உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

கலாசுரன்


உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்……..!

எப்பொழுதும் இல்லை எனினும்
உள் சென்று வெளிவர
அவைகளில் ஒன்றாய்
உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்……..!
.
ஏன் என்று உள்ளே வந்து பாருங்கள்……….!
.
சுவரின் கீழ் மூலையோரத்து
வெடிப்புகளில்
மழலைகளாய்
தூங்கிக்கொண்டிருக்கும் தூசிகள்………!
.
அவ்வப்போது என் காலணிகள்
சுவருக்கு பரிசளித்த
மதிப்பற்ற ஓவியங்களாகும்
சில அழுக்குக் கறைகள்………!
.
கூரையில் ஆங்காங்கே
ஊசலாட்டும் காற்றுக்கு
இசையமைத்தபடியே நடனமாடும்
ஒட்டடைத் தொங்கல்கள்………!
.
அதோ….. தண்ணீர்ப் பானைமேல்
நான் பருகி முத்தமிட்டு வைத்தபின்
அடுத்த முத்தத்திற்கு
தலை கீழாய் தவம் புரியும் வெள்ளிநிற கோப்பை……..!
.
தூசிகளை செல்லமாய்
வருடிய கழைப்புடன்
இன்னொரு மூலையில்
நின்றபடி தூங்குகிறான் துடைப்பான்……..!
.
ஒருவித
வெட்கத்துடன் முகம் மறைத்தபடி
குப்புற கிடக்கும்
என்னருமைப் பேனாக்கள்……..!
.
தோரணங்களாய் தொங்கியபடி
ஒரு செவ்வகப் பந்தலிடும்
சற்றும் தூசி தட்டாத நினைவுகளுடன்
என் மேஜை விரிப்பு………….!
.
என் கவிதைகளை மௌனமாய் வாங்கிவிட்டு
அறை எங்கும் சிதறிச் சென்று
என்னைப் பார்த்தும் பார்க்காததுபோல்
நடித்துக்கொள்ளும் தூசிப் போர்வை அணிந்த சில காகிதங்கள்…….!
.
இவை அனைத்தும்
சரளமாய் நாம் காண
இவைகளின் நிழல்கள் ஏன் நடுங்குகின்றன…………?
.
பீடத்தின் மேலிருக்கும்
ஒற்றைத்திரி விளக்கின் சுடர்
காற்றில் உலைகிறது
அனைத்தின் நிழல்களையும் நடுக்கியவாறு……..!
.
இருள் சூழக்கூடும்…!
தடுத்திட ஆவேசமாய் ஓடிச்சென்றேன்…..!
என் ஓட்டம் முழுமையடையும் முன்
எங்கும் இருள், ஒருவித புகை மணம்…………..!
.
காண்பிக்க ஏராளம் இருக்கிறது
எங்கேயும் போய் முட்டிக்கொள்ளாது
விளக்கு விழிக்கும் வரை
அங்கேயே இருங்கள்….
.
இப்போது வத்திப்பெட்டி
தேடிக்கொண்டிருக்கிறேன்……..!

கலாசுரன்

Series Navigationவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று >>

கலாசுரன்

கலாசுரன்