எஸ். ஷங்கரநாராயணன்
அண்ணாவின் காரிய நியமங்கள் நடந்தேறின ஒருபக்கம்.
ஜானகிதான் வரவேயில்லை. கனவுக் கொப்பளிப்பும் தாபமும் கண்ததும்பும் காதலுமான அந்த முகம் அவளால் மறக்க வொண்ணாதிருந்தது.
முதல் காதல்தான் எத்தனை பவித்ரமானது. கனவில் கூட அது சிதைவுற அவளால் அனுமதிக்க முடியாது. நிஜத்திலே அந்த முகம் சிதைந்ததை, எப்படி சகித்துக் கொள்ள முடியும்.
அம்மாவும் அப்பாவும் போய்க் கலந்து கொண்டார்கள். அவள் மருத்துவமனையில் சரவணப் பெருமாளின் அருகில் இருந்தாள் அப்போது.
காலை பதினோரு மணியளவில் சடங்குகள் துவங்குவதாக அறிந்திருந்தாள், பத்தரையிலிருந்தே அவள் மனம் இங்கேயில்லை… அழுகை குமுறி குமுறி உள்ளே முட்டியது. பறவையொன்று உள்ளே மாட்டிக்கொண்டு படபடத்தாப் போல, நெஞ்சில் கனமான வலி…
வாயில் துணியால் மூடிக்கொண்டு குலுங்கினாள்,
முட்டி இரண்டிலும் செமத்தியான அடி அவருக்கு.
சட்டென்று மூளை எச்சரிக்க, உடலைத் தானேயறியாமல் அவர் விலக்கிக் கொண்டிருக்கக் கூடும். அங்கங்கே சிராய்த்த காயங்கள் இருந்தன. நினைவு இன்னும் திரும்பவில்லை.
ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை என்கிறார்கள் டாக்டர்கள்.
அதுவரை ஜானகி ஆஸ்பத்திரியில் உதவியாளராகவோ, நோயாளியாகவோ அமைந்ததேயில்லை.
ஒவ்வொரு படுக்கையும் துன்பக் குவியலாய்க் கிடந்தது அங்கே. நோய்க் கண்காட்சி!
பெரிய ஆஸ்பத்திரி. பணக்கார நோயாளிகள். அதற்கேற்ற கவனிப்புகள். சிரத்தைகள். கூப்பிட்ட குரலுக்கு நர்சுகளும் உதவியாட்களும் ஓடோடி வந்தார்கள்.
குப்பைக் கூடைகள் ஆரஞ்சுத் தோல்களாலும், ஆப்பிள் தோல்களாலும், மருந்துக் குப்பிகளாலும் நிரம்பி வழிந்தன… ஆப்பிளின் தோலில் சத்து உண்டு, என்று நாங்கள் தோலோடு அப்படியே சாப்பிடுவோம், என நினைத்துப் புன்னகை செய்து கொள்கிறாள்.
நர்ஸ் வேதவல்லி அவளோடு புன்னகையுடன் பழகினாள்.
எப்போதும் மலர்ச்சியுடன் சுறுசுறுப்புடன் அவள் இயங்கியது பார்க்கவே உற்சாகமாய் இருந்தது. வீட்டின் சுமைகளும் பொறுப்புகளும் எல்லாருக்கும்தான் இருக்கிறது…. அவரவர் உலகம்…. அதன் உட்சலனங்கள்…. ஆனால் எல்லாவற்றைம் மீறி அந்தச் சூழலில் எல்லாரும் நோயாளியை மையப்படுத்தி சிந்தனைகளை ஒருமுகப் படுத்தி இயங்கியது நல்ல விஷயமாய் இருந்தது.
நினைவே திரும்பாமல் முதல் இரண்டுநாட்கள் கிடந்தார் சரவணப் பெருமாள். பெரும் பெரும் மூச்சுகள் வந்து கொண்டிருந்தன அவரிடமிருந்து. அந்தக் கண்கள்…. மூடிய அந்தக் கண்களுக்குள்ளே கருமணி தவிக்கிறதை, உயிரின் ஆவேசத் துடிப்பை அவள் கவனித்தாள்.
வாழ்கிற ஆவேசம் இருந்தது அதில். உறுதி இருந்தது. இவர் பிழைத்துக் கொள்வார்… என அவளுக்கு நம்பிக்கை வந்தது.
இடைப்பட்ட தனிமையில் பாஸ்கரின் நினைப்பு வரும்.
வரம்பு மீறாத நிலையில் அலைத் தாலாட்டல் போல, காற்று வந்து தலைகலைத்தாற் போல அவள் அதை உணர்வின் மேல்மட்டத்துக் கொண்டுவராமல் அனுபவிக்க முயன்றாள்.
இனி விஷயத்தை அவளால் அந்நிலையில்தான் அணுக முடியும். இப் புதிய சூழல் அதை எத்தனை விரைவில் தன்வயத்துக்குக் கொண்டுவருகிறது, அவளை ஆசுவாசப் படுத்துகிறது பார்க்க வேண்டும்….
ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது அவளிடமிருந்து.
ஜன்னல் வழியே வெளியே பார்க்க ரம்மியமாய் இருந்தது.
உயர உயரமான தூங்குமூஞ்சி மரக் கிளைகள் அந்த இரண்டாவது மாடி ஜன்னல் அருகே சிறு காற்றுக்கும் ஆடின. கம்பி மத்தாப்பு பொருத்தியதும் பிங்க் வண்ணத்தில் தீப்பொறிகள் சிதறினாற்போல அவற்றின் பூக்கள்தான் எத்தனை அழகு. காணக் குளுமை.
அந்த அசோகமரம்… கூம்பு வடிவ அதன் இலைகள்…. உச்சிவரை விநோதமான உற்சாகத்துடன், கீச் கீச்சென ஏறிவரும் அணில்கள், அதன் மரம்விட்டு மரத் தாவல்….
