மலர் மன்னன்
இளந் தலைமுறையினர் எவ்விதப் பிரமைகளுக்கும் ஆளாகாமல், பாரபட்சமின்றிக் கவனமாக மதிப்பீடு செய்வதில் கண்டிப்பாக இருக்கிறார்கள் என்பது அண்ணாவைப் பற்றிய எனது கட்டுகரைகளைப் படித்துவிட்டு புதிய மாதவி தெரிவித்த கருத்துகளிலிருந்து நிரூபணமாகிறது. இது மனதுக்கு மிகவும் நிறைவு தருகிற விஷயம். முந்தைய தலைமுறையினருக்குத் தங்கள் அரசியல் தலைவர்கள் மீது இருந்த கண்மூடித்தனமான
நம்பிக்கையோ, பலவீனமோ இன்றைய தலைமுறையினருக்கு இல்லாதது மகிழ்ச்சி தரும் முன்னேற்றம்.
நான் அண்ணாவின் வழக்குரைஞன் அல்ல. அவரது கட்சிக்காரனும் அல்ல. அவரை ஒரு தலைவர் என்றோ, வழிகாட்டி, சிறந்த ஆட்சியாளர் என்றெல்லாமோ நான் சிலாகிக்கவில்லை. அரசியல் களத்தில் இறங்கிவிட்டதால் விருப்பமின்றியே அவர் பலவற்றிற்குத் தலையசைக்க வேண்டி வந்ததோடு வெளியில் அதை நியாயப்படுத்திப் பேசவும் வேண்டியிருந்தது என்பதை மட்டும் அறிவேன்.
தி.மு.க. வில் முறைகேடுகள் 1959 லேயே தொடங்கிவிட்டன. சென்னை மாநகராட்சிக்கு 1959ல் நடந்த தேர்தலில் தி.மு.க. மிகப் பெரும்பான்மையான வட்டங்களில் வெற்றிபெற்ற போதிலும் மேயர் பதவியைக் கைப்பற்ற அது போதுமானதாக இல்லை. அரசியலில் ஓசைப்படாமல் நினைத்ததைச் சாதிக்கும் சாதுரியம் மிக்க காமராஜர் எதிரே மிக வலிமையுடன் காலூன்றி நின்றிருந்த நேரம். தி.மு.க வின் முனுசாமி மேயர் நாற்காலியில் அமர இயலுமா அன்றி கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமா என்று தவித்
திருந்த நேரம்.
அந்த நேரத்தில் கட்சி பயன் பெறுவதற்காக தி.மு.க.வில் முதன் முதலாக முறைகேட்டைத் தொடங்கி வைத்தார், கருணாநிதி. சின்னக் கருப்பன் பாஷையில் சொல்வதானால் தத்துவ மேதை கவுண்டமணி ‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ‘ என்று திருவாய் மலர்ந்தருளுவது மாதிரி ‘அரசியலில் இதெல்லாம் சகஜம் அண்ணா ‘ என்று சொல்லி, அவரையும் அந்த முறைகேட்டிற்கு இணங்க வைத்தார். தி.மு.க.வின் முனுசாமியை மேயராகத் தேர்ந்தெடுக்க இரு சுயேச்சை உறுப்பினர்கள் தி.மு.க. உறுப்பினர்களுடன் சேர்ந்து வாக்களித்தனர்.
‘காட்ட வேண்டியதைக் காட்டிப் பெற வேண்டியதைப் பெற்றோம் ‘ என்று அண்ணா பிறகு அதற்கு நியாயம் கற்பிக்க வேண்டியதாயிற்று.
அச்வத்தாமா ஹத: குஞ்சரஹ: என்று பாண்டவர்களின் அண்ணா தருமபுத்திரன், மாய்க்க வியலாத துரோணரை வீழ்த்துவதற்காக அவருடைய குமாரன் அச்வதாமா வதம் செய்யப்பட்டான் என்பதை உரக்கச் சொல்லிவிட்டு, ‘யானை ‘ என்று தாழ்ந்த குரலில் சொல்லித் தன்னைத் திருப்தி செய்துகொண்டது போலத்தான் இதுவும். பாண்டவர்களின் அண்ணாவுக்குப் பகடையில் பலவீனம் என்றால் தி.மு.க.வின் அண்ணாவுக்குச் சீட்டாட்டத்தில் பிரியம்!
இன்று போய் நாளை வா என்று நிராயுதபாணியாய் நின்ற ராவணனை ராமன் கொல்லாது அனுப்பியது ஒரு யுகம். கூசமல் பொய்யுரைத்து மவீரரையும் வெற்றி கொண்டது இன்னொரு யுகம்.
