எடின்பரோ குறிப்புகள் – 17

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

இரா.முருகன்


‘விழுந்தால் வீட்டுக்கு. விழாவிட்டால் நாட்டுக்கு’. இது பல வருடம் முன்னால் தமிழக அரசு லாட்டரியை அறிமுகப்படுத்தியபோது செய்த விளம்பரம். எப்படியோ இதைத் தேடிப்பிடித்து அறிந்துகொண்டு அட்சர சுத்தமாகக் கடைப்பிடிக்கும் இங்கிலாந்து அரசு, வெற்றிகரமாக லாட்டரிச் சீட்டு விற்றுக் குலுக்கல் நடத்துகிறது. லாட்டரி விழுகிற அதிர்ஷ்டசாலிகளுக்கு வருமானவரியாகச் சல்லிக்காசுகூடப் பிடித்துக்கொள்ளாமல் அறிவித்த முழுத்தொகையையும் பம்பர் பரிசாகக் கொடுக்கிறது, மிச்சப் பணத்தை வைத்து நாட்டில் கலையையும் வளர்த்துக்கொண்டிருக்கிறது.

எடின்பரோ நேஷனல் ஆர்ட் காலரி, லண்டன் டேட் மியூசியம், லிவர்பூல் மியூசியம் என்று இங்கிலாந்து முழுக்க ஓவியக் கூடங்களில் காட்சிக்கு வைக்கப்படுகிற பிரபலமான ஓவியங்களும் சிற்பங்களும் பெரும்பாலும், லாட்டரி வருமானத்தில் வாங்கப்பட்டவைதான். எடின்பரோ ராயல் ஸ்காட்டிஷ் அகாடமியில் அவ்வப்போது நடக்கும் கண்காட்சிகள், கலைச் சொற்பொழிவுகள், ஒரு ஓவியக் கூடத்திலிருந்து இன்னொன்றுக்குப் போக இலவச பஸ் சேவை எல்லாம் லாட்டரிக் காசுதான். பரிசுச் சீட்டு வசூலை வைத்துத்தான் அரசு ஆதரவில் கவிஞர்கள் பேரவை வருடாவருடம் எடின்பரோ கவிதைத் திருவிழாவும், கோடைகாலக் கலைவிழாவும் நடைபெறுகின்றன. இங்கிலாந்து படைப்பாளிகள் எலிசபெத் மகாராணிக்கும் டோனி ப்ளேருக்கும் ஒப்புக்காக ஒரு தாங்க் யூ கூடச் சொல்லாவிட்டாலும், லோட்டோ லாட்டரிச் சீட்டுக்கு தலா ஒரு படைப்பையாவது சமர்ப்பணம் செய்யலாம்.

இந்தச் சிந்தனையோடு எடின்பரோ பெல்ஃபோர்ட் வீதியில் ஸ்காட்டிஷ் நேஷனல் காலரி ஓஃப் மாடர்ன் ஆர்ட்ஸ் கட்டிடத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை மதியம் நுழைந்தானது. நுழையவே வேண்டாம். சும்மா வெளியில் நின்று நாள் முழுக்கப் பார்த்துக்கொண்டே நிற்கலாம். அப்படி ஒரு பசுமை கொழிக்கும் பரந்து விரிந்த பிரம்மாண்டமான புல்தரையை இந்த ஓவியக் கூடத்துக்கு முன்னால் இயற்கை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. எடின்பரோவிலோ லண்டனிலோ இருக்கப்பட்ட எந்தக் கட்டடத்தின் முன்வசத்துப் புல்லாந்தரையும் இந்த lawnக்கு உறைபோடக் காணாது.

இந்தக் கட்டிடமும், இதன் எதிரிலேயே இருக்கும் இன்னொரு பெரிய ஓவியக் கூடமான டீன் காலரியும் இந்த ஒன்பது மாதத்தில் எத்தனையோ முறை படியேறி வலம் வந்தவைதான். குடியிருக்கும் தோப்புத்தெருவிலிருந்து ஒரு பத்து நிமிட நடை என்பதால் நினைத்த மாத்திரத்தில் இங்கே போய்ச் சேர வசதி செய்த ஆண்டவனுக்கு ஒரு கூடுதல் ஸ்தோத்ரம்.

இரண்டு ஓவியக் கூடங்களிலும் ஒவ்வொரு தடவை வலம் வரும்போதும் Dada, surrealism, cubism, impressionism, expressionism, futurism, art nouve, post modernism என்று நவீன ஓவியத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் இன்னும் கொஞ்சம் ஆழமாக உணர்ந்து அனுபவிக்க வாய்ப்புக் கிடைக்கிறது. பிகாஸோவின் தொடக்ககால க்யூபிச ஓவியங்களையும், சால்வடார் டாலியின் ‘Raphaelesque Head Exploding’

போன்ற சர்ரியலிச ஓவியங்களையும், இன்னும் மாட்டிஸே, லேகர், பிரேக், போனர்த், டெரய்ன், எடுவர்டோ பாவ்லோசி என்று நவீன ஓவியத்தின் முகமுத்திரைகளான கலைஞர்களின் படைப்புகளையும் இந்த இரண்டு ஓவியக் கூடங்களிலும் எவ்வளவு நேரம், எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது. கிட்டத்தட்ட ஐயாயிரம் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. லாட்டரிச் சீட்டு விற்ற பணம் இப்படி உபயோகமாகும் என்று தெரிந்தால், தமிழ்நாட்டில் தினசரி குலுக்கலுக்கு ஆதரவுப் பிரச்சாரம் செய்ய இதோ இப்போதே புறப்படத் தயார்.

