ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை

This entry is part [part not set] of 27 in the series 20020629_Issue

R.P.ராஜநாயஹம்


முப்பது வருஷத்திற்கும் மேலாக வாசகனாக இருப்பது தவமா, தியாகமா, ஏமாளித்தனமா. சொந்த வாழ்க்கையின் மேடுபள்ளங்களோடு இலக்கியம் சார்ந்தும் எத்தனையோ கலைடாஸ்கோப் காட்சிகள்.

எனக்கு இலக்கியம் அந்நியமான விஷயம். ஆனால் விட்டகுறை தொட்டகுறை என்று விரட்டிக் கொண்டேதான் வருகிறது.

கடந்த இருபத்தைந்து வருடங்களில் போஸ்டல் க்ளார்க், சினிமா அஸிஸ்டென்ட் டைரக்டர், ட்ரான்ஸ்போர்ட் ஆபரேட்டர், பிராண்டிஷாப் பார்ட்னர், ஃபுட் ஆயில் ஏஜன்ட், இன்டஸ்ட்ரியலிஸ்ட், த்ரி ஸ்டார் ஹோட்டல் பிஷப்ஷனிஸ்ட், மீண்டும் சினிமா, அப்புறம் ஃபைனான்ஸ் பிஸினஸ் என்று எத்தனை அவதாரம் எடுத்துவிட்டேன். சமீபத்தில் கூட மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் மாணவனாக ஒரு வருடம்.

பிறந்தது திருநெல்வேலி செய்துங்க நல்லூர். பள்ளிக் கூடக் காலத்திலிருந்த இன்றுவரை விக்ரம சிங்கபுரம், செய்துங்கநல்லூர், பழனி, சத்திகொடிவேரி, திருச்சி, நாகை, கரூர், மதுரை, மீண்டும் நாகை, கோவை, பெரியகுளம், சென்னை மீண்டும் மதுரை ஸ்ரீவில்லிபுத்தூதூர், மீண்டும் திருச்சி, மீண்டும் பழனி, பாண்டிச்சேரி, மீண்டும் திருச்சி, மீண்டும் சென்னை, மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர். இப்போது மீண்டும் திருச்சி என்று பந்தாடுகிறது காலம்.

‘நள்ளாத்துக்காரன் (திருநள்ளாறு) உங்களை இப்படி ஊர் ஊராய் விரட்டுகிறானே என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கு, ராஜநாயஹம் இல்லாத புதுவை நல்லாயில்லே ‘ – கி.ரா. 1999ம் ஆண்டு எழுதுகிறார்.

திருமணமான இந்த பத்தொன்பது ஆண்டுகளில் பதினைந்து வீடு மாற்றியிருக்கிறேன்.

நானும் ஒரு கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ என்று அந்த முண்டாசுக்காரன் மாதிரி நானும் பெருமூச்சு விட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.

சொல் புதிது 8ல் சாரு நிவேதிதாவுக்கு எச்சரிக்கை செய்து ‘சாரு தொடங்க வேண்டிய புள்ளி தளையசிங்கத்தின் ‘தொழுகை ‘ கதைதான். ஆனால் அபாயமிருக்கிறது. தளையசிங்கம் அவசரமாக அடித்துக் கொல்லப்பட்டார் ‘ என்று ஜெயமோகன் எழுதியதை படித்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது. ‘1971ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோருக்கு நன்னீர் கேட்டு போராட்டம் நடத்தியதற்காக போலீஸாரால் தளையசிங்கம் தாக்கப்பட்டார். 1972மெ¢ ஆண்டு ‘மெய்யுள் ‘ என்ற கருத்தாக்கத்தை நிறுவுகிறார். 1973மெ¢ ஆண்டு சில மாதங்கள் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாகி மரணமடைகிறார் ‘. இது ‘தளைய சிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம் ‘ என்ற கட்டுரையில் சுந்தரராமசாமி நமக்குத் தரும் தகவல். 22.02.2001 அன்று திருச்சி வந்திருந்த சுந்தரராமசாமி அவர்களிடம் நான் நேரில் இதுபற்றிக் கேட்டபோது தளைய சிங்கத்தின் சகோதரர் மு.பொன்னம்பலம் கொடுத்த தகவலைத்தான் எழுதியதாகக் கூறுகிறார். இந்த விவரங்களைக் குறிப்பிட்டு ஜெயமோகனுக்கு நான் கடிதம் எழுதுகிறேன். அதில் தளையசிங்கம் பாலியல் கதைகளுக்காக அடித்துக் கொல்லப் பட்டார் என்ற தொனியும் அவருடைய விமர்சனத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி எழுதுகிறேன். ஜெயமோகன் இதற்கு ஐந்து பக்கத்துக்கு பதில் எழுதுகிறார். என்னுடைய கடிதம் சொல் புதிது 9லெ¢ விளக்கங்களுடன் பிரசுரிக்கப்பட இருப்பதாக அதில் குறிப்பிடுகிறார்.

