எஸ். ஷங்கரநாராயணன்
ஜானகியைப் பெண் கேட்டு வந்த இடம் பெரிய இடம். மாப்பிள்ளைப் பையனுக்கு பேங்க்கில் பெரிய ஆபிசர் உத்தியோகம்.
அப்பா இதை எதிர்பார்க்கவில்லை. பிறந்த மூன்றும் பெண்களாய்ப் போய்விட்ட நிலையில் அவரது பொறுப்புகள் அதிகமாகி யிருந்தன. குழந்தைகள் நன்றாய்ப் படித்தாலும் அவர்களை அவர்கள்திருப்திக்குப் படிக்க வைக்க அவருக்கு முடியவில்லை. இதுகுறித்து அவருக்கு வருத்தம்தான்.
“பரவால்லப்பா” என்றாள் ஜானகி அப்பாவைப் பார்த்துப் புன்னகைத்தபடி. என்றாலும் குழந்தைகள் அவர்சார்பில் வருத்தங்களைச் சுமப்பது அவரால் தாளவொண்ணாதிருந்தது. மனைவியிடம் அதைச் சொல்லி சமயங்களில் அழுவார்.
அவளது நல்ல மனசுக்குத்தான் இப்படி இடம் அமைந்தது என்று அப்பாவுக்கு சந்தோஷமாய் இருந்தது. ஜானகி போன்ற சூட்டிகையும் பொறுமையும் எந்தச் சூழலுக்கும் தன்னை இயல்பாகப் பொருத்திக் கொள்ளும் பாந்தத்துக்கும் எங்கே யிருந்தாலும் அவள் நன்றாய் இருப்பாள்.
மூன்று பெண்கள் என்ற நிலையில் அவரால் மூத்த பெண்ணை அதிகம் படிக்க வைக்க முடியாது போயிற்று. வீட்டுக்குப் பக்கத்திலேயே டைப்பிங் ஷார்ஹாண்ட் என்று ஏதோ படித்து சிறிய வேலையிலும் அவள் அமர நேர்ந்தது. ஒரு டிகரி வாசித்திருந்தால் அவளுக்கிருக்கிற திறமைக்கு எங்கோ இருக்கக் கூடும் என்றார்கள் எல்லாரும்.
மாப்பிள்ளை பாஸ்கரன் அவளை எதோ கல்யாணத்தில் பார்த்திருக்கிறான். அது இவளது முதலாளியின் இரண்டாவது மகளது திருமண நிகழ்ச்சியாய் இருக்கலாம்.
ஏனெனில் பொதுவாக அவள் எந்த வைபவத்துக்கும் போவதில்லை. ஞாயிறு ஓய்வுநேரங்களில் பக்கத்தில் உள்ள கோவிலுக்கு அம்மாவுடன் போய்வருவாள். அவ்வளவுதான்.
ஜானகி நன்றாய்ப் பாடுவாள். என்ன குரல் அவளுக்கு. முறையான சங்கீதம் பயின்றிருந்தால் அவள் எங்கோ உயரப் போயிருக்கக் கூடும், என நினைக்க அப்பாவுக்கு துக்கமாய் இருக்கும். ஐயோ இத்தனை அழகும் அறிவும் திறமையும் மிக்க இந்தக் குட்டி என் வயிற்றில் வந்து பிறந்திட்டதே என்று அப்பாவுக்கு நினைக்கவே அடைக்கும்.
அதிலும் வீட்டில் கொலுப்படி வைத்த நவராத்திரி நாட்களில் அவளது குரல் கனவென சுவர்களில் எதிரொலிக்கையில் அவருக்கு கர்வமும் சோகமும் ஒன்றாய் ஏற்படும்.
தூய எளிய மூன்றே மூன்று பருத்திப் புடவைகள். அதற்குப் பொருத்தமான சோளிக்குத் தானே எம்பிராய்டரி செய்து கொண்டாள் ஜானகி. கைகளில் ஆர்ப்பாட்டமில்லாத எளிய வளையல்கள். மூக்கு குத்தியது தனிசோபையைத் தந்தது. ஒரு குரோட்டன்ஸ் குடை. அதுவே அவளது ஆபிஸ் கிளம்பும் முறை.
