உம்மும்மா நேசித்த ஊசிக்கிணறு

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

ஹெச்.ஜி.ரசூல்


ஊசிக்கிணற்றிற்கு பலமானதாக சுவர்கள் இல்லை. ஐந்தடி உயரச் சுற்று சுவரில் முண்டியடித்து முட்டிக் கொண்டு நெருக்கினால் போதும் உடைந்து விழுகிற துண்டுகளுடன் குழந்தைகள், பெண்கள், குட்டி இபுலீசுகளென பேதங்களற்று எல்லா உடல்களும் துண்டுப் பிரதிகளாய் சிதறும். கிணற்றின் நாற்புற கருங்கல் அடுக்குகளில் மோதிச் சிதறி முன்னூறுஅடி கிணற்றுத் தண்ணீரில் திவலைகள் மிதக்கும்.
பலவிரல்கள் தொட்டுப்பார்த்த ஓலைப்பட்டைகள் கீழும் மேலும் நீரை தொட்டும், விலக்கியும் வாழ்ந்ததுண்டு. பிறகு ஓட்டை விழுந்து தண்ணீ¡ எடுக்கும்போது முழுவதும் வெளியாகும் வெறும்பட்டைகளாகிப் போனதால் நீரில் மூழ்கி செத்துப்போனதுமுண்டு. தகரப் பட்டைகளுக்கும் அநேகமாக இவ்வாறான கதியே.
இருபக்கமும் தூண்நாட்டி குறுக்கே ஒரு தடி போட்டு வடமொன்றில் கப்பிப்போட்டபோது தண்ணீ¡ கோருவதற்கு எளிதாக இருந்தது. மொத்த பலத்தையும் பிரயோகிக்க தேவையில்லை. கப்பியில் உருளும் கயிறு வாளியில் இறைக்கும் தண்ணீரின் கனத்தை லேசாக்கிக் காட்டும். கிணற்றில் விழுந்து நீந்தி தத்தளித்து சுவற்றைப் பற்றி மூழ்கிக் கிடந்த பூனைக்குட்டியை கரையேற்றுவதற்கு கிணற்றில் கயிறுகட்டி இறங்கிய சொளவையும் சோற்றுப்பருக்கை கட்டியையும் மறந்து விடமுடியாது.
காலங்களின் முதுகிலேறி கிணறு சவாரி செய்ததை பார்த்ததுண்டு. எப்போதும் ஒரேவிதமாய் அழவோ, சிரிக்கவோ தெரியாது. விதவிதமாய் தன்முகத்தை வடிவமைத்துக்கொள்ளும். ஊறும் நீரை வேண்டாமென்று சொன்னதில்லை. மண்குடித்து வைத்திருக்கும் நீர் எப்போது எப்படி குடித்தது என்று சொல்லமுடியாது. மண்குடங்களில் அல்லது ஒட்டகங்களின் தோல்பைகளில் சேகரித்து வைக்கப்பட்ட நீர் போலல்ல. ஓராயிரம் வருடங்களில் நீரை குழந்தையாய் பிரசவிக்கும் மண்ணிற்கு முத்தம் கொடுக்க யாரும் முயன்றதில்லை. தான் குடித்து ரகசியமாக சேமித்து வைத்திருக்கும் நீரை ஏதேனும் ஒரு புள்ளியில் குமிழியிடும் ஊற்றாக அது கசியவிடும். பசுமடியின் காம்பில் கறக்க கறக்க பாலொன்றும் வற்றுவதில்லை.
மேகங்களோடு உறவு கொள்வதற்கு கிணற்றிற்கு நீளமான மர்ம உறுப்புகள் எதுவும் கிடையாது. விரல்களோ, விழுதுகளோ இல்லை. வெண்மேகங்கள் சூழும் காலத்தில் சூரியனின் ஆணைப்படி படர்ந்து கிடக்கும் தன்நீரை தனக்குத் தெரியாமலேயே இழந்து கொண்டிருக்கும். அடுப்படியில் எரியும் தீயில் கொதிக்கும் பாத்திர நீர் ஆவியாகி சுண்டிப்போவது போல் அப்போதெல்லாம் அரைக்கிணற்றில் கிடக்கும் தண்ணீர் ஆழம்போய், தூரில் சுழன்று கிடக்கும்.
பலதடவை கறுப்பு மேகங்கள் கனிந்து கருணை காட்டி மழை மேகங்களாகி குளிர்ந்து பெய்யும் போது ஆழ்கிணறு அரைக்கிணறாகும்.
