட்டுவாடா செய்யப்படுகிறது. எல்லாருக்கும் சம்பளம் தருகிற ராவ் சிறுவனிடம் திங்களன்று வாங்கிக்கொள்ளுமாறு சொல்லிவிடுகிறார். கையில் பணம் இருக்கிறது. ஆனால் தனக்கு வேண்டுமென்று வைத்துக்கொள்கிறார். பிறகு கடையை மூடும் சமயத்தில் தைத்துத் தயாராக இருக்கிற கோட்டுகளைக் கல்லுாரி விடுதியில் மறுநாள் கொடுத்துப் பணம் வாங்கிவந்தால் சம்பளப் பணத்தை அப்போதே எடுத்துக்கொள்ளலாம் என்று ஆசை மூட்டுகிறார். நிராசையுடன் வீட்டுக்கு நடந்துசெல்கிறான் சிறுவன்.
வாரக்கூலி கிடைக்கவில்லை என்று அறிந்ததும் ஆவேசமுடன் வசைபாடுகிறாள் அவன் அம்மா. திவசத்துக்கு வருகிற பிராமணனுக்கு எப்படி சோறு போடுவது என்பது அவள் பிரச்சனை. ஏஇந்த லட்சணத்தில உன் அக்கா இந்த மூங்கில் குருத்தையும் வாங்கிக்கொண்டுவந்து போட்டுவிட்டாள் நாளை குழம்பு வைக்கஏ என்று தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள். மூங்கில் குருத்துக் குழம்பு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிடித்தமான ஒன்று. அவன் அப்பா இறந்த தினத்தன்று கூட அம்மா அதையே சமைத்திருந்தாள். அப்பாவின் திவசத்தன்று தவிர மற்ற நாள்களில் அம்மா அதைச் சாப்பிடமாட்டாள். மூங்கில் குருத்தை இந்த வருஷமும் அம்மா சாப்பிடாமல் போகக்கூடும் என்று நினைப்பதே அவனுக்கு அபத்தமாகப் படுகிறது.
இரவு வெகுநேரம் கழித்து துக்கமான குரலில் அம்மா தம்பியிடம் வீட்டுக்காரியிடம் காலையில் இரண்டு ரூபாய் கடனாக வாங்கிவந்து தருவதாகவும் திவசத்துக்கு வரும் பிராமணனுக்கு உணவு விடுதியில் சாப்பாடும் இனிப்பும் வாங்கிக்கொடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறாள். மறுநாள் காலை ஆறேகாலுக்கே வீட்டைவிட்டுக் கடைக்குக் கிளம்புகிறான் சிறுவன். கடையில் தைத்துத் தயாராக இருக்கிற கோட்டுகளை எடுத்துக்கொண்டு கல்லுாரிவிடுதிக்குச் செல்கிறான். கோட்டுக்கு உரியவர்களில் பாதிப்பேர் அன்று இல்லை. மீதிப்பேர்கள் வாங்கிக்கொண்டு பணம்கொடுக்க வழியில்லாமல் இருக்கிறார்கள். ஒற்றை ரூபாய்கூட வசூலாகாமல் வெறும்கையோடு கடைக்குத் திரும்புகிறான் சிறுவன். கோட்டுகளைக் கடையில் வைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்புகிறான். அன்று எல்லாருமே பட்டினியாக படுத்துக்கொள்கிறார்கள்.
மறுநாள் காலை கடைக்குச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த போது அம்மா அவனையே வெறித்துப்பார்க்கிறாள். அவள் முகம் பட்டினியால் மிகவும் வாடிப்போயிருக்கிறது. தலைவாரிக்கொண்டு வாசலை நெருங்கிச் செல்லும் தருணத்தில் மூங்கில் குருத்து வைத்திருந்த பையை அவனிருந்த திசைப்பக்கம் வீசி ‘இதைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போ ‘ என்று சொல்கிறாள். அவளை நேருக்குநேர் பார்க்கும் திராணி இல்லை அவனுக்கு. மனம் குழம்பி நிறைய கோபத்துடன் ‘நீயே போட்டுக்கொள் ‘ என்று சொன்னபடி வெளியேறுகிறான்.
பசிவந்தால் பத்தும் பறந்துபோகும் என்று சொல்வதுண்டு. எதையாவது செய்து எதுவும் பறந்துபோகாமல் இருக்கத்தான் ஒவ்வொருவரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் கைமீறி விஷயங்கள் நடக்கத் தொடங்கும்போது இயலாமையுடன் கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தபடி கலவரத்துடன் அல்லது பதற்றத்துடன் நிற்கவேண்டியிருக்கிறது. வாரக்கூலி வரவில்லை. வீட்டில் அரிசி இல்லை. திவசத்துக்கான ஏற்பாடுகளைச் செய்ய விதியில்லை. திவசத்தன்று மட்டுமே சாப்பிடக்கூடிய பொருளாக மாறிவிட்ட அம்மாவுக்குப் பிரியமான மூங்கில்குருத்தைச் சமைக்கவோ எந்த வழியுமில்லை. குடும்பமே பட்டினி கிடக்கிறது. மறுநாள் காலையில் மெளனமாக வெளியே கடைக்குக் கிளம்புகிற தருணத்தில் அம்மா பொறுமை கரைந்து தன் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறாள். மூங்கில் குருத்துப்பையை வன்மத்துடன் வீசியடிக்கிறாள். அவனது இயலாமையை நோக்கிச் செலுத்தப்பட்ட அந்த வன்ம அம்பு சரியாகத் தாக்கி அவன் பொறுமையையும் கரைத்துவிடுகிறது. ‘நீயே போட்டுக்கோ ‘ என்று எதிர்த்துப் பேசவைக்கிறது. முதல்நாள் இரவு வெறும் கையுடன் திரும்பியவனைப் பார்த்து ஏராளமான வசைகளை அதே அம்மா உதிர்த்தபோது பொறுத்துக் கொண்டவனால் அந்தக் கணத்தில் அந்த வார்த்தையைப் பொறுத்துப்போக முடியவில்லை.
