உறவுச் சங்கிலிகள்

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

கோவை புதியவன்


“மாப்ள! எப்படி இருக்கீங்க?…”

“இருக்கேன் அத்தை. நீங்க எப்படி இருக்கீங்க?”

“எனக்கு என்ன மாப்ளே நல்லா இருக்கேன். சரி… அம்மா எப்படி இருக்காங்க…? என்றவுடன்.

“அவங்களுக்கு என்ன பணத்தை எண்ணி எண்ணி சந்தோசமா இருக்காங்க” என்றான் ரகு வேண்டா வெறுப்பாய் பதில் சொன்னான்.

“அப்படி சொல்லாதீங்க மாப்ளே. அவங்க பெரியவங்க. விமலா! நீ எப்படிம்மா இருக்க?”

“நான் நல்லா இருக்கேன் அம்மா. உனக்கு இங்க குறை ஒண்ணு இல்லையே?” கேட்கும்போதே விமலாவிற்கு தொண்டை அடைத்துக் கொண்டு கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க….

“சீ…அசடு ஏன் அழற? மாப்ள பாக்கறாரு. கண்ணை தொடச்சுக்கோ. இங்க ஒரு குறையும் இல்ல.” என்று காமாட்சி தன் மகளுக்கு தைரியம் சொன்னாள்.

“இந்தாம்மா…தீபாவளி ஸ்வீட், காரம் கொண்டு வந்திருக்கிறேன்.” விசும்பலோடு சொன்னாள் விமலா.

“எனக்கு எதுக்கு விமலா இதெல்லாம்…?”

“பரவாயில்ல அத்தை வாங்கிகோங்க….”

மாப்பிள்ளையின் அன்புக் கட்டளையை ஏற்றுக்கொண்டு விமலாவிடமிருந்து தீபாவளி பலகாரத்தை வாங்கிக் கொண்டாள் காமாட்சி.

“அத்தை இப்படி ஒரு வாழ்க்கை உங்களுக்கு தேவையா..? பேசாம எங்ககூட வந்திருங்க”

“இல்லை மாப்ளே…யாருக்கும் நான் தொந்தரவா இருக்க விரும்பல. தயவுசெஞ்சு கட்டாயப்படுத்ததீங்க…”

காமாட்சியை கட்டாயப்படு;;த்த முடியாமல் அமைதியானன் ரகு. எங்கும் பசுமையும், அமைதியான சூழலும் கூடிய அந்த “அன்னை இல்லம்” மகிழ்ச்சி வறண்டுபோய் ஆதரவற்ற பல இதயங்களை தாங்கி நிற்க, அங்கிருந்து கனத்த இதயத்தோடு ரகுவும், விமலாவும் வெளியேறினர்.

ழூ ழூ ழூ ழூ ழூ
“டேய்! எங்கடா போய்விட்டு வர…” என்று அதட்டினாள் பர்வதம்

“ஏன் கண்டிப்பா சொல்லி ஆகணுமா…?” என்று உறுமினான் ரகு.

“ஆமா.. சொல்லுடா…எங்க போன…?”

“உன்னோட சம்மந்தி அம்மாவை பார்க்கப் போனேன்”

“நீ எதுக்கு அங்கே போற…பொண்ண கல்யாணம் கட்டிக் கொடுத்ததோட சரி…மேற்கொண்டு பேசினபடி வரதட்சணை பணம் 10 ஆயிரம் பாக்கி இதுவரைக்கும் தரவேயில்லை.”

“கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள்ல விமலாவோட அப்பா காலமாயிட்டார். மேற்கொண்டு அவங்க எதுவும் செய்ய முடியாம போச்சு. அதையே இன்னும் ஏன் குத்தி காட்டிட்டு இருக்க. இன்னிக்கு உன் சம்மந்தி அம்மாவோட நிலைமையைப் பாரு. யாருமில்லாம தன்னோட ஒரே பொண்ணை கட்டி கொடுத்திட்டு அநாதை மாதிரி அந்த இல்லத்தல இருக்காங்க. நீயும், நானும் சாப்பிடறதல கொஞ்சம் அவங்களுக்கும் கொடுத்தா இங்க ஒண்ணும் குறைஞ்சு போகாது. உனக்கு மகன்னு சொல்லிக்க நான் இருக்கறதால நீ அப்பாவோட துணையில்லாம ரொம்ப சந்தோசமா இருக்க. இதே நான் உனக்கு மகளா பொறந்திருந்தா எனக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்திட்டு நீயும் ஆதரவில்லாம தனிமரமா கிடந்து திண்டாடிப் போயிருப்ப. சும்மா பணம்…பணம்ணு அலையாதம்மா. சாகும்போது எல்லாத்தையும் அள்ளிட்டா போற?”

மகனின் வார்த்தைகளை கேட்டு வாயடைத்து அதிர்ந்துபோய் நின்றாள் பர்வதம்.

ழூ ழூ ழூ ழூ ழூ
வீடெங்கும் சாம்பிராணி புகை மணக்க… பூஜை அறையில் என்றும் இல்லாத அளவு பக்தி மணம் அதிகம் கமழ, கம்பீரமாய் கரும்பு நிமர்ந்து நிற்க.. அடுப்பில் விபூதி, குங்கும மங்கலத்தோடு மஞ்சள் கட்டப்பட்ட அந்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பால் பொங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது.

“காமாட்சி! இனி எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே எங்களோட இருந்திருங்க” என்றாள் பர்வதம்

“இல்ல சம்மதியம்மா உங்களுக்கு எதுக்கு சிரமம்?” என்று காமாட்சி மறுக்க…

“ஒண்ணும் பேசக்கூடாது.. நான் சொன்னா சொன்னதுதான்” என்று செல்லமாய் அதட்ட
அமைதியானாள் காமாட்சி.

டேய் ரகு! சீக்கிரம் வாடா…பால் பொங்கப் போகுது” பர்வதம் அழைக்க குளியறையில் இருந்து அவசரமாக ஓடி வந்தான். பால் கொஞ்சம் கொஞ்சமாய் பொங்கி எழ அனைவரும் “பொங்கலோ பொங்கல்” மகிழ்ச்சியுடன் கூறி கடவுளை வணங்கினர்.

“அத்தை! இந்த வருடம்தான் பொங்கல் ருசியா இருக்கப் போகுது” என்றான் ரகு.

“ஏன் மாப்ள அப்படி சொல்லறீங்க…?”

“இந்த வருடம் நீங்கதான பொங்கல் செய்யப்போறீங்க..”

“ஏன் அம்மா செஞ்ச நல்லா இருக்காதா…”

“நீங்க வேற எங்க அம்மா செஞ்சா பானையிலிருந்து பொங்கல் வெளியே வரவே வராது.” என்று கிண்டலடிக்க…

“அப்ப…எம் பொண்ணு செஞ்சா..? என்று காமாட்சி கேட்க…

“அது சரி…உங்க பொண்ணு செஞ்ச அடுப்பிலிருந்து பானையே வெளியே வராது” என்று கூற…கோபத்தோடு விமலா ரகுவை அடிக்க ஓட…இதயங்கள் இரண்டும் அவர்களைப் பார்த்து மனம்விட்டு சிரித்தன.


thendral_venkatguru@yahoo.co.in

Series Navigation

கோவை புதியவன்

கோவை புதியவன்