இரா முருகன்
முதல் ஆட்டத்தில் 1 – 0 goal கணக்கில் வெற்றி பெற்று ஒரு வழியாக இங்கிலாந்து உலகக் கோப்பை கால்பந்தாட்டத்துக்குள் நுழைந்திருக்கிறது. ஆட்டம் ஆரம்பித்து மூன்றாம் நிமிடம் விழுந்த கோல் எதிர்பார்த்தபடி டேவிட் பெக்கமோ, இந்த ஆண்டின் புதிய கண்டுபிடிப்பான ஆறு அடி ஏழு அங்குல உயர ஆட்டக்காரர் பீட்டர் கிரவுச்சோ போடாதது. மான்சஸ்டர் யுனைடட் குழுவின் நட்சத்திர ஆட்டக்காரரான வெயின் ரூனிக்குக் காலில் அடிபட்டதைப் பற்றிக் கவலைப்படாமல், அவரை ஜபர்தஸ்தாக ஆட்டக் களத்தில் இறக்கிய இங்கிலாந்து கோச் ஸ்வென் எரிக்ஸன் எதிர்பார்த்தபடி ரூனியும் போடாதது. ஜெர்மனி ப்ராங்பர்ட் பந்துகளி மைதானத்தில் ஐம்பதாயிரம் ரசிகர்களும், டெலிவிஷன், ப்ராட்பேண்ட் இண்டர்நெட் மூலம் உலகம் முழுக்க எத்தனையோ கோடி ரசிகப் பெருமக்களும் கண்டு களித்தபடி இருக்க, இந்த எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் வெற்றி கோலைப் போட்டது இங்கிலாந்தை எதிர்த்து விளையாடிய பராகுவே நாட்டுக்காரரான கார்லோஸ் காம்மரா.
பெக்கம் முப்பத்தைந்து கஜ தூரத்திலிருந்து உதைத்து விட்ட ஃப்ரீ கிக்கைத் தலையால் முட்டி காம்மரா அனுப்பியது சொந்த அணியான பராகுவேயின் கோல்போஸ்டுக்கு. அத்ரயே உள்ளூ. அப்புறம் மருந்துக்குக் கூட யாரும் கோல் போடாததால், இங்கிலாந்து மகத்தான வெற்றி.
எடின்பரோவிலும் ஸ்காட்லாந்தின் மற்றப் பகுதிகளிலும் பெருத்த ஏமாற்றம் நிலவுகிறது. இங்கே இருக்கப்பட்ட எல்லா வயதுக்கார கால்பந்தாட்ட ரசிகர், அ-ரசிகர்களும் ஒரு பத்து பதினைந்து நாளாக பராகுவே நாட்டுக் கொடிகளை வாங்கி ஸ்டாக் செய்து வைத்திருந்தார்கள். பராகுவே ஜெயித்து அந்த வெற்றியை விடிய விடியக் கொண்டாடப் போட்ட திட்டமெல்லாம் தவிடுபொடியாக, இங்கிலாந்துக்கு வெற்றி.
எடின்பரோ மற்றும் இதர ஸ்காட்லாந்து பிரதேசங்கள் இங்கிலாந்தின் பகுதியில்லையா என்று யாராவது கேட்டால் ஆமா-இல்லை. ஸ்காட்லாந்து இன்னும் இங்கிலாந்தில் தான் இருக்கிறது. ஸ்காட்லாந்துக்காரர்களின் முன்னூறு வருட இங்கிலாந்து வெறுப்பும் அதேபோல் இன்னும் தணியாமல் சதா அடக்கி வாசிக்கப்பட்டபடிதான் இருக்கிறது. உலகக் கோப்பை கால்பந்தாட்டம் போன்ற முக்கியமான தருணங்களில் ‘எழவெடுத்த இங்கிலாந்து தோற்கட்டும்’ என்று ஒட்டுமொத்தமாக ஸ்காட்லாந்தின் குரல் ஓங்கி ஒலிப்பது லண்டன் வரை கேட்கும்.
