உலகெங்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா!

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

ஆல்பர்ட்


‘ரிஹஸ்-பேல் லெட்டாட்ஸ் ‘

‘இடா சைடான் வா சானாஹ் ஜடிடாஹ் ‘

‘செலாமட் ஹரி நேடால் ‘

‘ஹுவோ நாபா பார்ஷா ‘

‘பெலிஸ் நவிடாட் ‘

‘கன் ட்சோ சன் டான் கங் ஹாவ் சன் ‘

‘ஜோயெக்ஸ் நோயெல் ‘

‘ஹைவா ஜோலுவா ‘

‘ஷப் நயா வர்ஷ் ‘

‘ஷப் நயா பராஸ் ‘

‘ஷங் டான் சுக் ஹா ‘

‘காட் ஜுல் ‘

‘பெலிஸ் நெவிடாட் ‘

‘மாலிகாயன் பாஸ்கோ ‘

‘ஷாவாடி பீ மாய் ‘

‘நயா சால் முபாரக் ஹோ ‘

‘சங் மங் ஜியாங் சின்ஹ் ‘

‘நடோ லிக் லாவ்வென் ‘

‘செஸ் டிடாமொ போசிக் ‘

இதெல்லாம் என்ன ? என்கிறீர்களா ? உலகெங்கும் கிறிஸ்மஸ் என்று தலைப்பு போட்டுவிட்டு

தமிழில் மட்டும் கிறிஸ்மஸ் வாழ்த்துச் சொன்னால் போதுமா ? அதுதான் உலகத்தின் பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்பதை எப்படிச் சொல்கிறார்கள் என்று அவரவர் மொழியில் தந்திருக்கிறேன். எந்த வாசகம் எந்த நாட்டின் அல்லது எந்த மொழியின் வாழ்த்து என்பதை தெரிந்துகொள்ள நீங்கள்

விரும்பினால் கீழே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

கிறிஸ்துமஸ் என்றால் என்ன ?

‘கிறிஸ்துமஸ் ‘ என்ற சொல் கிறிஸ்ட்டஸ் மஸ்ஸே அல்லது கிறிஸ்ட்ஸ் மாஸ் என்ற சொல்லிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும் என்பதும், கிறிஸ்தவ மதத்தார் முதன் முதலாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத்துவங்கியது ரோமாபுரி நாட்டில் கிறிஸ்து மரித்த பிறகு 336ம் ஆண்டில்தான் என்பது பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு.

1994ம் ஆண்டு பிரிட்டானிகா புத்தக தகவல் களஞ்சியம் வெளிப்படுத்தும் குறிப்பொன்றில் 5.5 பில்லியன் உலக மக்கட் தொகையில் 1.8 பில்லியன் கிறிஸ்தவ மக்கள் உலகளவில் வசிப்பதாகவும் அறிவிக்கின்றது. அமெரிக்காவில் வசிக்கும் 281 மில்லியன் மக்கட் தொகையில் 241 மில்லியன் மக்கள் அதாவது 85 சதவிகிதம் மக்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் கிறிஸ்து பிறப்பை மிகவும் விசேடமாகக் கொண்டாடுகின்

றார்கள்.

கிறிஸ்து பிறப்பறிவிப்பு விழாவை எட்டாம் நூற்றாண்டிலிருந்து கிழக்கிந்திய சபையும் பதினோராம் நூற்றாண்டிலிருந்து மேற்கிந்திய சபையும் கொண்டாடத் துவங்கினர். ஆனால் முதன்முதலில் இந்த விழாவைக் கொண்டாடிய நாடு இங்கிலாந்து தான்! யேசு பிறந்த பெத்லேகமில் மற்றும் உலக நாடுகளில் யேசு பிறப்பை 14ம் நூற்றாண்டில்தான் கொண்டாடத்துவங்கினர் என்பதும் வரலாறு சுட்டிக்காட்டும் உண்மைகள்!

கிறிஸ்துமஸ்.காம் என்று இணையத்தில் தேடினால் 2515 வலைத்தளங்களும், கிறிஸ்துமஸ் கதைகள் என்று தேடினால் 3,392,272 வலைத்தளங்களும், X ‘mas என்று தேடினால் 23,380 வலைத்தளங்களும், கிறிஸ்துமஸ் ஷாப்பிங் என்று தேடினால்6,953,619, வலைத்தளங்களும், கிறிஸ்துமஸ் அலங்கரிப்புகள் என்று தேடினால் 857,058வலைத்தளங்களும் கண்ணில் தட்டுப்படுகின்றது!

