எடின்பரோ குறிப்புகள்– 16

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

இரா முருகன்



எதிர்பார்த்தபடிக்குத்தான் தேர்தல் முடிவுகள். அதாவது, இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்.

பிரதமர் டோனி ப்ளேரின் தொழிற்கட்சி கணிசமாக அடி வாங்கிக் கட்டுப் போட்டுக்கொண்டு அ-இ-சகஜம்ப்பா என்று க.மணி டயலாக்கை டப்பிங்கில் எடுத்துவிட்டபடி நாளை எண்ணிக்கொண்டிருக்கிறது. லண்டன் இந்துக் கோவிலுக்குப் போய் அம்மன் சந்நிதி பூசாரி மந்திரித்துக் கொடுத்த சிவப்பு மஞ்சள் கயிற்றை வலது மணிக்கட்டில் அணிந்தபடிக்கு நாடாளுமன்றத்தில் மைக்கைப் பிடித்துப் பேசிக்கொண்டிருக்கும் ப்ளேர் புகைப்படங்களில் தலை நரைத்துப் போய்த் தளர்ந்து காணப்படுகிறார். வாட்டர்கேட் ஊழல் உச்சத்தில் பத்திரிகையில் வெளிவந்த ரிச்சர்ட் நிக்சனின் அலுத்துப்போன முகம் ஏனோ நினைவுக்கு வருகிறது.

ப்ளேர் அவசர அவசரமாக அமைச்சரவையை மாற்றி அமைத்ததில் உள்கட்சி அதிருப்தி கூடியது தான் மிச்சம். வெளிநாட்டு கிரிமினல்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து பிரிட்டீஷ் சமூகத்தில் இரண்டறக் கலக்க சந்தர்ப்பம் கொடுத்த உள்துறை அமைச்சர் கிளார்க் நீக்கப்பட்டு இருக்கிறார். டோனியை வெளிப்படையாகச் சபித்துக்கொண்டே இறங்கிப்போன இவர் தவிர, டயரிக் காரியதரிசியோடு ஆபீஸ் நேரத்தில் சல்லாபம் செய்த காமாந்தகார உதவிப் பிரதமர் ஜான் பிரஸ்காட் காமன்ஸ் சபைத் தலைவர் பதவிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட காரியதரிசியம்மா ட்ரேசி டெம்பிள் தன் சொந்த டயரிகளை டெய்லி மெயில் பத்திரிகைக்கு ரெண்டரை லட்சம் பவுண்டுக்கு விற்றுக் காசு பார்த்து விட்டார். நீள அகலம் கூடிய பிரஸ்காட்டின் சொந்த sausage பற்றி, ஒரே ராத்திரியில் நாலு தடவை பற்றி எல்லாம் இவர் தன் டயரியில் எழுதியதை எடிட் செய்துவிட்டுப் பத்திரிகையில் பிரசுரித்ததைப் படிக்க யாரும் தயாராக இல்லை. அப்படியே அச்சுப்போட்டாலும், யாருக்கு வேணும் இதெல்லாம்?

உள்ளாட்சித் தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சி கொஞ்சம் போல் பலத்தைக் கூட்டிக்கொண்டிருக்கிறது. கவலை தரும் ஒரே செய்தி, பிரிட்டீஷ் தேசியக் கட்சியான பி..என்.பி லண்டனில் பார்க்கிங் பகுதி மற்றும் யார்க்ஷயரில் கணிசமாக வெற்றி பெற்றிருப்பதுதான்.

இங்கிலாந்து வெள்ளையருக்கே என்று மண்ணின் மைந்தர்களுக்காக முழக்கமிடும் பி.என்.பி இன்னும் வளர்ந்தால், ‘இந்தியனே வெளியேறு, பாகிஸ்தானியே வெளியேறு, கூடவே பங்களாதேஷ், கென்யா, மொசாம்பிக், ஜிம்பாவேக்காரனே எல்லாரும் ஒட்டுமொத்தமாக வெளியேறுங்கள்’ என்று இவர்கள் சிவசேனா ஸ்டைலில் உக்ரமாக ஆரம்பித்து விடலாம்.