மே 4,5,6 தேதிகளில் ஊட்டிநாராயணகுரு குலத்தில் நடக்க இருக்கிற தளையசிங்கம் கருத்தரங்கிற்கு ஜெய மோகனிடம் இருந்து அழைப்பு. உணவும் தங்குமிடமும் குருகுல ஏற்பாடு. நிபந்தனைகள் மது அருந்தக்கூடாது. தனி நபர் தாக்குதல் கூடாது. அழைப்பு அனுப்பப் பட்டவர் தவிர வேறு யாரையும் அழைத்து வரக் கூடாது. அரங்க அமர்வுகளில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும்.

நான் 12 வயதில் சிகரெட், மது பழகிவிட்டேன். 18 வயதில் கஞ்சாவையும் சேர்த்துக் கொண்டேன். தொடர்ந்து ஐந்து வருடத்திற்கு சிகரெட், கஞ்சா, மது போன்றவற்றை மிக அதிகமாக பயன்படுத்தி அவற்றில் மூழ்கியே இருந்தேன். 1977 ஏப்ரல் 5 ந் தேதி கஞ்சாவை நிறுத்தி விட்டேன். சிகரெட்டை 1978 மார்ச் 4நெ¢ தேதி உதறினேன். மதுவை டிசம்பர் 1978 ல் கைவிட்டேன். அதன்பிறகு இன்று 2002 வரை 24 வருடங்களாக சிகரெட், கஞ்சா மதுவை விளையாட்டுக்காகக் கூட தொட்டதேயில்லை. அதனால் முதல் நிபந்தனை எனக்கு சம்பந்தமில்லாதது. மற்ற நிபந்தனைகளுக்கு உடன் பட்டு பதில் எழுதினேன்.

சொல்புதிது 9 ல் தளைய சிங்கம் பற்றிய என் கடிதம் மிகவும் சுருக்கப்பட்டு எழுத்துப் பிழைகளுடன் (தலைய சிங்கம்) ஒரு பாமரனின் கடிதம் போல் பிரசுரிக்கப்பட்டு விளக்கம் அடுத்த இதழில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தளைய சிங்கத்தின் தொழுகை, கோட்டை கதை நகல்களும் தளைய சிங்கத்தின் கருத்துகளும் ஜெயமோகனின் நெடுங்கட்டுரை ஒன்றும் கொரியரில் அனுப்பப்பட்டு கிடைக்கிறது. கதைகள் பேராசிரியர் பூர்ணசந்திரனிடம் ‘ புது யுகம் பிறக்கிறது ‘ கேட்டு வாங்கிப் பெற்று ஏற்கனவே படித்திருக்கிறேன். போர்ப்பறை, மெய்யுள், முற்போக்கு இலக்கியம், ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி ஆகிய நூல்களையும் பல ஆண்டுகளுக்கு முன்பே படித்திருக்கிறேன். என்றாலும் அனுப்பப்பட்டவைகளைக் கற்றுத் தேர்கிறேன். ஜெயமோகனின் நெடுங்கட்டுரை நிறைய ஜார்கன்ஸ், மேற்கோள்கள், தான் படித்த பல விஷயங்களின் சாரம் எல்லாமாகச் சேர்ந்து தளைய சிங்கம் பெயரை எடுத்து விட்டு நீட்சே, ஹெகல், சார்த்தர், அரிஸ்டாட்டில், சாக்ரடாஸ், பிளேட்டோ என்று யார் பெயரைப் போட்டாலும் பொருந்தக் கூடிய அளவுக்கு க்ராஃட் மேன்ஷிப். தளைய சிங்கம் பற்றிய சுந்தரராமசாமியின் கட்டுரை பற்றி ‘இலக்கிய வம்புகளின் அடிப்படையில் மதிப்பிடும் முயற்சி ‘ என்றும் ‘செயற்கை இறுக்கம் நிறைந்த நடை ‘ என்றும் குறிப்பிடுகிறார்.