ஆனால் மிகவும் கூனிக் குறுகி, வெட்கித்தான் அண்ணா அந்த முறைகேட்டிற்கு ஒப்புக்கொண்டார். என்னவானால் என்ன, ஒப்புக்கொண்டுவிட்டார். தி.மு.க.விற்குப் பதவி கிட்டாவிட்டாலும் பரவாயில்லை, முறைகேட்டிற்கு உடன்பட மாட்டேன் என்று அவர் சொல்லியிருக்க வேண்டும். சொல்லவில்லை என்பதைவிட, சொல்லவிடவில்லை என்பதுதான் சரியாக இருக்கும். கழகத்தின் நலனுக்காக எதுவாயினும் செய்ய வேன்டுமானால் கருணாநிதிதான் அதற்குத் தோதானவர் என்கிற நிச்சயம் அப்போதே கழகத்தவர் மத்தியில் வேரூன்றத் தொடங்கிவிட்டது. கழகத்தவர் ஏறி நின்றுகொள்வதற்கான பீடமாக மட்டுமே அண்ணா இருப்பார் என்பதற்கான சமிக்ஞை அன்றே ஆரம்பித்துவிட்டது. அந்தப் பீடம் வலுவுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக மேலும் மேலும் அண்ணாவைப் பலவாறு போற்றி, தென்னாட்டு காந்தி என்றுகூடச் சொல்லத் தொடங்கிவிட்டனர்!
தி.மு.க. வினர் மாநகராட்சி நிர்வாகத்திலேயே தமது சபலத்தைக் காட்டத் தொடங்கி விட்டனர். அண்ணாவால் அதைத் தடுக்க இயலவில்லை. அவரால் தம்பிமாரிடம் கண்டிப்பாக நடந்துகொள்ள முடியவில்லை. ஹ
தி.மு.க.வினர் ருசி கண்டுவிட்டதைக் குறிப்பிட, ‘சொல்லிப் பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை ‘ என்று கண்ணதாசன் சொல்ல ஆரம்பித்தது அப்போதுதான்.
ஒரு நல்ல மனிதரால் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்றுதான் இதனைப் பார்க்கிறேன். அண்ணாவின் கண்டிப்பாக இருக்க முடியாத மென்மையான இயல்பை அவருடைய தம்பிமார் நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
அரசியல் என்று வந்துவிட்ட பிறகு ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடாமல் இருக்க இயலுமாஹ பிரிட்டிஷ் மரபில் பாராளுமன்ற சபா நாயகரை எதிர்ர்து வேட்பாளரை நிறுத்தும் வழக்கமில்லை. இந்த மரபை நாமும் கடைப்பிடிக்கலாம் என்று அண்ணா ஒருமுறை யோசனை கூறியதுண்டு. காமராஜர் சட்டமன்றத் தேர்தலில் தோற்றபின் நாடாளுமன்றத் திற்குப் போட்டியிட்டார், மிகவும் பத்திரமான நாகர்கோவில் தொகுதியிலிருந்து. அவரை எதிர்த்து சுதந்தரா கட்சி வேட்பாளராக டக்டர் மத்தியாஸ் நிறுத்தப்பட்டார். காமராஜரை எதிர்த்து தி.மு.க. மும்முரமாகப் பிரசாரம் செய்யவேண்டும் எனக் கருணாநிதி வற்புறுத்திய போதிலும் அண்ணா அதற்கு இணங்கவில்லை. இருப்பினும் கருணாநிதி உடம்பு சரியில்லாத அண்ணாவைக் காமரா முன் நிறுத்திப் பேசவைத்து, தொகுதி முழுவதும் அதனைத் திரையிடச் செய்தார்.
நான் மார்க்சியப் பொருளாதாரத்தையும் சந்தைப் பொருளாதாரத்தையும் என் அறிவுக்கு எட்டியவரை ஆராய்ந்து உண்மையான, துரிதமான வளர்ச்சிக்கும் அனைவருக்குமான வாய்ப்பிற்கும் சந்தைப் பொருளாதாரமே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தவன். அதில் சில மாற்றங்களையும் உத்தரவாதங்களையும் செய்தால் போதுமானது என்பது என் கருத்து. ஆனால் இதுபற்றியெல்லாம் இளைமைப் பருவத்திற்கே உரிய ஆர்வத்துடன் நான்
பேச்செடுக்கும்போதெல்லாம் அண்ணா அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டாது எனக்கு வியப்பாகவும் ஏமாற்றமுமாகவே இருக்கும். அண்ணாவுக்குப் பொருளாதாரப் பார்வை இல்லை என்பதை நான் முன்னரே பதிவு செய்துள்ளேன்.
