உடன்பிறப்புக்கு என் நன்றி.

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

செல்வன்


கேன்னிபாலிஸம்(cannibalism) எனப்படும் தம்மினத்தை சாப்பிடும் பழக்கம் பரிணாமவாதத்தில் முக்கிய இடம் பெறுகிறது.அனைத்து வகை உயிரினங்களிலும் காணப்படும் இப்பழக்கம் சில இனங்களில் கருவிலேயே துவங்கி விடுகிறது.

சான்ட்டைகர் ஷார்க்(sand tiger shark) எனப்படும் சுறாமீன் இனத்தில் தாயின் வயிற்றில் 12 மேற்பட்ட கருக்கள் இருக்கும்.கருவிலேயே பல் முளைத்ததும் அவை அருகிலிருக்கும் பல் முளைக்காத கருக்களை தின்றுவிடும்.பிறகு ஒன்றையொன்று தாக்கி தின்னத் துவங்கிவிடும்.கடைசியில் ஒரே ஷார்க் மட்டும்தான் மீதமிருக்கும்.கருவிலிருந்து வெளியே வரும்போது உலகை எதிர்கொள்ளத் தேவையான ஆற்றலுடன் பிறக்கும்.தாய் சுறாவுக்கும் இது நல்லதே.ஒரே சமயத்தில் 12 குட்டிகளை வயிற்றில் சுமக்க அதனால் முடியாது.

சிங்கங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும்.ஒரு ஆண்சிங்கம் இன்னொரு ஆண்சிங்கத்தை அடித்து வீழ்த்திவிட்டு தோற்ற ஆணின் குடும்பத்தை தன் குடும்பத்துடன் இணைத்துக் கொள்ளும்.அப்படி செய்யும்போது தோற்ற சிங்கத்தின் குட்டிகளை தின்று விடும்.சிம்பன்சிகள் கூட இதே போல் தான் செய்யும்.

டாரன்டுலா ஸ்பைடர்கள்(Tarantula) இனத்தில் நிலமை மிக மோசம்.பெண் சிலந்திகள் கொலைகாரிகள்.காதல் முடிந்ததும் காதல் செய்த ஆணை சாப்பிட்டுவிடும்.இதிலும் சில வில்லங்கங்கள் இருக்கிறது.நிறைய ஆண்கள் இருக்கும் சிலந்தி இனங்களில் கிடைத்த ஆணையெல்லாம் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் பெண் சிலந்திகள்.பசி அடங்கிய பின் தான் காதல்.ஆண்கள் எண்ணிக்கை குறைந்தால் ஆண்களை சாப்பிடுவதை பெண் சிலந்திகள் நிறுத்திவிடும்.

அனகோன்டா பாம்புகள் செய்வதும் இதைத்தான்.வெனெசூலாவில் பிடிபட்ட ஒரு 15 அடி, 90 கிலோ பெண் அனகோண்டா கிட்டத்தட்ட ஒரு 10 அடி ஆண் அனகோன்டாவை விழுங்கியிருந்தது.கர்ப்ப காலம் முழுவதும் இரை தேடுவது சிரமம் என்பதால் காதல் முடிந்ததும் கணவனை கொன்று தின்றுவிடும்.பிறகு பிரசவ காலம் முழுவதும் ஓய்வு தான்.

சில இனங்களில் தாம் சாப்பிடப்படப் போகிறோம் என்பதை அறிந்தே செல்லும் ஆண்கள் உண்டு.பிரம்மச்சாரியாக எத்தனை நாள் காலம் தள்ள முடியும்?மேலும் அவற்றின் ஆயுள் காலம் குறைவு.

வல்சர்(vulture) எனப்படும் கழுகு இனத்தில் பெண் கழுகுகள் ஒரு வார வித்த்யாசத்தில் இரண்டு முட்டைகள் வைக்கும்.முதலில் வெளிவரும் குஞ்சு முட்டையில் இருக்கும் குஞ்சை தின்று விடும்.முட்டையை ஒரெ கொத்து கொத்தி,உள்ளிருக்கும் குஞ்சு தலையில் ஒரு அடி.அவ்வளவுதான்.குஞ்சு காலி.பிறகு ஜாலியாக சாப்பிட வேண்டியதுதான்.

கான்னிபாலிசம் இல்லாவிட்டால் பல உயிரினங்கள் அழிந்துவிடும்.நாம் பல ராஜாக்கள் தம் தம்பிகளை கொன்று விட்டு அரியனை ஏறிய கதையை படித்திருக்கிறோம் அல்லவா?

சிப்லிசைட்(siblicide) எனப்படும் இன்னொரு சோதரக்கொலை முறையும் விலங்குகளிடையே இருக்கிறது.இதில் சாப்பிடுவதற்கெல்லாம் கொலை நடப்பதில்லை.உணவுக்கு,இருக்குமிடத்துக்கு போட்டி வரும்போது குட்டிகள் கொலை செய்யப்படும்.

கறுப்பு நிற கொக்கு தன் உடன்பிறப்பின் தலையை அப்படியே விழுங்கி மூச்சுத்திணற வைத்து கொல்லும்.சாப்பிடுவதற்கெல்லாம் கிடையாது,கொலை செய்ய அது ஒரு வழி.அவ்வளவுதான்.

டால்பின்கள் செய்வது தான் காமடி(கொலை எல்லாம் காமடியா என கேட்கக்கூடாது).பார்ப்பாய்ஸ் என்ற இன மீனின் குட்டிகளை சகட்டுமேனிக்கு தாக்கிக் கொல்லும்.சாப்பிடுவதற்கு அல்ல.பெருசுகளையும் தாக்காது,குட்டிகளை மட்டுமே தாக்கும்.

இன்னொரு இன மீனின் குட்டிகளை மட்டும் ஏன் தாக்குகிறது என பார்த்தால் பயிற்சி எடுப்பதற்காம்.டால்பின் குட்டிகளும் பார்பாய்ஸ் குட்டிகளும் கிட்டத்தட்ட ஒரே சைஸ் இருக்கும்.தன் குட்டிகளை கொல்வதற்கு முன் பார்பாய்ஸ் குட்டிகளை கொன்று பயிற்சி எடுக்குமாம் டால்பின்.தன் குட்டிகளை ஏன் கொல்ல வேண்டும்?குட்டியோடு இருக்கும் வரை அம்மா டால்பின்,அப்பா டால்பினை பக்கத்தில் விடாதாம்.குட்டியை கொன்றுவிட்டால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடுமாம்.

எது எப்படியோ, என்னை கொல்லாமல் விட்ட என் உடன்பிறப்புக்கு என் நன்றி.

Courtesy:National wild life federation

Series Navigation

செல்வன்

செல்வன்