K.ரவி ஸ்ரீநிவாஸ்
ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டங்கள் செல்லுமா, அத்தகைய சட்டங்களை பரிசீலிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டா என்பது உட்பட சில முக்கியமான கேள்விளுக்கு உச்சநீதி மன்றம் தன் சமீபத்திய தீர்ப்பில் பதில் தந்துள்ளது.
(Civil Appeal Nos. 1344-45 of 1976 with WP (C) Nos. 242 of 1988, 751 of 1990, 259, 454 and 473 of 1994, 238 of 1995, 35 of 1996 and 408/03, CA Nos. 6045 and 6046 of 2002 and SLP (C) Nos. 14182, 14245, 14248, 14249, 14940, 14946, 14947, 14949, 14950, 14965, 14993,
15020, 15022, 15029, 26879, 26880, 26881, 26882, 26883, 26884, 26885 and 26886 of 2004
Decided On: 11.01.2007
Appellants: I.R. Coelho (Dead) By LRs. Vs.
Respondent: State of Tamil Nadu and Ors.
Hon’ble Judges: Y.K. Sabharwal, C.J., Ashok Bhan, Arijit Pasayat, B.P. Singh, S.H. Kapadia, C.K. Thakker, P.K.Balasubramanyan, Altamas Kabir and D.K. Jain, JJ.)
இத்தீர்ப்பு முற்றிலும் புதிதான புரட்சிகரமான கருத்துக்களை கூறவில்லை. ஏற்கனவே தரப்பட்டுள்ள தீர்ப்புகளில் கூறப்பட்டவற்றின் அடிப்படையில் பாராளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தின் எல்லை, அரசியல் சாசனத்தின் அடிப்படை அமைப்பு/அடிப்படை அம்சங்கள், ஒன்பதாம் பிரிவில் சேர்க்கப்பட்டதாலேயே அச்சட்டங்கள் நீதிமன்றப் பரிசீலனைக்கு அப்பாற்பட்டவையா, இல்லையா என்பவை குறித்து ஒரு தெளிவான தீர்ப்பினை ஆணித்தரமான வாதங்களுடன் தந்துள்ளது. கிட்டதட்ட 34 பக்கமே உள்ள இத்தீர்ப்பு பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது என்ற விதத்திலும், 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஏகமனதாக இதை வழங்கியுள்ளது என்பதாலும் ஒரு மைல்கல்லாகக் கருதத்தக்கது. இது இந்திய குடிமக்களின் முக்கியமான அடிப்படை உரிமைகளை சட்டங்கள் மூலம் பாராளுமன்றம் குறைக்க,இல்லாமல் ஆக்க,சிதைக்க முயன்றாலும் அதை உச்சநீதி மன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று கருதிட இடமில்லை என்பதை தெளிவாக்கியிருக்கிறது.