தேவைகள் சார்ந்தது அவளது உலகம். ஆசைகள் சார்ந்ததல்ல . அவள் மனசில் என்ன இருந்தது? யாருக்குத் தெரியும்?
மாடியில் ஓய்வாய் அவரும் குழந்தைகளும் உட்கார்ந்து எதாவது பேசிக் கொண்டிருப்பது உண்டு. அப்பா ஹாஸ்யமாய்ப் பேசுவதில் வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் அவரது சிரிக்கிற இயல்பும், அதிரடியாய்த் தன்னையே கேலி செய்துகொள்கிற பாங்கும் எல்லாருக்கும் பிடிக்கும்.
“நான் மாரெங்கும் பட்டை பட்டையா விபூதி பூசிண்டு சந்தியா வந்தனம் பண்ண உக்காந்தேன்னா என் உடம்பா எக்ஸ்ரேயான்னே வர்றவனுக்கு சந்தேகமாயிடும்!” என்றார் ஒருநாள்.
பொதுவாகவே வெளியே உற்சாகமாய் வளைய வருகிறவர்கள் உள்ளூர சிறிது கவலை சுமந்துதான் திரிகிறார்கள்.
மாடியில், இரண்டு பக்கமும் ரப்பர் மாட்டிய பீடிங் பாட்டில் போன்ற நிலாத்துண்டின் வெளிச்சத்தில் சுற்றிலும் குழந்தைகள் சாப்பிட்டபடி அமர்ந்திருக்க, ஈசிசேரில் படுத்தபடி, அவர்கள் சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருப்பார். அநேகமாய் அப்போது அம்மாவும் கூட இருந்தால், அவள் கையில் பிசைந்து போடப்போட குழந்தைகள் ஆசையாய்ச் சுற்றி உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.
அவை மிகவும் நெகிழ்ந்த கணங்கள். நிலா மேகத்தில் முடங்கிவிட்டால் அப்பா உருவமும் அந்த ஈசிசேருக்குள் முடங்கிப்போகும். அப்போதுதான் அவர் எத்தனை ஒல்லியாய் ஷீணமாய் இருக்கிறார் என்று குழந்தைகளுக்குத் தெரியும்.
சாப்பாடானதும் தன் காலத்திய எதாவது ஹாஸ்ய நிகழ்ச்சியை அவர் நினைவு கூர்ந்து நகைச்சுவையாய்ச் சொல்வார்.
அவை ஓர் ஆண்மகனின் குறும்புகளாக இருந்தன. எனவே பெண்களுக்கு அவை புதிராகவும் புதிதாகவும் வேடிக்கையாகவும் கேட்க சுவாரஸ்யமாகவும் இருந்தன.
“அந்தக் காலத்துலயே நான் காதலிச்சவன் தெரிமோ?” என்று அப்பா ஒருநாள் குழந்தைகள் எதிர்பாராமல் ஒரு கதை சொன்னார். அதைக் கேட்க அம்மா முகத்தில் வெட்கம் பூசியது அந்த நிலாத்துண்டின் நீர்த்த ஒளியிலும் தெரிந்தது.
“எங்க ஓடறே?” என்று அப்பா அம்மாவைக் கையைப் பிடித்து அருகமர்த்திக் கொண்டார்.
“அன்னிக்கு வைகுண்ட ஏகாதசி. முந்தினநாள் பூராவும் ஒரு சுவாரஸ்யத்துக்கு தூக்கம் முழிச்சிருந்தேன். மறுநாள் பெருமாள் கோவிலுக்குப் போய் சொர்க்கவாசல் திறக்கறதைப் பார்த்தால் புண்ணியம் என்று போனேன்..” என்றவர்,
“அதெல்லாம் சும்மா.. அன்னிக்குக் கோவிலில் எக்கச்சக்கமான கூட்டம் வரும். வாலிபப் பசங்களுக்கு வயசுப் பெண்கள் நிறையப் பேரை ஒருசேரப் பார்க்கிற அபூர்வமான சந்தர்ப்பங்களில் அதுவும் ஒண்ணுதான் இல்லையா?…” என்று நிறுத்தினார்.