உலகத்தில் கவனித்து ரசிக்க எத்தனையோ இருந்தது. மனசில் ஈரக் குளுமை பாய்ச்சிய காட்சிகள். இயற்கையின் சிரிப்பும் பூரிப்பும் புதுப் பொலிவும்….
அதிகாலையில் சூரியனின் வருகையேகூட, அது அறைக்குள் நுழைந்து சொல்கிற நட்புபூர்வமான ஹலோகூட எத்தனை அழகானது.
இவையெல்லாம் அவளுக்குப் புதியவை.
சின்னஞ் சிறிய வசதிகுறைவான அவர்கள் வீட்டில் அதிகாலை பாத்ரூம் பிரச்னையே பெரிய பிரச்னை. அத்தனை பெண்களும் குளித்துத் தயாராகுமுன் வியர்த்து விடும். வார்த்தைகள் வாக்குவாதங்கள்….
அப்பா ஒருபக்கம் கத்துவார் – அவர்களைச் சமாதானப் படுத்த அவர் கத்துவார். நீங்க ஏன் கத்தறீங்க, என்று அம்மா கத்துவாள். சத்தங்கள்….
அமைதியான, படு சுத்தமான ஆஸ்பத்திரி காலைகள் அவளுக்குப் புது அனுபவம்.
சப்தங்களே ரகசியம் போலிருந்தன அங்கே. கண்ணில் படும் காட்சிகள் ஓவியத்தன்மை பெற்றிருந்தன.
அழைப்பு மணியோ, தொலைபேசி ஒலிகளோ கூட இசைத் தொகுப்புகளாய்… சீரான ஒலியடுக்குகளாய் இருந்தன. நோயாளியின் உதவியாளரை அழைக்கும் மைக் ஒலிகளிலும் நளின நாசூக்கு.
வாழ்க்கையை எப்படியெல்லாம்தான் அழகோ அழகாக அமைத்துக் கொள்கிறார்கள்!
தனி அறை வசதியாய் இருந்தது.
இவளை நினைத்து வீட்டில் அத்தனை பேரும் சோகவயப்பட்டு வளைய வருகிறதைப் பார்க்காமல் இருப்பதேகூடப் பெரும் ஆறுதல். இந்தத் தனிமை, அந்தரங்கம் போற்றுகிற தனிமை. அவளுக்கு அது வேண்டியிருந்தது. பிடித்திருந்தது.
அவ்வப்போது பத்மநாபன் வந்து பார்த்து விட்டுப் போகிறான்.
தினசரி ஷேவெடுத்த பளிச்சென்ற முகம். ஹலோ, என்கிற, உள்நுழையும் புன்னகை. இவன் எப்போதும் இன் பண்ணி அரைக்கைச் சட்டை அணிகிறவனாய் இருக்கிறான்.
அவனது விழிகள் மைதீட்டினாற் போல, இமைகளின் அடர்த்தியில் கண்மூடியது. கவிழ்ந்த சோழிகளாய்த் தெரிந்தன.
கனவில் மிதக்கும் கண்கள். அடர்புருவங்கள். சிவந்த உறுதியான மேனியில் கம்பிவேலிபோல மயிர்ச் செழிப்பு தனி சோபையாய் இருந்தது.
சரவணப் பெருமாளால் முதல் சில நாட்கள் எவ்விதத் தொந்தரவும் இல்லை.
மருந்துகளின் பிடியில் இருந்தார் அவர். உயிர் அடியாழத்தில் இருந்தது. வாளி உருவிக் கொண்டு கிணற்றுக்குள் விழுந்தாற்போல உயிர் உள்ளொடுங்கிக் கிடக்கிறது.
மருந்துகளின் பாதாளக் கரண்டிமூலம் வாளியைத் தேடிக் கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள்.
முட்டிகளில் மருந்துபோட்டுக் கட்டியிருந்தது. இனி போகப் போக வலி அதிகரிக்க அதிகரிக்க நினைவு திரும்ப வேண்டும்.
எப்போது வேண்டுமானாலும் நினைவு திரும்பலாம். அப்போது தானறியாமல் கைகளால் கால்கட்டுகளைப் பிரித்தெறிய ஆவேசப் படுவார், பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் உதவி எங்களுக்கு வேண்டியிருக்கும்…. என்றார்கள். கைகளைக் கால்களைக் கட்டிலோடு கட்டியே இருந்தார்கள்.
பத்மநாபன் அவளுக்கு போரடிக்காதிருக்க புத்தகங்கள் கொண்டுவந்து தந்துவிட்டுப் போயிருந்தான்.
“என்ன உங்க டேஸ்ட்?”
“அப்டின்னில்லை….” என்று வெட்கத்துடன் எழுந்துநின்று புன்னகைத்தாள்.
கையில் கிடைக்கிற தினத்தந்தியே அதிகம். அலுவலகத்தில் பார்க்கிறதுண்டு. எதுவும் திடுக் செய்தி, கள்ளக் காதலனும் காதலியும் சேர்ந்துகொண்டு, காதலியின் மாமியாரைப் போட்டுத் தள்ளீட்டாங்க, என்று பேசிக் கொள்வார்கள் என்றால், வாங்கி டிஃபன் பாக்ஸைத் திறந்து கொண்டே மதியம் பார்க்கிறதுண்டு.
புகைப்படம் தேடிக் கேட்டு வாங்கிப் போட்டிருப்பான்… முக்கியமான மனுசங்க இல்லையா?
தினசரி வீட்டில் காலைச் செய்தித்தாள் வாங்குவதும், விரும்பிய எழுத்தாளர்களின் புத்தகம் என்று கடையில் வாங்கிப் படிக்கிறதும்… அவளுக்கு அதிதமான விஷயங்கள் அவை.