கேசவானந்தபாரதி வழக்கில் முன் வைக்கப்பட்ட அடிப்படை அமைப்பு/அம்சங்கள் குறித்த கருத்து பின்னர் பல வழக்குகளில் உறுதி செய்யப்பட்டு இத்தீர்ப்பில் இன்னும் தெளிவாக வலியுறுத்தப்படுகிறது. சுருக்கமாகக் கூறினால் அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர, சட்டங்கள் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.ஆனால் அரசியல் சாசனத்தின் அடிப்படை அமைப்பினை/அம்சங்களை குறைக்க, சிதைக்க,நீக்க, வலுவிழக்கச் செய்ய பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. ஏகமனதாக பாராளுமன்றம் தீர்மானித்தாலும் அந்த அதிகாரம் கிடையாது. வேறு வார்த்தைகளில் சொன்னால் (உபேந்திர பக்ஷி கூறியதை அடியற்றி) அரசியல் சட்டத்தில் மாறுதல் கொண்டு வரலாம், அரசியல் சட்டத்தினையே மாற்றும் அதிகாரம் இல்லை. கேசவானந்த பாரதி வழக்கில் இந்த அடிப்படை அம்சம் கருத்தாக்கம் முதன் முதலில் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த விதத்தில் கே.கே.நம்பியார், நானி பல்கிவாலா ஆகியோர் முன்வைத்த வாதங்கள் சிறப்பானவை. இந்திய அரசியல் சட்டத்தினை பாராளுமன்றம் உருவாக்கவில்லை, அதை உருவாக்கியது அரசியல்சாசன வரைவுக் குழு. இந்த அரசியல் சாசனம் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை வரம்பற்றது என்றோ, பாராளுமன்றம் எதை நிறைவேற்றினாலும் அதை நீதிமன்றங்கள் ஏற்க வேண்டும் என்றோ கூறவில்லை. மாறாக சட்டங்கள் செல்லதக்கவையா என்பதை தீர்மானிப்பது, அரசியல் சாசனப் பிரிவுகளை பொருள் கொள்ளுவது ஆகியவற்றில் இறுதி அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கே என்று கூறியிருக்கிறது. மேலும் அடிப்படை உரிமைகளைப் பொருத்த வரை அவை மீறப்படும் போது நீதிமன்றங்களை அணுகி நியாயம் கேட்கும் உரிமையையும் அது மக்களுக்கு தந்துள்ளது. எனவே பாரளுமன்றம் அல்லது நிர்வாக அமைப்பிற்கு கட்டற்ற அதிகாரங்கள் உண்டு என்ற அடிப்படையில் அரசியல் சட்டம் அமையாத போது, பாராளுமன்ற ஜனநாயகம் நிலவினாலும் அது வரையரையற்றது அல்ல. இந்த அடிப்படையில் நாம் நோக்கினால் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அரசியல் சாசனம் தந்துள்ள உரிமைகளுக்கும், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் வலுச்சேர்ப்பதாக அமைவதைப்
புரிந்து கொள்ள முடியும்.
அடிப்படை அம்சங்களை எவை என்பதையும் தீர்ப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. உதாரணமாக மதசார்பின்மை,அடிப்படை உரிமைகள், நீதிமன்ற ஆய்வு, கூட்டாட்சி (FEDERAL STRUCTURE) அடிப்படை அம்சங்களாக ஏற்க்கப்பட்டுள்ளன. அடிப்படை அம்சங்கள் என்பவை இவைதான் என்று பட்டியல் தருவதை விட அக்கருத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை கவனிக்க வேண்டும். இந்த அம்சங்களுக்கு பாதகம் ஏற்பட்டால் அரசியல் சாசனத்தின் அடிப்படையே சேதமடைந்து விடும் என்பதால் இவற்றை பாதுக்காக்க வேண்டும். உதாரணமாக இந்திரா காந்தி அரசு சில அரசியல் சட்டத்திருத்தம் மூலம் சில பதிவிகளில் இருப்பவர்களின் தேர்தல் குறித்து ஆராயக் கூடாது என்று ஒரு மாற்றத்தினைக் கொண்டு வந்தது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் இப்படி செய்வது அரசியல் சட்டத்தின் அடிப்படை அமைப்பினை மாற்றுவதாகும் என்று கூறி விட்டது. இப்படி ஒவ்வொரு அரசும் நினைத்த படி அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்து கொண்டே போய் அதை நீதிமன்றங்களும் ஏற்றுக் கொண்டால் என்ன ஆகும். ஒரு நாள் பாராளுமன்றத்தில் உச்ச நீதிமன்றமே தேவையில்லை என்று கூட அரசியல்