அதைக் கேட்க பெண்கள் எல்லாருக்கும் ஒரே சிரிப்பு. என்ன சிநேகமாய் அப்பா பேசுகிறார் என்றிருந்தது அவர்களுக்கு.
“சொர்க்கவாசல் இன்னும் திறக்கலை. வெளில ஒரே கூட்டம். எள்ளுப்போட இடம் இல்லை. ஆண்கள் பெண்கள் என்ற வர்ஜியமெல்லாம் போயாச்சி. ஒரே நெருக்கித் தள்ளுறான்கள். பெரியவங்களுக்கு சீக்கிரம் சொர்க்கவாசல் திறந்து இந்தக் கசகசப்புலேர்ந்து மீளலாமாய் இருந்தது. எங்களுக்கோ அந்தக் கூட்டம்தான் உற்சாகம். சொர்க்கவாசல் திறந்துட்டா அத்தனை கூட்டமும் கரைஞ்சிருமேன்னு அவனவனுக்கு வருத்தம்….”
“என்னங்க நீங்க. வயசுப் பெண்களை வைத்துக்கொண்டு கதை சொல்ற அழகைப் பார்” என்று எழுந்து கொண்டவளை, இப்போது பெண்கள் உட்கார வைத்துப் பிடித்துக் கொண்டார்கள்.
“இரும்மா. அப்பா உன்னைப் பத்தி என்ன சொல்றார்னு பாப்போம்…” என்றாள் மூன்றாம் பெண் ஸ்ரீவித்யா. அவளுக்குத்தான் இப்படி சட்டுச் சட்டென்று மனசைப் பேச வரும். அதற்கு அனுமதியும் உண்டு.
“அட அம்மாதானேப்பா உங்க காதலி? அதுவேற…. நான்பாட்டுக்கு அம்மாவை மூட்அவ்ட் பண்ணிறப் போறேன்….” என்று ஸ்ரீவித்யா தொடர, பெண்கள் அத்தனை பேரும் ஒருசேரச் சிரித்தார்கள்.
“சஸ்பென்ஸ்” என்றார் அப்பா.
”யாருக்கு? எங்களுக்கா, அம்மாவுக்கா?…”
“டியேய், கதை கேளு ஒழுங்கா… எங்க விட்டேன் கதையை?…. ம். பசங்களுக்கானா சொர்க்கவாசல் திறந்திருமோன்னு கவலை. ஏன்னா மத்தவங்களுக்கு சொர்க்கவாசல் திறந்தா உள்ள இருந்தது சொர்க்கம். எங்களுக்கு இதுவே சொர்க்கம். அந்த வாசல் எங்களை சொர்க்கத்துக்கு வெளியே அனுப்பினாப்லதான்…. இல்லியா?”
பெண்கள் சோழிகளைக் குலுக்கி வீசினாற் போலச் சிரித்துக் கலகலக்கிறார்கள்.
“திடீர்னு சொர்க்கவாசல் திறந்தது. கூட்டம் திமுதிமுன்னு உள்ளே நுழையுது. சுற்றிலும் பக்திப் பரவசம். ஆவேசம். வெங்கட்ரமணா . கோவிந்தா . பாலாஜி . பெருமாளே . என்று நாமசங்கீர்த்தனங்கள்…. திவ்யப் பிரபந்த ஒலிகள். எல்லாரும் உள்ளே சந்நிதியைப் பார்த்தபடி ஓட்டமும் நடையுமா ஓடறாங்க… நான் சுத்து முத்தும் பார்க்கறேன்…. அப்பதான் கூட்டத்தில் ஒரு அலைபோல என்னாண்டை ஒதுங்கினா அந்தப் பொண்ணு….”
“அம்மா…”
“சஸ்பென்ஸ்” என்றார் அப்பா .
”யாருக்கு சஸ்பென்ஸ், அதைச் சொல்ல மாட்டேங்கறீங்களே?”