கொஞ்சகாலமுன் கூட ஓரளவு வசதி யோடுதான் இருந்தேன். இப்போது நிலைமை வேறு. உடனடிச் செலவு என்று குடும்பத்தில் பல நிர்ப்பந்தங்கள். சின்னவனின் சைக்கிளை ஒழுங்கு பண்ண ஐநுெறு ரூபாய் தேவை. க்ரைண்டர் ஒட வில்லை. ஃப்ரிட்ஜ் அவுட் ஆஃப் ஆர்டர். டி.வி. கலர் ட்யூபில் கோளாறு. மே மாத கல்யாண அழைப்பிதழ்களுக்கு 300 ரூபாய் தேவை. அடுத்த மாதம் பையன்கள் இருவரின் படிப்புச் செலவுக்கு வேறு பெரிய தொகை தேவை. என்ன செய்யப் போகிறேன் ? என்றாலும் இலக்கிய தாகம். சுந்தர ராமசாமி அடையாளங்காட்டிய தளைய சிங்கத்திற்கு கருத்தரங்கம். ஊட்டிக்கு போத்தான் வேண்டும்.

3 ந் தேதி பெரியவனுடன் சைக்கிளில் பஸ் ஸ்டாண்ட் வந்து கோவை பஸ்ஸில் ஏறுகிறேன். கோவையில் மதியம் சாப்பிட்டபின் ஊட்டி பஸ் ஏறுகிறேன். மாலை ஊட்டி பஸ் ஸ்டாண்டில் உணவுப் பொட்டலம் வாங்கிக் கொண்டு மஞ்சன கொரெ நாராயண குருகுலத்திற்கு ஆட்டோ 50 ரூபாய். சுவாமி அத்வைதானந்தா எனக்கு ஒரு அறை தருகிறார். காமன் டாய்லட் பாத்ரூம் வெஸ்டர்ன் டாய்லட். ஃப்ளஷ் சரியில்லை. வாளி நிறைய தண்ணீர் பிடிக்க அதிக நேரமாகிறது. தண்ணீர் ஊற்றி சிரமத்துடன் சுத்தம் செய்கிறேன். பின் குளிக்கிறேன். குளிர் நடுக்குகிறது. வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்து விட்டேன். ராஜீவ் என்ற குருகுல வாசி அவருடைய ஸ்வெட்டரை எனக்குத் தருகிறார். அவர் வெறும் சட்டை வேட்டியுடன் தான் இருந்தார். டாக்டர் தம்பான் அவர்களுடைய கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்கிறேன். சுவாமி அத்வைதானந்தா ஒரு கதை சொல்கிறார். ‘You Know this story ? ‘ என்று என்னை வினவுகிறார். ஒரு விபச்சாரி தன்னிடம் உடலுறவு கொண்ட ஒருவன் பணம் தராததால் அரசனிடம் புகார் செய்கிறாள். ஒரு கண்ணாடியின் முன் பணத்தை வைத்து கண்ணாடிக்குள் பிரதிபலிக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளும்படிக் கூறுகிறான் அரசன்.

என்னுடைய உணவுப் பார்சலை சுவாமி அத்வைதானந்தாவுக்கும் ராஜீவுக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டு ஆசிரம சப்பாத்தியை சாப்பிடுகிறேன். இரவு கடுங்குளிரில் தூக்கம் சிரமமாகத்தான் இருக்கிறது. காலை 6 மணிக்கு எழுந்தவுடன் காமன் வெஸ்டர்ன் டாய்லட் ஞாபகம். காமன் டாய்லட் எப்போதும் பிஸியாயிருப்பதும் எதிர்பாராத அசுத்தத்தைக் காண வேண்டியிருப்பதும் பொருட்படுத்தாமல் அனுசரித்துப் போக நான் பழகிக் கொள்ள வேண்டும். காலைக்கடன் குளியல் போராட்டம் முடித்து உடை அணிகிறேன். மும்பை சராக்தீன் ஷர்ட் வான்ஹுஸன்பேண்ட். சுவாமி அத்வைதானந்தா சமையல் வேலையில் உதவி செய்ய அழைக்கிறார். பப்பாளிகளை கத்தியால் தோலுரித்து சுத்தம் செய்கிறேன்.