சமவெளிப்பரப்பாய் கிடந்த அந்த இடத்தில் நீர்மட்டம் பார்த்து துள்ளிச்சாடி கிணறுவெட்ட அடையாளப்படுத்தி தந்த முகமது எலப்பைக்கும் கிணற்றின் உள்கதைகள் தெரிந்ததில்லை. ஜம்ஜம் தண்ணிபோல் இனிக்கவோ, புனிதமானதாகவோ உள்ளது. இங்கெல்லாம் எதுவுமில்லையென்ற உம்மும்மாவின் கவலைக்கும் காரணங்கள் உண்டு. பக்கத்து இடங்களில் கிடைக்கும் கிணற்று நீ¡ ருசியாக ஒன்றும் இருக்காது உப்பு கரிக்கும். அல்லது ஏதேனும் ருசி குறைவாய் இருக்கும். கடல் முழுக்க நீர் இருந்தாலும் ஒரு கை முடக்கு எடுத்து குடிக்க முடியாததுபோல.
முள்தைத்த, செருப்புப் போடாத, அழுக்கடைந்த முரட்டுப்பாதங்கள் பற்றிய பெருமைகளை உம்மும்மா அடிக்கடி பேசுவாள். பிஞ்சுப்பாதங்கள் மீது, குழந்தைப்பாதங்கள் மீது அவளுக்கு பிரியம் அதிகம். அடிக்கடி தவழும் குழந்தையின் பாதங்களைப் பிடித்து முத்தமிடுவாள். இஸ்மாயீல் நபியின் பிஞ்சுப்பாதங்கள் பட்டு கரும்பாறையில் ஊற்றாய் பிறப்பெடுத்த ஜம்ஜம் கிணறு பற்றி எப்போதெனும் சொல்லிக் கொள்வாள் ஞாபகமாய்.
தென்னை மரங்கள் ஒன்றிரண்டு வளர்ந்தபோது அதன் வேர்கள் கிணற்றின் ஆழத்தைநோக்கி பயணப்பட்டு நீரைத் தொட முடியாமல் தோற்றுப் போனதுண்டு. அதன் தலைகள் உதிர்க்கும் குச்சங்காளிகளையோ, கொதும்புகளையோ கிணறு அவ்வப்போது வாங்கிக்கொள்ளும். காற்றில் உட்கார்ந்து மிதந்து வரும் சருகுகள், கிழிந்த தாள்களென தூசிகளின் புழுதிப்படலம் சூழும். இதில் மீன்கள் எப்படி வந்தனவென்றும் ஒன்று ரெண்டாகி, ரெண்டு பலவாகிய விதம் பற்றியும் தெரிந்தபாடில்லை.
கப்பியாலும், கையாலும் தண்ணீர் இறைத்து குளித்த உடல்களைப் பற்றி அழுக்காகிப்போன நீருக்கு தெரிந்திருக்கும். அது திரும்பவும் தன்னை சுத்தப்படுத்த விரும்பவில்லை. அதனதன் பார்வைக்கு சுத்தமென்று எதுவுமில்லையென ஒருவேளை அதற்கு தெரிந்திருக்கும். சோப்புநுரைகள் குமிழியிட்டு கணநேரத்தில் மறைந்து போயின.
நேற்று இரவு கும்மிருட்டு உம்மும்மா கிணற்றில் நீரிறைத்தபோதுதான் அந்த சம்பவம் நடந்தது. கப்பியில் போடப்பட்ட வாளியை கிணற்று நீரில் மூழ்கவிட்டு பின்னர் இழுத்து இழுத்து பார்த்தபோது வெகுவாய் கனத்தது. மிகவும் சிரமப்பட்டு வாளித் தண்ணீரை இறைத்து குட்டுவத்தில் ஊற்றியபோது தான் தெரிந்தது வாளியில் நீர் வரவில்லை ரத்தம் சொட்டச் சொட்ட வெட்டுப்பட்டு துண்டிக்கப்பட்ட பிணத்துண்டுகள். நீரெல்லாம் ரத்தம். பயமும், பீதியும் மேலிட உம்மும்மா ஊளையிட்டாள். கூட்டம் கூடியது. இருளில் கூடி நின்று பார்த்தபோது கிணறு வெட்டுப்பட்ட மனிதப்பிணங்களால் நிரம்பிக் கிடந்தது. இப்போது குட்டி இபுலீசுகள் கிணற்றை சுற்றி வேடிக்கை பார்த்தன.
———————-
mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்