இலை போட்டாச்சு 38 – கோதுமை மோர்க்கூழ் (மோர்க்களி) /அரிசிமாவு மோர்க்கூழ் (மோர்க்களி)

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

பாரதி மகேந்திரன்


தேவை

கோதுமை மாவு – 500 கிராம்
நன்கு புளிக்கும் மோர் – 250 கிராம்
உப்பு – 2 தே.க. (அல்லது தேவைப்படி)
பெருங்காயம் – 1 தே.க.
பச்சை மிளகாய் – 5. 6 (அல்லது தேவைப்படி)
கறிவேப்பிலை – 4, 5 ஆர்க்குகள்
கொத்துமல்லித் தழை – 2, 3 மே.க.
கடுகு – அரை தே.க.
உளுத்தம்பருப்பு – 2 தே. க.
எண்ணெய் – 100 கிராம்

கோதுமை மாவைச் சுத்தப் படுத்திய பின், புளித்த மோரும் தேவையான அளவுக்குத் தண்ணீரும் கலந்த கலவையில் போட்டுக் கூழின் பதத்துக்குக் கட்டிகள் இல்லாமல் நன்றாய்க் கரைத்துக் கொள்ளவும்.

இரும்பு (அல்லது அலுமினிய) வாணலியில் எண்ணெய்யை ஊற்றி, அது காய்ந்ததும் கடுகைப்போட்டு, அது முக்கால் வாசி வெடித்த பின் உளுத்தம் பருப்பைப் போட்டு, அது சிவந்ததும் கிள்ளி வைத்துள்ள பச்சை மிளகாய், கறிவேப்பிலைத் தழைகளைப் போட்டு உடனேயே கரைத்து வைத்துள்ள கோதுமைக் கூழை கடாயில் இத் தாளிதத்துடன் கொட்டி உப்பையும் கலந்து, கை யெடுக்காமல் கிளறவும். மாவு கையில் ஒட்டாத அளவுக்கு நன்றாக வெந்து, களியைப் போல் கெட்டியாகும். பிறகு பெருங்காயத்தையும் கொத்துமல்லித் தழைகளையும் கலக்கவும். அதன் பின் அதை இறக்கி, சூடு ஆறியபின் சாப்பிடலாம். இதற்குச் சிலர் சர்க்கரையைத் தொட்டுக் கொள்ளுவார்கள். சிலர் சட்டினி போன்றவற்றைத் தொட்டுக்கொள்ளுவார்கள். அவரவர் விருப்பம்.

இதே முறையில் கோதுமை மாவுக்குப் பதிலாக அரிசி மாவைப் பயன் படுத்தி அரிசிமாவுக் கூழ் செய்யலாம். செய்முறையிலும் அளவுகளிலும் வேறுபாடு ஏதுமில்லை.

அரிசி மாவு பாதி, கோதுமை மாவு பாதி என்று கலந்தும் இதைத் தயாரிக்கலாம்.

பாரதி மகேந்திரன்


mahendranbhaarathi@yahoo.com

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்