அவனே வண்ணதாசன், ஜானகிராமன் என்று கொண்டு வந்தான். ராஜநாராயணனை அவள் அதுவரை வாசித்ததேயில்லை…
எத்தனை குறும்புக்காரராய் இருக்கிறார் இந்த மனுசன்… சட்டைபோடாத கிராமத்து ஆசாமியிடம் இத்தனை விஷமமா, என்று அவளுக்குச் சிரிப்பு….
அடடா உலகத்தில் தெரிந்துகொள்ள எத்தனை இருக்கிறது?….
கேசட்டுகள். நித்யஸ்ரீ. சுதா ரகுநாதன். பாலமுரளி. யேசுதாஸ், சேஷகோபாலன், ராமநாதன், சந்தானகோபாலன்…. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுகம்… எத்தனை அற்புதமாய் இருக்கிறது ஒவ்வொன்றும்.
தன் வீட்டில் இதைக் கேட்க வாய்ப்பில்லை. கேட்டாலும் இத்தனை மனவொட்டுதல் கிடைக்காது….
இந்தத் தனிமை, நிசப்தம், குளுமை, சுத்தம்….
மரவெளிகளில் காற்று, கலைத்தபடி இலைகளை விலக்கி நடந்து போகிறது, சந்தை மாடாட்டம்!
உயர்ந்த ரசனைக்கு இதெல்லாம் வேண்டித்தான் இருக்கிறது….
எங்கோ இருக்க வேண்டியவடி நீ… என்று அப்பா சொல்வது அவள் நினைவுக்கு வந்தது.
இப்போது பிடிபடும் இந்த சூட்சுமங்கள் வேறு சந்தர்ப்பத்தில் தன் வாழ்வில் சாத்தியமே இல்லைதான்.
அறையில் புத்தம்புது மலர்களைக் கொண்டு வந்து பூச்சாடியில் மாற்றிக் கொண்டேயிருந்தார்கள்.
நோயாளி நல்லுறக்கத்தில் இருக்கையில் அவர்களைத் தொந்தரவு பண்ணாத அளவில் காதுக்குள் இசையை ரகசியக் கொஞ்சலாய்ப் பொழியும் ஒலிநாடா.
கதரி கோபால்நாத்தின் மல்லாரி ஆளையே தாலாட்டித் தள்ளாட்டியது.
உலகம் இத்தனை அழகானது என்று அவளுக்குத் தெரியாது….
பத்மநாபனின் சென்ட் வேறு வகை… என நினைத்துக் கொண்டாள்.
அதிகம் டிଭஷர்ட்டோ சின்னப் பூ அரைக்கைச் சட்டையோ அணிய, அவன் முன்குனிந்து பேசுகையில் மார்பு முடிக்கற்றைகளும், அதன்மேல் யானைக்கு நெற்றிப்பட்டம் கட்டினாற் போன்ற டாலர் சங்கிலியும்….
கை அழுக்காகாதிருக்க வெள்ளை கிளவுஸ் போட்டுக்கொண்டு வண்டியோட்டி வருகிறான்.
வீட்டிலிருந்தே அவளுக்குத் தனியே உணவு மற்றும் சிற்றுண்டிகள் தருவித்துத் தருகிறான்.
சிலசமயம் அவன் வேறு வேலையில் மும்முரப்பட்டு விட்டால்கூட கார்டிரைவர் மூலம் நேரம்தவறாமல் எதாவது சாப்பிட வந்துவிடுகிறது. ஆக சரவணப் பெருமாளைப் பார்த்துக் கொள்ள ஆட்கள் இல்லாமல் ஒன்றும் இல்லை…. என அவளுக்குப் புரிந்தது.
‘அவளையும்’ சேர்த்துப் பார்த்துக் கொள்ள முடிகிறது அவர்களால்!
ஒருவேளை இந்த ஆஸ்பத்திரிச் சூழல்….
எத்தனையோ உடல் உபாதைகள் நெருக்கடிகள் சார்ந்து அது ஆழத்தில் மானுடத்தின் சவால்களை சோகங்களைச் சுமந்து இயங்கினாலும், நம்பிக்கை த்வனிக்கும் அந்த அமைப்பு….
எல்லாம் இல்லாமல் என் வீட்டில் இருந்திருந்தால் நான் எத்தனை சிக்கிக் கொண்டிருப்பேன்.
என்னையே நினைத்து மருகிக் கொண்டிருப்பேன.
கிணறைத் தாண்டுகிறேன் என்று கிளம்பி, முடியாமல் கிணற்றில் விழுந்தாற் போல ஆகியிருக்கும் என் நிலை.
“உங்களுக்குத் தனியா இங்க போரடிக்குதில்லையா?”
அவள் கண்மூடி அப்போது பர்வீன் சுல்தானாவை ரசித்து லயித்துக் கிடந்தாள்.
அதுவரை அவளுக்கு இந்துஸ்தானி இசை அறிமுகம் இல்லாதது. குரல் வித்தை, ஜாலம். தபேலாவின் உருளலோசை. மனசை என்னவோ என்னென்னென்னவோ செய்தது.
காதுக்குள் பம்பரக் குறுகுறுப்பாய் இசை. ஹெட்போன். அவன் வந்ததையோ கேள்வி கேட்டதையோ அவள் கவனிக்கவில்லை.
சற்று பொறுத்து அவன் ஹார்லிக்ஸ் கலந்து கொண்டுவந்து நீட்டியபோதுதான் கவனித்தாள்.
ஒரே வெட்கமாகிப் போயிற்று. நோயாளியைக் கவனிக்க வந்தவளா நான்? என்ன இது என்று, பிடிபட்டாற் போல சங்கடமாய்ப் போனது.