ஏற்கனவே வெளிநாட்டு (அதாவது இந்தியத் துணைக்கண்ட) மருத்துவர்கள் வருகைக்குக் கணிசமான தடை வந்துவிட்டது. தகுதி குறைந்தாலும், பிரிட்டீஷ் மருத்துவர்களைத்தான் காலியாகிற வேலைகளுக்கு எடுக்க வேண்டும் என்று சட்டத்தைத் திருத்தி எம்.ஆர்.சி.எஸ் எஃப்.ஆர்.சி.எஸ் படிக்கக் கிளம்பி வந்து பார்ட்-டைம் உத்தியோகத்தில் இருக்கும் இந்திய டாக்டர்களை ஊரைப் பார்க்க அனுப்பிக் கொண்டிருக்கிறது ப்ளேரின் அரசாங்கம்.

முன்னூறு வருடமாக நம்மைச் சுரண்டியவர்களளால், சுரண்டப்பட்டவர்கள் ஒரு ஐம்பது வருடம் நியாயம் கேட்பதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

88888888888888888888888888888888888888888888888888888

இங்கேயும் கவிஞர் சந்திப்பு உண்டு. நம்ம பக்கம் போல் போஸ்ட் கார்டில் ‘வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டாங்கிப்பட்டியில் கவிஞர் கூடல் நடக்கிறது. தவறாமல் வந்து சேரவும்’ என்று அழைப்பு அனுப்பி, கிடைத்த பெண் கவிஞர்களை அரண்டு மிரண்டு அந்தாண்டை ஓடிப்போக வைக்கிற சமாச்சாரம் இல்லை இது.

மூன்று மாதம் முன்னால் முறையாக அறிவிக்கப்பட்டு, ராயல் ஸ்காட்டிஷ் அகாதமியில் கவிஞர் சந்திப்பு. கவிதை வாசிப்பு.

எங்கேயும் இந்த மாதிரி விஷயங்களுக்கு ஆஜராகிற முப்பது சில்லரை பேர்தான் இங்கேயும். அடுத்த தடவை சப்ஜாடாக முப்பது ஜோல்னாப்பை சென்னை காதி கிராமயோக் பவனில் வாங்கி வந்து இவர்கள் எல்லோருக்கும் அன்பளித்து ஒரு high-brow இலக்கிய ரசனை அட்மாஸ்பியரை உருவாக்க மனதில் முடிச்சு போட்டுக் கொண்டானது.

ஸ்காட்லாந்துக்காரரும், சமகால பிரிட்டீஷ் கவிஞர் – நாவலாசிரியர்களில் முக்கியமானவரானருமான John Burnside கலந்து கொண்டு கவிதை வாசித்தார். அண்மையில் வெளியாகிப் பரவலாகப் பேசப்படும் அவருடைய சுயசரிதப் படைப்பான ‘Lying about my father’ பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்த்தது நடக்கவில்லை. ஸ்காட்லாந்தின் தனி மனித – சமூக வாழ்க்கையில் ஊடும் பாவுமாகப் பின்னிப் பிணைந்த குடிப்பழக்கத்தைப் பற்றி, அதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுக் குடும்ப உறவுகளைப் புறக்கணித்த தன் அப்பா பற்றி, அவரைத் தீர்த்துக்கட்டத் தெருமுனையில் கத்தியோடு ஒளிந்திருந்த தன் பனிரெண்டு வயதுக் கொலைவெறி பற்றி எல்லாம் சிறப்பாக ஜான் பர்ன்சைட் எழுதியிருப்பதாக விமர்சகர்கள் ஒருமுகமாகப் பாராட்டுகிற புத்தகம் இது.

ஜான் கவிதை வாசிப்புக்கு முன்னுரையாக தாட்டியான ஒரு அம்மையார் மெய்சிலிர்த்த நிலையில் பேசினார் – ‘இந்த நாள் நமக்கெல்லாம் மறக்க முடியாத தினம்; இன்றைக்கு உலகில் சுவாசித்துக் கொண்டிருக்கும் கவிஞர்களிலேயே தலைசிறந்த ஜான் இங்கே நம்மோடு இருக்கிறார். அவருடைய புகழ் பெற்ற கவிதைகளை அவருடைய சொந்தக் குரலில் வாசிக்கிறார். கனவா நினைவா இது?’ என்று plattitude-களைத் தொடர்ந்து தட்டி விட்டபடி இருக்க, ஜான் கொஞ்சம் கூச்சத்தோடு கவிதை வாசித்தார். அவர் முடித்த பின்னும் இந்தக் காக்கைத் தம்புராட்டி அவருக்கு ஆயிரத்தெட்டுப் போற்றி சொல்லி அர்ச்சனை செய்யத் தவறவில்லை. எல்லா ஊரிலும் கவிஞர்களுக்குச் சாபம் காக்கைகள் தான்.