சட்டத்திருத்தம் கொண்டு வரப் படலாம். ஒரு அரசு மிருகப் பெரும்பான்மையினைக் கொண்டு மதச்சார்பின்மை என்பதை நீக்கி ஒரு மதத்தினை அல்லது கருத்தியலை தேசிய மதமாக அல்லது கருத்தியலாக அறிவிக்கலாம். வேறொரு அரசு தேர்தல் அமைப்பினை, முறையை முற்றிலுமாக மாற்றி அமைக்கலாம். இன்னொரு அரசு மத்திய அரசு,மாநில அரசுகள் என்பதை மாற்றி வலுவான மத்திய அரசு, அதன் கீழ் அதால் நிர்வகிக்கப்படும் மாநிலங்கள் என்று அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வரலாம். இத்தகைய ஆபத்துக்களைத் தவிர்க்க, அரசியல்
சாசனத்தில் கொண்டு வரப்படும் மாற்றங்களின் வரையரைகளை வகுப்பது தேவை. இதைத்தான் உச்ச நீதிமன்றம் செய்துள்ளது. அவசர நிலையின் போது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதையும், சகட்டு மேனிக்கு அரசியல் சாசனத்தினை மாற்ற இந்திரா காந்தி அரசு முயன்றதையும் நாம் மறக்ககூடாது. அப்போது அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதி மன்றம் தந்த தீர்ப்பு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது சரிதான். அதே சமயம் அரசின் அனைத்து சட்ட மீறல்களையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து, தீர்ப்புகள் வழங்கியது. 1977க் குப்பின் அடிப்படை உரிமைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்புகள் அடிப்படை உரிமைகளின் வரம்பினையும், குடிமக்கள்
உரிமைகளையும் விரிவாக்கின. குறிப்பாக மேனகா காந்தி வழக்கில் தந்த தீர்ப்பு அரசு தன்னிச்சையாக செயல்படும் அதிகாரத்தினை கேள்விக்குட்டபடுத்தியது. கடந்த (கிட்டதட்ட) முப்பதாண்டுகளாக அடிப்படை உரிமைகள் குறித்து தரப்பட்டுள்ள தீர்ப்புகள் தகவல் அறியும் உரிமை உட்பட பலவற்றில் புதிய பாதைகளைக் காட்டியுள்ளன, புதிய வெளிச்சத்தினைப் பாய்ச்சியுள்ளன. ஆகவே அரசியல் சாசனம் தந்த அடிப்படை உரிமைகளை இன்னும் வலுவுள்ளவையாகவும், விரிவானவையாகவும் ஆக்கிட உச்ச நீதிமன்றம் உதவியுள்ளது. இன்று அடிப்படை உரிமைகள் அரசு போடும் பிச்சையல்ல, குடிமக்களுக்கு அரசியல் சாசனமும், மனித உரிமைகள் குறித்த சர்வதேச
பிரகடனங்கள்,ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் தந்துள்ள உரிமைகள். இவற்றை பாராளுமன்றம் குறைக்க, பறிக்க, சிதைக்க உரிமை தருவது எந்த விதத்திலும் ஏற்க இயலாத ஒன்று. எனவே மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளில் உண்மையாக அக்கறையுடையவர்கள் இந்த தீர்ப்பினை பாராட்டுவார்கள்.
9ம் அட்டவணையில் சட்டங்களை சேர்க்கும் அதிகாரம் உண்டு, அதற்கு வகை செய்யும் 31A,B பிரிவுகள் செல்லும், ஆனால் அந்த சட்டங்கள் செல்லத்தக்கவையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு உண்டா, அந்த சட்டங்கள் செல்லுமா என்பதற்கு என்ன உரைகல், அப்படி செல்லாது என்றால் அவை மீண்டும் ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்டால் நீதிமன்ற பரிசீலனை அவற்றிற்கு கிடையாது என்று வாதிட முடியுமா. இது போன்ற கேள்விகளுக்கும் இத்தீர்ப்பு விடையளிக்கிறது.
