உலகப் புத்தக நாள் (அ) நான் ஏன் புத்தகம் வாங்குவதை குறைத்துவிட்டேன்

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்



உலகப் புத்தக நாள் வாழ்த்துக்கள். நான் புத்தகங்களை வாங்குவதை கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருமளவு
குறைத்து விட்டேன். காரணங்கள் பல. ஒன்று இடம், இப்போதுள்ள என் வாழ்க்கைக்கு புத்தகங்களை வாங்கினால்
மட்டும் போதாது, ஒழுங்குபடுத்தி வைக்க இடம் உட்பட பிற வசதிகள் வேண்டும்.அவை இல்லாததால் நூற்களை
வாங்குவதை குறைத்துக் கொண்டிருக்கிறேன். வாங்கி வைத்து படிக்காத நூல்கள் பல இருக்கும் போது நூற்களை
வாங்கிக் குவிப்பதில் பெரும் தயக்கம் ஏற்படுகிறது நூலகங்களிலிருந்து நூற்களை . இயன்ற அளவு பெற்றுக் கொள்வது
பல விதங்களில் வசதியாக இருக்கிறது. புத்தக மதிப்புரைகளை படித்தும், வேறு பல வகைகளில் அறிந்து தெரிவு
செய்வதாலும் புத்தகங்களை வாங்கிப் படித்துவிட்டு, ஏன் வாங்கினோம் என்று அலுத்துக் கொள்ளும் வாய்ப்பினை
குறைத்தாயிற்று. மதிப்புரைகென்று நூல்கள் படிக்க கிடைக்கின்றன. இப்போதெல்லம் அதையும் குறைத்துவிட்டேன்.
அமேசான் பக்கம் எட்டிப்பார்ப்பதுடன் சரி, 20/30 நூற்கள் என்று வாங்குவதை விட்டு விட்டேன்.புத்தக விலை 1 செண்ட்
என்றாலும் தபால் செலவு இத்தியாதி 4 $ ஆவதுடன், புத்தகமும் சேர்ந்து விடுகிறது. ஜர்னல் கட்டுரைகள்,
ஆய்வேடுகள் இன்ன பிற ஜிபி(GB)களில் கணினிகளில் இருக்கின்றன. அவற்றைப் படிக்கவே நேரம் இருப்பதில்லை.
புத்தகங்களை வாங்கினால் படித்துவிட்டு தூர எறிய மனது வருவதில்லை. சமயங்களில் அவற்றை இலவசமாகக்
கொடுத்தாலும் பெற்றுக்கொள்ள ஆட்களில்லை . புத்தகங்களை தூக்கி எறியாமல், கழுதைக்குக் தீனியாக்கி விடலாம்,
நாமும் கழுதைப் பாலில் குளித்து அழகாகிவிடலாம் என்ற எண்ணத்தில் ஒரு கழுதை வளர்த்துப் பார்த்தேன் ; நீ
கொடுக்கும் நூல்களை தின்பது கழுதைக்கு கேடு, கழுதையை துன்புறுத்துகிறாய் என்று PETA ஆர்வலர்கள்
மிரட்டியதால் கழுதையை விற்றுவிட்டேன். கழுதைப் பாலில் குளித்தால் மேனி பளபளப்பாகிறது, ஆனால்
சரியான சோப்பு கிடைக்காததால் மேனியின் பளபளப்பை குறைக்க முடியவில்லை. முகம் மிகவும் பளபளத்து
எதிரில் வருவோர்/வாகன ஒட்டிகள் கண் கூசி என் மீது மோதி விபத்து ஏற்பட்டதால் கழுதைப் பாலில்
குளிப்பதை நிறுத்திவிட்டேன். பட்டுப் போன்ற மேனிக்கு பியர்ஸ் இருக்க கழுதைப் பால் எதற்கு.

புத்தகம் படிப்பதை அவுட் சோர்ஸ் செய்துவிடுமளவிற்கு வருமானம் இல்லை என்பதால் அதை செய்யவில்லை.
ஆனால் இந்தியாவில் உள்ள பில்லியனர்கள் வேலைகளை அவுட் சோர்ஸ் செய்வதாகவும், அதில் புத்தம் படித்து,
சுருக்கி எழுதிதருவதும் அடங்கும் என்று அறிந்தேன்.ஒரு பில்லியனருக்காக மாதம் ஆறு புத்தகம் இப்படிப் படித்து
சுருக்கி எழுதித தரும் வேலையை பகுதி நேர வேலையாக செய்து கொண்டிருக்கிறேன். இதில் வருகிற வருமானத்தில்
புத்தகங்கள் வாங்குவதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன். இதில் நிறையப் பணம் சேர்ந்தால் பரிசு/விருது
கிடைக்கவில்லை என்று புலம்பும் தமிழ் எழுத்தாளர்களுக்கு பரிசு/விருது தர ஒரு அறக்கட்டளையை நிறுவும்
எண்ணம் இருக்கிறது.