ஜான் பர்ன்சைடைத் தொடர்ந்து ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆங்கிலக் கவிஞர் Brian Johnstone கவிதை வாசிக்க எழுந்தபோது முப்பது பேரில் பத்து பேர் பிரின்சஸ் தெருப்பக்கம் நடையைக் கட்டினார்கள்.

பர்ன்சைடை விடக் கம்பீரமான குரல் ப்ரையனுக்கு. வயதும் அதிகம். கோட்டும் சூட்டும் ஆறடி உயரமுமாக ஒரு கனவான் தோரணை. அவர் வாசித்த கவிதையில் அந்தத் தோரணை ஏதும் இல்லாமல் சட்டென்று மனதில் பதிந்தது.

இது போன்ற சமயங்களில்
கண்ணாடிக்குள் இருந்து
என் அப்பா உற்றுப் பார்க்கிறார்.
இறந்துபோய் இருபது வருடம் ஆனாலும்,
கண்ணாடிக்குள் தட்டுப்படும்
என் இன்னொரு முகமாக வளர்ந்தபடி.

என் முகத்தில் வளர்ந்த
அவர் தாடி ரோமத்தை மழிக்கிறேன்.
அவர் நடையை நடக்கிறேன்.
அவருடைய வேகத்தில் ஓடுகிறேன்.
அவருடைய நிர்வாணம்
பருத்துக்கொண்டிருக்கும் என் உடம்பை உலுக்குகிறது.

மற்றவர்களும்கூட அவரை என்னில் பார்க்கிறார்கள்
புகைப்படங்களில், தெறித்து நகரும் பார்வையில்,
உள்கண் மெல்லத் திரும்பும்போது
என் கூடவரும் பயணியாக.

அவருடைய எதிரொலிகள்
உண்மையானவை என்ற மரியாதையோடு
அந்தக் கையைப் பற்றுகிறேன்.
நான் புரிந்துகொள்ளாமல்
சண்டை போட்ட அவருடைய ஆவியை
என்னுள் வாங்கிக்கொள்கிறேன்.

ப்ரையன் ஜான்ஸ்டோனிடம் பேசிக்கொண்டிருக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. தென்னிந்திய எழுத்தாளன் என்றதும் தமிழ் தானே, கிரேக்க மொழியை விடப் பழையது இல்லையா, அதில் எழுத நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர் என்றார். எழுத்து, தொழில் பற்றி ஆர்வமாக விசாரித்தார். மறு விசாரிப்பில் அவர் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் என்று தெரிந்தது.

The Lizard Silence என்ற தன் கவிதைத் தொகுதியைக் கையெழுத்துப்போட்டுக் கொடுத்துவிட்டு ஐன்ஸ்டின் போல் தலைமுடியும், நரைத்த கட்டை மீசையுமாக டயோடா காரில் கிளம்பிய ப்ரையன், மனதில் படிந்திருந்த ரிடையர்ட் எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார் பிம்பத்தை அதிரடியாகத் திருப்பிப் போட்டுவிட்டார்.

88888888888888888888888888888888888888888888888888888888888888

“ஐ-பாட் உருவாக்கி மில்லியன் டாலர் கணக்கில் பணத்தை அள்ளும் ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனிக்கும், அந்தக்கால இசைக்குழுவான பீட்டில்ஸ்களுக்கும் டிரேட்மார்க் சம்பந்தமாக நடந்த வழக்கில் அமெரிக்க உயர்நீதிமன்றம் கம்ப்யூட்டர் கம்பெனி சார்பில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் கம்ப்யூட்டர்துறை வல்லுனர் திரு கய் கீவ்னி அவர்களே?”