ஆனால் இந்தப் படியரிசித் திட்டம் அண்ணாவுக்குப் பொருளாதாரப் பார்வை இல்லாமல் போனதால் அல்ல. கடலூரில்தான் என்று நினைக்கிறேன், 1967 தேர்தல் மிகவும் சூடுபிடித்த நிலையில், ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அண்னா, நமது நாடு அடிப்படையில் ஒரு விவசாய நாடு என்பதை நினைவு கூர்ந்து, வேளாண்மையில் சரியான திட்டமிடுதலும், உற்பத்திப் பொருள் நுகர்வோரைச் சென்றடைவதில் முறையான நெறிப்படுத்துதலும் இருந்தால் ரூபாய்க்கு ஒரு படி என்ன, மூன்று படி அரிசி கூடப் போட முடியும் எனக் கூறினார். மறுநாள் கருணாநிதியின் முரசொலி நாளிதழ், ‘நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் ரூபாய்க்கு மூன்று படி போடுவதாக ‘ அண்ணா உறுதி அளித்தார் என்பதுபோல் செய்திவெளியிட்டது. தேர்தல்காலமாதலால் அண்ணாவும் அதற்கு இசையப் பேசவேண்டியதாயிற்று.
தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று அண்ணா முதல்வரானதும் தி.மு.க.விலேயே நான் மிகவும் நெருங்கிப் பழகிய மதியழகன் உணவு அமைச்சரானார். என் நண்பர்
கா. திரவியம் ஐ ஏ எஸ் (பிற்காலத்தில் தலைமைச் செயலாளராகி, நான் தொடங்கிய ‘கால் ‘ இதழின் சந்தாதாரராகவும் இருந்தவர்; அகால மரணமடைந்தவர் ) உணவுத் துறைச் செயலராக இருந்தார். திரவியம் இளைஞர் காங்கிரசில் தீவிரமாக இருந்தவர் என்பது அனைவருக்குமே தெரியும். அதற்காக அவரிடம் அண்ணாவோ மதியழகனோ நம்பிக்கையின்றி நடக்கவில்லை. ஆனால் தேர்தலின்போது சொன்ன பிரகாரம் ரூபாய்க்கு மூன்று படி போட்டாக வேண்டும்; அதற்கு ஏதாவது திட்டமிட்டேயாக வேண்டும் என்று அவரை மிகவும் படுத்தியெடுத்துவிட்டார்கள்! இவர்கள் பாட்டுக்குத் தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லிவிட்டு என்னைப் பாடாய்ப் படுத்துகிறார்களே என்று சலித்துக் கொள்வார், திரவியம்.
ரூபாய்க்கு மூன்று படியெல்லாம் நடக்கிற காரியம் அல்ல, வேண்டுமானால் ரூபாய்க்கு ஒரு படி போடலாம்; அதுவும் முதல் கட்டமாக சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் நியாயவிலைக் கடைகள் மூலமாக மட்டும் போடலாம் என்று திட்டம் வகுத்துக் கொடுத்தார், திரவியம். இவர்களும், மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம் என்று தங்கள் கோஷத்தை மாற்றிக் கொண்டார்கள்!
அரசியல் என்றாலே சூதும் வாதும் கூசாமல் காலை வாருதலும்தான் என்றாகிவிட்டதால் எல்லாக் கட்சியினருமே இவ்வாறெல்லாந்தான் நடந்தாக வேண்டும் என்றாகிவிட்டது. மக்கள் நலனில் ஈடுபாடும், பொறுப்புணர்வும் கட்சிகளுக்கு இருந்தால் அதுவே பெரிய விஷயம், அவை எந்த வழியில் பதவியைக் கைப்பற்றினாலும் பாதகமில்லை என்றாகிப் போனது.
திரையுலக நட்சதிரங்களை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டு அதன் வாயிலாக ஆதரவு திரட்டும் வழக்கத்தை காங்கிரஸ் தான் தொடங்கி வைத்தது. தேர்தல் பிரசாரத்துக்காக சுந்தராம்பாள் போன்றவர்கள் காங்கிரஸ் மேடை ஏறியதுண்டு. பிற்காலத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரசாரத் திரைப் படத்தில் ஜெமினி கணேசன் (ஜெமினிதான்), பத்மினி ஆகியோரைத் தலைகாட்ட வைத்தார், காமராஜர். தி.மு.க. இந்த நடைமுறையை அபிவிருத்தி செய்ததோடு, நட்சத்திரங்களைப் பிரசாரத்திற்கு மட்டும் பயன் படுத்திக் கொண்டுவிட்டு அதன் பிறகு ஒதுக்கிவிடலாகாது எனக் கருதி அவர்களைத் தொடர்ந்து கட்சிப்பணிகளில் ஈடுபடுத்தியது. எம் ஜி ஆர் இந்த வாய்ப்பைத் தமக்கு நன்கு பயன் படுத்திக் கொண்டார்.