குடும்பத்துடன் ஜெயமோகன் வருகிறார். கருத்தரங்கத்தின் முதல் அமர்வு. ஜெயமோகனின் முன்னுரை. சரவணன் தன் கட்டுரையை வாசிக்கிறார். நான் பேசிய போது ‘ அகிலனை விடத் திறமையான கலைஞன். புதுமைப்பித்தனையும் மெளனியையும் விட கலையின் நோக்கத்தைப் பரிபூர்ணமாக புரிந்து கொண்டவன். பாரதியைப் போலவே போர்க் கோலம் பூண்டவன். அவனே மு. கருணாநிதி ‘ என்ற தளைய சிங்கத்தின் கூற்றைப் பற்றி குறிப்பிடுகிறேன். வெங்கட் சாமிநாதன் ஆர்வத்துடனும் சிறிது குழப்பத்துடனும் என்னிடம் ‘ அப்படியே சொல்கிறாரா அப்படியே சொல்கிறாரா ‘ என்று கேட்கிறார். நான் தொடர்ந்து ‘ எம்.ஜி.ஆர் அ.தி.மு.க கட்சியை ஆரம்பித்த போது பிரான்சில் மார்க்ஸிய தத்துவத்தை தலை கீழாக்கிய புரட்சிகர உபவர்க்கத்துடனும் அமெரிக்காவின் பலாத்காரங்களை எதிர்க்கும் ஹிப்பிஸுடனும் சீனாவின் புதிய மார்க்ஸீய செங்காவலர்களுடனும் பங்களாதேஷின் கொரில்லாக்களோடும், பிலிப்பைன்ஸின்மார்க்கோஸ் ஆட்சியை எதிர்த் கொரில்லாக்களோடும், அண்ணா தி.மு.க. அனுதாபிகளை தோளோடு தோள் நிறுத்தி கருணாநிதியின் நவ பாஸிச ஆட்சியை எதிர்ப்பதாக தளைய சிங்கம் எழுதியதையும் ‘அபத்தம் ‘ என்று சுட்டிப் பேசினேன். உடனே ஜெயமோகன் ‘இப்படி ஒவ்வொரு வரியாக உருவி தளையசிங்கத்தைப் பார்க்க வேண்டாம் ‘ என்றார். ‘தொழுகை ‘ கதை பற்றி பேச ஆரம்பித்த வேதசகாய குமார் அவருடைய கிறிஸ்துவ பூசை லத்தீன் மந்திரங்களை இளைஞர்கள் பொருத்தமாக கெட்ட வார்த்தை போட்டு பேசிக் காட்டுவதைப் பற்றியும் பாவ மன்னிப்பு கேட்கும் போது பாதிரியாரிடம் ஆபாசமாக விவரித்துப் பேசி பாதிரியார் இளையவராயிருந்தால் அவர் மிகவும் நெளியவேண்டியிருக்கும் என்பதையும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். ‘செக்சுவாலிடி பற்றி பேசலாம் தானே. எதும் தடையுண்டா ? ‘ என்று நான் கேட்டேன். ஜெயமோகன் தன் மனைவி அருண்மொழி நங்கை கலந்து கொண்டுள்ள நிலையினும், பேசலாம் என்பதாக தலையாட்டினார்.

