உலகை குலுக்கும் உண்டியல் புரட்சியாளர்கள்

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

வணக்கத்துக்குரியவன்


சுமார் ஐம்பது வருடங்களாக கியூபாவை ஆண்டு வந்த ஃபிடல் காஸ்ட்ரோ ஓய்வு பெற்று விட்டார். காஸ்ட்ரோவின் ஓய்வு வெறும் ஒரு மனிதனின் ஓய்வல்ல.அது ஃபிடலிஸ்மோ என்றழைக்கப்படும் ஒரு சித்தாந்தத்தின் அழிவு.கியூபர்கள் இதற்காக வருந்தவுமில்லை, கண்ணீர் சிந்தவுமில்லை. ஏனெனில் காஸ்ட்ரோவுக்காகவும் அவர் கொள்கைகளுக்காவும் சிந்த அவர்களிடம் ஒரு சொட்டு கண்ணீருமில்லை. அனைத்தும் கடந்த ஐம்பதாண்டுகளிலேயே வற்றி விட்டது.

ஆட்சியை பிடித்ததும் காஸ்ட்ரோ மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள்

1.மக்களுக்கு சுதந்திரம் வழங்கப்படும்

2.பசி,பட்டினி,வறுமை ஒழிந்து மக்களுக்கு சமூகநீதி வழங்கப்படும்

3.பத்திரிக்கை சுதந்திரம் போற்றப்படும்

4.ஏகாதிபத்தியம் ஒழிக்கப்பட்டு உலகெங்கும் செங்கொடி பட்டொளி வீசிப்பறக்கும்

இவை மட்டுமல்ல, காஸ்ட்ரோ கியூப மக்களுக்கு கொடுத்த வேறு எந்த வாக்குறுதியும் நிறைவேறவில்லை. கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக ஆசைப்பட்ட கதையாய், உலெகெங்கும் பட்டொளி வீசிப்பறக்க புறப்பட்ட செங்கொடி,கியூபாவிலேயே அறுந்து தொங்கியதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.புரட்சி நடந்து முடிந்து இத்தனை ஆண்டுகள் கழித்து, ரவுல் காட்ஸ்ரோ “தவறுகள் நடந்துள்ளன. உணவு உற்பத்தி அதலபாதாளத்தில் உள்ளது.ஊழல் தாண்டவமாடுகிறது” என்று அறிவித்தார். ரஷ்யா பாணியில் பெரஸ்த்ரோயிக்கா,க்ளாஸ்னாத் வருமென்று சில கியூப அரசியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்தனர். அதன்பின் வழக்கம் போல் ஒன்றும் நடக்கவில்லை.

கியூபர்கள் இதனால் எல்லாம் ஒன்றும் புதிதாக ஏமாறவில்லை.50 வருடமாக காஸ்ட்ரோக்கள் நடத்தும் இம்மாதிரி உதார்கள் அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று. ஓட்டுபோட்டு தமது எதிர்ப்பை காட்டமுடியாத மக்கள் வழக்கம்போல் கால்கள் மூலம் எதிர்ப்பை காட்டினர்.அதாவது குடும்பம், குடும்பமாக கூட்டம் கூட்டமாக கியூபாவை விட்டு ஓடித்தப்பினர்.ஓடமுடியாதவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.ஹவானா பல்கலைகழகம், சான்டியாகோ பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.இணையம்,ஊடகம் என எந்த வலுவுமில்லாத இப்போராட்டங்கள் இரும்புக்கரம் கொண்டு வழக்கம்போல் அடக்கப்ப்ட்டன.

செப்டெம்பெர் 2005லிருந்து செப்டெம்பெர் 2007க்குள் சுமார் 77,000 கியூபர்கள் கள்ளத்தோணி, படகு, மரக்கட்டை என்று கிடைத்ததில் தொத்திக்கொண்டு கியூபாவை விட்டு ஃப்ளோரிடாவுக்கு தப்பி ஓடினர்.கியூபாவை விட்டு தப்பி ஓடுவது பெரும் ரிஸ்க்.கியூப கடற்படையிடம் பிடிபட்டால் கேள்விகள் ஏதுமின்றி உடனே துப்பாக்கி சூடுதான் நடத்துவார்கள்.ஒருவர் தப்பி ஓடினால் கியூபாவில் இருக்கும் அவர் குடும்பம் குழந்தைகள் உட்பட கொல்லப்படுவார்கள்.அதனால் தான் கியூபாவை விட்டு ஓடுபவர்கள் குழந்தை குட்டியுடன் ஓடி, ஒன்று குடும்பத்துடன் தப்புவார்கள்,அல்லது பிள்ளை குட்டியுடன் கடலில் சுடப்பட்டு சாவார்கள்.இதுவரை இப்படி சுட்டுக்கொல்லப்பட்ட கியூபர்கள் மட்டும் சுமார் 40,000 பேர்.