சட்டென்று எழுந்து கொண்டாள்.
“உட்காருங்க உட்காருங்க…” என்றபடி அவளை மேலும் நெருக்கடிக்குள்ளாக்காமல் அவன் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
எளிமையாகவும் திறந்த மனதுடனும் அவன் அவள்பேசக் காத்திருந்தான். பேசாத நிலையும்கூட உறுத்தாத அளவிலும், அவனது அருகாமையில் ஓர் அந்நியத்தன்மை அவள்மீது நிழல்போல, இடைவெளிபோல, அமைந்து விடாமலும் ஓர் புன்னகைப் பரிமாற்றத்துடன் பேசினான் அவன்.
“நல்ல பொறுமைசாலி நீங்கள்…. இந்த அடைபட்ட தனிமை…. என்னால் அதைச் சமாளிக்க முடியாது….”
“இட்ஸ் ஓ.கே. அத்தனை சிரமமாய் இல்லை” என அவள் புன்னகைத்தாள்.
“நல்ல புத்தகங்கள். நல்ல இசைத் தொகுப்புகள். மற்றும் இந்தக் காற்று…. மரௌச்சி அசைவு…. கூடடையும், அல்லது கண்விழிக்கும் பறவைகளைப் பார்க்க முடிவது…. அவற்றின் சப்தங்கள்… தவிர இச்சூழலின் நம்பிக்கை த்வனிக்கும் அமைதி….. எல்லாமே பெரும் அனுபவமாய் இருக்கிறது. நான் எதிர்பாராதது இது….” என்றாள் மனப்பூர்வமாய்.
“நான் சப்தங்களோடு பழகியவன். உங்களுக்கு நேர் எதிர். சமாதியில் வைக்கப்பட்ட மலர்களை என்னால் ரசிக்க முடியாது….” என்று அவன் சட்டென்று அவளை உற்சாகமான மறுப்புக்கு வம்புக்கு இழுக்கிறான்.
சமாதி… தேவையில்லையோ அந்த வார்த்தை, என மனசு சற்று உள்த்திகைப்பு கண்டது. அவள் அதைப் பாராட்டவில்லை, கவனிக்கவில்லை, நல்லவேளை.
அவள் மெல்லச் சிரித்தாள்.
எத்தனை இதமாய் நண்பனாய் இவன் அருகில் அமர்ந்திருக்கிறான் என அவளுக்குப் புரிந்தது.
இங்கே இருக்கிற இவன் இத்தனை அடக்கி வாசிப்பதே கூட ஒரு பெரும் ஓட்டத்துக்குத் தன்னைத் தயார் செய்து கொள்வது போலத்தான், எனப் புரிந்தது அவளுக்கு.
அந்த மௌனப் பரிமாற்றமும், அந்தச் சூழலும், அவளுள் எத்தனையோ சிறு விஷயங்களைத் தெளிவாக உள்வாங்கக் கற்றுத் தந்ததை உள்ளுணர்வு அவளுக்கு ஓர் ஆச்சரியத்துடன் எடுத்துச் சொன்னது.
வரம்பு மீறாத நாசூக்குடன் “அப்பா முற்றிலும் தெளிந்து வர இன்னும் ஒருநாள் போல ஆகும் என்கிறார் டாக்டர்” என்றான் பத்மநாபன்.
அவள் தலையாட்டினாள்.
“உங்களை நாங்கள் சிரமப் படுத்திக் கொண்டிருக்கிறோம்…” என்றவன், அவள் மறுப்பதை கவனித்து “அதை மறுப்பது உங்கள் பெருந்தன்மைதான்” என்றான் மேலும் புன்னகையுடன்.
மிகவும் எச்சரிக்கையாகவே அவன் பேசினான். பாஸ்கர் பற்றியோ, அப்பா பற்றியோ, விபத்து பற்றியோ கூட அல்லாமல்…. அதை அவள் மறக்க முயன்று வருகிற முயற்சியில் தான் குறுக்கே நில்லாத கவனத்துடன் பேசினான், என அவள் புரிந்து கொண்டாள்.
சூட்சுமங்களின்…. அமைதியின் சங்கமமாக கைகுலுக்கலாக இருந்தது அந்தச் சந்திப்பு.
புதிய – அந்நிய ஆடவன் என்கிற நினைவே தோன்றாததோர் கண்ணியத்தை அவன் காப்பாற்றியது அவளுக்கு இதமாய் இருந்தது. வேண்டியிருந்தது.
கார் டிரைவரை அமர்த்தி விட்டு அவன் எழுந்து கொண்டான்.
“உங்களுக்கு ஆட்சேபணையில்லை என்றால் நாம் சற்று வெளியே உலாவிவிட்டு வரலாம்….” என்றான் ஆங்கிலத்தில்.
அவனைப்போல சரளமாய் ஆங்கிலத்துக்குத் தாவ அவளால் இயலவில்லை. அதை அவன் பொருட்படுத்தவில்லை.
தானேயறியாமல் ரொம்பப் பழகியவள்போல அந்த பாவனையை, அந்த அழைப்பை அவள் ஏற்றுக் கொண்டாள்.
அவளுக்கே இந்த மூன்று நாட்கள் உள்ளே தனியே ராப்பகலாகத் தனித்து ஒடுங்கி
க் கிடந்தது அலுப்பாய் இருந்திருக்க வேண்டும். மனசு புதுக்காற்றை சுவாசிக்க விரும்பியது.
“உங்கள் புத்தகத் தேர்வும், கேசட்டுகளும் மிகவும் உதவிகரமாய் இருக்கின்றன….” என்றவள், சற்று அவனை சந்தோஷப்படுத்த விரும்பினாள். ”எனக்கே நோயாளியாய்ப் படுத்துக் கொள்ள வேணுமாய் இருக்கிறது…”
அவன் சிரிக்காமல் தலையாட்டினான். உள்ளே வேறு யோசனையாய் இருந்தான் அவன்.