நூலகத்தில் மாலை அமர்வு. கடுங்குளிர்.மோகனரங்கனின் கட்டுரை. தளையசிங்கத்தின் பேர் ஞான விடுதலை முழுச் சமூகத்திற்கும் சாத்தியமா ? என்ற நியாயமான சந்தேகத்தை முன் வைக்கிறார். வெ.சா.அப்போது கூறுகிறார். இது சாத்தியப் படாத விஷயம். இன்டிவிஜூவல் சால் வேஷன் சாத்தியம் பரவச விடுதலை முழுச் சமூகத்திற்கு எப்படி ஏற்படும். அப்போது ஸ்தாபனம் ஆகிவிடும். ஸ்தாபனம் என்னும்போது கரப்ட் ஆகிவிடும். வெ.சா வின் இந்தக் கருத்துடன் எனக்கு முழுக்க உடன்பாடு. இந்திரா பார்த்த சாரதி தன் எழுத்தில் பல முறை குறிப்பிடுகிற விஷயம். வினோபா ஆசிரமத்திற்குப் போய் அங்கே நடந்த அக்கிரமங்களைக்காண சகியாமல் மிரண்டு போய் திரும்பி ஒடிவந்த தன் நண்பர் ஒருவரைப் பற்றி கி.ராஜ நாராயணன் ஒரு முறை என்னிடம் சொன்னதைப் பற்றிக் கூறினேன். அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக எழுத்தாளர்களும் கலைஞர்களும் இல்லாமலிருக்க வேண்டுமென்றால் அவர்களே அரசியல் வாதிகளாகவும் இருக்க வேண்டும் என்கிறார் தளைய சிங்கம். அரசியல்வாதிக்கு எதிர் மறை அம்சம் இலக்கியவாதி என்று எனக்குத் தோன்றுகிறது. அதோடு எழுத்தாளர்களுந்தான் எந்த அளவுக்கு நம்பகமானவர்கள் ? 1968 ம் ஆண்டு நோபல் பரிசு வாங்கும்போது ஜப்பானிய எழுத்தாளர்கள் தற்கொலை செய்து கொள்வதை கண்டித்து உரையாற்றிய யசுநாரிகவபட்டா 1972 ம் ஆண்டு தற்கொலை செய்து கொள்கிறார் என்று நான் கேட்டேன்.

தளையசிங்கத்தின் கதைகள் ரொம்ப சிறப்பானவையாக பாதிக்கக் கூடியவையாக தன்னால் சொல்ல முடியவில்லை என்று நாஞ்சில் நாடன் சொல்கிறார். ‘ ‘தொழுகை ‘ கதையில் செல்லம்மாள் மேல் கோபம் வருவதில்லை ‘ என்று வேத சகாயகுமார் எழுதியிருப்பதைப் பற்றி நான் கேட்கிறேன். தேவாரம் ஓதும் சைவப்பிள்ளையின் மனைவி செல்லம்மாள் அதிகாலையில் தன் வயதுக்குவந்த இரு பெண்பிள்ளைகள் (12,14 வயது) தூங்கும் அறையைப் பூட்டிவிட்டு கரிய சாணானான தலித் முத்துவுடன் உடலுறவு கொள்ளும்போது கோவிலில் செல்லம்மாளின் கணவர் ஆறுமுகம்பிள்ளை தேவாரம் ஓதுகிறார். செல்லம்மாளுக்கு முத்து ‘சிவலிங்கமாக ‘த் தெரிகிறான். முத்துவுக்கு செல்லம்மாள் அம்மனாகத் தோன்றுகிறாள். உடலுறவுகொள்வது இது முதல் முறையுமல்ல. இத்தனைக்கும் பத்துநாள் முன்னதாகத்தான் முத்துவை செல்லமமா பார்த்து கதைத்திருக்கிறாள். நான் கேட்கிறேன் ‘வாசிப்பவனுக்கு ஏன்கோபம் வராது ? ‘ அப்போது நான் சீரியஸான ஆளா ? என்று அங்கலாய்த்த அம்மாள் (Seriousness is a sickness) ‘அவருக்குக் கோபம் வரவில்லை ‘ என்று சொல்கிறார் ‘ என்கிறார். ‘இல்லை எனக்கு என்று இல்லை. வாசிக்கிற எல்லோருக்கும் கோபம் வருவதில்லை என்றுதான் சொல்கிறேன் ‘ என்று மறுக்கிறார் வேதசகாயகுமார். ‘அம்மா வந்தாள் அலங்காரத்தம்மாள் மீது கோபம் வராது என்று சொல்ல முடியுமா ‘ என்று நான் கேட்டவுடன் வேதசகாயகுமாரின் முகம் இறுகுகிறது. ( ‘எங்கிட்டேயே கேள்வி கேட்கறியா. நான் பார்வைக்கு சுமாரா இருப்பேன். என் புலமையை பற்றி உனக்குத் தெரியாது ‘ என்று அர்த்தம் ‘) உடன் ஜெயமோகனின் முகமும் இறுகுகிறது. ( ‘எங்களுடைய அந்தஸ்தென்ன… யோக்யதை என்ன… ‘ என்று அர்த்தம்).

