பாவண்ணன்
எந்தக் கதையைப் படித்தாலும் உடனே அதை முன்வைத்து நானும் நண்பர்களும் விவாதிப்பது கல்லுாரிக் காலத்திலிருந்தே பழக்கமான விஷயமாக இருந்தது. ஏன் பிடித்தது, ஏன் பிடிக்கவில்லை என்று தொடங்கி, அதன் சரடு உலகவிஷயங்கள் வரை நீண்டு கொண்டே போகும். ஒரு நாள் மாலை நேரம். ஒரு கதையை முன்வைத்தேன் நான். கணவன், மனைவி இருவரை மட்டுமே கொண்ட குடும்பம். ஏழ்மையிலும் அன்புக்குக் குறைவில்லாத குடும்பம். ஒருவரின் நலத்தின் மீது மற்றொருவருக்கு அளவு கடந்த ஆவலுண்டு. ஒரு முக்கியமான நாளைக் கொண்டாடுவதற்காக, கணவன் தனது கைக்கடிகாரத்தை விற்று, காதல் மனைவியின் கூந்தலில் அணிய ஒரு க்ளிப் வாங்கி வருகிறான். மனைவியோ தனது கூந்தலை வெட்டி விற்று, கணவனுடைய கைக்கடிகாரத்துக்கு அலங்காரப்பட்டி ஒன்றை வாங்கி வருகிறாள். அதுதான் கதை.
என்னைத் தவிர அன்று என் நண்பர்கள் எவருக்கும் இக்கதை பிடிக்கவில்லை. இது அசட்டுத்தனம் என்றும் மிகையுணர்ச்சி என்றும் ஒதுக்கினார்கள். வாழ்வு வெறும் அறிவாலும் திறமையாலும் மட்டுமே வாழப்படுகிற ஒன்றல்ல என்றும் அசட்டுத்தனத்தோடும் மிகையுணர்ச்சியோடும் சேர்த்து வாழப்படக் கூடிய ஒன்றுதான் என்று சொன்னேன். ஒரு குட்டையில் சிறிதளவே இருக்கும் நீர். ஆண்மான் குடிக்கட்டும் என்று ஒதுங்குகிறது பெண்மான். அதன் மனநிலையை உணர் ந்த ஆண்மான் குடிப்பதைப் போன்ற பாவனையுடன் குட்டையில் சிறிது நேரம் வாய்வைத்தபடி நின்று விட்டு பெண்மானைக் குடிக்க வைக்கிறது. இது சங்கப்பாடல்களில் இடம்பெறும் காட்சி. கவிதைக்காட்சியையும் கதைக்காட்சியையும் இணைத்து நான் முன்வைத்த விஷயங்களை நண்பர்கள் பொருட்படுத்தவில்லை. அதிகப்படியான அன்பு என்பதோ தியாகம் என்பதோ வெறும் வார்த்தைகள் மட்டுமே என்பதே அவர்கள் எண்ணமாக இருந்தது. மேலும் வலியுறுத்தாமல் ஒதுங்கி வந்து விட்டேன் நான்.
இருபத்தைந்து ஆண்டுகள் உருண்டு விட்டன. அந்த நண்பர்களில் ஒருவன் படிப்பில் மிகச்சிறந்த அளவில் தேர்ச்சி பெற்று வேற்று மாநிலத்தில் வேலைக்குச் சேர்ந்து உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்தான். ஊருக்குள் தம்பிகள் தங்கைகள் பற்றியெல்லாம் அவ்வளவாக ஈடுபாடு காட்டியதில்லை. திடுமென ஒருநாள், அவன் சிறுநீரகம் பாதிக்கப் பட்டிருப்பதாக செய்தி வந்தது. கேள்விப்பட்ட தம்பி ஓடினான். தனக்கு ஒரே ஒரு சட்டை கூட எடுத்துத் தந்திராத அண்ணனை வண்டி வைத்து சொந்த ஊருக்கு அழைத்து வந்தான். தனது சிறுநீரகங்களில் ஒன்றைக் கொடுத்தான். சக்திக்கு மீறிக் கடன் வாங்கி மருத்துவம் செய்து உயிரை மீட்டுத் தந்தான்.