சர்வதேச மனித உரிமைகழகம் குழந்தைகளை பிணைகைதிகளாக பிடிக்கும் கியூப அரசின் செயலை வன்மையாக கண்டித்திருக்கிறது. ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம்தான்.

2 வருடத்தில் 77,000 பேரை ஓடவிட்டது காஸ்ட்ரோவின் சமீபத்திய சாதனை. இதற்குமுன் 1980ல் 125,000 கியூபர்கள் இதேபோல் ஓடித்தப்பினர்.அந்த நிகழ்ச்சி மேரியல் ஃபோட்லிப்ட் என அழைக்கப்படுகிறது.இப்படி ஃப்ளோரிடாவில் குடியேறிய கியூபர்கள் இன்னமும் காஸ்ட்ரோவின் மீது அடங்காத வெறுப்புடன் இருக்கின்றனர்.கியூபாவுடன் உறவை மேம்படுத்த முயலும் எந்த அமெரிக்க அதிபரின் கட்சியையும் அடுத்த தேர்தலில் மண்ணை கவ்வ வைக்கும் சக்தி இவர்களுக்கு இருப்பதால், கியூபா-அமெரிக்கா உறவு ஊசலாட்டத்திலேயே இருக்கிறது.

இதற்கும் காஸ்ட்ரோ காலில் விழாத குறையாக அமெரிக்க அரசிடம் கெஞ்சிப் பார்த்துவிட்டார். கியூபாவின் க்வாண்டனாமோ சிறையில் தலிபான் தீவிரவாதிகளை அமெரிக்க அரசு அடைத்தபோது கியூபா அதற்கு எதிராக பெரும் எதிர்ப்புக்குரல் எழுப்பும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் காஸ்ட்ரோ, க்வாண்டமானோவில் இருந்து தப்பும் தலிபான் தீவிரவாதிகளை, கியூப ராணுவம் சிறைபிடித்து, அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கும் என்று அறிவித்துவிட்டார்.பல்டியிலும் பெரிய அந்தர்பல்டியான இதைக்கண்டு எஞ்சியிருக்கும் பிடலிஸ்மோக்கள் வாயடைத்து போயினர்.

இன்று கியூபாவின் நிலை மிகவும் வருந்தத்தக்க ஒன்று.கியூபர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு(Calorie intake) மிகவும் குறைந்துவிட்டது.2006ல் கியூப ஜனத்தொகை வளர்ச்சி நெகடிவாக இருந்ததாக கியூப அரசே தெரிவிக்கிறது.வெனிஸ்வேலா அரசு அளிக்கும் உதவித்தொகையில்தான் வண்டி ஓடுகிறது.கியூபாவின் மருத்துவதுறை ஃபிடலிஸ்மோக்களால் மிகவும் சிலாகிக்கப்பட்ட ஒன்று.(டாக்டருக்கு மாதம் வெறும் $15 சம்பளம் கொடுத்தால் மருத்துவ செலவு குறைவாகத்தானே இருக்கும்?அதனால் தான் கியூபாவை விட்டு ஓடுபவர்களீல் டாக்டர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள்)

ஆனால் இந்த குறைந்த செலவு மருத்துவத்தின் பலனை முழுக்க முழுக்க நுகர்பவர்கள் வெளிநாட்டினர்தான். மெடிக்கல் டூரிசத்தின் வளர்ச்சியால் வருடம் சுமார் 20 லட்சம் வெளிநாட்டு டூரிஸ்டுகள் இங்கே வந்து 80% குறைவான செலவில் சிகிச்சை பெற்று திரும்புகின்றனர்.அரசுக்கும் காசு திரட்ட இதை விட்டால் வேறு வழியில்லை. உள்ளூர் மக்களுக்கு வழக்கம் போல் நெய்மணக்க கிண்டிய அல்வாதான். சராசரி கியூபர்கள் டாக்டர்களை பார்த்தே பல வருடம் இருக்குமாம்.

இத்தனை பிரச்சனைகள் இருக்க, நெரிசலான சாலை ஒன்றில் கியூபாவுக்காக உண்டியல் குலுக்கிக்கொண்டிருந்த காம்ரேட் ஒருவரை பார்த்ததும் ஒரு நிமிடம் நின்றேன். இவர் குலுக்கும் குலுக்கலில் கியூப பொருளாதாரம் நிமிர்ந்து மீண்டும் உலகெங்கும் கம்யூனிசம் மலர்ந்துவிடுமோ என்றே தோன்றியது. அத்தனை வேகத்துடன் குலுக்கிக் கொண்டிருந்தார்.

உலகை குலுக்கப் பிறந்த புரட்சி கடைசியில் உண்டியலை குலுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது பரிதாபம்தான்.

___

வணக்கத்துக்குரியவன்


www.worshipme.wordpress.com

worshipful1980@gmail.com

Series Navigation

வணக்கத்துக்குரியவன்

வணக்கத்துக்குரியவன்