ராஜன் குறை
[முன் குறிப்பு: இப் பதிவு பல்வேறு விவாதங்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியதுதான் என்றாலும் மேலதிகமாக தனிப்பட்ட சிந்தனைகளின் தாக்கங்களால் ஆக்கம் பெறுவது. எந்த விவாதத்திலும் ஒரு இடையீடு அல்ல. மொழி சற்று விநோதமாக இருந்தாலும், பழகிய சிந்தனைகளின் வேறொரு மொழித்தடமே என கவனிக்க முடியும். ஒரு எழுத்துப் பயிற்சியாகவும், மன அவசத்தின் பகிர்வாகவும் கொள்ளவும். புதிதென்று கொள்ள வேண்டாம்; தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிவுற்ற சிந்தனைகளின் மீண்டுமொரு சந்திப்பே (நீண்டதொரு நாள் கழித்து?)]
இருப்பின் திறப்புகளை ஒரு புள்ளியில் குவித்து, கடக்கும் உள்ளுறையாகக் கொண்டு, பழக்கத்தின் இழைகளால் மூடப்பட்டதே மானுட இருப்பு விழப்பெற்ற தளம். இவ்விழைகள் சமிக்ஞைகள் (அ) குறிகளால் பிரதானமாக உருப்பெற்றாலும், அவற்றின் உறுதியுற்ற நிலை ஒரு விஷேச குறிகளின் கூட்டமைவான மொழியால் அமைகிறது. மூடப்பட்ட தளத்தின் விளிம்பில் காணும் இன்மையின், மரணத்தின் சாத்தியமே காலமாக இருப்பில் மானுடப் பற்றின் மூலமாக பரிணாமம் பெறுவதாக வாதிட்டார் ஹைடக்கர். ஆனால் பொருட்கள், வரலாறு, இறைமை, தனி மனிதன் என்று கடக்கும் உள்ளுறைகளை ஏராளமாக பட்டியிலிட்ட மனிதம் கைக்கெட்டியவரை இருப்பின் சாத்தியங்களை சமைத்துப் பார்ப்பதில் ஆரவாரமாக ஈடுபட்டுள்ளது.
தினசரி வாழ்வின் நிச்சயங்களின்றி இருப்பு சாத்தியமில்லை. காலையில் எழுந்து பார்த்தால், நாம் தொடர்ந்து அதே உருவத்துடன் இருப்பதும், காப்பி பொடி கலத்தில் முன் தினம் காணப்பட்ட காப்பி பொடி இருப்பதும், கணவனோ, மனைவியோ நமக்கு காப்பி தருவார்கள் போன்றவையும் நம் இருப்பை வடிவமைக்கின்றன. இவைகளை நாம் தோற்ற உறுதிகள் என அறிகிறோம். தோற்ற உறுதிகள் சமூக-பெளதிக வரலாற்றுடன் தொடர்புடயவை. தனிப்பட்ட இருப்பும், இயக்கமும் வரலாறு உள்ளிட்ட தோற்ற உறுதிகளுடன் பிணைப்பு கொண்டவை. உதாரணமாக காப்பி என்ற குறிப்பு இப்பதிவில் ஈடுபட்ட சுயத்தை வரலாற்றில் நிறுத்துகிறது. அனைத்து தோற்ற உறுதிகளும், வரலாறும் இருப்பு வாசம் கொள்ளும் தளத்தை மூடும் இழைகள். குறிகளால் அமைந்தவை.