நான் கல்லூரியில் படித்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன் தத்தனேரி டூரிஸ் தியேட்டரில் தரையில் மணலில் அமர்ந்து ‘சிவகெங்கைச் சீமை ‘ பழைய படம் பார்த்துவிட்டு வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து புட்டுத் தோப்பில் கரையேறுகிறோம். போலீஸ் வேலையில் இருந்து டிஸ்மிஸ் ஆன முட்டாள் தாசு ஒரு கழுதையை போகம் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறான் ஒருபக்கம் சர்ச், இன்னொருபக்கம் கிறிஸ்துவ பள்ளிக்கூட கேட் அருகே இரண்டுபேர் கழுதையைப் பிடித்துக்கொள்ள கழுதையைப் புணரவேண்டி முட்டாள் தாசு பகீரதப் பிரயத்தனம் செய்கிறான். முட்டாள் தாசு ‘மயக்கமா கலக்கமா ‘ பாட்டை, அழகாக பாடுவான் ‘கோமாதா எங்கள் குலமாதா ‘ பாட்டையும் அனுபவித்துப் பாடுவான். தன் வாழ்க்கைத் தோல்வியினால் துவண்டுபோய்விடாமல் ஆப்டிமிஸ்டிக்காக ‘முதல் கோணல் முற்றிலும் கோணலல்ல. முடிவில் கொடைக்கானல்தான் ‘ என்று கவிதை எழுதியவன் குருவி மண்டையன் ‘என்ன தாசு…கழுதையைப் போய்… ‘ என்று கேட்கிறான். தாசு ‘கழுதை இல்லடா கல்யாணிடா… டேய் எனக்கு பொம்பளை சீக்குடா… சத்தமில்லாமப் போங்கடா நீங்க ‘ கழுதையின் குறி ஒரு அடிக்குமேல் நீண்டிருக்கிறது. ‘தாசு இது கல்யாணி இல்லராசு. கல்யாண சுந்தரம் ‘ என்கிறான் குருவி மண்டையன். இந்த நேரத்தில் பள்ளிக்கூட வாட்ச்மேன் பேபி கேட்டைத் திறந்து வெளியே வந்து ‘ஐயய்யோ என்னடா இது அசிங்கம் ‘ என்று கூப்பாடு போட தாசு அவனிடம் ‘பேபி யோவ் எனக்கு பொம்பள சீக்குய்யா ‘ என்று சமாதானம் சொல்ல ஆரம்பிக்கும் போது கழுதையை பிடித்திருந்த இருவரும் அதைவிட்டு விட்டு ஓடுகிறார்கள். கழுதையும் ஓடுகிறது. தாசுவுக்கும் பேபிக்கும் ஏற்கனவே ஒரு கடுமையான மனஸ்தாபம் உண்டு. பேபி அவன் மனைவி வெரோனிக்காவை ஒருமுறை பகலில் புணர்ந்து கொண்டிருக்கும்போது தாசு ஓட்டை வழியாகப் பார்த்திருக்கிறான். வாயரிசம் அப்போது வெரோனிக்கா ஐந்து வினாடிக்கொருமுறை ‘இயேசுவே ரட்சியும் ‘ என்று சொல்லிக்கொண்டிருந்தாளாம். இதை தாசு பலரிடமும் சொல்லிவிட்டான். பேபியையோ வெரோனிக்காவையோ பார்க்கும்போது

‘இயேசுவே ரட்சியும் ‘ என்று சின்னப்பையன்கள் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். தாசுதான் ஒளிந்திருந்து பார்த்து இப்படி ஊரே சொல்லி கேவலப்படுத்திவிட்டான் என்கிற விஷயம் பேபிக்கும் தெரிந்தும்விட்டது. இப்போது தாசு கழுதையைப் புணரும் போது பேபி அதைப் பார்த்துவிட்டான்.

