உழவர்களை நாடு கடத்தும் அரசு

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

அசுரன்


சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்கிறார்கள். ஆனால், இத்தகைய ஆற்றல் மிக்க வேளாண்மையை மேற்கொள்ளும் உழவர்களோ ஆந்திராவிலும், கர்நாடகாவிலும், மராட்டியத்திலும்… ஏன் நம் தமிழ்நாட்டிலும் தற்கொலை செய்துகொள்ளும் போக்குதான் காணப்படுகிறது. அண்மையில்கூட இராஜஸ்தானில் பாசனத்திற்கு நீர்கேட்டுப் போராடிய உழவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் உள்ளதாகக் கூறப்படும் ஆந்திராவின் நிலைமைதான் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

ஆந்திர உழவர்களின் தற்கொலை செய்திகளில் பரபரப்பாக அடிபடத் தொடங்கியது 1987ஆம் ஆண்டில்தான். அப்போது 20 பருத்தி உழவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அண்மையில் ஆட்சியிழந்த 9 ஆண்டுகால சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் மட்டும் 3,000 உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் கணக்கிட்டுள்ளனர்.

இந்தத் தற்கொலைகளுக்கான முக்கிய காரணம் கடன் தொல்லையே. அதாவது, பயிரிட, கிணறு வெட்ட அல்லது ஆழ்குழாய் கிணறமைக்க என்று கடன் வாங்கப்படுகிறது. இதற்கு வங்கிகள் போதிய ஒத்துழைப்பு கொடுக்காததால் தனியாரிடம் கடன் வாங்கவேண்டியதாகிறது. சரியாக விளையாமல் போனால் கழுத்தை நெரிக்கும் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமல் இறுதியில் தற்கொலையில் போய் முடியவேண்டியதாகிறது. இப்படிப் பலியாகிறவர்கள் பெரும்பாலும் சிறு, குறு உழவர்களே.

ஆந்திராவின் இராயலசீமாவிலுள்ள வறட்சியான பகுதியான அனந்தாப்பூர், கர்னூல் ஆகிய மாவட்டங்களும் பின்தங்கிய தெலுங்கானா பகுதியிலுள்ள மகபூப்நகர், கம்மம், வாரங்கல், அடிலாபாத், கரீம்நகர் ஆகிய மாவட்டங்களும்ி கடலோர ஆந்திராவிலுள்ள குண்டூர், பிரகாசம் ஆகிய மாவட்டங்களும்தான் அதிகளவில் தற்கொலைகள் நடைபெறும் பகுதிகளாக உள்ளன. இவ்வாறு தற்கொலை செய்துகொள்பவர்களில் 80% பேர் 35 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள், 20% பேர் 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்.

இந்தியாவில் தற்கொலை செய்துகொள்ளும் உழவர்களில் 75% பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்கிறது ஒரு அறிக்கை. கடந்த ஏப்பிரலில் தேர்தல் காலத்தின்போது இதனை மேற்கோள்காட்டியவர் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். இராஜசேகரரெட்டி. இன்று இந்தப் புள்ளிவிபரப் பூதம் அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. ஆம், தற்போதைய காங்கிரஸ் அரசின் முதல் 193 நாட்களில் மட்டும் 1,825 உழவர்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் கைத்தறி நெசவாளர்கள் உட்பட 177 பேர் பட்டினியால் இறந்துள்ளதாகவும் தெலுங்கு தேசம் சட்டமன்றக் கட்சி துணைத்தலைவர் நாகம் ஜனார்த்தன் ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார். “தற்கொலைகளைத் தடுக்கும் காங்கிரஸ் அரசின் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதை இது எடுத்துக்காட்டுகிறது” என்கிறார் அவர்.

ஆந்திர வேளாண்துறை அமைச்சர் என். இரகுவீர ரெட்டி 2,000 உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது உண்மைதான் என்றும் ஆனால் அவை எல்லாமே வேளாண்மைச் சிக்கல் தொடர்பான சாவுக்கள் அல்ல என்றும், இதில் 400 பேர் மட்டுமே அவ்வாறு இறந்தவர்கள் என்றும் கூறுகிறார். அப்படியே இருந்தாலும் நிலைமை தீவிரமாக இருக்கிறது என்பதுதானே பொருள்!.

சரி, நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டுள்ள காங்கிரசாராவது தீவிர நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்த்தால்ி அரசின் நடவடிக்கையோ துக்ளக்தனமான இருக்கிறது. ஆம், ஆந்திராவிலிருந்து நூற்றுக்கணக்கான உழவர்களை அனுப்பி ஆப்பிரிக்காவிலுள்ள தரிசு நிலங்களில் வேளாண்மை செய்யப்போகிறார்களாம். இதுதொடர்பாக ஆந்திர அரசு ஆப்பிரிக்க நாடான கென்யாவுடன் பேச்சு நடத்தி வருகிறது.