அவை அவனது புத்தகங்கள் அல்ல. கேசட்டுகளும் கூட அண்ணாவின் சேமிப்பில் இருந்து கொணர்ந்தவைதாம்….
அதைச் சொல்ல வந்தவன் உடனே தனக்குள்ளாகவே தன்னைச் சரிசெய்து கொள்கிறான்.
“அதெல்லாம் உங்களுக்குப் பிடிக்கும்னு நான் எதிர்பார்த்ததுதான்… நீங்க நல்லாப் பாடுவீங்கன்னு தெரியும்….”
“சரிதான். ஆனா இத்தனை பெரிய விஷயமா அது உங்ககிட்டேல்லாம் அடையாளப் படும்னு நான் நினைக்கவேயில்லை” என்றாள் ஜானகி.
“நாம ஏன் இப்பிடி சம்பிரதாயபூர்வமாப் பேசிட்டிருக்கோம்?” என்று சற்று இதழ்விரியச் சிரித்தான் பத்மநாபன்.
“ஆமாம். வாத்தியாரும் மாணவர்களும் மாதிரி….”
“இதுல யார் வாத்தியார் யார் மாணவன் அல்லது மாணவி?” என அவன் மேலும் சிரித்தான்.
”அல்லது வாத்தியாரிணி?”
”……”
“நான் சிகெரெட் குடிக்கறதுல உங்களுக்கு ஆட்சேபம் உண்டா?”
“உண்டு….” என்றாள்.
“நல்லது” என்று எடுத்த சிகெரெட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான் அவன்.
“தனிமையாய் உணர்கிற கணங்கள் ஆண்களிடம் சில கெட்ட பழக்கங்களை ஏற்படுத்திருது, இல்லையா?”
“இருக்கலாம். நான் ஆண் அல்ல. எனக்குத் தெரியாது….” என்றாள் ஜானகி.
அதை அவன் ரசித்தபடி. “நீங்க பெண். ஜானகி டீச்சர்.”
அவள் வாய்விட்டுச் சிரித்தாள்.
மனம் லேசாகி யிருந்தது. உறுத்தாத அளவில் மெல்லிய காகிதத்தில் ஈரக்கையைத் துடைக்கிறாற் போல அவன் அவளிடம் பேசினான்.
“வா தொடர்ந்து விளையாடலாம்” என்கிறாற்போல டென்னிசில் பேக்ଭஹான்ட் வாலி விளையாடுவது போல அவன் பேசியது அவளுக்குப் பிடித்திருந்தது.
“வீட்டுப்பாடம்லாம் முடிச்சாச்சா?” என அவனை மேலும் சீண்ட வேண்டுமாய் அவள் விரும்பினாள். தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
வெளியே வந்ததும், இந்தப் புதுக்காற்றும் நல்ல விஷயம்தான்.
அவனே தொடர்ந்து பேசினான்.
“நீங்க சூழ்நிலையை நல்லா அனுபவிக்கறீங்க. நல்ல நிதானம்…. புரிஞ்சுக்கற தன்மை உங்ககிட்ட இருக்கு. அந்த மேல்மாடி அறை. அங்கேர்ந்து மர உச்சி அசையறதும், ஒரு புதுப்பறவை வந்து உக்காந்தா ரசிக்கறதும், காலை மாலை பறவைச் சத்தமும்…. எனக்கு இப்படியெல்லாம் வாழ்க்கைய ரசிக்கணும்னு தெரியாது” என்றான் பத்மநாபன்.
“அலங்காரமா, என்னைப் பாராட்டி, பொய் பேசறீங்க….”
அவன் ஆச்சரியத்துடன் திரும்பி அவளைப் பார்த்தான்.
“அதெப்பிடி அத்தனை உறுதியாச் சொல்றீங்க?”
“இது தெரியாது…ன்னு நீங்க சொல்றபோதே அது உங்களுக்குத் தெரியாம இல்லன்னு ஆயிருதில்லையா?”
“வெல் ஸெட்” என்றான் அவன். “பாரடாக்ஸ் ஸ்ଡ଼’அୢட்மெண்ட்” என்று அதை அங்கீகரித்தான் அவன்.
“அப்டீன்னா?”
“சைல்ட் இஸ் தி ஃபாதர் ஆஃப் தி மேன்” என்கிறாற் போல. ‘இந்தியர்கள் பொய்யர்கள்’னு ஒரு இந்தியன் சொல்றாப்ல…. இல்லியா?”
“பத்மநாபன் சார்…”
“புரியல….”
“இப்ப நீங்க சார். நான் உங்க மாணவி….” என்று கலகலத்தாள் அவள்.
அடைபட்ட தனிமையில் உள்ளம் சிரிப்பொடுங்கிக கிடந்தது. மூடி திறந்த ஆசுவாசத்தை, நெஞ்சு விரித்த சுவாசத்தை அவள் விரும்பினாள்.
மெல்ல அவள் கலகலப்புக்கு மீள்வதை அவன் உற்சாகத்துடன் வரவேற்றான்.
“எனக்குத் தமிழ் தெரியாதுன்னு தமிழில் சொல்றாப்ல….”
“நான் தூங்கிட்டிருக்கேன்றாப்ல….”
“கணவன் மனைவிகிட்டச் சொன்னானாம் – நான் எது சொன்னாலும் நீ மறுத்து மறுத்தே பேசறியேன்னானாம்…. அதெல்லாம் இல்லியேன்னாளாம் அவ…. பாத்தியா? இப்பவும் மறுத்துத்தானே பேசறேன்னானாம் அவன்….”