”டீ சஸ்பென்ஸ் அம்மாவுக்கா இல்லியான்னு அம்மாவுக்கே இந்நேரம் தெரியாதா என்ன…”
”சஸ்பென்ஸ் எங்களுக்குன்னா, அது அம்மாதான். சஸ்பென்ஸ் காக்கா ஓஷ்…”
“சரி சரி, கேள் கதையை குட்டி…”
”எனக்கானா பரவசம் தாளலை. பாலாஜி… உன் கருணையே கருணைன்னேன் அவளையே பார்த்தபடி. எங்கோ இருந்த அவளை இந்தக் கூட்டத்தில் என்னாண்டை கொண்டுவந்து சேர்த்திருக்கிற உன் அருளை எண்ணி எண்ணி வியக்கறேன்…. ராத்திரி பூராத் தூக்கம் முழிச்சது வீண் போகல்லன்னு மனசில் பிதற்றறேன்…”
“அப்பா நீங்க கதையெழுதலாம்” என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்தாள் இரண்டாமவள் கீதா.
“நான் கதை எழுதின கதை இன்னொரு நாள் சொல்றேன். நான் எழுதின முதல் கதையைப் பத்திரிகை ஆபிசுக்கு அனுப்பின ஒரே வாரத்தில் போஸ்ட்மேன் எங்க வீட்டுக்கு வந்தான்…. இங்க யார் எழுத்தாளர் பஞ்சாட்சரம்னு கேட்டானா, எனக்கு ஒரே பரவசம். ஒரே துள்ளுத் துள்ளி நான்தான் சார்னு வெளில வந்தேன். என்ன சார் கதை பிரசுரமாயிருக்கான்னு கேட்டா, ஏந்தம்பி கதையை ஸ்டாம்ப் ஒட்டாம அனுப்பிச்சா எப்பிடி? பத்திரிகைக்காரன் ட்யூ கட்டி வாங்க மாட்டேன்னு திருப்பி அனுப்பிட்டான். இந்தா நீ ட்யூ கட்டி வாங்கிக்க”ன்னு கொடுத்திட்டுப் போயிட்டான்….”
“உங்க முதல் கதையோட தலைப்பு என்னப்பா?”
“சொர்க்கவாசல்”. அப்பா இடிஇடியென்று சிரித்தார்.
அவர் குழந்தைகளுக்குக் கதை சொல்கிறாரா தன்னைத் தானே ரசித்துச் சுவைத்துக் கொள்கிறாரா, என்று பசங்கள் சிரித்துக் கொண்டார்கள்.
“அதிகாலைக் குளியல் போட்டிருந்தாள். தலையில் அரப்பு போட்ட மணம் தூக்கியடிக்கிறது அந்தப் பெண்ணுகிட்டயிருந்து. சிறு கதம்பச் சரம். அதுவேற ஆளை அப்படியே தூக்கறது…”
அம்மா மீண்டும் எழுந்துகொள்ள முயல்கிறாள்.
“ஏய் அது அம்மாதான்” என்று ஸ்ரீவித்யா அம்மாவைக் கட்டிக் கொண்டது.
“கூட்டம் நெருக்கியடித்து முன்னால போறது. எல்லாரும் ஸ்வாமி சந்நிதி பார்க்க வேகவேகமாப் போனா நான் என் பக்கத்ல இவளைப் பார்த்தபடி மெதுவா, முடிஞ்சவரை மெதுவாப் போறேன். அதைவிட விசித்திரம் என்னன்னா…. உங்கம்மாவும் என் வேகத்தை அனுசரித்து, மெதுவாக் கூட வர்றா!”
“அட அம்மா” என்கிறாள் கீதா. எல்லாரும் அம்மாவைக் கட்டிக் கொள்கிறார்கள்.
நிலா மேகத்துக்குள் மறைய, சிறிது இருள் பூசுகிறது மொட்டை மாடியில்.
பச்சை மரங்கள் கருப்பு பூசிக்கொள்கின்றன. தூரத்தில் கருமை மலையாய்க் கெட்டிப்பட்டிருந்தது, திடீரென்று உருகி வழிந்து பூமியைக் கவிகிறது.