எம் ஜி ஆருக்கு நிஜமாகவே ஈகைக் குணமும் இரக்க குணமும் இருந்தன. அவர் வீட்டில் அவர் உண்ணும் உணவுதான் அனைவருக்குமே அளிக்கப்படும். பணியாட்களை அவர் துச்சமாகக் கருதியதில்லை. எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கி ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை, தியகராய நகர் ஆர்க்காடு தெரு ஆகிய இடங்களில் அவருக்குச் சொந்தமான இல்லங்களில் மதிய உணவு வேளையில் அவர் எங்கு இருக்கிறாரோ, அங்கு 20, 30 பேர் சாப்பிடப் போதுமான அசைவ, சைவ உணவு அவரது ராமாவரம் இல்லத்திலிருந்து வந்து சேரும். உணவு வேளையில் எம்ஜிஆருடனிருப்பவர்களுக்கெல்லாம் அது பரிமாறப்படும். இதைச் சாப்பிடுவதற்காகவே அவரது கட்சி முன்னணியினர் சிலர் உணவு நேரம் பார்த்துக் கூச்சமில்லாமல் வந்து சாப்பிட்டுவிட்டுப் போவார்கள். இப்படி வருபவர்களைக் கழுகுகள் என்போம், திருக்கழுக் குன்றத்தில் முன்பு குறிப்பிட்ட நேரத்தில் வந்து சோற்று உருண்டைகளை உண்டுவிட்டுச் சென்றுகொண்டிருந்ததாகச் சொல்லப்பட்ட கழுகுகளை நினைவூட்டும் விதமாக.
எம்ஜிஆர் முதல்வரான பிறகு அவர் தலைமைச் செயலகத்திற்கு வந்து மதிய வேளையிலும் இருக்கின்ற சமயங்களிலும் இருவித உணவு வரும், சுமார் நான்கடி உயர கேரியர்களில். முதல்வர் அலுவலக ஊழியர் அனைவருக்குமே பரிமாறப்படுவதற்காக.
சிவாஜி கணேசனோடும் எனக்கு அறிமுகம் உண்டு. இறந்துவிட்டவர்களைப் பற்றி அவர்கள் மீதான மரியாதை குறையுமாறு எதுவும் சொல்வது இங்கிதமல்ல என்று ஒரு சம்பிரதாயம் நம்மிடையே உள்ளது. ஆனால் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கும் இதே விதியைக் கடைப்பிடித்தோமானால் எவரது இயல்பையும், செயலையும் மதிப்பீடு செய்ய முடியாது. அரசியல்வாதிகள் மட்டுமின்றி, எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அதிகாரிகள், ஆகியேருக்கும் இந்த விதியிலிருந்து விலக்கு அளிப்பதுதான் நல்லது.
எம் ஜி ஆர் வீட்டில் என்ன உண்கிறாரோ அதையேதான் அவர் வீட்டுக் கடை னிலை ஊழியரும் உண்பார் என்று சொன்னேன். சிவாஜி கணேசன் வீட்டில் ? அது பற்றி எனக்கு நிச்சயமாகத் தெரியாது என்றாலும், உணவு சம்பந்தமான அவரது மனப்போக்கு வெளிப்பட்ட ஒரு சம்பவத்தை என்னால் கூறமுடியும்.
கணேசனும் எப்போதாவது என்னை அழைப்பார், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஓய்வு கிடைத்தால், எனது ஞாபகமும் வந்தால்.
தி.மு.க. வில் முல்லை சத்தி வட ஆர்க்காடு மாவட்டச் செயலாளராகவே இருந்தவர். ஆனால் அரசியல் அவருக்குச் சரிப்படவில்லை. அண்ணா, கருணாநிதி இருவருக்குமே நெருக்கமானவர். வாணியம்பாடி அருகே முல்லைக் கொம்பை என்ற ஊர்க்காரர். இஸ்லாமியா கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். சிறுகதைகள் எழுதுவார். அவரது அண்ணன் முல்லை வடிவேலு தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். சத்தி என்கிற சத்தியமூர்த்தி பழகுவதற்கு மிகவும் இனியவர். தி.மு.க. வினர் என்றால் இப்படித்தான் தோற்றமளிப்பார் என்கிற உருவகத்திற்கு நேர்மாறானவர். இடைவிடாமல் புகைபிடித்து அனாவசியமாக உடம்பைக் கெடுத்துக்கொண்டு அகால மரணமடை ந்தார்.
சத்திக்கு சினிமாக்காரர்கள் பலரும் பழக்கம். அப்படித்தான் சிவாஜி கணேசனும் பழக்கம். சத்தியும் நல்ல மனிதர். அரசியல் ஒத்துக் கொள்ளவில்லை என்றதுமே புரிந்திருக்குமே! சத்தி எனக்கும் நல்ல பழக்கம். ஆயிரம் விளக்கில் முல்லை அச்சகம் என்று வைத்திருந்தார். தினமும் மாலையில் முரசொலி மாறன் (அந்த நாட்களில் மிகவும் அழகாக இருப்பார்!), மதியழகன் எனப் பலரும் வந்து பேசிக்கொண்டிருப்பார்கள். சத்தியுடன் பழகி, சில சமயம் அவருடன் படப்பிடிப்புகளுக்குப் போய்த்தான் சிவாஜி கணேசன் எனக்கும் பழக்கமானார். சத்தி ஈஸ் பெஸ்ட் பிரண்ட் ஆப் மைன் என்று முதன் முதலில் எனக்கு அறிமுகமானபோது சொன்னார், கணேசன். ஆகவே என்னையும் ஒரு நண்பனைப் போலவே நடத்தினார்.