வெகு சுலபமாக, நீரில் உப்பு கரைவதுபோல அவனால் எந்தச் சூழலுக்குள்ளும் தன்னைக் கரைத்துக் கொள்ள முடிந்தது.
ஒருவேளை தன்னுள் பெரும்சோகத்தைச் சுமந்து திரிகிறவன், அவளைப் போல தானும் சிறு ஆசுவாசத்துக்கு…. புதிய காற்றுக்கு உள்ப்புழுக்கத்தில் தவித்திருக்கலாம்.
அடாடா, இச்சில நாட்களுக்குள் எத்தனை பெரிய பெரிய அனுபவங்கள் என்னுள் நிகழ்ந்து விட்டன.
ஒரு பறவை சிறகு விரிக்கக் கற்றுக் கொண்டாற்போல…. திடீரென ஒரு வானம் எனக்கு விரியத் திறந்து விட்டது…..
அப்பா சொல்கிறபடி சொர்க்கவாசல் திறந்தாற் போல….
லைஃப் இஸ் டூ ஷார்ட் டு பி ஸ்பென்ட் ஒரியிங்…. என்று எப்போதோ கேட்டது ஞாபகம் வந்தது. அது எத்தனை நியாயமானது.
பள்ளியில் வாசித்திருக்கிறாள் – பாரதி சொன்னானே…. சென்றதினி மீளாது மூடரே…. அது எத்தனை நிஜம்.
அதெல்லாம் வாழ்க்கையில் உரசிப் பார்க்க உதவும், என்பதே தெரியாது!
முந்தைய சூழலில், அதாவது முதலாளி வீட்டுத் திருமணத்துக்கு முன்போ வெனில், அப்புதிய மனிதனுடன் நான் இத்தனை இதமான நட்புடன் இத்தனை மனம்விட்டுப் பேசவும், கலகலக்கவும், பயமற்று வெளிக் கிளம்பி உலாவ வரவும் சாத்தியமே யில்லை அல்லவா?
அந்தத் திருமண நாள்…. அந்தப் பந்தலுக்குள் நுழையவே நான் எத்தனை பதட்டப் பட்டேன். வெட்கப் பட்டேன். சங்கடப் பட்டேன்….
அப்பெருங் கூட்டத்தில் எனக்குக் கிடைத்த அங்கீகாரம்…. ஆ, அதுதான் விஷயம்.
அது எனக்குத் தந்த தன்னம்பிக்கை…. என்னை நிமிர்த்திய விநாடிகள் அவை. தமிழ்ப் பண்பாடு, என்று என்னவோ பிதற்றிக் கொண்டு, போர்த்திக் கொண்டு, தயங்கிக் கொண்டு, வெட்கிக் கொண்டு, தடுமாறிக் கொண்டு….
நான் விடுபட்டு விட்டேன் இவற்றில் இருந்து. சுதந்திரப் பட்டு விட்டேன்.
என்றாலும் தங்கைகள்…. அப்பா…. அம்மா…. எல்லாரும் இன்றும் அப்படியே, வாழ்க்கையெனும் கபடிப் போட்டியில், தம் தம் எல்லைக் கோட்டைத் தாண்ட முடியாதவர்களாய்த்தான் இருக்கிறார்கள்.
“அப்பா இப்போதைக்கு முழித்துக் கொள்ள மாட்டார். டிரைவரை உட்காரச் சொல்லிச் சொல்லி விட்டு வந்திருக்கிறேன்….” என்றான் பத்மநாபன்.
“நாம் இதோ புல்வெளியில் சிறிது உட்காரலாம்.”
அதிகம் இவன் ஆங்கிலத்திலேயே பேசுகிறான் என நினைக்கிறாள் அவள். பாஸ்கர் முடிந்தவரை தமிழில் பேசினான்…. என்று திடீரென்று ஞாபகம் வந்தது. தனியே தித்திப்பாய்க் கழித்த அந்த மாலைதான் எத்தனை இதமாய் ரம்மியமாய் இருந்தது.
புல்வெளியில், பத்மநாபனின் அருகில் அமர்ந்த கணங்களில் அவளில் இருந்து அடக்க மாட்டாமல் பாஸ்கரின் நினைவுகள் வட்டவட்ட அலைகளாய்ச் சலனப்பட்டுச் சிதறுகின்றன.
நடுவே சிறு கல்லாய் முங்குகிறவள் அல்ல, மேலே வருகிறாள் அவள்.
முங்க முங்கத் திணறுகிறவள் அல்ல அவள்…. மூழ்குதல் சுலபம். இப்போது இப்படி நினைவுகள் மேலெழுந்து வருவதுதான் மூச்சுத் திணறலாய் இருந்தது….
சட்டென்று தாமாகவே அவர்கள் பேச்சொடுங்கிக் கிடந்தார்கள்.
இதுவரை நிகழாததோர் அந்தரங்க உணர்வு அவளை அழுத்தித் திக்கு முக்ககாட்டுவதை அவனால் உணர முடிந்தது. உண்மையில் அப்போது அவன்தான் அவளை அருகே அப்படி அமரச் சொன்னான் என்றாலும், அதைச் செய்திருக்க வேண்டாமோ என்று சட்டென்று அவனது அறிவு எச்சரித்தது.
எனினும் அவன் சொல்லிவிட்ட நிலையில், அவளும் அதை ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், இனி பின்வாங்குதல் என்பது முடியாது.
டூ எர்லி டு கோ டு தி நெக்ஸ்ட் எபிஸோட்! காலம் தரவேண்டும் ஒத்தடம், மன இணக்கம்…
எப்படியும் இந்த ஒரு நிலை…. பாஸ்கரை நினைவு கூர்கிற கணங்கள் அவளில் நிகழ்ந்தே தீரும்.