எங்கள் சந்திப்பும் எதிர்பாராத தருணத்தில்தான் நடந்தது. ஏதோ வேலைக்காக அவனது ஊர்ப்பேருந்து நிலையத்தில் இறங்கிய போது வேறு எங்கோ புறப்படுவதற்காக அவர்கள் வந்திருந்தார்கள். அங்கேதான் அவன் எல்லா விஷயங்களையும் நெகிழ்ச்சியாகச் சொன்னான். புறப்பட சில நிமிடங்களே இருக்கும் போது ‘அடிக்கடி நீ சொல்வியே அன்பு, தியாகம் என்று. அதை இப்போது புரிந்து கொண்டேன் ‘ என்றான். ஞாபகமாக கணவன், மனைவி கதையைச் சொன்னான். அவன் தோளில் தட்டி விட்டுப் புறப்பட்டு விட்டேன்.
அன்பு, பாசம், தியாகம், தானம், பக்தி ஆகிய உணர்வுகளை ஒரு கருத்து என்கிற அளவில் விளக்கிப் புரிய வைக்க முடியாது. அது ஓர் ஊற்று போல மனத்தின் ஆழத்திலிருந்து பீறிட்டு வருவது. காரண, காரியங்கள், லாப,நஷ்டங்கள் எதிர்பார்க்காதது. எந்தத் தருக்கத்தாலும் அளக்க முடியாதது. இது வரலாற்றில் மனித வாழ்வில் வெளிப்பட்ட தருணங்கள் ஏராளம். சாதி, மதம், இனம், மொழி வேறுபாடுகளைக் கடந்து இந்த உணர்வுகளை வெளிப்படுத்திய மக்களும் ஏராளமானோர். வாய்வழியாக புராணக் கதைகளைப் போல சிலரின் கதைகள் மட்டுமே காலம் கடந்து நிலைநின்று விடுவதுண்டு. சிபிச்சக்கரவர்த்தி, பாரி, கர்ணன், அதியமான் ஆகியோரின் கதைகள் போல. ஏட்டில் இடம்பெற முடியாவிட்டாலும் சம்பந்தப்பட்ட அன்பர்களின் மனத்தில் இடம்பெற்று காலம்காலமாக நிலைபெற்று விடும் கதைகளும் உண்டு.
இப்படிப்பட்ட தருணத்தில் தவறாமல் என் நினைவுக்கு வரும் கதைகளுள் ஒன்று மக்சீம் கோர்க்கியின் சிறுவனின் தியாகம் என்கிற கதை. இளவயதில் படித்த இக்கதை என் நெஞ்சில் ஆழமான இடம்பிடித்தது. கதைநேர்த்தியில் இதைவிடச் சிறந்த கதைகள் பலவற்றை கோர்க்கி எழுதியிருந்தாலும், அவர் மீது அளவுகடந்த ஈடுபாடு ஏற்பட காரணமாக இக்கதையே இருந்ததாலும் என் இளமை வாசிப்பின் ஞாபகச் சின்னமாக இக்கதை மாறிவிட்டதாலும் இதைச் சொல்ல நேர்கிறது.