இவ்வளவுக்கும் ஸ்காட்லாந்துக்குக் கிட்டத்தட்ட இன்னொரு நாடு போல் அந்தஸ்தைத்தான் இங்கிலாந்து அளித்துக் கவுரவித்திருக்கிறது. மாநிலத் தலைநகர் எடின்பரோவில் கூடுவது சட்டப் பேரவை இல்லை. ஸ்காட்லாந்து நாடாளுமன்றம். இது தவிர ஸ்காட்லாந்துக்குத் தனியாக கரன்சி நோட்டு அடித்துக் கொள்ள உரிமை உண்டு. எலிசபெத் மகாராணிக்குப் பதிலாக வால்டர் ஸ்காட் படம் போட்ட ஐந்து, பத்து, இருபது பவுண்ட் கரன்சி நோட்டுகள் இங்கே பரவலாகப் புழங்குகிறவை. இங்கிலாந்திலும் இவை செல்லுபடியாகும். லண்டன் டாக்சி டிரைவர்களிடம் ஸ்காட்லாந்து பணத்தை நீட்டினால் ஒரு வினாடி சங்கடம் முகத்தில் தெரிய, கடனே என்று வாங்கிச் சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு டிப்ஸ் கூட எதிர்பார்க்காமல் வண்டியைக் கிளப்பி விடுவார்கள். அவ்வளவு அந்நியோன்னியம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கும்.
ஸ்காட்லாந்துக்குக் கரன்சி அச்சடிக்க மட்டும் உரிமை இல்லை. உலகக் கோப்பை கால்பந்தாட்டத்துக்கு ஸ்காட்லாந்து அணியை அனுப்பி வைக்கவும் சகல உரிமையும் உண்டு. 1978 உலகக் கோப்பை சமயத்தில் இங்கிலாந்து அணி நுழைவுக்குத் தகுதியில்லாமல் போக, ஸ்காட்லாந்து அணி தேர்வு பெற்று ஆட்ட பாட்டத்தோடு கிளம்பிப்போனதாக உள்ளூர்ப் பெரிசுகள் நினைவு கூர்கிறார்கள். கோப்பையை வென்று வரப்போகிறார்கள் என்று ஏகப்பட்ட நம்பிக்கையோடு ஸ்காட்லாந்தில் விசேஷ தபால்தலை எல்லாம் அச்சடித்து (இதுக்கும் உரிமை உண்டு) தயாராக வைத்திருக்க, போன அணி முதல் ஆட்டத்திலேயே மண்ணைக் கவ்வி ஓசைப்படாமல் திரும்ப வந்து சேர்ந்தது இன்னொரு தனிக்கதையாக்கும்.
ஆக, இந்த வருட உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து ஜெயித்தால் என்ன? எடின்பரோவில் அச்சாகும் உள்ளூர்ப் பத்திரிகைகள் பரபரப்பாக டிரினிடாட் – டுபாக்கோ நாட்டு கால்பந்தாட்ட வீரர்களைப் பற்றிய நுணுக்கமான தகவல்களையும் படங்களையும் வாங்கிப் போட்டு அடுத்த பரபரப்பை ஆரம்பித்து விட்டார்கள். வரும் வியாழக்கிழமை ஜெர்மனி ந்யூரம்பர்க் நகரில், இங்கிலாந்து அடுத்த மேட்ச் விளையாடப் போவது டிரினிடாட் – டுபாக்கோ அணியை எதிர்த்து.
கமான் இங்க்லா..சாரி, கமான் ட்ரினிடாட் டுபாகோ. நோ ஓன் கோல்ஸ் ப்ளீஸ்.
8888888888888888888888888888888888888888888888888888888888888888
வியாபாரம் நஷ்டத்தில் முடிந்தோ அல்லது வேறு காரணத்துக்காகவோ இழுத்து மூடப்படும் கடைகளைக் கட்டுக்கடை என்று சொல்கிற பழைய வழக்கம் நினைவுக்கு வருகிறது. புதுசாக வாங்கி வந்த துணி சாயம் போனால், கட்டுக்கடைத் துணியைத் தலையிலே கட்டிட்டான் என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டு கட்டுக்கடை பற்றி மனதில் இருந்த இளக்காரமான நினைப்பு, புத்தக விஷயத்தில் தலைகீழாக மாறி விட்டது.
எடின்பரோவில் ஷட்டரை இறக்கிய ஒரு புத்தகக் கடையில் வெறும் மூணு பவுண்டுக்குக் கிடைத்த பொக்கிஷங்கள் – சாம்யுவெல் பெக்கெட்டின் ‘காடோவுக்காகக் காத்திருத்தல்’ (Waiting for Godot), ஹெரால்ட் பிண்டரின் ‘பிறந்த நாள் விருந்து’ (The Birthday Party), நவீன ஐரீஷ் கவிதைத் தொகுப்பு, எடின்பரோ பவுண்டன்பிரிட்ஜ் பகுதியின் மைக்ரோ-ஹிஸ்டரி வரலாறு.