அவன் பாஸ்கரின் அன்புத் தம்பி. அவள்…. அவனது அருமையான சிநேகிதி.
அவனுடன் அவள் பாஸ்கருக்கான அஞ்சலியைச் செய்தாக வேண்டும்தான்.
சுமை இறக்குதல் போல. அதையும் எத்தனை சீக்கிரம் செய்துவிட்டாலும், அது நல்லதுதானே, அல்லவா?
அதுவரை மனசு வேடிக்கைபோல வெளிவிளையாட்டு காட்டினாலும் உள்ளூற சற்று கலங்கிக் கொண்டுதான் இருந்தது போலிருக்கிறது.
மேகம் மெல்ல உருத்திரண்டு, வயிறு பெருத்து, சூலிறக்கி, மழைக்குத் தயாராகிக் கொண்டு வந்திருக்கிறதா…
அவள் தன்ଭவீட்டிற்குச் செல்வதையே கூட அதனால் தவிர்த்திருக்கக் கூடும்.
முற்றிலும் புது மனிதர்கள் புழங்குகிற சூழலில் அவள் அழ முடியாது. அப்படியே அதைத் தாண்டி விட்டாலும் நல்லதுதான், என அவள் நினைத்திருக்கலாம்….
என்றாலும் பாஸ்கரின் தந்தையையும், தம்பியையும் வைத்துக் கொண்டு அதெப்படி சாத்தியமாகும்?
பூனையை மடியில் வைத்துக் கொண்டு சகுனம் பார்ப்பது போலத்தானே அது?
முடிந்தவரை தனியான சுதந்திரமான நிமிடங்களாய் அவன் அவளுக்கு வழங்கினான்…
மனசு திடுக்கென விழித்துக் கொண்டாற் போலிருந்தது அவளுக்கு.
அவனோ இத்தனைநாள்த் துயரத்தை அணுஅணுவாகத் தன் வீட்டில் அனுபவித்தவனாய் இருக்கிறான்….
தினந்தோறும் புதுப் புது மனிதர்களிடையே தன் அண்ணனைப் பற்றிய துயர சம்பவத்தை, கடும் நிமிடங்களைத் திரும்பத் திரும்பப் பேசியிருக்கிறான்.
அவள் இத்தனை நேரம் தன்னையே பிடிவாதமாய் மூடிக் கொண்டிருந்தவள்.
அவளாகவே மூடிக் கொண்டிருந்தவள்…. யாரிடமும் இதுவரை பகிர்ந்து கொள்ளாமல் உள்ளே கனமாக அழுந்திக் கிடந்த உணர்வுகள்…. வீட்டிலானால் அது பெரிதாய் வெடித்து நான்கு சுவர்களிலும் முட்டிமோதி ரத்த ரத்தமாய் வெடித்திருக்கும்.
அவளைவிட வீட்டில் அவனைவருமே அதைத் தாளொணாத வேதனையென அங்கீகரித்து, அடிப்பெண்ணே, உனக்கு இத்தனை கிட்டத்தில் வாய்ப்பு வந்தும் தட்டிப் போய்விட்டதே, என்று கட்டிக் கொண்டு கதறித் தீர்த்திருப்பார்கள்…..
– அதிர்ஷ்டத்துக்கும் துரதிர்ஷ்டத்துக்கும் என்ன வித்தியாசம்…. என்று ஒருத்தன் கேட்டானாம்.
…. அதற்கு மற்றவன் சொன்னானாம் –
– ஒருத்தனுக்கு விமானத்தின் பயணம் போக வாய்ப்பு வந்தால் -அதிர்ஷ்டம்.
பறக்கையில் அந்த விமானம் தீப்பிடிச்சிட்டா அது துரதிர்ஷ்டம்..
குதிக்க அவனுக்குப் பாராசூட் கிடைத்தால் அதிர்ஷ்டம்.
அட, குதிக்கும்போது அந்த பாராசூட் விரியாட்டி, அது துரதிர்ஷ்டம்.
கீழ வைக்கோல் புடைப்பு பார்த்தா அதிர்ஷ்டம்.
தவறிப்போய் அவன், வைக்கோல் புடைப்புல விழாம, கட்டாந்தரையில விழுந்தான்னா….
அதைப்போல, என் வாழ்க்கையிலும், மீண்டும் மீண்டும் அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் மாறிமாறி வருகிறதோ?
ரொம்ப நேரம் அவர்கள் அமைதியாய் உட்கார்ந்திருந்தார்கள்.
திடீரென அவர்களிடையே பேச ஏதுமில்லாதது போல் இருவருக்குமே தோன்றியது விசித்திரமாய் இருந்தது.
எல்லாரிடமும் அவன் தன் அண்ணனைப் பற்றிய பவித்ர நிமிடங்களை, தான் பத்திரப் படுத்திய நிமிடங்களைப் பகிர்ந்து கொண்டவன். அவ்விதமாகவே அவளிடம் இன்னும் நெருக்கமாக அவன் அவளிடம் அவற்றைப் பேசித் தீர்க்க வேண்டியவனாய் இருந்தான்.
அது அவளுக்குமே புரிந்தது.
ஆனால் அவளால் ஏனோ முடியவில்லை. நாத்தயக்கமாய் இருந்தது.
அவளைப் பொறுத்தவரை அவன் அந்நிய ஆடவனாய் இருந்தான். அவன் முன்னால் அவளால் பேசவோ, தன் அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொள்ளவோ, பாஸ்கரைப் பற்றிப் பேசவோ கூட முடியவில்லை.
அழ முடியவில்லை. இடைப்பட்ட மௌனமோ நிமிடத்துக்கு நிமிடம் கெட்டிப்பட்டுக் கொண்டே வந்தது. அதன் கனம் அதிகரித்துக் கொண்டே வந்தது.