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் பார்க்கும் பி.பி.சியின் நியூஸ்-24 நிகழ்ச்சியில் போன வாரம் ஒரு பேட்டி.

“அது என்ன கேசோ என்ன எளவோ தெரியாதுப்பா. உள்ளே வாய்யான்னு இங்கே கூட்டி வந்தாங்க. வந்தேன். அம்புட்டுத்தான்”.

கம்ப்யூட்டர் நிபுணர் படு காஷுவலாகச் சொல்கிறார்.

நேர்முகப் பேட்டி காண்கிற அறிவிப்பாளர் ஒரு வினாடி திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்க்க, பேட்டிக்காக வந்து சேர்ந்து பி.பி.சி அலுவலக வரவேற்பறையில் உட்கார்ந்து டெலிவிஷனில் இதைப் பார்த்த அசல் கம்ப்யூட்டர் நிபுணர் கய் கீவ்னியும் திகைத்துப் போகிறார். ‘குத்துக் கல்லாட்டம் இங்கே நான் உக்காந்திருக்கேன் இது பற்றி விலாவாரியாப் பேச. அங்கே என் பெயர்லே யாருய்யா பேட்டி கொடுக்கறது?’

விஷயம் இதுதான். பேட்டிக்காக இந்தக் கம்ப்யூட்டர்காரர் டாக்சி பிடித்து தொலைக்காட்சி நிலையத்துக்கு வந்து சேர்ந்து ஒரு பக்கம் காத்துக் கொண்டிருக்கிறார். அவரைக் கொண்டுவந்து விட்டுவிட்டுத் திரும்பிப் போய்க்கொண்டிருந்த டாக்சி டிரைவர் பெயரும் கய் தான்.

இங்கே யாருப்பா கய் என்று ஸ்டூடியோவிலிருந்து வெள்ளையும் சள்ளையுமாக ஒருத்தர் வந்து விசாரிக்க நான் தானுங்க என்று டிரைவர் அடுத்த சவாரிக்கு ஆயத்தமாக முன்னால் வந்து நிற்க, அவரை உள்ளே தள்ளிக்கொண்டு போய் காமராவைப் பார்க்கவைத்து விட்டார்கள்.

அடுத்த மாதம் மன்மோகன்சிங்க் வரப்போவதாகச் சொன்னார்கள். பி.பி.சியில் சௌத்ஹால் பகுதி கறிகாய் மொத்த வியாபாரம் செய்யும் குர்னாம் சிங்க்கைக் கூப்பிட்டு காஷ்மீர் பிரச்சனை பற்றிக் கேட்காமல் இருந்தால் சரிதான்.

888888888888888888888888888888888888888888888888888888888

அடுத்த கேரள முதல்வர் அச்சுதானந்தனா பிணராய் விஜயனா என்று இதைப் படிக்கும் வேளையில் தெரிந்திருக்கும்.

வல்யம்மை கௌரியம்மா, லீடர் கருணாகரனின் மகன் முரளி, குஞ்ஞாலிக்குட்டி, கேரள காங்கிரஸ் பாலகிருஷ்ண பிள்ளை என்று பெருந்தலைகள் எல்லாம் தோற்றுப்போக, மூணில் ரெண்டு பங்கு பெரும்பான்மையோடு இடது முன்னணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் எண்பத்து மூணு வயது அச்சுதானந்தனின் அசுர உழைப்பு. உக்ரன் பிரசங்கங்கள்.

மே பதினைந்தில் கூடும் சி.பி.எம் பொலிட்பீரோ யோகம் யாரை முக்ய மந்திரியாக்கும் என்று காத்திருப்பு தொடர்கிறது.

“நோக்கிக்கோளின் சகாவே. நம்முடெ ஸ்வந்தம் பிரகாஷ் கராத் வராம் போகுன்னு”

லண்டனிலிருந்து நண்பர் தொலைபேசினார்.

அறிஞ்சு கூடா சேட்டா. பிரகாஷ் கராத்தோ இல்லை அவருடைய மனைவி பிருந்தா கராத்தோ, யார் தெற்குப் பக்கம் நகர்ந்தாலும், மன்மோகன்சிங் தலைப்பாகைக்குள் கொஞ்சம் குத்துவலி குறையலாம்.
——————————-
eramurukan@gmail.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்