மானுட இருப்பில் மூவகை நிலைகளைப் பார்க்கலாம். முழு முதல் கடக்கும் உள்ளுறையான இறைமையையும் தோற்ற உறுதியாகவே கொள்வது — ஒரு இந்திய கிராம தெய்வத்தைப் போல. இறைமையை கடக்கும் உள்ளுறையாகக் கொண்டு, பிற பெளதிக, இயற்கை சார் (அரசன் உட்பட்ட) அடையாளங்களை தோற்ற உறுதிகளாகக் கொள்வது — மதங்களின் செயல்பாடுகள். இறைமையை தனிப்பட்ட நம்பிக்கை என பிரித்து, பிற அடையாளங்கள் அனைத்தையுமே கடக்கும் உள்ளுறைகளாகப் பார்ப்பது — நவீன சிந்தனை. நவீன காலத்தில் இம்மூன்றாவது முறை வலுப்பெற்றபோதுதான், தனிப்பட்ட இருப்பு என்ற தோற்ற உறுதி, தனி நபர் என்ற கடக்கும் உள்ளுறையாக மாற்றம் கண்டது. இயற்கை என்ற கவின்மை கலந்த புலம், கவின்மை நீக்கம் பெற்று, மனித ஆளுகைக்கு உட்பட்ட இருப்பாக தன்னளவில் கடக்கும் உள்ளுறையாக மாற்றம் கண்டது. மானுட இருப்பு கலாசாரம் எனவும், இயற்கை பெளதிக இருப்பு எனவும் பிரிக்கப்பட்டதுடன், இந்த முரணே ஒரு கடக்கும் உள்ளுறையாகி கல்வியின் அடிப்படையானது. இத்தகு நவீன சிந்தனை திறட்சியுற்ற இடம் ஐரோப்பா எனக் கூறுவது அதைப் பெருமைப்படுத்துவதல்ல. மானுட அழிவின் துவக்கமெனச் சாடுவது. தோற்ற உறுதிகளை கடக்கும் உள்ளுறைகளாக மாற்றும் சிந்தனை இயந்திரங்களின் தொடர் உற்பத்தியே நவீன காலம். இதன் எதிர்முனையில், இதற்கு மாற்றாக திறப்பை ஒயாது சுட்டும் மொழி, குறி இயந்திரங்களை உருவாக்க தீவிரமாக இயங்கின நவீனத்துவ கலை, இலக்கியங்களும், தத்துவத்தின் சில பிரிவுகளும். திறப்பு, தோற்ற உறுதி கடக்கும் உள்ளுறையாக மாற்றம் பெறுவதை தடுக்கிறது.
திறப்பு என்பது என்ன? மூடும் இழைகளை ஊடுறுவும் பார்வை. ஊடுறுவதல் என்றால் அவ்விழைகளுக்கு அப்பால் உள்ள பேருண்மையை தரிசிப்பது என்ற பொருளிலல்ல. அப்படி ஒரு பேருண்மை உருவகிக்கபட்டால் அது கடக்கும் உள்ளுறைகளின் பட்டியலில் சேரும் இன்னொரு அடையாளம். அவ்வளவே. குறிகளுக்குப் பின்னால் நிற்பதும் குறிகளே. (நாமறிந்த அளவு. அறிய முடியாதது என்று நாம் எதையும் அறிய முடியாது.) குறிகள் தோற்ற உறுதிகளாகவும், தோற்ற உறுதிகள் கடக்கும் உள்ளுறைகளாகவும், கடக்கும் உள்ளுறைகள் குறிகளாகவும் சுழற்சி இயக்கம் கொள்வதும் நிகழ்வே. கடக்கும் உள்ளுறைகளில் முக்கியமானதான இறைமையை குறியாகவும், குறிகளின் தர்க்கத்துள்ளும் வைத்துப் பார்ப்பது பல்வேறு மதங்களின் சொல்லாடல், கதையாடல் மரபுகளிலும் காண்பதே. அச்சுழற்சியை தேக்கும் நவீன காலத்தில் அறிவுத்துறைகள் உருவாகி, கடக்கும் உள்ளுறைகளை பங்கிட்டுக்கொண்டன. மதங்களுக்குப் பிரதானமான கடக்கும் உள்ளுறை இறைமை. விஞ்ஞானத்துக்குப் பிரதானமான கடக்கும் உள்ளுறை இயற்கை. சமூக விஞ்ஞானங்களுக்கு வரலாறு. கலை, இலக்கியத்திற்கு அழகு. தத்துவத்திற்கு உண்மை. (அரசியலுக்கு? அட, அரசுதான்!) எனவே, கடக்கும் உள்ளுறைகளுக்கு எதிர்நிலையில் இயங்குவதென்பது அரசியல் வேலைத்திட்டம் போன்றதல்ல. மொழியின், குறிகளின் நகர்வின் முரணியக்கத்தை நோக்குதலே. அக்குறிகளை தோற்ற உறுதியிலிருந்து திறப்பு நோக்கித் திருப்பவதே.