‘காடோவுக்காகக் காத்திருத்தல்’ cult status எட்டிய நாடகத்தின் பிரதி. இரண்டே இரண்டு காட்சிகள். மொத்தமே ஐந்து கதாபாத்திரங்கள். அதில் ரெண்டுபேர் திருவாளர் காடோ என்றவரின் வருகைக்காகக் காத்திருக்கும் கிட்டத்தட்டப் பஞ்சைப் பராரிகளான நபர்கள். அப்புறம் வேலைக்காரனைச் சந்தையில் விற்கக் கயிறு கட்டி அழைத்துப் போகும் ஒருத்தன், சதா பெட்டியைச் சுமந்தபடி நிற்கும் அந்த வேலைக்காரன். தவிர ‘காடோ ஐயா நாளைக்கு வர்றதாச் சொல்லச் சொன்னார்’ என்று அறிவித்துப் போகிற பையன். அவ்வளவுதான்.
காடோவுக்காகக் காத்திருப்பவர்கள் யார்? காத்திருக்கக் காரணம் என்ன? காடோ நாளைக்கு வருவார் என்று சொல்லிப் போகிற பையன் அவருடைய செம்மறியாடுகளை மேய்க்கிறவன். அவனுடைய சகோதரன் காடோவின் வெள்ளாடுகளை மேய்க்கிறவன். இவர்கள் ‘நல்ல மேய்ப்பர்களின்’ உருவகமா? காடோ யார், கடவுளா? காடோவுக்காகக் காத்திருத்தல் எக்சிஸ்டென்சியலிசப் படைப்பா? இதையெல்லாம் பற்றி ஐம்பத்து மூன்று வருடமாக நடக்கும் தர்க்கம் இன்னும் ஓய்ந்தபடியாக இல்லை.
ஒருத்தரின் ஷூவைக் கழற்ற இன்னொருவர் உதவி செய்து குப்புற விழுவது, தற்கொலை செய்து கொள்ளக் கயிறு கிடைக்காமல் பைஜாமா நாடாவை உருவ, உடுப்பு அவிழ்ந்து விழுவது என்று பொதுவாக ஸ்லாப்ஸ்டிக் காமெடி தளத்தில் இயங்கும் இந்த நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும் – படித்துக் கொண்டிருக்கும்போதே, கண்கட்டு வித்தை போல் அந்த வடிவத்தின் விளிம்புகளை எவ்விக் கடந்து உயர்கிறது. காடோவின் வரவுக்குக்காகக் காத்திருக்கும் இரண்டு பேரும் தொப்பி மாற்றிக் கொள்வதை லாரல்-ஹார்டி செய்கை ரக வர்ணணையாகச் சளைக்காமல் சொல்லும் பெக்கட் சட்டென்று ஒற்றை வரி வசனங்களாக அவர்களைப் பேசவிடும்போது ஏற்படும் அழுத்தம் அசாதாரணமானது.
நபர் 1(எஸ்ட்ரகன்) – செத்துப் போனவங்களோட குரலுங்க
நபர் 2(விளாடிமிர்) – எல்லாரும் ஒரே நேரத்தில் பேசறாங்க.
எஸ்ட்ரகன் – சலசலன்னு பேசறாங்க.
விளாடிமிர் – என்ன சொல்றாங்க?
எஸ்ட்ரகன் – அவங்க இருந்ததைப் பத்தி
விளாடிமிர் – உசிரோட இருந்தது போதாது அவங்களுக்கு
எஸ்ட்ரகன் – அதைப் பத்திப் பேசணுமாம்
விளாடிமிர் – செத்துப் போனது போதாது அவங்களுக்கு.
எஸ்ட்ரகன் – பத்தாதாம்.
ஆட்டன்பரோவின் படத்தில் காந்தியாக நடித்து ஆஸ்கர் விருது வாங்கிய சர் பென் கிங்க்ஸ்லி உட்பட எத்தனையோ தரமான நடிகர்கள் காடோவுக்காகக் காத்திருத்தல் நாடகத்தின் பாத்திரமாக மேடையேறியிருக்கிறார்கள். சாம்யுவெல் பெக்கட்டின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த நேரத்தில் நாடகம் இன்னும் தீவிரமாக இங்கிலாந்தில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. பார்க்க வேண்டாம். படித்தாலே தீவிரமான வாசக அனுபவத்தை ஏற்படுத்தும் நாடகம் இது.
