இலை போட்டாச்சு ! 27 – மசால் வடை

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

பாரதி மகேந்திரன்



மசால் வடை – முதல் வகை

தேவை

கடலைப்பருப்பு – 500 கிராம்
உளுத்தம் பருப்பு – 50 கிராம்
பாசிப்பருப்பு – 50 கிராம்
வெங்காயம் – கால் கிலோ
மிளகாய் வற்றல் – 10
பச்சை மிளகாய் – 5 அல்லது தேவைப்படி
கறிவேப்பிலை – 4, 5 ஆர்க்குகள்
கொத்துமல்லித் தழை – 2, 3 மே.க.
கரம் மசாலாப் பொடி – 1 தே. க.
சோம்பு – 1 தே.க.
பெருங்காயப்பொடி – அரைத் தே.க.
நல்ல எண்ணெய் – தேவைப்படி
உப்பு – 3 தே.க. (அல்லது தேவைப்படி)

உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு ஆகிய இரண்டையும் ஒன்றாகக் களைந்து தண்ணீரில் ஊற வைக்கவும். கடலைப் பருப்பைக் களைந்து தனியாக ஊற வைக்கவும். வெங்காயத்தை உரித்துப் பொடியாக அரிந்து வைக்கவும். கடலைப் பருப்பு நன்கு ஊறியதும், மின் அம்மியில் காய்ந்த மிளகாயை முதலில் போட்டு அதன் மேல் கடலைப்பருப்பைப் போடவும். தண்ணீர் விடாமல் அல்லது மிகக் குறைந்த அளவுத் தண்ணீரை ஊற்றி உப்பப் போட்டுக் கரகரப்பாக அரைத்து வழித்து எடுது அத்துடன் ஊறவைத்துள்ள பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ஆகியவற்றைத் துளியும் நீரின்றி வடித்துக் கலக்கவும். பின் அரிந்த வெங்காயம், கரம் மசாலப் பொடி, சோம்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை, உப்பு, பெருங்காயம், பொடிப்பொடியாக அரிந்த பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசிறிக் கலக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் வடைகளைத் தட்டிப் போட்டு அடிக்கடி திருப்பிப் போட்டு அவை சிவந்ததும் எடுக்கவும். ஒரு கூரிய கரண்டிக் காம்ப்னாலோ அல்லது கத்தியாலோ வடைகளை இலேசாய்க் குத்தினால் உள்புறம் நன்றாகவும் விரைவாகவும் வேகும்.

மசால் வடை – இரண்டாம் வகை

முதல் வகை மசால்வடைக்குச் சொன்ன பொருள்களுடன் 100 கிராம் சோயா பீன்ஸ் (தனியாக ஊறவைத்தது. ஏனெனில் இது ஊற அதிக நேரம் எடுக்கும்.), 100 கிராம் துவரம்பருப்பு ஆகியவற்றையும் சேர்த்து அரைக்கலாம். இவ்வாறு அதிகப் படியாய்ச் சேர்க்கும் 200 கிராம் பருப்புகளுக்குத் தேவைப்படி உப்புப் போட மறக்க வேண்டாம்.

இரண்டு வடைகளுக்குமே முந்திரிப் பருப்பை இலேசாக வறுத்து மாவுடன் சேர்த்து வடை தட்டலாம்.


mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்