இவர்கள் அழிக்கப்படவேண்டும்

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

ஹமீது ஜா·பர்.


1400 ஆண்டுகளுக்கு முன் அரேபியாவின் பாலைப் பிரதேசத்தில் கொள்கை இல்லாமல், நாகரீகமில்லாமல், பண்பாடில்லாமல், கல்வி அறிவு இல்லாமல், ஒற்றுமை இல்லாமல் சிறுச் சிறு குழுக்களாக தான்தோன்றித்தனமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த அறிவீனர்களை முஹம்மது நபி அவர்கள் எல்லோரையும் ஒன்றுபடுத்தி, நாகரீகத்தை சொல்லிக்கொடுத்து, பண்பாட்டைக் கற்றுக்கொடுத்து, வாழ்க்கை முறையை வகுத்துக்கொடுத்து மனிதராக்கினார்கள். அவர்கள் செய்த புரட்சி அந்த மக்களை மட்டுமல்ல, அரபு நாட்டை மட்டுமல்ல, உலக மக்களையே மாற்றி அமைத்து விட்டது.

அவர்கள் காட்டிய இஸ்லாம் அன்பு, சாந்தி, சமாதானம் இவைகளை உள்ளடக்கி சத்தியத்தைப் போதித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் நாங்களும் முஸ்லிம்தான் நாங்கள் இருப்பதும் இஸ்லாம்தான் என்று சொல்லிக்கொண்டு இன்னும் காட்டு மிராண்டிகளாக, மிருகங்களைவிட கேவலமானவர்களாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் தாலிபான், தொய்பா, ஜெய்ஷே போன்றவர்கள்.

இவர்களெல்லாம் இஸ்லாமியர்களா? இல்லை, இல்லை இவர்கள் இஸ்லாத்தைக் குழி தோண்டி புதைக்க வந்திருக்கும் பிணந்திண்ணி கழுகுகள். இவர்களால் சமுதாயத்திற்கு கேடு, நாட்டிற்கு கேடு, உலகத்திற்கே கேடு. இத்தகையவர்களையும் இவர்களின் அமைப்புகளையும் வேருடன் அழிக்கவேண்டும்.

உன்னுடைய நாட்டின் மேம்பாட்டுக்கும் உன் மக்களின் உயர்வுக்கும் முன்னேற்றத்திற்கும் உதவ வந்த அப்பாவி ஊழியர்களை ஊக்குவிக்க வேண்டாம்; உதவ வேண்டாம்; ஒன்றும் செய்யாமலாவது இருந்தாலென்ன? எங்கள் சகோதரர்களின் உயிரை கொடூரமாக குடிப்பதால் உனக்கு என்ன லாபம் கிடைத்து விட்டது. உனக்கு மனைவி கிடையாதா? மக்கள் கிடையாதா? தாய் கிடையாதா? தந்தை கிடையாதா? சகோதரன் கிடையாதா? சகோதரி கிடையாதா?

இஸ்லாமியப் பெயரை வைத்துக்கொண்டிருக்கும் ஈனங்கெட்டவர்களே!, உஹது போரில் உயிரைத் தியாகம் செய்த தன் சிறிய தந்தை ஹம்ஜா அவர்களின் உடலை தேடி எடுத்து கீறிப்பிளந்து ஈரலை கடித்துத் துப்பிய ஹித்தாவையே மன்னித்தவர்களாயிற்றே நபிகள் பெருமான். அவர்கள் காட்டியப் பாதையா இது? அவர்கள் இப்படியா சொல்லித்தந்தார்கள்? உள்ளம் குமுறுகிறது. மா பாவிகளே! அவர்களையே காலில் போட்டு மிதிக்கிறீர்களே.

உங்களுக்கு தண்டனை கொடுத்துவிடலாம், ஆனால் உங்களை வளர்த்துவிட்டார்களே அவர்களை என்ன செய்வது? கம்யூனிஸ்ட்களின் ஆதரவுடன் நஜிபுல்லா ஆட்சி நடந்தபோது அதைப் பொருக்கமுடியாமல் தாலிபானை வளர்த்தது உலகப் போலிஸ், அதற்கு துணைபோனது பக்கத்து வீட்டுக்காரன்; ஈரானில் கொமெனி ஆட்சி நடந்தபோது அதைப் பொருக்கமுடியாத போலிஸ் சத்தாமை வளர்த்தது. கிடா மார்பில் பாய்ந்தபோதுதான் அறிவு வந்தது. அதை பார்த்துக்கொண்டு எப்போதும் ஜால்ரா போடும் நமது பக்கத்து வீட்டுக்காரன் தொய்பாக்களை வளர்த்து காஷ்மீரில் தொல்லைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. சுதந்திரம் கிடைத்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் தன்னிறைவு பெற வக்கில்லை, ஆனால் தூண்டிவிட்டு ஜாடையாக இருக்கமட்டும் தெரியும். உங்களுடைய அரசியல் சூதாட்டத்திற்கு பலியாவது அப்பாவிகளான நாங்கள். என்ன உலகம்? என்ன மனிதர்கள்? ஆனால் ஒன்று வினை விதைத்தவன் திணை அறுக்கமுடியாது; ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் தண்டனை வந்தே தீரும்.

ஹமீது ஜா·பர்.
maricar@eim.ae

Series Navigation