கிறிஸ்துமஸ் இப்படித்தான்….

இயேசு கிறிஸ்து பிறந்தது டிசம்பர் மாதம் 25ம் நாள்தானா ? என்ற கேள்வியை எழுப்பும் வரலாற்று ஆய்வாளர்கள், உண்மையில் அவர் பிறந்த நாள் இதுதான் என்று உறுதியாகக் கூறுவார் எவருமில்லை என்றே கூறுகின்றனர். கண்டவர் விண்டதில்லை! விண்டவர் கண்டதில்லை என்பதுதான்! ஆனால் டிசம்பர் 25ம் நாளைக் கிறிஸ்துமஸ் நாளாகக் கொண்டாடத் துவங்கியது எப்போதிருந்து என்ற கேள்விக்கு வரலாற்று ஆய்வாளர்கள் விடைகாண முற்பட்டுள்ளனர்.

உச்சந்தலையிலிருந்து உள்ளங்காலுக்கு ஊடுருவும் உச்சக் குளிர்காலத்தில்தான் ரோம், ஐரோப்பா, ஸ்காண்டினேவியா மக்கள் புத்தாடையுடுத்தி ஆடம்பரமான மிகப்பெரிய விருந்துகளும் கேளிக்கைகள் என்றும் தங்களைச் சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர்களாக மாற்றிக்கொள்வார்கள். குளிருக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கிக்கொள்ளாமலிருக்கவே இத்தகைய ஆடம்பரமான நிகழ்வுகளில் தங்கள் கவனத்தை மாற்றிக்கொண்டனர்! இவையெல்லாம் யேசு பிறப்புக்கு முன்பிருந்தே வழக்கமாகக் கொண்டிருந்த பழக்கமாகும்! குளிர்காலத்தின் இறப்பைச் சிறப்பிப்பதோடு எதிர்வரும் வசந்தகாலத்தை வரவேற்கத் தயாராகின்ற எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும், மதுவோடும் மாமிசத்தோடும் இந்த நாட்கள் அமர்க்களப்பட்டிருந்தது என்றால் அது மிகையல்ல! இந்த நாட்கள்தான் கிறிஸ்துமஸ் முகிழ்க்கக் காரணமானது!

பைபிளில் எந்த இடத்திலும் யேசு கிறிஸ்து பிறந்த தேதியைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாததும், ‘பாவப்பட்ட மக்களை மீட்டெடுக்க இறைவனின் திருமகன் வசந்தகாலம் தோன்றும்போது இந்த மண்ணுலகில் மகனாகப் பிறப்பார், ‘ என்ற வேத வசனங்கள் சற்றுக் குழப்பத்தைத் தந்தாலும், ‘நடுக்கும் குளிரில் எங்கும் தங்க இடம் கிடைக்காமல் சூசையும் மரியாளும் ஊரின் ஒதுக்குப்புறமாகவிருந்த ஆடுமாடு அடைக்கும் கொட்டில் பக்கம் தங்க நேரிட்டது… ‘ என்ற வேத வசனங்கள் அலசி ஆராயப்பட்டு நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவத் தேவாலயங்கள் ஒன்றுகூடி இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடுகிற விழாவாக இந்த நாட்களை மாற்றிவிட முடிவு செய்து அறிவித்தன!

முதன் முதலில் கிறிஸ்துமஸ் சனவரி 6ம் தேதி கொண்டாடப்பட்டதாக பழைய ஜூலியன் நாட்காட்டி குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. உரோமாபுரி நாட்டின் அதிகாரப்பூர்வமான விடுமுறை தினமாகவும் A.D.534 ( Anno Domini என்றால் In the year of the lord ) லிருந்து அனுசரிக்கப்பட்டதாகவும் பின்னர் கிரகோரியன் நாட்காட்டிப்படி 1743லிருந்து டிசம்பர் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புக்கள் அதிர்ந்து அறிவிக்கின்றது! இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் அன்றைய போப்பாண்டவர்

ஜூலியஸ் I ஆவார். இந்த நாள் ஏற்கனவே கிறிஸ்தவர்களில் அப்போதைய பெரும்பிரிவினரான பாகான்

இனத்தவர்கள் கொண்டாடிய ‘சேட்டர்நேலியா ‘ திருவிழா கொண்டாடப்பட்ட நாளாகும்.