இதை சொல்லிக் கொண்டே வரும்போது இடையிடையே வேதசகாயகுமார் ‘என்ன சொல்ல வர்றீங்க ‘, ‘இதுக்கும் தொழுகை கதைக்கும் என்ன சம்பந்தம் ‘, ‘விஷயத்தை மட்டும் சொல்லுங்க ‘ என்று குறுக்கிட்டுப் பேசிக்கொண்டே வந்தார் சொல்லி முடித்ததும் வினயசைதன்யா ‘This is mere a Gossip ‘ என்றார். இவர் இரண்டாவது அமர்வில் வெ.சா.சொன்னதைப் புரிந்தூகாள்ளாமல் வெ.சா. ஜாதி பற்றி தவறான எண்ணத்தோடு பேசியதாக வீணான சர்ச்சை செய்தவர். முன்னதாக ‘You do Dhabas ‘ என்ற வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி ரொம்ப நீளமாக ஒரு தத்துவக் கதையை சொன்னவர் (எனக்கு திலீப்குமாரின் திருமதி.ஜேம்ஸ் ஒன்றும் பேசவில்லை கதை ஞாபகத்துக்கு வந்தது. அது நல்ல கதை) நாராயண குரு குல சுவாமி வினய வைதன்யா ‘காசிப் ‘ என்று சொன்னவுடனேயே ஜெயமோகன் என்னைப் பார்த்து ‘நீங்கள் ஊருக்குக் கிளம்புங்கள். இதுவரை நடந்த கருத்தரங்கத்தையே நீங்க புரிஞ்சிக்கலை. நீங்க ஊருக்குக் கிளம்பலாம் ‘ என்றார். ‘பத்து பேர் உங்க பேச்சைக் கேட்பதால் நீங்க இஷ்டத்துக்குப் பேசுறீங்க, இப்ப நீங்க பேசியதற்கு என்ன பர்ப்பஸ் இருக்கு ‘ என்று கேட்டார். ‘பர்ப்பஸ் இருக்கு ‘ என்றேன். ‘ஒரு பர்ப்பஸும் தேவையில்லை. நீங்கள் ஊருக்குக் கிளம்புங்கள் ‘ என்றார். நான் அப்போது என்னை பரதேசியாக உணர்ந்தேன். தி.ஜானகி ராமனின் பரதேசி வந்தான் கதை. கடைந்த அமுதத்தைக் குடிக்க வந்த ராகுபோல பந்தியில் அமர்ந்துவிட்ட பரதேசி. தரதரவென்று பாதிபந்தியில் இழுத்துத் தள்ளப்பட்டு தலை அவிழ்ந்து அலங்கோலமாகக் குப்புற விழுந்த பரதேசி.

நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன். யாரும் எதுவும் பேசவில்லை. எதுவுமே நடக்காதது போல, கருத்தரங்கம் தொடரும்படியாக ஜெயமோகன் பேச ஆரம்பித்துவிட்டார் எல்லோரும் அதை கவனிப்பதான பாவனை. இது துரியோதனசபை. துரியோதனனும் சகுனியுமாக இயக்கும் சபை. எனக்கு ஆதரவுதர யாரும் கிடையாது. பீஷ்மர், துரோணர், கர்ணன், அஸ்வத்தாமா எல்லோரும் வாய்மூடி மெளனியாகிவிட்டார்கள் பிற இளைஞர்கள் கூட இளம்படைப்பாளிகள் ஜெயமோகனைச் சார்ந்து இருக்க வேண்டியவர்கள். நான் ஒரு சாதாரணவாசகன். முப்பதாண்டு காலமாக வாசித்துக் கொண்டே இருக்கும் அற்பம். Just a nameless face or a faceless name.