எல்லாக் குழந்தைகளும் அபூர்வமாய் வீட்டில் இருக்கிறார்கள். அப்பா புதுக் காற்றுக்கு மாடியேறவும், குழந்தைகளுக்கு ஒண்ணாய்ச் சாதம் போட அம்மா பிரியப்பட்டதும், காலம் கோலம் போட்டுக் கொள்கிறது…
இப்படி சுவாரஸ்யமான இரவுகளில்தான் கதைகள் பேச முடிகிறது. சற்று குளிரான இரவுகள். வெப்ப இரவுகளில் பேச இத்தனை சுவாரஸ்யம் வாய்ப்பதில்லை. வியர்வை ளியேறிய அலுப்பான தருணங்கள் அவை. அப்போது அப்பாவுக்கும் அந்த உற்சாகம் இருப்பதில்லை.
சிறு ஆசுவாசம் போல, அப்பா நிறுத்தினார். கதை அப்பாவுக்கு சுவாரஸ்யமா, குழந்தைகளுக்கா, என்பதே தெரியவில்லை…
அப்பாவுக்குக் கிறுகிறுப்பாய் இருந்தது, என்ன நாள் இது, மகத்தான நாள், ஆனாலும் இந்தப் பெண், இதற்கு என்ன தைரியம், என ஆச்சரியம்.
தான் ஆண் என்கிற ருசிதட்டுகிறது உள்ளே. ஆணும் பெண்ணுமான உலக அங்கீகாரமாய்த் தானே உள்ளே பரபரக்கிறது.
முழுக்க உலகமே காணாமல் போயிருந்தது. பஞ்சாட்சரம் மற்றும் ஒரு இளம் பெண் … உலகத்தில் இருவரே.
கனவு சுனாமிபோல அவர்களைத் தத்தெடுத்திருந்தது.
”என்னப்பா திடீர்னு மௌனமாயிட்டேள்? கனவு காணறேளா?” என்றாள் வித்யா. அப்பா புன்னகைத்தபடி தொடர்ந்தார்.
“எனக்கு திடீர்னு ஒரு சந்தேகம். கூட்டம் நெருக்கறதுனால வர்றாளா, இல்ல நம்மகூட இஷ்டப்பட்டு வர்றாளா தெரியல்லியேன்னு ஒரு குழப்பம். நான் சட்டுனு என் வேகத்தை அதிகப்படுத்தினா… அவளும் விறுவிறுன்னு கூட வர்றா. நான் மெதுவா வந்தா… அவளும் மெதுவா வர்றா…”
“அப்பா எனக்கு விசில் அடிக்க சொல்லித் தாங்கப்பா” என்றது வித்யா. “இப்ப எனக்கு விசிலடிக்கணும் போல்ருக்கு.”
“சொர்க்கவாசல் வந்திட்டது…. அப்பதான் அவ பேசினா….”
“அம்மா அப்பாவிடம் பேசிய முதல் டயலாக் என்ன?” என்கிறாள் கீதா.
“பாலாஜி…ன்னு அம்மா கன்னத்துல போட்டுக்கறா. நான் சொன்னேன்… என் பேர் பாலாஜி இல்லை… பஞ்சாட்சரம். எல்லாரும் என்னை பஞ்சுன்னு கூப்பிடுவா.”
“இப்பகூட நீங்க பஞ்சுமாதிரிதாம்ப்பா இருக்கீங்க. ஆளும் உங்க உடம்பும்!” என்று முதன்முறையாக ஜானகியும் கதையில் கலந்து கொள்கிறாள்.
நகைச்சுவையாகப் பேச எப்போதுமே பிரியப்படுவாள் ஜானகி. ஆனால் அவள் எவ்வளவுதான் முயன்றாலும், அதில் நகைச்சுவை மீறிய ஒரு துக்கம் வந்து ஒட்டிக்கொண்டு விடுகிறது.
“அவளுக்கானா சிரிப்பு தாளல்ல. உங்க பேரை யாரு கேட்டா. நான் ஸ்வாமி பேரைச் சொன்னேன்னா…
“நான், பரவால்ல இருக்கட்டும். நான் இப்ப கேக்கறேன்… உன் பேரென்ன?ன்னேன். அதுக்குள்ள அவனவன் முன்னாடி போங்க போங்கன்னு தள்ளறான்… நான் ஸ்வாமியே பாக்காம வெளில வந்திட்டேன்.”
