சின்ன கருப்பன்
தமிழ்நாட்டில் உருது அகடமி உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ் தவிர்த்த மற்ற மொழிகள் பற்றிய அறிவை உருவாக்கிப் பரப்புவதன் மூலம் மக்களுக்குப் பரந்த உணர்வை ஏற்படுத்த இந்த அகடமி முயலும் என்று நம்ம்புவோம். ஆனால், இது ஏதோ முஸ்லீம்களைச் சந்தோஷப் படுத்தும் முயற்சி என்று பலர் நினைக்கிறார்கள். தமிழ் நாட்டின் முஸ்லீம்களுக்கும் உருது மொழிக்கும் எந்த உறவும் இல்லை. அவர்களின் முன்னோர்கள் மத மாற்றம் செய்து கொண்டார்களே தவிர மொழிமாற்றம் பெற்றதாகத் தெரிய வில்லை. (அகடமி உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லீம்களாக இருப்பது தற்செயல் தான் என்று நம்புவோம்.)
பலரும் உருது வேற்று நாட்டின் மொழி என்றும் நினைக்கிறார்கள். உத்திரப் பிரதேசத்தில் இருந்த பா.ஜ.கட்சி அரசு உருது மொழிப்பயிற்சியை நிறுத்திய போது கடும் எதிர்ப்பு வந்தது நினைவிருக்கலாம். சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால், தமிழ் போன்றே, சமஸ்கிருதம் போன்றே உருது அசலான ஒரு இந்திய மொழி. திமுக தரப்பினர் வரலாறு அறியாமல் சமஸ்கிருதத்தை வடமொழி என்று அழைத்தார்கள். உண்மையான வடமொழி உருது தான். இப்போதும் கூட வட இந்தியாவில் உருது இந்துக்கள், முஸ்லீம்கள் அனைவராலும் பேசப்பட்டு வரும் மொழிதான். காந்தியும் மற்றவர்களும் இந்துஸ்தானி தேசிய ஆட்சி மொழியாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது உருதுவைத்தான் அவர்கள் குறிப்பிட்டார்கள். பின்னாட்களில், தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்பட்ட இந்துஸ்தானி மொழி இந்தியாகவும், பாரஸீக வரிவடிவத்தில் எழுதப்பட்ட மொழி இந்தியாகவும் வழங்கலாயிற்று. மிகச் சிறந்த நாவலாசிரியர் ப்ரேம் சந்த் எழுதியதும் உருது மொழியில் தான். ஆனால் சமீபத்தில், இந்தி மொழியை சமஸ்கிருதமயமாக்குக்ம் ஒரு முயற்சி பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரால் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
முதன் முதலில் தில்லியின் முகலாயப் படை வீரர்களிடம் உருவாகிய பாரஸீக வரிவடிவத்தில் எழுதப்பட்ட இந்தி மொழி தான் உருது. மிகக் கவிதை மயமான, நளினமான, அழகான மொழி இது. பாகிஸ்தான் அதனைத் தன் தேசிய மொழியாய் மேற்கொண்டு, வங்காளிகள் மீது திணித்து, அதன் விளைவாக வங்கதேசம் உருவான கதை சமீபத்திய வரலாறு. இப்போதும் பாகிஸ்தானில் உருதுவிற்கு முன்னுரிமை கொடுப்பதால் சிந்தி, பஞ்சாபி போன்ற மொழிகளும், மொழி பேசுவோர்களும் பின்தங்கிப் போயுள்ளனர் என்று விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளது. அதில்லாமல், மதத் தீவிர வாதிகள் அராபிய மொழி கட்டாயம் பயில்விக்க வேண்டுமெனப் போராடுகின்றனர்.
தமிழ் நாட்டில் உருது அகடமி போன்றே, கன்னட அகடமி, மராத்தி அகடமி, தெலுங்கு அகடமி, சமஸ்கிருத அகடமிகள் உருவாக்க வேண்டும்.