இந்த கிறிஸ்துமஸ் விழா மெல்லமெல்ல கிறிஸ்தவ சமுதாயம் வசிக்கின்ற பகுதிகளில் உலகெங்கும் பரவியது. 432ல் எகிப்திற்கும் அங்கிருந்து இங்கிலாந்திற்கு 6ம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாவது நூற்றாண்டின் இறுதியில் ஸ்காண்டினேவியா தீபகற்பம் வரையிலும் பரவியது. 17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவில் எழுந்த மத மறுமலர்ச்சி, கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத் துவங்கினர். ஆனால் 1645ல் ஆலிவர் கிராம்வெல் மற்றும் அவருடைய புரிடான் (Puritan) படைகளும் இங்கிலாந்தைக் கைப்பற்றியபோது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தடைவிதித்தது. ஆனால் இரண்டாம் சார்லஸ் ஆட்சியைக் கைப்பற்றியபோது மீண்டும் கிறிஸ்துமஸ் விழாவை குதூகலமாகக் கொண்டாட உத்திரவிட கிறிஸ்துமஸ்

விழா பிரசித்தி பெற்றது!

கிறிஸ்துமஸ் அமெரிக்காவைச் சற்றுத் தாமதமாகத்தான் வந்தடைந்தது. 1659 லிருந்து 1681வரை கிறிஸ்துமஸ் கொண்டாடுவது சட்டப்படி குற்றமாக அறிவிக்கபட்டு தடை செய்யப்பட்டிருந்தது! பாஸ்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாடியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன் விளைவு ஆங்கிலேய நடைமுறையான கிறிஸ்துமஸைக் கொண்டாட முற்படாததுடன் அமெரிக்கர்களுக்கு எதிரான கிறிஸ்துமஸ் என்ற முத்திரை குத்தப்பட்டது. இருந்தபோதும் சில இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட விதிவிலக்கு தரப்பட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் குடியேறிய காலனிகளிலும் ஜேம்ஸ் டவுன் போன்ற இடங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.

19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்காவில் கோலாகலமாகக் கொண்டாட கிறிஸ்துமஸ் திருவிழா தேவை என்ற அமெரிக்கர்கள் ஒருமனதாகக் குரல் எழுப்ப கிறிஸ்துமஸ் நாள் தேசிய விடுமுறையோடு கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை 1870ம் ஆண்டு சூன் 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்களை விருந்தும் கேளிக்கையும் குடும்பங்கள் கூடும் ஒரு அரிய விழாவாக மாற்றம்செய்துகொண்டனர். அடுத்த நூறு ஆண்டுகளில் அமெரிக்கர்கள் கிறிஸ்துமஸ் என்றால் இப்படித்தான் என்ற பாரம்பரியத்தை வெகு நேர்த்தியாக உருவாக்கிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். கிறிஸ்மஸ் மரம் அலங்கரித்தல், வாழ்த்தட்டைகள் அனுப்புதல், பரிசுகள் கொடுத்தல், கிறிஸ்மஸ் தாத்தா (சாண்ட்ட கிளாஸ் ) என்று பல பரிமாணங்களை ஏற்படுத்தி தனி கலாச்சார முத்திரையை பதித்துக்கொண்டனர். அதுவே இன்றளவும் தொடர்கின்றது.

ஆரம்பத்தில் கிறிஸ்துமஸ் சாதாரணமாக ஒரு திருப்பலி (Mass) என்ற அளவிலிருந்து படிப்படியாக கிறிஸ்துமஸ் மரம், ஸாண்ட்டா கிளாஸ், வால் நட்சத்திரம், ஒளியுமிழ் அலங்கார வண்ண விளக்குகள், கிறிஸ்மஸ் மரத்துண்டு (Yule log), காலுறை தொங்க விடுதல், குழுப் பாடல், கிறிஸ்துமஸ் வாழ்த்தட்டைகள் என்று பட்டியல் நீண்டது பின்நாட்களில்தான்!

12 நாள் கிறிஸ்மஸ்….

