இல்லாத ஒன்று

This entry is part [part not set] of 24 in the series 20090226_Issue

ஹெச்.ஜி.ரசூல்



இருக்கையில் உட்கார்ந்த நிம்மதியில்
எனது பயணம் தொடர்ந்தது.
டிஎஸ் எஸ் கண்டக்டரிடம்
ஆறுரூபாய் கொடுத்து
டிக்கெட் ஒன்றை பெற்றுக் கொண்டேன்.
பால்பண்ணை நிறுத்தத்தில்
இரண்டு முதியவர்கள் ஏறினர்.
டிக்கெட் எனக் கத்தியவாறு
என்னை தாண்டிச் சென்ற
கண்டக்டரின் தோளைத் தட்டி நிறுத்தி
எடுத்த பணத்தை நீட்டி
டிக்கெட் ஒன்றை மீண்டும் வாங்கினேன்.
பார்வதிபுரம் நிறுத்தத்தில்
ஏழெட்டுபேர் நெருக்கியடித்து ஏறினர்.
தனது சீட்டில் உட்கார்ந்தவாறு
டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த
அதே கண்டக்டரிடம்
திரும்பவும் காசு கொடுத்து
ஒரு டிக்கெட் வாங்கினேன்.
சுங்கான்கடை நிறுத்தத்தில்
தோளில் பைகளும்
புத்தக கட்டுகளுமாய்
பெண்கள் கல்லூரி மாணவிகள்
படிக்கட்டில் நிறைந்து நின்றனர்.
முண்டியடித்து உடல் பிதுக்கி
டிக்கெட் கொடுத்துவிட்டு
திரும்பிவந்த கண்டக்டரிடம்
எனக்கும் ஒரு டிக்கெட்டை
மறுபடியும் வாங்கிக் கொண்டேன்.
ஒவ்வொருதடவை எடுத்த டிக்கெட்டும்
என்னிடம் இல்லாமல் போய்விடுகிறது.
ஊர்தண்டிய பிறகும்
இறங்காமல் போய்க் கொண்டிருக்கிறேன்.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்