அடிப்படையில் மூடும் இழைகள் திறப்பை உள்ளடக்குவதை தவிர்க்க முடியாதவையே. தோற்ற உறுதிகளின் சுகத்தில் மறதி கொள்ளும் மனிதப் பிரக்ஞையே திறப்பின் சுட்டுதல்களை இழக்கின்றது. அந்தப் பதற்றத்தில் கடக்கும் உள்ளுறைகளைப் பற்றுகிறது. வாணலியிலிருந்து தப்பி நெருப்பில் விழுவது போல. இன்னொரு புறம் மொழி ஒரு புதைச்சேறாக மாறுகிறது. திறப்புகள் மறக்கப்படும் நேரத்தில், இருப்பின் தோற்ற உறுதி அலகுகளான அடையாளமும், அங்கீகாரமும் வன்முறையின் தோற்றுவாய்களாகின்றன. குறிகளும் மொழியும் நிலைபெறாமையும், நீக்கலும் கொண்டிருந்த காலத்தில் வன்முறையும் இருப்பின் சுழற்சியின் பகுதியாயிருந்தது. நவீன காலம் குறிகளை கிடங்குகளில் சேமிக்கவும், பிரதியாக்கம் செய்யவும், ஒற்றைப் பரிமாணத்தில் பெருக்கவும் முற்பட அடையாளமும் அங்கீகாரமும் கடக்கும் உள்ளுறைகளாகி வன்முறையின் உலகளாவிய வெடிப்பை நிகழ்த்த பயந்துதான் போனது மானுடம், குறிப்பாக ஐரோப்பாவில். பின்னர் பேரதிர்ச்சியையும் மொழிவயப்படுத்தி பழக்கத்தின் மூடும் இழைகளாக்கிக் கொண்டது; இருப்பை மேலும் மூர்க்கமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
தோற்ற உறுதிகளுடன் தொடர்பில்லாத, தொடர்பை பாசாங்கு செய்த, வெற்றுக்குறியான பணத்தை ஒயாமல் பெருக்கலாம் எனக் கண்டதன் மூலம் இருப்பின் மீதான மட்டற்ற ஆக்கிரமிப்பை துவக்கியது முதலீட்டியம். இதன் தோற்ற உறுதி சார்ந்த விபரீத விளைவுகளைக் கூடக் காண முடியாவண்ணம், ஊடகம் சார் நுகர்வுப்பொருள் பிம்பப் பெருக்கத்தினால் வரலாறு காணா மானுட மறதி கட்டமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டியத்தை எதிர்கொள்வது இன்று (ஜனவரி, 2008) மார்க்ஸீய மொழி இயந்திரங்களின் வேலையோ, என்றோ வெளிறிச் சிதைந்த ரொமாண்டிசிச மொழி இயந்திரத்தின் வேலைவோ அல்ல. மானுட மொழி இயந்திரங்கள் அனைத்தும் தோற்ற உறுதிகளை ஆயும் தோற்றவியல் நோக்கியும், திறப்புகளின் சுட்டதல்கள் நோக்கியும் திரும்ப வேண்டியுள்ளது. (இன்னம் முப்பது ஆண்டுகளுக்குள் இந்த வரிகள் தங்கள் இயக்க விதியை ஏதோவொருவிதத்தில் கண்டடையும்.)
