சிவகாசி திலகபாமா
உயிரில்லா கல்லெல்லாம்
உயிர் சக்தியாம் மின்சாரம் தொட
உயிர் பெற்று வருகுது
கல்லது வடிவம் பெற்று
கடவுளானது கண்டோம்
கல்லது உயிர் பெற்று
காலை உணவுக்கு
மாவரைக்கும் மந்திரமானது
தயிர்மத்தும் தானே சுழன்று
தானியங்கியில்
தாழி உடையாது
வெண்ணெய் திரளுது
இருள் திரையென இருந்த
சின்னத்திரையும் உயிர் பெற்று
வண்ணம் ஏழு தாங்கி
எண்ணம் முழுதும் நிறைந்து
உயிர் பெற்ற பெட்டியாய்
உலா வருதல் கண்டோம்
திருமண பந்தத்தில்
தீரா சொந்தம் கொண்ட
அம்மியும் இன்று அடுக்களையில்
ஆதரவின்றி உயிர் பெறாததால்
அசையாப் பொருளையெல்லாம்
அறிவால் அறிவியலால் உயிராக்கி
அசைய வைத்து விட்டு
தட்டினால் இயங்கும்
தானியங்கி மத்தியில்
நீ மட்டும் உயிரற்ற ஜடமாய்
உறைந்து உருமாறியதெப்போது
மதிப்பெண் தேடி
கல்லூரி இடம் தேடி
நாலு இலக்க சம்பளத்தில்
நாற்காலி தேடி
பெண்தேடிபின்
பிள்ளைகளூக்கு
பள்ளியில் இடம் தேடி
சுடுகாடில் இடம் பெறும் வரை
தேடித் தேடி நீ
உயிர் தொலைத்து
மம்மிக்குள் அடைத்த உடலாய்
உலவத் தொடங்கியதெப்பொது
சேர்க்கையின் விளைவோ
செயற்கையின் அழிவா ? ?