இத்தீர்ப்பு கூறுகிறது கேசவானந்தபாரதி வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்ட பின் ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டங்களை ஆராய்ந்து செல்லுமா, செல்லாத என்று தீர்ப்பளிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு. அவை ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்டவை என்பதாலேயே அவை நீதிமன்ற ஆய்விற்கு அப்பாற்பட்டவை அல்ல. நீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்த சட்டங்களை இவ்வட்டணையில் சேர்த்தாலும் அவற்றை பரிசீலிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு. மேலும் அவ்வாறு ஆராயும் போது அச்சட்டங்கள் அரசியல் சாசனத்தின் பிரிவுகள் தரும் அடிப்படை உரிமைகளை பாதிக்கின்றவா, அவ்வாறு பாதிப்பது அவ்வுரிமைகளை குறைக்கிறதா, அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சத்தினை பாதிக்கிறதா என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டு ஆராயும்.
(The object behind Article 31B is to remove difficulties and not to obliterate Part III in its entirety or judicial review. The doctrine of basic structure is propounded to save the basic features. Article 21 is the heart of the Constitution. It confers right to life as well as right to choose. When this triangle of Article 21 read with Article 14 and Article 19 is sought to be eliminated not only the ‘essence of right’ test but also the ‘rights test’ has to apply, particularly when Keshavananda Bharti and Indira Gandhi cases have expanded the scope of basic structure to cover even some of the Fundamental Rights. The doctrine of basic structure contemplates that there are certain parts or aspects of the Constitution including Article 15, Article 21 read with Article 14 and 19 which constitute the core values which if allowed to be abrogated would change completely the nature of the
Constitution. Exclusion of fundamental rights would result in nullification of the basic structure doctrine, the object of which is to protect basic features of the Constitution as indicated by the synoptic view of the rights in Part III.)
சுருக்கமாகக் சொன்னால் இந்தப் பிரிவுகள் தரும் அடிப்படை உரிமைகள் அதி முக்கியமானவை என்பதால் அவற்றை குறைக்கும், செல்லத்தகாதவை, பறிக்கும், வலுவிழக்கும் எந்தச் சட்டமும் ஒன்பதாம் அட்டவணையில் இருந்தாலும் நீதிமன்றம் அவற்றை ஆராய்ந்து தீர்ப்பளிக்க உரிமை உண்டு. இந்த அடிப்படையில் இந்தச சட்டங்கள் குறித்து விசாரிக்கயுள்ள மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச எப்படி அதை அணுக வேண்டும் என்பதையும் இத்தீர்ப்பு கூறுகிறது.
எனவே இந்த தீர்ப்பினை இட ஒதுக்கீடு குறித்த சர்ச்சையின் அடிப்படையில் புரிந்து கொள்வதை விட ஒரு பரந்த அடிப்படை உரிமைகள், அரசியல் சாசனக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வது இன்னும் பொருத்தமாக
இருக்கும்.
பிற்குறிப்புகள் :
1, இயன்ற அளவிற்கு எளிமையாக,சுருக்கமாக இதை எழுத முயன்றுள்ளேன். அதனால் அடிப்படை அமைப்பு என்ற கருத்து குறித்தும், அரசியல் சாசனத்தின் பல்வேறு பிரிவுகள், தொடர்புடைய வழக்குகள் குறித்தும் இதில் விரிவாக எழுதவில்லை. தீர்ப்பு இணையத்தில்
முழுதுமாக கிடைக்கிறது அவுட்லுக் வார இதழின் இணையதளத்திலும் (www.outlookindia.com), http://judis.nic.in/supremecourt/qrydisp.asp?tfnm=28469 என்ற முகவரியிலும். அவுட்லுக் தளத்தில் பகுதிகளாக அச்சிட்டு படிக்க வசதியாக இருக்கிறது. ttp://judis.nic.in/supremecourt/qrydisp.asp?tfnm=28469 என்ற முகவரியில் தீர்ப்பு முழுதாக இருந்தாலும் அதை அச்சிட்டு படிப்பது எளிதாக இல்லை. தீர்ப்பு குறித்த எதிர்வினைகளின் அடிப்படையில் இதைப் புரிந்து கொள்வதை விட தீர்ப்பினை படித்துவிடுவதே நல்லது.