ஒரு தற்காப்பு ஆயுதத்தைப்போல அவனிடம் எப்போதும் குடியிருக்கிறது நகைச்சுவையுணர்வு. பசியையும் வேதனையையும் எரிச்சலையும் வெறுப்பையும் அந்த நகைச்சுவை உணர்வால் அவன் சாமர்த்தியமாகப் போர்த்தி மறைத்துக்கொள்கிறான். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்னாலேயே கோவையில் வாரக்கூலி முறை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்று மிகச்சாதாரணமாகத் தொடங்குகிற கதையின் ஆரம்ப வாக்கியத்திலேயே கசப்பை மறைத்துக்கொண்ட புன்னகை மிளிர்வதைக் காணலாம். ஒரு நாளைக்கு முப்பதுமுறை மலம்கழிக்கும் ராவின் மகளான லட்டுவைப்பற்றிய குறிப்பு முதல் மாணவர் விடுதிகளில் எரிச்சலைக்கொட்டுகிற மாணவர்களைப்பற்றிய குறிப்புவரை இந்தப் புன்னகை மாறாமல் இருப்பதைக் காணலாம். அது முதன்முறையாகத் தன் அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டுத்தான் கடுகடுப்பாக உருமாறுகிறது.
*
எழுபதுகளில் தமிழுக்கு முக்கிய வரவாக அமைந்தவை திலீப்குமாரின் எழுத்துகள். மிகப்பெரிய துக்கத்தைக்கூட சிறிய புன்னகை வழியாக ஆற்றிக்கொள்ளும் பக்குவமம் பயிற்சியும் அவரது கதைமாந்தர்களுக்கு இயல்பாகவே கைகூடிவந்துள்ளது. மெளனியின் கதைகளை மதிப்பிட்டு அவர் எழுதிய நுால் மிக முக்கியமான ஒன்றாகும். வாசிப்பின் வழியாக ஒரு வாசகன் சென்றடையக்கூடிய எல்லைகளைக் கோடிட்டுக் காட்டிய சிறந்த முயற்சியாகும். 1980 ஆம் ஆண்டில் க்ரியா வெளியீடாக வெளிவந்த ‘மூங்கில்குருத்து ‘ தொகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது.
—-
paavannan@hotmail.com
- ஆசியப் புலம் பெயர்ந்தோர் பற்றிய சர்வே
- வைரமுத்துக்களின் வானம் -9
- ராஷஸ சதுரங்கப்பலகையிலிருந்து இறங்குகின்றன பாம்புகள் (கூட்டுக்கவிதை )
- வருவான், குதிரை ஏறி வருவான்(கூட்டுக்கவிதை)
- மொழியெனும் சிவதனுசு
- தனக்குத் தானே பேசிக்கொள்ளும்
- க்வாண்டம் இயற்பியலின் பரிணாமம்-2: ஸ்க்ராட்டிஞ்சரின் பூனையும், பெரிலியம் ஐயனியும்
- ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள்(1954-2004)
- கடிதங்கள் – நவம்பர்-20, 2003
- கடிதங்கள் – ஆங்கிலம் – நவம்பர் 20, 2003
- இந்த வாரம் இப்படி (xenophobic நான், பாபி ஜிண்டால், ஈராக்கில் இத்தாலி வீரர்கள், அறம்)
- உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 2
- காசி யாத்திரை
- கலக்கம்
- ஜிம் ஜோன்ஸின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
- ஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப் பார்வை
- குறிப்புகள் சில- நவம்பர் 20,2003
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 4
- மூளைச் சலவையின் ஆற்றல்: 900 சாவுகள் கற்றுத் தரும் ஒரு கொடிய பாடம்
- நாச்சியார் திருமொழி
- ஆதி – ஒரு புதிய தமிழ் மாத ஏடு
- எனக்குப் பிடித்த கதைகள் – 86-புன்னகை என்னும் தற்காப்பு ஆயுதம்: திலீப்குமாரின் ‘மூங்கில் குருத்து ‘
- வீணாகப் போகாத மாலை
- பிரமைகளும், பிரகடனங்களும்-2
- பொறியில் சிக்காத பிதாமகன்.
- தொடரும் உல்டா.. தமிழ் சினிமாவில்…
- எங்கே நமக்குள் சாதிவந்தது ?
- நலங்கெடப் புழுதியில்…
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்து மூன்று
- நூருன்னிசா
- அந்த நாலுமணிநேரம்
- நந்தகுமாரா நந்தகுமாரா
- காத்திருந்து… காத்திருந்து….
- கனவின் கால்கள்
- அலுவலகம் போகும் கடவுள்
- குழந்தைகள் தினம் ( 14 நவம்பர் 2003 )
- எது மரபு
- கலியுகம்
- அன்றைக்கு அப்படியே போயிருந்தால்
- விடியும்!- (23)
- உனைப் பெற்ற நிறைவுக்கு ஈடு இல்லை
- முரண்பாடுகளில்…
- விடாத வீடு
- குனிந்த மலை
- குளம்
- நான் நானில்லை
- புரியாமல் கொஞ்சம்…
- ஒன்று நமது சிந்தனை
- தமிழ்
- காதல் லட்சம்
- மெளனம்…