டிசம்பர் மாதம் 25ம்தேதியிலிருந்து சனவரி மாதம் 6ம் தேதி வரையிலான 12 நாட்களை 12 நாள் கிறிஸ்மஸ் என்று அழைத்து 12 நாட்களும் உறவினர்கள் நண்பர்கள் என்று எல்லோரையும் சந்தித்து பரிசுகளை வழங்கி மகிழ்ந்த நாட்களாக இங்கிலாந்திலும் பிரான்சு தேசத்திலும் பல ஊரகப்பகுதிகளில் கடைப்பிடித்திருக்கின்றனர். ‘The Twelve Days of Christmas ‘ என்ற புகழ் பெற்ற பாடலிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.

இந்த நாட்களில் ஆடல் பாடல் என்று தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்திருக்

கின்றனர். அந்தக் காலகட்டத்தில் உருவானதுதான் ‘CAROL ‘ எனப்படும் குழு நடனப் பாடல்! வட்டமாகச் சுற்றி நின்றுகொண்டு நடனமாடிக்கொண்டே பாட்டிசைத்து கிறிஸ்து பிறப்பை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். கிராமங்களில் இதற்கென்றே பாடற்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இந்த

நாட்களில் பாடுவதையும், சிலர் பாடிக்கொண்டே தெருக்களில் உலாப் போவதும், தங்கள் வீட்டருகே வரும்போது அவர்களுக்கு குடிப்பதற்கும் கொறிப்பதற்கும் கொடுத்து உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றனர். இன்றும் பல நாடுகளில் சில இடங்களில் இத்தகைய குழுப்பாடல் பாடி வலம் வருவதைக் காணலாம்.

பரிசுப்பொருட்கள்….

கிறிஸ்துமஸ் நாளில் ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்களை அளித்துத் தங்களை மகிழ்ச்சிக் கடலில்

ஆழ்த்திக் கொள்கின்ற உன்னதம் துவங்கியது எதனால் ? ஏன் இந்த நாளில் மட்டும் பரிசுப்பொருட்களை அளித்துக் கொள்கின்றார்கள் மக்கள் ? புனித மத்தேயு எழுதிய பரிசுத்த வேதாகமத்தின்படி, ‘உலகை உய்விக்கப் பிறந்துள்ள அன்னை மேரியின் தவப்புதல்வராம் குழந்தை யேசுவைக் கண்டு தரிசிக்க வந்த மூன்று ராஜாக்கள் அந்தக் குழந்தையின் முன் மண்டியிட்டு வணங்கினர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பொக்கிசங்களைத் திறந்து பொன்னும் பொருளும் பரிசுகளாக அளித்தனர்… ‘ என்ற அந்த நாள் தான் பரிசுகள் இன்று வழங்கப்படுவதின் மூலமாகக் கருதப்படுகின்றது.

இருந்தாலும் 1800கள் வரையில் ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்கள் வழங்கிக் கொண்டதாக பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. பின்னாளில் ‘சாண்ட்ட கிளாஸ் ‘ என்ற கிறிஸ்துமஸ் தாத்தா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் கிறிஸ்துமஸ் நாளின் பிரதான நிகழ்வாக பரிசுப்பொருட்கள் வழங்கிக்கொள்ளத் தலைப்பட்டனர்.

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள்….

எந்த நாளுக்கும் ஒரு வாழ்த்து அட்டை என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிப் படர்ந்துள்ள ஒரு விடயம் ஆகும்! கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் முதன் முதலாக வெளியிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெருமை லண்டன் மாநகரைச் சாரும். 1843ம் வருடத்தில் லண்டனும் 1846ல் அமெரிக்காவும் வெளியிட்டன; அமெரிக்காவில் மட்டும் 2 பில்லியன் கிறிஸ்துமஸ் வாழ்த்தட்டைகள் ஒவ்வொரு ஆண்டும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்படுகின்றது என்பது வாழ்த்தட்டை விற்பனையகங்கள் தருகின்ற புள்ளிவிபரமாகும்!