ஒருநாள் மாலை, சிவாஜி கணேசன் அழைத்ததால் அவர் வீடு சென்று பேசிக்கொண்டிருந்தேன். ஊரும் உலகமும் எப்படியிருக்கின்றன என்று கொஞ்ச நேரம் ஆராய்ச்சி நடந்தது. மாதம் மும்மாரி பொழிகிறதா என்கிற பாணியில் விசாரணை செய்துகொண்டிருந்தார். நாங்கள் வீட்டின் பின்புறம், புல்வெளியில் அமர்ந்திருந்தோம். என் பார்வைக்குத் தொலைவில் சுவர் ஓரமாகச் சில பணியாட்கள் தூக்கு வாளியுடன் செல்வது தென்பட்டது. ஆர்வத்துடன் அவர்களையே பார்க்கலானேன். ஒரு பணியாளர் தல்யில் குந்தி உட்கார்ந்து மண்ணைத் தோண்ட ஆரம்பித்தார். மற்றவர்கள் அவரைச் சுற்றி நின்றனர், தூக்கு வாளிகளைத் தரையில் வைத்துவிட்டு.
நான் அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்த சிவாஜி கணேசன், ‘என்ன பாக்கறீங்க மலர் ‘ என்றார்.
‘அங்க என்ன நடக்குது ? ‘ என்று ஆர்வத்தோடு கேட்டேன்.
‘ஒண்ணுமில்லே, கறி, சிக்கன் மீன் எல்லாம் மீந்துபோயிருக்கும், அதான் மன்ணுக்குள்ள பொதைக்கிறாங்களாட்டிருக்கு ‘ என்று சர்வ சாதாரணமாகக் கூறினார் கணேசன்.
‘மண்னுக்குள்ள பொதைக்கிறாங்களா ? உங்க வீட்டிலேதான் வேலையாளுங்களே ஏராளமா இருப்பாங்களே! அவங்களாவது எடுத்துக்கிடுப்போகலாமில்லயா ? ‘ என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
சிவாஜி கணேசன் ‘கூடாது ‘ என்பது போல் தலையை அப்படியும் இப்படியுமாக அசைத்தார்.
அதன் பிறகு அவர் என்னைச் சில முறை அழைத்தார், பேசிக் கொண்டிருக்க. ஆனால் நான் ஏதேனும் சாக்குச் சொல்லி அவர் வீடு செல்வதைத் தவிர்த்துவிடுவேன்.
அந்த மாலைப் பொழுதில் சிவாஜி கணேசன் வீட்டுப் பணியாட்கள் மீந்துபோன உணவை மண்ணில் புதைத்த சம்பவம் கண்ட பிறகு சிவாஜி கணேசனை நான் சந்திக்கவேயில்லை. சந்திக்க விரும்பவில்லை என்று சொல்வதுதான் பொருத்தம்.
ஆக, எம்ஜிஆர் தமது ஈகையினால் மட்டுமின்றி, சக மனிதனை மனிதனாகக் காணும் பண்பும் பெற்றிருந்தமையால் மக்களின் ஆதரவைப் பெறுவது இயற்கையாகவே அவருக்கு வாய்த்தது. அதனை அவர் நன்கு திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொண்டார். உண்மையைச் சொல்வதானால், திராவிட இயக்கப் பாரம்பரியம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அதெல்லாம் அவரிடம் கிடையாது. எந்த ஜாதியாரிடமும் துவேஷமும் அவருக்கு இல்லை. அண்ணாவின்பால் ஈர்க்கப்பட்டு தி.மு.க.வுக்கு வந்த அவர், தி.மு.க தொண்டர்களைத் தமது ரசிகப் பெருமக்களாக்கிக் கொள்வதன் மூலம் அரசியலில் ஒரு பெரும் சக்தியாக வளரமுடியுமெனக் கண்டுகொண்டு, அதற்கான முயற்சியெடுத்து, அதில் வெற்றியும் பெற்றார். இதில் அண்ணாவின் பங்கு ஏதும் இருப்பதாக என்னால் கருத இயலவில்லை.