பன்னெடுங்காலமாக மூடும் இழைகளை மறு ஆக்கம் செய்வதன் மூலம் திறப்பின் சுட்டுதல்களை காத்து வந்தன கலை, இலக்கியங்கள். இறைமையை பற்றியதானாலும், அன்றாட வாழ்வின், இயற்கையின் ஒரு துளியைப் பற்றியதானாலும், அல்லது அருவமானதானாலும் இவை அடிப்படையில் திறப்பின் சுட்டுதல்களென்பதே மானுடப் பிரக்ஞையில் இவை முக்கியம் பெறக்காரணம். ஆயின் திறப்பின் சுட்டுதல்களுக்கும், பழக்கத்தின் மூடும் இழைகளுக்கும் இடைவெளி கிடையாது. திறப்பின் சுட்டுதல்கள் கண்டு அச்சம் கொள்ளும் மானுட இருப்பே, அவற்றை பழக்கத்தின் மூடும் கண்ணிகளாக்கும் முயற்சியில் அடையாளங்களையும், கடக்கும் உள்ளுறைகளையும் உருவாக்குகின்றது. மாறாக பழக்கத்தின் மூடும் கண்ணிகளையே திறப்பின் சுட்டுதல்களாக காண விழைவது ‘ஆன்மீகம்’. தார்கோவ்ஸ்கி திரையில் அமைத்த இறுதிக் காட்சி. மனனம் செய்து தினமும் கூறும் செய்யுளில் பொதிந்துள்ள திறப்பின் சுட்டுதலை தனிப்பட்ட இருப்பு என்று தீண்டும் என யாரால் கூறமுடியும்? அல்லது ‘திறனாய்வால்தான்’ அதை உடனே நிகழ்த்திவிட முடியுமா? கண்டதற்கும், விண்டதற்கும் அல்லது விண்டதற்கும், கண்டதற்கும் இடையிலேயே இருப்பிற்கும், திறப்பிற்குமான நேரடி இடைவெளியற்ற உறவு இருக்கிறது.
தோற்ற உறுதிகள் மூடும் இழைகளாலாதலால் திறப்பினை உள்ளடக்கியவை என்று பார்த்தோம். இதன் காரணமாகவே குறைந்தபட்ச மொழி இயந்திரங்களின் துணை கொண்ட ‘ஆதிவாசி’, ‘விவசாய’ குழுமங்களின் இருப்பு, அதனுள் வன்முறையின் சுழற்சி இருந்தாலும், திறப்புகளின் நேரடித் தொடர்பால் பல உயர் பண்புகளை கொண்டிருந்ததாக இருபதாம் நூற்றாண்டின் பல சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் எண்ணினர். அத்தகு குழுமங்களை கடக்கும் உள்ளுறைகளாக மாற்றும் குற்றச்சாட்டையும் சந்தித்தனர். (அதன் ‘உண்மை’ எப்படி இருந்தாலும் அச்சு இயந்திரம் தோன்றியபின், ஐநூறு ஆண்டுகளில், முதலீட்டிய நவீனம் மானுட இருப்பை மட்டுமன்றி, உயிரின் இருப்பையே அழிவின் முன் நிறுத்தியுள்ள சாதனையை அதற்கு முந்தைய எந்த மனிதக் குழுமமும், மொழி இயந்திரங்களும் செய்திருக்க முடியாது.) இதன் முக்கியத்துவம் என்னவெனில், எந்த அளவு நவீன மொழி இயந்திரங்கள் முன்னிலைப்படுத்தும் கடக்கும் உள்ளுறைகளை அம்மொழியில் இயங்கும் மானுட இருப்பு பிரக்ஞை கொள்கிறதோ, அந்த அளவே அதனால் நவீனத்துவ இலக்கியத்தின், கலையின் அல்லது அவை