மற்ற கட்டுக்கடைப் புத்தகங்கள் பற்றி சாவகாசமாக.
888888888888888888888888888888888888888888888888888888888
போன நூற்றாண்டுக் கவிஞர் வால்ட்டர் த லாமேர் பற்றிப் படிக்க நேர்ந்தது.
ஓங்கி உயர்ந்த
குதிரைகளின் குளம்படிச் சத்தம்
தேய்ந்து மறைய
பின்னோக்கிப் பொங்கி நகரும்
மவுனம்
போன்ற வரிகளின் சொந்தக்காரரான இந்தக் கவிஞரின் தகப்பனார் 1827-ல் லண்டனில் பேங்க் ஓஃப் இங்கிலாந்தில் வேலை பார்த்தாராம். லண்டன் புறநகர்ப் பகுதியில் குடியிருந்த இவர் தினசரி குதிரை சவாரி செய்து அலுவலகம் போனவர்.
த லாமேரின் கவிதையை விட்டுவிட்டு மனம் அவருடைய தகப்பனாரின் குதிரையோடு தறிகெட்டு ஓடுகிறது. இந்தக் காலத்தில் புற நகரில் வசிப்பவர்கள் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டரில் ஆப்பீஸ் போவதுபோல, அந்தக் காலத்தில் குதிரை சவாரி. பேங்க் ஓஃப் இங்கிலால்ந்து கட்டிடத்தில் குதிரை பார்க்கிங்க் இருந்ததா?
அடுத்தமுறை லண்டன் ஊசிநூல் தெருப்பக்கம் போகும்போது கட்டிடத்தைக் கவனித்துப் பார்க்க வேண்டும்.
————-
eramurukan@gmail.com
- கண்ணகி எதன் அடையாளம்?
- கற்சிலைகள் காலிடறும்!
- ஒரு சிலையும் என் சிலம்புதலும்
- தேரா மன்னா! செப்புவது உடையேன்!
- எச்.முஜீப் ரஹ்மானின் கட்டுரைகள் குறித்து
- தற்கால இலக்கியம்..வாழ்விடம் கலையாகும் தருணம்
- சூபி இசை – இதயத்திலிருந்து ஒரு செய்தி
- மொழியின் கைதிகள்
- விமர்சனங்களும் எதிர் வினைகளும்
- ஞான. ராஜசேகரனின் பாரதி – சில திரைப்படத் திரிபுகள்
- கடித இலக்கியம் – 9
- ஸீஸன் கச்சேரியும் தொய்வு அளவையும்
- வீட்டுப் பறவைகள்
- 33வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு
- மாப்பிள்ளைமார் கலகமும், இந்துத்துவத்தின் இடியாப்பச் சிக்கலும்
- செர்நோபில் அணுமின் உலையை மூடக் கட்டிய புதைப்புக் கோட்டை-8
- சர் சி வி ராமன் குறும்படம் வெளியீட்டு விழா
- கடிதம் – எஸ். இராமச்சந்திரன் ” இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… “
- பாரதி பஜனையில் மயங்கும் மக்கள்
- கண்ணகி சிலை விவகாரம்: மறக்கப்பட்ட சில உண்மைகள்
- 25.6.2006 அன்று சூரிச்சில் நடக்கவிருந்த ஒன்றுகூடல் தள்ளி வைப்பு
- கடிதம்
- ஜோதிர்லதா கிரிஜா போன்றோரின் கருத்து பற்றி
- எடின்பரோ குறிப்புகள் – 18
- சேர்ந்து வாழலாம், வா! – 7
- உறவின் சுவடுகள் ( தெலுங்கு கதை )
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-5) [முன்வாரத் தொடர்ச்சி]
- எ ட் டி ய து
- அரசு ஊழியர்களுக்கு மணி கட்டுவது யார்?
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 4. திருமண உறவுகள்
- கண்ணகியின் கற்பு சாஸ்திரம்..?
- மன்னரும் மல்லரும்
- தனி மனிதப் பார்வையில் சமூகம், இலக்கியம் பற்றிய குறிப்புகள்
- ஒரு காடழிப்பு
- தீய்ந்த பாற்கடல்
- கோமாளிக் காக்கைகள்
- தூங்க மறுக்கின்ற வெய்யில் இரவுகள்
- பெரியபுராணம் – 92 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கீதாஞ்சலி (77) என் சொத்தனைத்தும் உனக்கு!
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 25
- பேரா.நா.வா.நினைவு கலைஇலக்கிய முகாம்,கன்னியாகுமரி