கிறிஸ்துமஸ் ஒரு விடுமுறை நாளாகவும் புனித நாளாகவும் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில்

ஆண்டின் மிகப்பெரிய கொண்டாட்டமாக கிறிஸ்துமஸ் நாள் என்றாலும் குறிப்பாக குழந்தைகளுக்குரிய சிறப்பு தின நிகழ்வாக அமைந்துள்ள ஓர் நாள் என்றால் அது மிகையல்ல; அமெரிக்கக் கூட்டரசு, மாநில அரசுகள், அனைத்துக் கல்லுரிகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மட்டும் என்றில்லாமல் தனியார் நிர்வாகங்கள் என்று விடுமுறை விடப்பட்டும், சில நிர்வாகங்கள் ஒன்றிரண்டு நாட்களை விடுமுறையாக அளித்தும் இந்த நாள் சிறப்பிக்கப்படுகிறது. ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு வருடத்தில் வரும் ஆறு புனித நாள் நிகழ்வுகளுள் கிறிஸ்துமஸ் மிக முக்கியத்துவம் பெறுகின்றது.

அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் மட்டுமே வாரக்கணக்கிலான மிகப்பெரிய ஷாப்பிங்காகத் திகழுகின்றது. அநேக சிறு வர்த்தக் நிறுவனங்கள் தங்கள் ஆண்டு வருமானத்தின் 70 சதவிகித வருவாயை ஈட்டித் தருவதே இந்தக் கிறிஸ்துமஸ் வர்த்தகம் தான்! டானியல் பூர்ஸ்டின் தனது புத்தகத்தில், 1860 வரை கிறிஸ்துமஸ் ஷாப்பிங் பிரபலப்படவில்லை என்றும் 1867ல்தான் மேசிஸ் பல்பொருள் அங்காடி (Macy ‘s) தான் வியாபாரத்திற்காக நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் ஈவ் என்றழைக்கப்படும் நாளில் நள்ளிரவு வரை அங்காடியைத் திறந்து வியாபாரத்தை படு சுறுசுறுப்பாக நடத்தியதாகக் குறிப்பிடுகின்றார். கிறிஸ்துமஸ் விழா ஒரு நாட்டின் கலை கலாச்சார உறவுகளை வெற்றிடமின்றி நிரப்பிட உதவுகிறது என்றால் யாரும் அதை மறுத்துக் கூற முடியாது என்றே சொல்லலாம்! உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட நிகழ்வாகத்தான் கிறிஸ்துமஸ் பெருவிழா திகழ்கின்றது! குடும்பம் என்ற ரீதியில் பார்த்தால் ஒவ்வொரு குடும்பமும் தன் உறவுக் கிளைகளோடும் நட்புக்களோடும் நேசங்களைப் பகிர்ந்து கொள்கின்ற பரந்த, விசாலம் நிறைந்ததாக விலாசம் சொல்லுகின்ற விழாவாகப் பரிணமிக்கிறது கிறிஸ்துமஸ் பெருவிழா!

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

‘ ரிஹஸ்-பேல் லெட்டாட்ஸ் ‘ (ஆப்ரிக்கன் )

‘ யிடா சைடான் வா சானாஹ் ஜடிடாஹ் ‘ ( அரபிக் )

‘ செலாமட் ஹரி நேடால் ‘ ( மலேசியா )

‘ ‘ுவோ நாபா பார் ‘ா ‘ ( பெங்காலி )

‘ பெலிஸ் நவிடாட் ‘ ( சிலே )

‘ கன் ட்சோ சன் டான் கங் ஹாவ் சன் ‘ ( சீனம் )

‘ ஜோயெக்ஸ் நோயெல் ‘ ( பிரெஞ்சு )

‘ ஹைவா ஜோலுவா ‘ ( பின்னிஷ் )

‘ ‘ப் நயா வர்ஷ் ‘ ( மராத்தி )

‘ ‘ப் நயா பராஸ் ‘ ( இந்தி )

‘ ‘ங் டான் சுக் ஹா ‘ ( கொரியன் )

‘ காட் ஜுல் ‘ ( நார்வேயன் )

‘ பெலிஸ் நெவிடாட் ‘ ( ஸ்பானிஷ் )

‘ மாலிகாயன் பாஸ்கோ ‘ ( பிலிப்பைன்சு )

‘ ‘ாவாடி பீ மாய் ‘ ( தாய்லாந்து )

‘ நயா சால் முபாரக் ஹோ ‘ ( உருது )

‘ சங் மங் ஜியாங் சின்ஹ் ‘ ( வியட்நாம் )

‘ நடோலிக் லாவ்வென் ‘ ( வேல்ஸ் )

‘ செஸ் டிடாமொ போசிக் ‘ ( யுக்கோஸ்லேவியன்)

Series Navigation

ஆல்பர்ட்

ஆல்பர்ட்