சார் தத்துவத்தின் திறப்பின் சுட்டுதல்களையும் அணுக முடியும். இதன் முரண் என்னவென்றால், இறைமை தவிர்த்த கடக்கும் உள்ளுறைகளை தோற்ற உறுதிகளாகவே நவீன மொழி இயந்திரங்கள் நிறுவுவதால் அவை தீப்போல் பரவும். திறப்பின் சுட்டுதல்களை ‘தரம்’, ‘உன்னதம்’, ‘ஆழம்’ ‘தேடல்’ என்றெல்லாம் தோற்ற உறுதிகளாக்கினால், அழகியல் என்று கடக்கும் உள்ளுறையாக்கினால்கூட சொற்பமாகத்தான் படரும். இதன் காரணம் திறப்பினைக் கண்டு மனித இருப்பு கொள்ளும் அச்சமே ஐநூறு வருடங்களாக முதலீட்டிய நவீனத்திற்கு வழிவகுத்தது என்பதுதான். (500 ஆண்டுகள் என்பது 1492ஐ சுட்டுதலாகக் கொண்டது; 1439ஐ அல்ல)
இதன் மற்றொரு பரிமாணம், எந்த அளவு முதலீட்டிய நவீனம் முற்றுகிறதோ அந்த அளவு அதன் தர்க்கத்திற்கு எதிரான திறப்பின் சுட்டுதல்களைக் கொண்ட பிரதிகளுக்கு ‘அங்கீகாரம்’ பெருகும். மில்லியன் டாலர் ஏலங்களில் புதையுண்ட ஒவியங்களின் திறப்பின் சுட்டுதல்களை காணும் ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்ள மனித இருப்பு திணறும். தமிழகத்தில் முதலீட்டிய நவீனம் முதிர்ச்சி பெறத்துவங்கியுள்ளது. சுப்ரதீபக் கவிஞர்கள் வஜனம் எழுதிக் களித்த குமுதம், இலக்கியத்திற்கென்று ஒரு பத்திரிகை நடத்துகிறது. ஒரு நாள் சன் டிவி குறும்படங்களுக்கும், கலைப்படங்களுக்குமான சேனலைத்துவங்கலாம். நமது மொழி இயந்திரங்கள் மானுடம் சந்திக்கும் பிரம்மாண்டமான சமகால முரண்கள் பற்றிய கவனத்தை பிரதேசம் சார்ந்த தோற்ற உறுதி வரலாற்றில் தேங்குவதால் இழந்துவிடக்கூடாது.
தோற்ற உறுதி வரலாறுகள் அனைத்தும், ஐநூறு ஆண்டுகளாக முதலீட்டிய நவீனத்தின் வளர்ச்சியுடன் தொடர்புடையாதகவே ஒவ்வொரு பிரதேசத்திலும் விளங்குகிறது. காலனீய ஆதிக்கத்தின் நேரடி மேற்பார்வையிலோ, மறைமுத் தாக்கத்திலோதான் உலகின் அனைத்துப் பகுதிகளும் முதலீட்டிய நவீனத்துள் புகுந்தன. அடையாளங்களும், அங்கீகாரங்களும் பெரும் சமூக நகர்வுகளையும், முன்னறியா வன்முறையையும் நிகழ்த்தின. அதே சமயம் தோற்ற உறுதி சார்ந்த சமூக உறவுகளின் மறு நிர்மாணத்தை முன்னெப்போதும் விட பரவலாக நிகழ்த்தின. இத்தகைய மறு நிர்மாணத்திற்கான இருப்பின் உள்ளார்ந்த சாத்தியத்தை முதலீட்டிய நவீனத்தின் பிரத்யேக சாத்தியமாக காணுவதே மொழி இயந்திரங்கள் சந்திக்கும் சிக்கலாகும். இவற்றை கணக்கில் கொள்ளாத மேலோட்டமான கலாச்சார ஒப்பீடுகளால் மொழி இயந்திரங்களுக்குப் பயனில்லை.