எழுந்தேன் அறைக்கு வந்தேன். பேக் செய்தேன். ராஜீவைத் தேடி டைனிங் அறைக்கு வந்தேன். சுவாமி வினய சைதன்யா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வினயமாக ‘That was not a Gossip I agree. But you have taken a long time ‘ என்றார். நான் ‘If you say ‘but ‘ I will say ‘yet ‘. That is discussion that is seminar ‘ என்றேன். ஜெயமோகன் சொன்னதற்காக நான் ஊருக்குப் போகக்கூடாது என்று வினயசைதன்யா பிடிவாதம் பிடித்தார். நான் ஏற்க மறுத்துவிட்டேன். கருத்தரங்கத்தில் நான் பேசியதற்கு எடுத்துக்கொண்ட நேரம் 8 நிமிடத்திலிருந்து 11 நிமிடத்திற்குள் தான் இருக்கும். மூன்று மணி நேர கருத்தரங்கத்தில் 11 அல்லது 12 நிமிடம் கூட பேசியிருந்தாலும் லாங்டைம் என்று எப்படி சொல்ல முடியும். தொடர்ந்து வினயசைதன்யா ‘only to avoid ezhavas we have come all the way from Kerala to Ooty ‘ என்றார். நாராயண குரு, நடராஜ குரு, நித்ய சைதன்யபதி ஆகிய மூவரும் ஈழவர்கள் எனக்கு நாக்கிலே சனி. கருத்தரங்க அமர்வில் பேசியது போதாதென்று இவரிடம் நான் தமிழ் ஈழவ இனம் இல்லத்துப் பிள்ளைமார் என்று சொல்லித் தொலைத்துவிட்டேன். அறைக்குப் போய் என் பைகளை எடுத்துக்கொண்டு ராஜீவிடம் ஸ்வட்டரை ஒப்படைப்பதற்காக அங்கிருந்த குருகுல வாசியிடம் ஸ்வட்டரை கொடுத்து ராஜீவிடம் ஒப்படைக்கச் சொன்னேன். வினயசைதன்யா நான் சாப்பிட்டுத்தான் போக வேண்டும் என்று ரொம்ப பிடிவாதம் பிடித்தார். நான் சாப்பிட மறுத்தால் இவர் என்ன செய்வார் என்று சொல்லமுடியாது. சாப்பிடுவதாகப் பேர் பண்ணிவிட்டு எழும்போது கருத்தரங்கம் முடித்து எல்லோரும் சாப்பிட வந்துவிட்டார்கள். யாருடைய அட்ரஸையும் நான் வாங்கிக்கொள்ள முடியவில்லை. தேவதேவன், நாஞ்சில்நாடன், யுவன், வெங்கட் சாமிநாதன், தேவகாந்தன் ஆகியோரிடம் விடைபெற்றேன். யுவன் ‘ஏன் ‘ என்றார். நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆசிபெறுவதற்காக வெங்கட் சாமிநாதனின் காலைத் தொட்டபோது அவர் ‘நோ நோ ‘ என்றார். சிரித்துக்கொண்டே வெளியேறினேன். இடுக்கண் வருங்கால் சிரிக்கச் சொன்னான்.

தொழுகை கதை பத்துநாள் சமாச்சாரம். இதுவே சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் ஊருக்கும் தெருவுக்கும் இந்த விஷயம் தெரிந்துவிடும் காலப்போக்கில் முத்து மேலும் முன்னேறி செல்லம்மாளின் பெண்பிள்ளைகளின் மீதுகூட கைவைக்கும்படி ஆகலாம். அந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் ? விஷயம் ஆறுமுக ஓதுவாருக்குத் தெரியவந்து அவருடைய மனநிலை பாதிக்கப்படலாம். ஒரு வேளை அவர் அனுசரித்துப் போகலாம். அல்லது கொலையோ, தற்கொலையோ செய்யும் படி ஆகலாம்.

செல்லம்மாள் மீது கோபம் வராது என்றால் எப்படி ?

முட்டாள் தாசுவின் மிருகப் புணர்ச்சியில் அவனது நோக்கம் காமமல்ல. மெடிக்கல் க்யூர். கழுதையைப் புணர்ந்தால் பொம்பளை சீக்கு குணமாகிவிடும் என்ற நம்பிக்கை. இதுகூட தொழுகைதான். பேபியின் மனைவி வெரோனிக்கா செய்வது செல்லம்மாள் செய்வதுபோல அடல்ட்ரிகூட இல்லை. கலவியைத் தொழுகையாக்கியிருக்கிறாள்.

சும்மா சாருநிவேதிதாவை மிரட்டுவதற்காக ‘சாரு தாண்ட வேண்டிய புள்ளி தொழுகைதான் ஆனால் தளையசிங்கம் அவசரமாக அடித்துக்கொல்லப்பட்டார் ‘ என்று அவர் மிகையாகக் கூறிவிட்டபின் நான் தொழுகையை நிர்வாணமாக்கினால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும். It is a tale told by an idiot full of sound and fury and signifying nothing.

ஊட்டியை விட்டுக் கிளம்பும்போது மதியம் 2 மணி. திருச்சி வந்து வீடு சேரும்போது இரவு சரியாக 12 மணி. ஊட்டிக்குப் போகாமல் சின்னவனின் சைக்கிளை சரிபண்ணியிருக்கலாம். There is always trial and error. சுந்தரராமசாமியின் ‘அழைப்பு ‘ கதையில் ஒருவரி : ‘நினைவின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகளின் அவமானம் ‘.

***

rpr20012000@yahoo.com

***

எடிட்டர் குறிப்பு: அங்கங்கு எடிட் செய்யப்பட்டுள்ளது

Series Navigation