மக்களுக்குத் தமது விமோசனத்திற்காக எப்போதும் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் தேவைப்படுகிறது. தங்களைப்பற்றிக் கவலைப்படவும், கண்ணீரைத் துடைத்துவிடவும் யாராவது ஒருவர் அவர்களுக்கு வேண்டும். முன்பெல்லாம் அரசியல் தலைவர்கள் மீது அவர்களுக்கு இவ்வாறான உணர்வு இருந்தது. தலைவர்களும் பொதுவாக மக்கள் நலன் குறித்துக் கவலைப் படுபவர்களாக இருந்தனர். அதன் காரணமாகவே மக்களைக் கவர்வோராகவும் இருந்தனர். அத்தகைய தலைவர்களையடுத்து வந்த தலைவர்கள் அரசியலைத் தமது ஆதாயத்திற்கான தொழிலாகக் கருதத் தொடங்கியதும் மக்களுக்கு வேறு நம்பிக்கை நட்சத்திரங்களின் அவசியம் ஏற்பட்டது. திரையில் மக்கள் நலனுக்காக சாகசம் செய்பவர்களாகத் தோன்றி நன்கு அறிமுகமான முகங்களும், கடவுள் பெயர் சொல்லி வியாபாரம் செய்யும் சாமியார்களும் இயற்கையாகவே அவர்களுக்குப் புகலிடமாகிவிட்டார்கள். இதனைப் புரிந்துகொண்ட நடிகர்கள் சிலருக்கு அதிகார வாய்ப்புத் தரும் அரசியலில் நாட்டமேற்பட்டுவிட்டது. இது நமது அரசியலின் வீழ்ச்சி!
ஈ.வே.ரா. வின் பார்ப்பனர் பற்றிய நிலைப்பாடு பற்றி விடுதலையில் அவர் ஒருமுறை பேசியதாக வந்த செய்தியை என் மகள் மாதவி (அவருக்கு எப்படியோ, எனக்கு மகள்தான்) குறிப்பிடுகிறார், ஈ.வே.ரா. பார்ப்பனர் விரோதியல்ல என நிறுவுவதற்காக.
மேடை தவறாமல் ஒரு குறிப்பிட்ட ஜாதியாரை இடைவிடாது தாறுமாறாகப் பேசிவந்தவர், ஈ.வே.ரா. தமது தோழர்கள் கத்தி வைத்துக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் பேசியவர். அவரது பேச்சால் உணர்ச்சிவசப்பட்ட அவரது தொண்டர்கள், பூணூல் அறுப்பதும் குடுமி அறுப்பதுமாகத் தம் துவேஷத்தை வெளிப்படுத்தியதுண்டு. தி.க.வும், தி.மு.க வும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகத் தூத்துக்குடியருகே அக்ரஹாரத்தில் அத்துமீறி நடந்தது முண்டு. இவ்வளவும் நடக்கிறபோது அவர் விரும்பியிருந்தால் தமது பிரசாரத்தால் விளையும் விபரீதம் உணர்ந்து தம் துவேஷப் பிரசாரத்தை நிறுத்தியிருக்கலாம். எனவே குறிப்பிட்ட ஜாதியார் மீது தமக்கு துவேஷமில்லை என்பதும் அவர்களின் ஆதரவு இருப்பின் தாம் எவ்வளவோ சாதித்திருக்க முடியும் என்பதும் அவரிடமிருந்து வெளிப்பட்ட வெறும் சம்பிரதாய வார்த்தைகளாகவே அமையும்.
ஈ.வே.ரா. எந்தச் சீர்திருத்தத்திற்காவது அவர் ஏசிப்பேசி வந்த ஜாதியாருக்கு அழைப்பு விடுத்ததாகத் தெரியவில்லை. ‘பிராமணாள் ஹோட்டல் ‘ என்று எழுதப்படுவதை எதிர்த்து எச்சரிக்கை விடுத்தார். அந்த ஜாதிப் பெயரைத் தார் கொண்டு அழித்தார். வேண்டுகோள் விடுத்தோ, அழைத்துப் பேசியோ சுமுகமாக அதைச் செய்திருக்கலாம். ஆனால் துவேஷம் வளர்ப்பதற்கான முயற்சியாகவே அதனைப் பயன் படுத்தினார்.
சென்னை திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையில் என் நண்பர் முரளி (இப்போது விநாயகர் முரளி!)யின் தகப்பனார் தம் மகன் பெயரால் நடத்திவந்த முரளி கபே யின் பெயர்ப் பலகையில் இருந்த பிராமணாள் என்ற சொல்லை ஈ.வே.ரா. தார் கொண்டு அழிப்பதைத் தினந்தோறும் சாயங்காலம் ஒரு திருவிழாவைப் போலவே நடத்தி முரளி கபேவுக்கு நல்ல விளம்பரம் தேடித் தந்தார்.