“தம்பதி சமேதரா…” என்றாள் கீதா.
“சொர்க்கவாசல் திறந்துட்டது உங்களுக்கு, அலிபாபா குகை திறந்தாப்ல. திறந்திடு சீஸேம்….” என்று கத்தினாள் வித்யா.
“அப்பவும் கூடவே வரா உங்கம்மா. கொஞ்சம் கூட்டம் குறைஞ்சாப்ல இருந்ததோல்யோ. ஆசுவாசம் அவளுக்கு. என்னைப் பார்க்கத் திரும்பி…”
“ஹா…” என்கிறார்கள் மூவராய்.
“அவசரப்படாதீங்க குட்டிகளா. என்னைப் பார்க்கத் திரும்பி, குனிஞ்சாள்…
… … அப்பதான் நானே கவனிச்சேன். என் சட்டை பட்டன்ல அவ கூந்தல்நுனி மாட்டியிருந்தது. சட்னு உருவிக்கிட முடியாமல் அவ கூடவே வந்திருக்கா…
… … மெல்லப் பிரிச்சி எடுத்திண்டு, ஒரே ஓட்டமா ஓடிப்பிட்டா….”
“அம்மா!”
“ஆமா….”
“அட அம்மா, இத்தனை குண்டான நீ ஒல்லியான அப்பாவின் ஊசிக்காது மாதிரி இதயத்துக்குள் எப்பிடி நுழைஞ்சே?” என்று வித்யா கிண்டலடிக்கிறது.
“அப்ப அவ ஒல்லியா இருப்பா. நான் குண்டாயிருந்தேன். என் இதயத்துல ஓரத்துல தூரமணா மாதிரி அவ உக்காந்திண்டா.”
குழந்தைகள் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள்.
“கல்யாணத்துக்கப்பறம்…. நான் ஒல்லியாயிட்டேன். இவ பெருத்திட்டா ” என்று கதையை முடிக்கிறார் அப்பா.
ஃ
பாக்யா டாப் 1 மாதநாவல் இதழில் வெளியானது
தொ ட ர் கிறது
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:2)
- டோடோ: ஒரு இரங்கல் குறிப்பு
- முதுமை வயது எல்லோருக்கும் வரும்
- மீண்டும் அலைமோதும் அண்ணா நினைவுகள்
- அலன்டே & பினொச்சே – சிலி
- கீதாஞ்சலி (90) மரணம் கதவைத் தட்டும் போது!
- தி ஜ ர வுக்கு உரியன செய்யத் தவறினோம்: அவரது குடும்பத்தாருக்கேனும் உதவுவோம்
- சாம வேதமும் திராவிட வேதமும்
- ஓர் கலைஇலக்கியவாதியின் மத துவேஷம்
- கடித இலக்கியம் – 22
- தெள்ளிய மொழியில் தெய்வீகத் தேடல்கள்: தமிழ் உபநிஷத நூல்கள் குறித்து
- கல்வெட்டாய்வு: இந்திரப் பிரேத்து
- பட்டறை தயாரித்த பரமார்த்த குரு
- நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை
- ஆணிவேர் திரைப்படம் வெளியீடு
- கடிதம்
- சாலைகள் வளைந்து செல்கின்றன- பாரசீக வளைகுடாவிலிருந்து அரபிக்கடலுக்கு (மனைவிக்கு ஓர் கடிதம்)
- சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, சூடாகும் கடல்நீர், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-10 [கடைசிக் கட்டுரை]
- வஞ்சித்த செர்னோபில்
- என் கவிதை
- பெரியபுராணம் — 104 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (74 – 112)
- தன் விரல்களை துண்டித்த சூபி
- எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது..- கமலா சுரையா
- தெளகீது பிராமணர்களின் கூர் மழுங்கிய வாள்களும் வெட்டுப்பட்ட சில பண்பாட்டுத் தலைகளும்
- ஜிகாத்தும் தலித் விடுதலையும், முயற்சித்தலும் மூடி மறைத்தலும்
- கையறு காலம்
- மடியில் நெருப்பு – 3
- இரவில் கனவில் வானவில் – 1