பல காரணங்களால் புத்தகம் வாங்குவதை பெருமளவிற்கு வெற்றிகரமாக குறைத்து விட்டேன். இதை
என்னாலேயே நம்ப முடியவில்லை, என் மனைவியால் நம்பவே முடியவில்லை. அவ்வப்போது தலையணைக்கடியில்,
படுக்கைகடியில், குளியலறையில் புதுப் புத்தகங்கள் இருக்கிறதா என்று பார்க்கிறார். ஒன்றும் கிடைப்பதில்லை.
புத்தக கடைகளில் ஒரிரு மணி நேரம் செலவழித்தாலும் ஒரு புத்தகத்தைக் கூட வாங்காமல் வெளியே வரும்
கலையில் தேர்ச்சி பெற்று விட்டேன்.. ஆனால் அங்கு குடிக்கும் காப்பி, தின்னும் நொறுக்குத் தீனியின் விலைக்கு
புத்தகங்களையே வாங்கிவிடலாம் என்பது உண்மை. இருந்தாலும் என்ன செய்வது புத்தக ஆசையே உன்
துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்று புத்தர் என் கனவில் வந்து பல முறை சொல்லியிருப்பதால் ஆசை வரும்
போதெல்லாம் புத்தம் சரணம் கச்சாமி என்று சொல்லி விடுகிறேன், ஆசையும் போய்விடுகிறது.

பிறந்த 2வது நிமிடத்திலிருந்தே புத்தகங்களை படித்து வரும் நான், இப்பிறவி, போன பிறவிகளில் பெற்ற
அனுபவங்களின் அடிப்படையில் நூற்கள் வாங்குவதை குறைப்பது எப்படி, புத்தகம் வாங்கும் பழக்கத்திலிருந்து
விடுபடுவது எப்படி என்ற தலைப்புகளில் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்டு,
மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பின் தமிழுக்கு இவை வரும். மலையாள மொழிபெயர்ப்பு தயாராக
இருக்கிறது, அசின் தேதி, நேரம் தராததால் வெளியீட்டு விழா சிறிது தாமதாமாகிறது, பிறந்த முதல் நிமிடம்
என்ன செய்தாய் என்று கேட்பவர்களுக்கு : பிறந்த முதல் நிமிடம் கண்ணைத் திறந்து பூமியில்தான் பிறந்திருக்கிறோமா
என்பதை உறுதி செய்து கொள்ளத்தேவைப்பட்டது. பிறந்த உடன் முதலில் படித்த புத்தகம் தாஸ்தாவஸ்கியின்
Notes From Underground. நரகத்தில் இருந்த பிரதிகளில் பக்கங்கள் கிழிந்திருந்தன. சொர்க்கத்தில் உள்ள
நூல்கங்களில் கடன் வாங்கலாம் என்றால் அங்கு இத்தகைய நூல்களை வைத்திருப்பதில்லை என்று
சொல்வி விட்டார்கள். அதற்கு அடுத்துப் படித்த புத்தகம் கார்ல் மார்க்ஸின் Economic and Philosophical
Manuscripts of 1844. பூக்கோ பாலியல் குறித்த நூற்களை அப்போது எழுதிக் கொண்டிருந்ததால் எனக்கு
பிரெஞ்ச் தெரிந்திருந்தும் அவை வெளியாகாததால் படிக்க முடியாமற் போயிற்று. நரகத்தில் அவரது அனைத்து
நூற்களும் உள்ளன என்கிறார்கள். அதை பிரெஞ்ச்சில் படித்து தமிழில் புரியும்படி மொழிபெயர்த்தால் தண்டனை குறைப்பு
உண்டு, மோசமாக மொழிபெயர்த்தால் தண்டனை கூடும் என்றும் சொல்கிறார்கள். உங்களுக்குத் தெரிந்த, பிரெஞ்ச்,
தமிழ் தெரிந்தவர்களுக்கு, குறிப்பாக வலைப்பதிவர்களுக்கு இதை அறியத்தாருங்கள்.

இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நூற்களில் சில

Foucault in Bollywood : Pleasure and Biopolitics of Popular Hindi Films
Male Nation, Masculine Politics : Hindutva and Body Politic in India
Post-Modern and Post-Human Worlds in Fiction and Film
What Web 3 Will Not Be
Googlization, Culture and Attention Economy
Yoga and the Post-Modern Body
Kapi Raagaa (புனைவு)

http://ravisrinivas.blogspot.com

Series Navigation