சே, எல்லாம் வேடிக்கை போல, சுலபமாய்க் கடந்து விடும்…. என்றல்லவா நான் நினைத்திருந்தேன்….
அவளுக்குத் தலை வலிக்கிறாற் போலிருந்தது.
அவனோ அதற்கு ஒரு தீர்வு கண்டான்.
“ஜானகி?” என்று இதமாய்க் கூப்பிட்டான் அவன்.
அதுவரை அவளை அவன் பேர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. என்றாலும் அவன் அப்படிக் கூப்பிட்டது அவளுக்குப் பிடித்திருந்தது.
“ஜானகி?” என்றான் அவன்.
“நாம ஒரு காபி சாப்பிடலாம். எனக்கு ஒரு ஃபோன்கால் வர வேண்டியிருக்கிறது. வந்தால் ஆஸ்பத்திரி எண் தரும்படிச் சொல்லிவிட்டு வந்தேன்….”
எத்தனை அழகாய் நிமிடங்களைக் கையாள்கிறான் இவன்?
அத்தனை துக்கப் புரட்டலிலும் அவனை அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
அவனிடம் சட்டைப் பையில் செல்ஃபோன் இருந்தது. அவனைப் பிடித்தல் அத்தனை சிரமமான விஷயம் அல்லதான். என்றாலும் அவன் அவளைத் திகைப்பில் இருந்து விடுவிக்க அப்படிப் பேசியது அவளுக்குப் பிடித்திருந்தது.
தலையாட்டியபடி அவள் எழுந்து கொள்கிறாள்.
கிளம்பி வந்தபோது அவர்களிடையே கலந்து ஊடாடிய அந்த நெருக்க உணர்வு விலகி, இப்போது ஒரு வறட்சி வந்திருந்தது. எப்படி நிகழ்ந்தது இது தெரியவில்லை.
எனினும் இதுவும் இயல்பானதே, என்று தோன்றியது அவளுக்கு.
அவள் அழ விரும்பினாள் இப்போது. உள்ளே ஏதோ உசுப்பப் பட்டாற் போலிருந்தது. மிருகம் ஒன்று விழித்துக் கொண்டாப் போல…
அவன் முன்னால் அவளால் அழவும் முடியவில்லை.
அவர்கள் காபி அருந்தினார்கள். அப்போது அவளாகவே அவனிடம் சொன்னாள் –
“நான் இன்னிக்கு ஒருநாள் என் வீட்டுக்குப்போய் ராத்திரி தங்கிவிட்டு காலையில் வரட்டுமா?”
“அவசியம்…. அவசியம்….” என்று பரபரப்பாய்ச் சொன்னான். ”நீங்க இத்தனை உதவியா இருந்ததே பெரிசு. நான் உங்களுக்குக் கடமைப் பட்டிருக்கேன்….” என்று அங்கீகரித்தான் அவன்.
அவனிடம் இன்னும் சற்று இசைவாய் நடந்து கொள்ள வேண்டுமாய் மனசு சொல்லியது.
“நீங்கள் விரும்பினால் புகைக்கலாம்” என்றாள் ஆங்கிலத்தில்.
அதை அவன் மறுக்கவில்லை. உடனே ஏற்றுக் கொண்டு சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டான்.
அவள் அவனைப் பார்த்து, பிறகு புன்னகை செய்தாள். அவனும் புன்னகைத்தான். பின் “நன்றி” என்றான்.
>>>
நன்றி / பாக்யா டாப் 1 மாத இதழ்
தொ ட ர் கி ற து
- மௌனத்தின் அலறல்
- துண்டு துண்டாக்கப்பட்ட நான்கு பட்சிகளின் உடல்கள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5, காட்சி:1) ரோமாபுரிக்கு கிளியோபாத்ரா விஜயம்
- கணக்கதிகாரம் பேசும் சதுரங்க செய்திகள்
- உயிர்ப்புள்ள மனமும் மறதிப் பெருவெளியும்
- தாஜ் கவிதைகள்
- இட ஒதுக்கீடு, அரசியல் சட்டம், நீதி மன்றங்கள்: ஒரு கேள்வி பதில்
- பண்டைத் தமிழர்களின் அணு அறிவு – கணிதம் என்பது அறிவியல் மொழி- தூரம்
- கடிதம்
- வாணர்களும் விந்தியமலையும்
- வெங்கலராசன் வரலாற்றை முன்னிறுத்தி ஓர் ஆய்வு
- தந்தைமை என்னும் உணர்வு – “அப்பா”- ஈரானியத் திரைப்பட அனுபவம்
- கடித இலக்கியம் – 28
- காசும் கரியும் !
- National folklore support center
- இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் புதுமைகள்!
- கருமையம் நிகழ்ச்சி – தொடரும் முஸ்லிம்களின் அவலங்கள்
- அஞ்சலிக் கூட்டம் – ஏஜே என்னும் பேரறிவாளன்
- அலெக்ஸாண்டர் பாரத மண்ணில் தோல்வியை சந்தித்தான்
- பெண்கள் சந்திப்பு 2006
- மடியில் நெருப்பு – 9
- வைதீஸ்வரனின் கவிதைகள்
- உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம்?
- இலை போட்டாச்சு !
- நேற்று ! இன்று ! நாளை !
- பதஞ்சலியின் சூத்திரங்கள் – 1
- அவலம்
- கீதாஞ்சலி (96) – எனது பிரிவுரை!
- சிந்தனையில் சிலநேரம்
- பெரியபுராணம் — 109 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- பேசும் செய்தி – 5 :: பாஸ்டன் பாலாஜி
- நாலந்தாவின் மரணம் : வரலாற்றின் கண்ணீர்த்துளிகளிலிருந்து..
- இரவில் கனவில் வானவில் – 8
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 8