ஒரு தனியார் உடைமையில் அத்து மீறிக் கை வைப்பது என்ன நாகரிகம் ? வேண்டுகோள் அல்லாமல் வன்முறையாக இம்மாதிரியான செயல்களில் ஈதுபடுவது தவறான முன்மாதிரியை உருவாக்கிவிடும் எனச் சிந்திக்க வேண்டாமா ? இன்று மிகவும் விசித்திரமான பெயரைத் தமிழ்ப் பெயர் எனத் தமக்குச் சூட்டிக்கொண்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஆங்கிலப் பெயர்களை அழிக்கப் புறப்பட்டு, வணிகர்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைத்த பலகைகளையெல்லாம் பாழ்படுத்தியதற்கு முன்னோடி ஈ.வே.ரா. தான் அல்லவா ?
முரளியின் தகப்பனார் எதற்கும் அஞ்சாதவர். ஈ.வே.ரா.வே தினம் தினம் தம் தொண்டர் படை சூழ வந்து பரபரப்பு ஏற்படுத்தியும் மனிதர் அசையவில்லை. தி.க.வினர் தாக்கியபோது எதிர்த்தாக்குதலும் நடத்தினார். தினசரி இது பெரும் இடைஞ்சலாக இருப்பது அறிந்து காஞ்சி காம கோடி பீட பரமாச்சாரியார் சொன்னதன் பேரில்தான் அந்தச் சொல்லை எடுத்தார்.
ஆகவே ஈ.வே.ரா.வை ஏதோ பார்ப்பன துவேஷி அல்ல என்பதுபோல் விவரிப்பது சரியல்ல. ஊரான் வீட்டுச் சுவர்களில் எல்லாம் ‘பார்ப்பானே வெளியேறு ‘ என்று அவரது கட்சியினர் எழுதி வைத்ததை அவர் கண்டித்ததில்லை. பார்க்கப் போனால் பிறர் வீட்டுச் சுவர்களைத் தம் உடைமைபோல் பயன் படுத்தும் அநாகரிகத்தையே அவர் கண்டித்திருக்க வேண்டும். இந்த அத்துமீறலை ஆரம்பித்து வைத்ததே அவரது கட்சிதான். மற்றவர்களுக்கும் அது முன்மாதிரியாகிவிட்டது. முன்பெல்லாம் பீடி, புகையிலை, பொடி கம்பனிகள்தான் தங்கள் விளம்பரத்திற்கு வீட்டுச் சுவர்களைப் பயன்படுத்தி அசிங்கப் படுத்திக்கொண்டிருந்தன. அவற்றிடமிருந்து தி.க.வினர் ஊரான் வீட்டுச் சுவர்களைக் கையகப்படுத்திக் கொண்டார்கள். இதில் மற்ற கட்சியினர், இயக்கத்தவருக்கும் வழிகாட்டியானார்கள்.
காந்திஜி கொலை பற்றிய மாதவியின் கருத்தும் வியப்பூட்டுவதாகவே உள்ளது.
புஷ்ஷைக் கொலை செய்வதற்காக பின் லாடன் துப்பாக்கி ஏந்தி வெள்ளை மாளிகை தேடிப் போகவில்லை. மாறாகத் தமது சமயம் சார்ந்த சில இளைஞர்களுக்கு சமயவெறியூட்டி, மூளைச் சலவை செய்தும், குடும்பத்தாருக்கு நிதி உதவி செய்வதாக உத்தரவாதம் அளித்தும் அவர்களைத் தற்கொலைப் படையினராக்கி, பிரச்சினைக்குச் சம்பந்தமே இல்லாத உலக வர்த்தக நிறுவனத்தை விமானங்கள் மூலமாகத் தாக்கி அனாவசியமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கச் செய்ததும், தான் பத்திரமாகப் பதுங்கி இருந்துகொண்டு பிறரை ஏவிக் காரியமாற்றுவதும் கோட்ஸேயின் செயலுடன் ஒப்பிடத்தக்கவைதாமா ?
கோட்ஸே தம் கண்முன் தம் சமூகத்தாருக்கு காந்தியால் நேர்ந்துவரும் கொடுமைகளைப் பார்த்துப் பார்த்துக் கொதிப்பேறிப் போய் தாமாகவே ஒரு முடிவுக்கு வந்து காந்தியைக் கொலை செய்தார். எவரது தூண்டுதலும் அதற்குக் காரணமல்ல. காந்திஜியால் தொடர்ந்து இழப்புகளையும் துன்பங்களையும் அனுபவித்துவரும் ஹிந்து சமுதாயத்திற்கு விடிவு பிறக்க வேண்டும் என்ற ஆதங்கம் அவரை அச்செயலுக்குத் தூண்டியது. தாம் எடுத்த முடிவைத் தாமே செயல்படுத்தினார். தாமே அதற்குப் பொறுப்பாளியென ஒப்புக்கொண்டு சட்டம் அதன் கடமையைச் செய்ய ஒத்துழைத்தார். தாம் கொலை செய்யவில்லை என வாதாடவில்லை. திடாரென ஏற்பட்ட உணர்ச்சி வேகத்தில் கொலை செய்துவிட்டதாக வாதாடிக் குறைந்த பட்ச தண்டனைக்கு முயற்சி செய்யவில்லை.