2, இந்த தீர்ப்பிற்கும், இட ஒதுக்கீடு குறித்த வழக்குகள்,சட்டங்கள் குறித்து வெளியான கருத்துகளில் பல தீர்ப்பு குறித்து தவறான புரிதலையே தருகின்றன. வீரமணி தமிழக 69% இட ஒதுக்கீடு சட்டம் 31சி பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டது, இத்தீர்ப்பு 31பி குறித்து கூறுகிறது என்ற வாதத்தினை முன் வைத்துள்ளார். அவர் விரிவாக எழுதினால் பதில் தரலாம். அடிப்படை உரிமைகளையும், வழிகாட்டு நெறிகளையும் ஒத்திசைவாக படித்துப் பொருள் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. வழிகாட்டு நெறிகள் என்ற பெயரில் அடிப்படை உரிமைகளை அர்த்தமற்றதாக்கும் அல்லது வெகுவாக பாதிக்கும் சட்டங்கள் 9ம் அட்டவணையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீதிமன்ற ஆய்விற்குட்பட்டவையே. மேலும், 31 சி பிரிவு தமிழக 69% இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு இதிலிருந்து விதிவிலக்கோ அல்லது பாதுகாப்போ பெற்றுத் தராது. வழிக்காட்டு நெறிகளை நிறைவேற்றக் கோரி வழக்குத் தொடர்ந்தாலும் அவற்றை நிறைவேற்றும் வண்ணம் சட்டம் இயற்ற வேண்டும் அல்லது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிடும் என்று எதிர்பார்க்க முடியாது. பொது சிவில் சட்டம் குறித்த வழக்குகள் இதை தெளிவாக்கியுள்ளன. 69% இட ஒதுக்கீடு குறித்த சட்டங்களோ அல்லது இட ஒதுக்கீட்டு சட்டங்களோ நீதிமன்றங்களின் ஆய்விற்கு அப்பாற்பட்டவை என்று இனியும் கூறிக் கொண்டிருக்க முடியாது. அவ்வாறு செய்யும் முயற்சிகளுக்கும் இத்தீர்ப்பு சாவு மணி அடித்திருக்கிறது.
- Salute el Presidente
- பெரியபுராணம்- 120 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- யானை வரும் முன்னே
- நீர்வலை (7)
- காதல் நாற்பது (5) தனிமைக் கூக்குரல் !
- என் அறை
- இலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)
- ‘நீலக்கடல்’ நாவலுக்கு தமிழக அரசின் பரிசு
- பாரத அணுகுண்டைப் படைத்த ராஜா ராமண்ணா
- தப்புக் கணக்கு
- எழுத்தாளர் சல்மா – அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம்
- கூத்துப் பட்டறை – நாடக நிகழ்ச்சி
- திருப்பூர் மத்திய அரிமா சங்கம் – விருதுகள் 2006
- சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஆறு – ஜனவரி 15, 2007
- சென்னை புத்தகக் கண்காட்சி நாள் எட்டு – ஜனவரி 17, 2007
- சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஏழு
- சென்னை புத்தகக் கண்காட்சி நாள் 9
- NFSC Screening – ” Chennai:The Split City” by Shri Venkatesh Chakravarthy
- கடித இலக்கியம் – 41
- சிவகவிமணி, சி. கே., சுப்பிரமணிய முதலியார். (சம்பந்த சரணாலயர்)
- “மலையகச் சிறுகதைத் தொகுப்புள்”வாழ்வு”-ஒரு தேடல்”
- வாய் மொழி வலி
- பின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும்
- எதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு
- உலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்
- வரலாற்றின் சலனத்தில் பாரசீகம் – பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1)
- கொழும்பு குதிரை
- மடியில் நெருப்பு – 21