பரிசுச் சீட்டு விற்பனை தவிர இன்னொரு சுவாரசியமான முறையிலும் ஓவியக் கூடங்களுக்குக் கலைநயம் மிகுந்த படைப்புகள் வந்து சேர்கின்றன. பெரிய பிரபுத்துவக் குடும்பங்கள் வாரிசு வரி, வருமான வரி முழுமையாகக் கட்ட முடியாமல் போனால், குடும்பச் சொத்தாகச் சேர்த்து வைத்த சிறப்பான ஓவியங்களை நிபுணர்களைக் கொண்டு மதிப்பிட்டு, வரிப் பணத்துக்கு ஈடாக அரசாங்கத்துக்குக் கொடுத்துவிடுகிறார்கள். அதெல்லாம் ஓவியக் கூடங்களுக்குள் பத்திரமாக இடம் பிடித்து மக்கள் சொத்தாக மாறுகிறது. தொழிற்கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி, லிபரல் டெமாக்ரேட் கட்சி என்று யார் ஆட்சியைப் பிடித்தாலும் இங்கிலாந்தில் இதெல்லாம் தங்குதடையில்லாமல் தொடரும்.

இந்தியாவில்? தில்லி லலித்கலா அகாதமியில் ஓவியம் வாங்க அரசு ஒதுக்கிய பணம் செலவானதை, தண்டச் செலவு என்று குற்றம் சொல்லி, அங்கே இருந்த கலைப் பொருட்களையும் விற்றுக் கடாசிவிடத் துடித்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி நினைவுக்கு வருகிறார். நமக்குக் கொடுத்துவைத்தது இந்த மாதிரித் தலைவர்களைத்தான்.

8888888888888888888888888888888888888888888888888888888

இங்கிலாந்து அரசின் கலை ஆதரவு கொஞ்சம் அதிகமாகவே தாராள மயமாகியிருப்பதை மாடர்ன் ஆர்ட் காலரியின் pop art பகுதியில் உணர முடிந்தது.

நாலடிக்கு மூன்றடி பரப்பில் முதல் ஓவியம். ஓவியம் என்பதை விட ஒரு நீள்சதுரம், உள்ளே வட்டத்துக்குள் சில எழுத்துக்கள், அப்புறம் வரிசையாக மற்றவை. கீழே இன்னொரு செவ்வகம்.

முதல் வட்டத்துக்குள் பெரிய எழுத்தில் ‘கோழி முட்டை’.

அடுத்த வரிகளில்

பாரசெட்டமால் 200 மில்லிகிராம்
க்வாய்பெனிசின் 100 மில்லிகிராம்
பினைல்ஃபின் ஹைட்ரோக்ளோரைட் 5 மில்லிகிராம்
குழந்தைகள் கையில் கிடைக்காதபடி பாதுகாப்பாக வைக்கவும்.
இருபத்தைந்து டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலையில் சேமிக்கவும்.
ஒரு வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு சாப்பிடவும்.
பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகவும்.

அப்புறம் செவ்வக வடிவில் – தயாரிப்பாளர் ஜெனிஃபர் ஆன்

மருந்து பாட்டில் மேல் ஒட்டிய காகிதம், மாத்திரை உறை இப்படி ஒரு ஐம்பது லேபல்களை enlarge செய்து ஓவியம் என்று மாட்டிய கண்காட்சி. ஸ்காட்டிஷ் பெண் ஓவியரின் படைப்புகள் எல்லாம். எல்லா ஓவியத்திலும் மருந்தின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் தினசரி வாழ்க்கையில் உபயோகமாகிற ஒரு பொருளின் பெயர். தயாரித்த மருந்துக் கம்பெனியின் பெயரும் முத்திரையும் இருக்க வேண்டிய இடத்தில் ஓவியரின் பெயர்.

இந்தக் கண்காட்சிக்கான அறிமுகக் குறிப்பில் இருந்து புரிந்து கொண்டது – பொழுதுவிடிந்து பொழுது போனால் உபயோகப்படுத்தும் ஒரு பொருளை, அதேபோல் பயன்படுத்தப்படும் ஆனால் முழுவதும் யாரும் பார்க்க நேரம் இருக்காத இன்னொரு பொருளோடு இணைத்து, வாழ்க்கை அனுபவத்தின் ஆழங்களை அலச முற்படுகிறார் ஓவியர்.

லண்டன் டேட் காலரியில் பாப் ஆர்ட்டாக வைத்திருப்பதில் ஒரு பகுதி – அழுக்கான அசல் கழிப்பறைப் பீங்கான், உபயோகித்த சுவட்டோடு சிறுநீர் கழிக்கும் கோப்பை, தகர டப்பாவில் கொஞ்சம் நரகல், அப்புறம் வாடை எல்லாம் கழிந்து போக எதிரே ஒரு பெரிய மின்விசிறியின் ஓவியம்.

இப்படியெல்லாம் இல்லாமல், சாதுவாக மருந்துச் சீட்டை ப்ரேம் போட்டு மாட்டி வைத்த எடின்பரோ பாப்-ஆர்ட் ஓவியர் வாழ்த்தப்பட வேண்டியவர்.

888888888888888888888888888888888888888888888888888888888888

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்