தோற்ற உறுதிகள் சூழ்ந்த உலகில் அடையாளத்திற்கும், அங்கீகாரத்திற்கும் இருந்த எளிய உறவுகள் இன்று நவீன முதலீட்டிய காலம் யூ டியூப் வரை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பல்லடுக்கு குறிகளின் வலைப்பின்னலில் மிகுந்த சிக்கலுக்குள்ளாகியுள்ளன. எழுத்தில் ஈடுபடும் தனி இருப்பு, தனி நபர் என்ற கடக்கும் உள்ளுறையுடன் பினைக்கப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நிலையில் திறப்பின் சுட்டுதல்களை தீவிரமாக பொதிக்கும் படைப்புகள் எந்த ஒரு நவீன முதலீட்டிய சமூகத்திலுமே அங்கீகாரம் பெறுவதென்பது மூடும் கண்ணிகளாக உள்வாங்கப் படுவதுதான். இதன் பொருள் நிறுவனங்களும், ஊடகங்களும் படைப்பாளியையும், படைப்பையும் அங்கீகரிப்பது ஏதோ பிரத்யேகமான ஆபத்து என்பதல்ல. எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் காடுகளுக்குள் சென்று வாழ வேண்டியதில்லை. சமூகம் தனக்கு வழங்கும் இடத்திலிருந்து இயங்குவதற்கும், வழங்காத இடத்தை போராடிப் பெறுவதற்கும் கூட தேவையும், அவசியமும் இருக்கலாம். தனிப்பட்ட இருப்புகளுக்கும், அவர்கள் படைப்புகளுக்கும் உள்ள உறவு என்றுமே பல சாத்தியங்களைக் கொண்டதுதான். நவீன முதலீட்டிய காலம் கடக்கும் உள்ளுறைகளின் காலம் என்பதையும், திறப்பின் சுட்டுதல்களை உதாசீனம் செய்வதிலேயே அதன் இருப்பு சாத்தியமாகிறது என்பதையும் மட்டும் மறந்து விடக் கூடாது. நம் காலத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முதலீட்டிய நவீனம் ஒரே காரணமா என்றால் இல்லை. தொடர்ந்து கடக்கும் உள்ளுறைகளை உருவாக்குவதன் மூலம், பல காரணங்களை ஒருவாக்கும் புலம். எந்தவொரு கடக்கும் உள்ளுறையையும் புலத்தை உள்ளடக்காமல் தனியாக விமர்சிப்பது, எய்தவன் இருக்க அம்பை நோவதற்கொப்பாகும்.
rajankurai@gmail.com
- ஜெயமோகனும் இயல் விருதும்
- தாகூரின் கீதங்கள் – 13 கண்ணீர்ப் பூக்கள் !
- கடைசி கிலோ பைட்ஸ் – 6 [ Last Kilo bytes -4 ]
- கருணாகரன் கவிதைகள்
- போய்விடு அம்மா
- சம்பந்தமில்லை என்றாலும் – ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- (மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் )
- ஆச்சர்யகரமான அரசுவிழாவும் அரிதான அரசு யந்திரமும்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலக் கதிர்கள் ! அடிப்படைத் துகள்கள் ! (கட்டுரை: 13)
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்………(9) – இந்திராபார்த்தசாரதி.
- பட்டுப்பூவே !
- கவிதைகள்
- இரு நாட்டிய நிகழ்வுகள்
- புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…
- திருப்பூரில் பரிசு பெறும் உஷா தீபன்
- கொட்டாவி
- மீராவின் கவிதை
- இரண்டில் ஒன்று
- கடிதம்
- சிங்கப்பூரில் 59வது இந்திய குடியரசுதினம்
- தாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்
- ‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ – ஜெயானந்தன் எழுதிய புத்தக மதிப்புரை
- ஊர் சுற்றிய ஓவர் கோட்
- நீரின்றி அமையாது எங்கள் வாழ்க்கை!
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 4
- மொழி
- மாத்தா- ஹரி அத்தியாயம் -46
- தம்மக்கள்
- மாலதி மாற மாட்டாள்!
- வானபிரஸ்த்தாசிரமம்
- தைவான் நாடோடிக் கதைகள் – 10. மானின் கொம்புகளை நாய்மாமாவுக்குத் திருப்பிக்கொடு.
- திண்ணைப் பேச்சு – ஜனவரி 24. 2008
- மழை பிடிக்காது! மழை பிடிக்காது!
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 17 -பரவி வரும் நோய்
- எண்ணச் சிதறல்கள் : திண்ணை, வைக்கோல்போர், போர்னோகிராஃபி, மலர்மன்னன், வஹ்ஹாபி, முகமதியம், புறங்கைத்தேன்.
- பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டியத்தின் தோல்வியா?
- இருப்பின் திறப்புகளும் அங்கீகாரமும்
- குடியரசுதின சிறப்புக் கட்டுரை
- இரவுமீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை
- காற்றினிலே வரும் கீதங்கள் – 1 & -2
- காற்றினிலே வரும் கீதங்கள் – 3 மூச்சு விடுவதே பெரும்பாடு !