பன்னிரண்டு வயதில் இறந்து போன மகனுடைய கல்லறைக்கு நான்கு ஆண்டுகள் கழித்து வரும் தாய் அங்கே மகனின் மரணத்தைப் பற்றிப் பரிவுடன் கேட்கும் ஒருவரிடம் ஆறாத துக்கங்களைச் சொல்லி ஆற்றிக் கொள்வது போல கதை விரிகிறது. அந்த மகன் பெயர் கொலுஷா. தாயும் மகனும் தனியே வசிக்கிறார்கள். பணத்தைக் கையாடிய குற்றத்துக்காக ஒன்றரை ஆண்டு சிறைக்குச் சென்ற தந்தை அப்பொழுதுதான் திரும்பி வந்து குடும்பத்துடன் இணைந்து கொள்கிறார். குடும்பத்தில் வறுமை தலை விரித்தாடுகிறது. பள்ளி செல்கிற சிறுவன் கொலுஷா திரும்பும் போது அம்மாவுக்காகச் சுள்ளிகள் பொறுக்கி வந்து கொடுக்கிறான். மட்டமான துணி பூட்சுகளால் அவன் கால்கள் சிவந்து விடுகிறது. சிறையிலிருந்து விடுதலையானவனையும் உட்கார வைத்துச் சோறு போடுவது அவளுக்கு இயலாததாக இருக்கிறது. இடுப்பொடிய வேலை செய்தாலும் அந்தச் சம்பாத்தியம் மிகக் குறைவாக இருக்கிறது. ஒருநாள் இயலாமையில் ‘என்ன கேடுகெட்ட வாழ்க்கை. நான் இறந்து விட்டால் எவ்வளவோ நன்றாக இருக்கும். அல்லது உங்களில் யாராவது இறந்து விட்டால்.. ‘ என்று வெடிக்கிறாள். வெகுநேரம் தாயையே பார்த்துக் கொண்டிருந்த கொலுஷா எழுந்து வீட்டை வெளியே செல்கிறான்.
அடுத்த ஒருமணிநேரத்தில் வீட்டுக்குத் தகவல் வருகிறது. அனோகின் என்கிற வியாபாரியின் குதிரை ஏறியதால் விபத்துக்குள்ளான சிறுவன் கொலுஷா மரணப்படுக்கையில் கிடக்கிறான். உடலெல்லாம் கட்டுகள். ரத்தக் காயங்கள். வாக்கு மூலம் வாங்கப்படுகிறது. மருத்துவமனை ஆட்களும் காவல்துறை ஆட்களும் கலைந்து சென்றபிறகு கொலுஷா தாயைப் பார்த்துச் சிரிக்கிறான். அருகில் அழைத்து தனது விபத்தை முன்னிட்டு பொதுமக்கள் கொடுத்த பணம் போலீஸ்காரரிடம் இருப்பதாகவும் வாங்கிக் கொள்ளும்படியும் சொல்கிறான். அதைக் காதில் வாங்காத தாய் பாசத்துடிப்பில் ‘குதிரை வருவதைப் பார்க்காமல் என்ன நினைத்துக் கொண்டு சாலையில் நடந்தாய் ? ‘ என்று மகனிடம் கேட்கிறாள். அதற்கு கொலுஷா தெரிந்தே நடந்ததாகவும் தன்மீது குதிரை ஏறிவிட்டால் எல்லாரும் பணம் கொடுப்பார்கள் என்று நினைத்து வேண்டுமென்றே நடந்ததாகச் சொல்கிறான். தாய்க்கு எல்லாம் புரிந்து விடுகிறது. அழுது புலம்புகிறாள். கிடைக்கும் பணத்தில் அதை வாங்கிக் கொள் இதை வாங்கிக் கொள் அப்படிச் சாப்பிடு, இப்படிச் சாப்பிடு என்று நினைவு தப்பிய நிலையில் எதைஎதையோ சொல்லிப் பிதற்றுகிறான் சிறுவன். அவனது தியாகம் அவள் இதயத்தையே நடுங்கச் செய்கிறது. அடுத்தநாள் சிறுவன் இறந்து விடுகிறான். போலீஸ்காரனிடமிருந்து 47 ரூபிளும் வியாபாரியிடமிருந்து 5 ரூபிளும் மட்டுமே கிடைக்கின்றன. தாயின் சோகக் கதையைக் கேட்டவன் சிறுவனுடைய தியாக உணர்வை அறிந்து உறைந்து போகிறான்.
தியாகம் செய்ய எடுக்கப்படுகிற முடிவுகள் எல்லாமே அரைக்கணத்தில் எடுக்கப்பட்டு விடுகின்றன. பின்விளைவுகள் எதுவுமே அக்கணத்தில் மனத்தில் உதிப்பதில்லை. ஏதோ ஓர் எண்ணம். அது உந்தித் தள்ளுகிறது. அந்த எண்ணத்தின்பால் இருக்கிற தீவிரத்தையும் ஆழமான ஈடுபாட்டையும் உணர்வின் அடிப்படையிலேயே நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும். உணர்வின் அளவுகோல்கள் செல்லுபடியாகும் இடத்தில் அறிவின் அளவுகோல்களோ தருக்கத்தின் அளவுகோல்களோ பயன்படுவதில்லை. அளவுகோலை மாற்றிப் பயன்படுத்தி விட்டு, ஆட்களைத் தவறாக எடைபோடும் பழக்கம் தவறான முடிவுகளுக்கே இட்டுச்செல்லும்.