கென்யாவில் 50,000ி ஏக்கர் தரிசு நிலத்தை உழவர் கூட்டுறவிற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து அதில் பணியாற்றுவதற்காக 1,000க்கும் மேற்பட்ட உழவர்களையும் இங்கிருந்து கென்யாவிற்கு அனுப்பப்போகிறது ஆந்திர அரசு. வரலாற்றில் முன்னெப்போதும் நடைபெற்றிராதவகையில் ஒரு அரசே தனது குடிமக்களை பஞ்சம் பிழைப்பதற்காக வேறொரு கண்டத்திற்கு அனுப்பும் இத்திட்டத்தில் பங்கேற்க ஏற்கனவே 500 உழவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்களாம். இதுபோல தான்சானியா மற்றும் உகாண்டா அரசுகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம். இவ்வளவுக்கும் இவையெல்லாம் அப்படி பசுமை வளம் கொழிக்கும் நாடுகளல்ல; பஞ்சம் தலைவிரித்தாடும் நாடுகளே. இன்னும் சொல்லப்போனால் அவற்றின் நிலை இந்தியாவைவிடப் படுமோசம்.

“வெப்பமண்டல மற்றும் தரிசுநிலச் சாகுபடியில் மிக்க அனுபவமுடைய ஆந்திர உழவர்களுக்கு இதுவொரு வணிக வாய்ப்பு” என்கிறார் ஆந்திர வேளாண்துறை அமைச்சர் இரகுவீர ரெட்டி.

இதன்படி உழவர்கள் கூட்டுறவிற்கு வழங்கப்படும் நிலத்திற்கான குத்தகைத் தொகையை ஆந்திர அரசு மேற்கண்ட நாடுகளுக்கு வழங்கும். இக்கூட்டுறவு அமைப்புகள் உழவர்களுக்கு வேலை வழங்குவதுடன் குத்தகைத் தொகையை பண்ணையின் விளைச்சலில் இருந்து வழங்கும். தரிசுநிலச் சாகுபடி தொடர்பாக இந்த உழவர்கள் கூட்டுறவிற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை ஆந்திரா வழங்கும் என்று இத்திட்டத்தின் மூளையான ஆந்திர அரசின் ஆலோசகரான சி.சி. ரெட்டி குறிப்பிட்டுள்ளார். மேலும், உழவர்கள் தாம் ஈட்டிய ஊதியத்தை எவ்விதத் தடையும் இல்லாமல் தமது குடும்பத்திற்கு அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

சரி, இவர்கள் வேளாண்மை மேற்கொள்வதற்கான தரிசு நிலம் இந்தியாவில் இல்லையா ?.

அண்மையில் ஆந்திர அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள இந்திய மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியும் [மக்கள் போர்க் குழுவும் மவோயிச கம்யூனிச மையமும் (PWG & MCC) இணைந்த அமைப்பு], ஜன சக்தியும் ஐதராபாத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கணினி நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், திரைப்பட நகர், திரைப்பட ஸ்டுடியோக்கள், ரியல் எஸ்டேட் முதலைகள் போன்ற வணிகர்களால் ‘ஆக்கிரமிக்கப்பட்டுள்ள’ வேளாண் நிலம் மட்டும் 27,000 ஏக்கர் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக, நமது நாட்டிலும் நிலம் இருக்கிறது.

மே 2004ல் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் டாக்டர் ஒய்.எஸ். இராஜசேகர ரெட்டி மாநிலம் முழுவதும் கிராமம் கிராமமாகச் சுற்றிவந்து, “நான் இன்னொரு சந்திரபாபு நாயுடுவாக ஆக விரும்பவில்லை. அடித்தளத்திலிருந்து எடுக்கப்படும் முயற்சிகள் எப்படி கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றன, ஒட்டுமொத்த ஆந்திராவும் எப்படி உயர்கிறது என்பதை நிரூபித்துக்காட்ட விரும்புகிறேன்” என்றார்.

அதைச் செய்யவேண்டுமானால், ஆந்திராவிலேயே உள்ள தரிசு நிலங்களை, புறம்போக்கு நிலங்களை உழவர்களுக்கு அளித்து, நில உச்சவரம்பை மீறிய நிலங்களைக் கைப்பற்றி நிலமற்றவர்களுக்கு பகிர்ந்தளித்து உயரிய வேளாண் தொழில்நுட்பங்களை, உதவிகளை அவர்களுக்கு வழங்கிடவேண்டும். உயிரைப்பறிக்கும் கடன்தொல்லைக்கும் வேதி பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்கள் ஆதிக்கம் செலுத்தும் வேளாண்மைக்கும் முடிவுகட்டி நிலைத்த, வளங்குன்றா வளர்ச்சிக்கு வழிகாணவேண்டும். அதன்மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்திடவேண்டும். இராஜஸ்தானில் மழைநீர் சேகரிப்பின் மூலம் வறண்டுபோன ஆர்வாரி நதியிலேயே மக்கள் தண்ணீரை ஓடவைத்துவிடவில்லையா ?.

ஆனால், ஆந்திராவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் அதற்கு உகந்தவையாக இல்லை. மக்களின் பணத்தில் படித்த சிறந்த மருத்துவர்கள், பின்னர் கணினி வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என்று பல்வேறு தரப்பினரையும் டாலருக்காக அயலவரிடம் விற்றுவந்த இந்தியா இப்போது அப்பட்டியலில் உழவர்களையும் சேர்த்துவிட்டது. மனித வளமும் நாட்டின் வளமே என்பதைப் புரிந்துகொண்டு நாம் எப்போது முன்னேறப்போகிறோம் ?.

தினமணி நாளிதழில் (18.12.2004) வெளியான கட்டுரை

(மின்னஞ்சல்: asuran98@rediffmail.com)

Series Navigation

அசுரன்

அசுரன்