தலித்துகளும் ஹிந்துக்களின் ஓர் அங்கமாக இருக்கையில் ஹிந்துக்களுக்கு காந்தியால் ஏற்பட்ட பாதிப்பு அவர்களுக்கும் உள்ளதுதானே! ஒரு தலித் அவரைக் கொலை செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று தலித்துகளை ஹிந்துக்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கும் மனப்பான்மை உருவானதற்கே ஈ.வே.ரா.தான் காரணம்.
மேலும் அந்தக் கால கட்டத்தில் பெரும்பாலான தலித்துகள் ஹரிஜனங்களாக, காந்திஜியின் பக்தர்களாகத்தான் இருந்தனர். தலித் என்ற பெயரே சமீபகாலமாகத்தான் பரவலாகத் தெரியத் தொடங்கியுள்ளது, அல்லவா ? ஏன், ஹிந்துக்களிலும் பெரும்பாலனவர்கள் காந்தி பக்தர்களாக இருந்தவர்கள்தானே!
காந்திஜி முகமதியர்களுக்குத்தான் மிகவும் பாதுகாப்பாக இருப்பவர் என்பது முகமதியர் அனைவருக்குமே தெரியும். ஹிந்துகளின் தாவாவே அதுதானே! இனி முகமதியர் மீது தனிக் கரிசனம் காட்டி ஹிந்துக்களின் நலனைப் பலியிடும் நிலை தொடராது என்ற எண்ணத்தை மக்களிடையே தோற்றுவிக்கவும் அதன் பயனாக முகமதியர் மீதான பகையுணர்வு மறைய வேண்டும் என்பதற்காகவும், ஹிந்து விரோத சக்திகளை ஹிந்து அமைப்புகள் மீது ஏவிவிடவும் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் செய்த ஏற்பாடுதான் அந்தச் சமயத்தில் காந்திஜியைக் கொலை செய்தது ஒரு ஹிந்து என்ற இடதவிடாத ஒலிபரப்பு.
காந்திஜி வெறும் ஊன்றுகோலைக் கையில் வைத்திருந்தபோதிலும், அரசாங்கத்தையே அதிரவைக்கும் பீரங்கியின் ஆற்றல் அதற்கு இருந்தது. கோட்ஸே அதனைச் சமாளிக்க ஒரு சாதாரணத் துப்பாக்கியுடன் காந்தியை எதிர்கொண்டார். தனிப்பட்ட விரோதம் எதுவும் அதற்குக் காரணமில்லை. எவராலும் அவர் தூண்டிவிடப்படவும் இல்லை. எனவேதான் ஒரு போர்க்கள நிலையை எடுத்துக்காட்டாகக் கூறினேன். மதிமுகம் என்றால் முகத்தில் கரியநிற சரும வியாதி எங்கே என்றா தேடுவது ?
- பெரியபுராணம் – 76 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE ‘S DAY )
- கடிதம்: மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2
- கடிதம்- ஆங்கிலம்
- ஹெச்.ஜி.ரசூல் அவர்கலின் “வஹாபிசம்—- ‘ கட்டுரை மற்றும் விளக்கம் குறித்து
- நீங்க எப்படிங்க ? கொஞ்சம் சொல்லுங்க
- புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா – கருத்தரங்கு
- Looking for Comedy in the Muslim World – திரைப்படம்
- தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள்
- மெட்டாபிக்சனின் ஆழ அகலங்கள்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 10. சேவை அமைப்புகள்
- விண்வெளி ஊர்திகள் கண்கண்ட செவ்வாய்க் கோளின் தளங்கள் [Rover Explorations on Planet Mars-2 (2006)]
- கவிதைகள்
- இப்போதாவது புரிகிறதா
- முற்றும் இழத்தல்
- கீதாஞ்சலி (61) ஏழையின் வரவேற்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)
- மனிதம்
- அய்யா வைகுண்டரும் அரவிந்தன் நீலகண்டரும்
- சொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி…
- மண்டைக்காடும் இந்து எழுச்சியும்
- பாலாற்றில் இனி கானல் நீர்தானா ?
- இளந்தலைமுறைக்குத் தலை வணக்கம்
- குருஜி கோல்வல்கர்: சில தகவல்கள்
- தர்கா பண்பாட்டு அரசியல்
- எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றறியேன் பராபரமே…
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்!
- ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து….!
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 8
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-9) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- விடுமுறையின் முதல் நாள்
- ப லா த் கா ர ம் ( வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் )