இருளும் மருளும் நேச குமாரும் – சில வரிகள்!

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

பாபுஜி


இருளும் மருளும் இஸ்லாமும்” என்ற தலைப்பில் எனக்கு சில வரிகளை நேச குமார் என்ற பெயரில் உத்வேகத்தில் எழுதி வருகிற இஸ்லாமோஃபோபிக் நபர் கடந்த 19 அக்டோபர் அன்று எழுதியதை இன்று தான் பார்க்க முடிந்தது.

தனிப்பட்ட முறையில் நான் அவர் மீது விமர்சனம் செய்திருப்பதாகச் சொல்கிறார். நான் சொன்னது ‘இஸ்லாமோஃபோபிக் ‘ என்பதைத் தான். அதுகூட ஏளனமான தொனியில் இணைய முஸ்லிம் எழுத்தாளர்களை அவர் ‘இஸ்லாமிஸ்ட்’ என்று சொல்லிவருவதை உணர்த்தத் தான். இஸ்லாமிஸ்ட் என்ற வார்த்தை என்னளவில் கேவலமில்லை என்றாலும், நேச குமார் உபயோகிக்கிற தொனி எல்லோரும் அறிந்தது தானே!

ஆனால், கோடானுக்கோடி முஸ்லிம்களின் உணர்வுகளை தன் பேனாவின் முனையால் குத்திக் கூறுபோடத் துடிக்கிற இந்த நபரை குறித்து யாரும் எதுவும் சொல்லக்கூடாதாம் . சேனிட்டியாம்.

கடும் விரோதிகளாயிருந்த பகைவர்கள் மீது வெற்றி வாய்ப்பு கிடைக்கும்போது பழிதீர்த்துக்கொள்ளவே முனைகிற மனிதர்களிடையே, அப்போதும் ஓரிறையை ஏற்கவைத்த; சொந்தப் பகைமைகளை மறந்து மன்னித்த; வரலாற்றில் பதிவான மாபெரும் மன்னிப்பை காழ்ப்புணர்வின் காரணத்தால் திரித்தும் மறுத்தும் சொல்ல, நல்லவேளை நான் உங்களைப்போன்ற கடும்காஃபிரில்லை நேச குமார் அவர்களே . (இப்போதும் ஒரு முஸ்லிமாக, உங்களை காஃபிர் என்று சொல்வதனை நான் விரும்பவில்லை . நாளையே உங்கள் நிலை மாறக்கூடும். ஆயினும் நீங்கள் இஸ்லாமோஃபோபிக் என்று சொல்வதை விடவும் காஃபிர் என்று சொல்வதை விரும்புவீர்கள் என்பதால் சொல்கிறேன் ).

அதே அபூ சுஃப்யான் அவர்களின் மனைவியாகவும், நபியவர்களின் நேசத்திற்குரிய சிறியதந்தையைக் கொன்று ஈரலைக் கடித்துத் துப்பியவருமான -ஹிந்த் அவர்களையும் இஸ்லாத்தின் பொருட்டால் மன்னித்து, அதே -ஹிந்த் அவர்களால் “இறைத்தூதர் அவர்களே ! (நான் இஸ்லாத்தை எதிர்த்து வந்த பொழுது) பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபிறகு) இன்று பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் பெறுவதையும் விட உங்கள் வீட்டார் கண்ணியம் பெறுவதே எனக்கு அதிக விருப்பமானதாக மாறிவிட்டது” என்று நேற்றைய எதிரிகளாலும் பாராட்டுப்பெற்ற நபியவர்களை சுய வன்மத்தின்; சுயநலத்தின் காரணமாகவே ஏற்காதிருக்க நான் நல்லவேளை, உங்களைப்போல ஆதிக்க சாதியிலில்லை நேச குமார் அவர்களே!

இருள் மருள் காரணமாகவே, முஸ்லிம்கள் இஸ்லாத்தினை விட்டு விலகாதிருக்கிறார்கள் என்று ‘கண்டுபிடித்து’ வைத்திருக்கும் உங்களிடம் ஒரே ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன் .

ஹிந்து மதம் நெகிழ்ச்சித் தன்மை உடையது என்று சொல்கிறீர்களே, பிராமணீய மதத்தவர்களால் ஏன் இன்னும் வர்க்கபேதத்தின் வரையறையாய் விளங்கும் பூணூலைத் தாண்டி வரமுடியவில்லை? பதில் சொல்வீர்களா? நன்றி .


babuto@gmail.com

Series Navigation

பாபுஜி

பாபுஜி