Revolutionary Worker லிருந்து
தமிழாக்கம் : அ.ஜ. கான், இரா. விஜயகுமார்
1. ஜோசப் பாப்பின் சுதந்திர மேடை
‘நான் பேசியிருக்கிறேன். கேட்கவிரும்புகிறவர்கள் கேட்பார்கள். ….ஆனால் உண்மை என்பதை வெறுமனே எழுதிவிட மட்டும் முடியாது. அது யாராவது ஒருவருக்காக, அதை வைத்து ஏதாவது ஒன்று செய்யக்கூடியவர்களுக்காக அது எழுதப்பட வேண்டும் ‘ – 1935ஆம் ஆண்டு, ஜெர்மனி, இட்லரின் பிடியிலிருந்தபோது, மாபெரும் புரட்சிகர நாடகாசிரியரான பெர்டால்ட்பிரக்ட் எழுதியது இது. சூழ்நிலையை மிக முற்போக்கானதாக மாற்றியமைக்கக்கூடிய வகையில், மக்களையும் நாடக அரங்கையும் பிணைத்த, நியூயார்க் நகர நாடகத் தயாரிப்பாளரான ஜோசப்பாப் இப்படிபட்டவர்களில் ஒருவர்.
நியூயார்க் கலாச்சார அரங்கில் பாப்பின் பிரவேசம், அனுமதியின்றியே துவங்கியது. 1950களின் இறுதியில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை இலவசமாய் தயாரித்து சென்ட்ரல் பார்க்கில் மேடையேற்றியதிலிருந்து அவர் கலை வாழ்வு துவங்குகிறது. அப்போது பாப் CBS தொலைக்காட்சியில் மேடை மேலாளராகப் பணியாற்றி வந்தார். 1958ஆம் ஆண்டு, மெக்கார்த்தியின் கம்யூனிச எதிர்ப்பு நடவடிக்கையிலும், அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான பிரதிநிதிகள் சபைக் குழுவினாலும் பாப் குற்றஞ்சாட்டப்பட்டார். அவர் CBSலிருந்து வெளியேற்றப்பட்டார். அமெரிக்காவுக்கு மாறான நடவடிக்கைகள் குழுவால் குற்றஞ்சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டவர்களில், மீண்டும் TV நிலையத்தில் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட முதல் நபர் இவரே.
ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மக்களுக்காக மேடையேற்றுவது என்பது முதன் முதலாக நடக்கும் விஷயமல்ல. இதற்கு முன்பாகவே ரஷ்யநடிகர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, ஷேக்ஸ்பியர் நாடகங்களை ரஷ்ய புரட்சியின் துவக்க காலத்தில் போர்வீரர்களுக்காகவும் கடற்படைவீரர்களுக்காகவும் மேடையேற்றியிருக்கிறார். பாப் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை ‘வர்க்கமற்ற இலக்கியங்களாகப் ‘ பார்க்கிறார். ஆனால் இயக்குநர்களும் நடிகர்களும் தங்கள் சொந்த கருத்துக்களை புதியதாகவும் பொருத்தமான பொருளிலும் பயன்படுத்த அவர் ஊக்குவிக்கிறார்.
இந்த நாடகங்கள் மிகவும் தைரியமாகவும் பரந்துபட்ட அளவிலும், புரிந்து கொள்ளதக்க முறையிலும் நடத்தப்பட்டன. பாரம்பரியமாகவே வெள்ளையர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பாத்திரங்களில் கருப்பு இனத்தவரை நடிக்க வைத்தது பாப்பின் மிக தைரியமான செயலாகக் கருத வேண்டும். தன்னுடைய 37 ஆண்டு கால கலை வாழ்வில் அவர் 350 க்கும் மேற்பட்ட நாடகங்களை மேடையேற்றியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களை மேடையேற்றவும். இந்தப் படைப்புகளை மக்களோடு தொடர்புபடுத்தவும் அவர் அரும்பாடுபட்டார்.
நிறவெறிக்கு எதிராக நாடகங்களை மேடையேற்றிய முதல் பெரிய தயாரிப்பாளர் என்ற பெருமை இவரையே சேரும். ஹாம்லெட் பாத்திரத்தில் ஒரு பெண்ணை நடிக்க வைத்ததன் மூலம் பாலியல் பற்றிய தன் சரியான கருத்துக்களையும் பாப் வெளிப்படுத்தினார். 1971 ஆம் ஆண்டு வியட்நாம் போரை விமர்சித்து அவர் எழுதிய நாடகம், CBS தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவதாக இருந்தது. பின்பு அரசியல் காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டது. இதைக் கடுமையாக விமர்சித்த பாப் 7 மில்லியன் டாலர் செலவில் CBS TV க்காக மேலும் பதினொரு நாடகங்களை தயாரித்து தருவதற்கான ஒப்பந்தத்திற்கு மறுத்துவிட்டார். தன்செல்வாக்கினைப் பயன்படுத்தி சர்வதேச கலாச்சார தடைகளை உடைத்தெறிவதில் அவர் வெற்றி கண்டார்.
அன்றாட அரசியல் பிரச்னைகள் என்று வரும்போது பாப் தன் பெருமை, வாழ்க்கை, உடல் ஆகிய அனைத்தையும் அளிக்க முன்வந்தார். 1960களின் இறுதியில், வியட்நாம் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் அவர் கலந்து கொண்டார். பாப் குறிப்பாக வீடற்ற மக்களிடம் பெரிதும் அக்கறை காட்டினார். அவர்களிடம் ஆதரவைத் தெரிவித்து அவர்களின் கதையை நேரிடையாக கேட்பது என்று அவர்களிடம் மிக்க ஆர்வம் காட்டினார்.
பாப்பின் பங்கு இதுதான். மண்ணை வளப்படுத்த, ‘பொதுமக்களை ‘ உருவாக்குவதில் உதவ தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். புதிய கலை, மக்களை அரவணைத்து, அவர்களை வளப்படுத்தி, இந்த உலகை மாற்றி அமைக்க அவர்களை மேலும் பலமுள்ளவர்களாக மாற்றும்.
நன்றி – Revolutionary Worker
தமிழாக்கம் : அ. ஜ. கான்
இ.ரா. விஜயகுமார்
திண்ணை
|