* ருஷ்ய எழுத்தாளர்களுள் முக்கியமான எழுத்தாளர் மக்சீம் கோர்க்கி. புரட்சியைப் பின்னணியாகக் கொண்டு அவர் எழுதிய ‘தாய் ‘ புதினம் முக்கியமான கவனத்தைப் பெற்றிருந்தாலும் செய்நேர்த்தியிலும் கலைத்தன்மையிலும் அவர் எழுதிய ‘அர்தமோனவ்கள் ‘ முக்கியமான நாவலாகும். அவருடைய எனது பல்கலைக்கழகம் உள்ளத்தை உருக்கும் சுயசரிதை. உணர்ச்சியும் உயிரோட்டமும் நிறைந்த சிறுகதைகளைப் படைப்பதில் தனித்திறமை மிக்கவர். ‘சிறுவனின் தியாகம் ‘ சிறுகதை எஸ்.சங்கரன் என்பவரின் மொழிபெயர்ப்பில் 1958ல் தேனருவிப் பதிப்பகத்தின் வெளியீடாக வந்த அதிசயக்காதல் என்னும் நுாலில் இடம்பெற்ற ஒன்றாகும்.
- சதுரம்.
- சில கேள்விகள்
- எதை நிறுத்த ?
- சிறுத்த இருத்தல்
- இந்த வாரம் சொன்னவைகள் – சூன் 23, 2002
- பழைய பொன்மொழிகள்
- மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – பகுதி :மூன்று – தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ?
- எனக்குப் பிடித்த கதைகள் – 16 – அளக்க முடியாத கடல் – மக்சீம் கோர்க்கியின் ‘சிறுவனின் தியாகம் ‘
- மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – மூன்றாம் பகுதி
- மதிப்புரை – மகாராஜாவின் ரயில் வண்டி – அ. முத்துலிங்கம்
- மரபணு மாற்றப்பட்ட பருத்தி செடிகளும் பருத்திப் புழுவும் உலக விவசாய நிறுவனங்களின் ஆயுதங்களாகின்றன
- ஏறத்தாழ பூமியில் மோத இருந்த விண்கல்
- சூரிய குடும்பத்தின் புதிய புறக்கோள்கள் யுரேனஸ், நெப்டியூன்
- அழகிப்போட்டி
- வெள்ளைக் காகிதம்
- வைகுண்டக் குடும்பம்
- சொந்தம்.
- காலத்தின் கணக்கு
- ஆலவிருட்சம்
- புலன்களின் சுகம்
- சொல்லமுடியாதது..
- கனவு
- இந்த வாரம் இப்படி – சூன் 23 2002 (கண்டதேவி, காவிரி, அலெக்ஸ் பெரி)
- அப்துல்கலாம் இந்தியாவின் குடியரசுத்தலைவராக ஆவது சிறப்பானது
- இந்த வாரம் சொன்னவைகள் – சூன் 23, 2002
- மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – பகுதி :மூன்று – தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ?
- ‘தனிமைப்படுத்திக்கொண்டால் தேங்கித் தான் போவீர்கள் ‘
- மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – மூன்றாம் பகுதி
- இன்று நடிகர் சங்க கட்டிட நிதி – நாளை வருமான வாி பாக்கி… தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கலை நிகழ்ச்சியை மலேசிய ரசிகர்கள் புறக்கண
- ’20ஆம் நூற்றாண்டில் சீனா-இந்தியா போட்டி ‘ : ஜான் டபிள்யூ கார்வர் எழுதிய புத்தகத் திறனாய்வு
- கடவுளின் கடந்த காலம்