இரண்டு வார விடுமுறை

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

தமிழாக்கம் : கௌரிகிருபானந்தன்


சிகாகோ,
மார்ச்,1997,

அன்புள்ள அப்பாவுக்கு,
வணக்கத்துடன் எழுதிக்கொள்வது. அப்பா! நான் சிகாகோவுக்கு வந்தது முதல், குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது கடிதம் எழுதிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் உங்களுக்கு வேதனையைத் தருவதில் விருப்பம் இல்லாததால் சில விஷயங்களை உங்களிடம் சொல்லவில்லை. எனக்கு உதவி செய்ய முடியாத நிலையை குறித்து மேலும் வருத்தப்படுவீங்களே என்றுதான் அப்படிச் செய்தேன். ஆனால் இப்போ எனக்கு வந்த இடைஞ்சல்கள் எல்லாம் நீங்கிவிட்டன. இப்போ நான் நிம்மதியாக இருக்கிறேன். நடந்த விஷயங்களைப் பற்றி உங்களுக்கு விவரமாக சொல்ல வேண்டும் என்றுதான் இந்தக் கடிதம் எழுதுகிறேன்
மூன்று வருடங்களுக்கு முன் நான் இங்கே வந்து சேர்ந்த போது என்னுடைய அதிருஷ்ட்த்தை நினைத்து ரொம்ப பூரித்துப் போனேன். கடிதங்களில் நான் எழுதியிருந்த விஷயங்கள் கொஞ்சம் கூட மிகையில்லை. என் கணவர் ஸ்ரீநாத்துக்கு நல்ல வேலை. சிகாகோவில் பெரிய வீடு. எங்கே போனாலும் காரில் பயணம். தெலுங்கு அசோசியேஷனுக்கு அவர் செகரெட்ரி. நிறைய பேருடன் அறிமுகம். பார்ட்டீக்கள், பிக்நிக்குகள். நம் ஊரில் இருப்பதைவிட பத்து மடங்கு அதிகமாக இசை கச்சேரிகள், கூச்சிப்பூடி நாட்டிய நிகழ்ச்சிகள். சனி, ஞாயிறுகள் மிக வேகமாக கழிந்துப் போய்க் கொண்டிருந்தன. என் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஒரு வருடத்தில் இந்த வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டுவிட்டேன்.
ஆனால் இத்தனை சொத்து சுகம் இருந்தும் ஏதோ ஒரு குறை இருப்பது போல் உணர்ந்தேன். அக்கம் பக்கத்தில் பேசுவதற்கோ, சந்திப்பதற்கோ நம் ஊர் மக்கள் யாருமே இல்லை. பகல் முழுவதும் அந்தத் தெருவிலேயே யாரும் வீட்டில் இருக்க மாட்டார்கள். நாள் முழுவதும் வீட்டிலேயே இருப்பது எனக்கு கஷ்டமாக இருந்தது. நாள் முழுவதும் உழைத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேரும் என் கணவருக்கு மாலை வேளைகளில் வெளியில் போகணும் என்றால் அலுப்பாக இருக்கும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தவிர யாரையும் சந்திக்கும் வாயப்பே இருக்காது எனக்கு. யார் வீட்டுக்காவது போய் வரலாம் என்றால் தெரிந்தவர்கள் எல்லோரும் பத்து, இருபது மைல் தூரத்தில் இருந்தார்கள். கார் இல்லாமல் எங்ககேயும் போகவும் முடியாது. பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் அவ்வளவு நல்லது இல்லை என்று என் கணவர் சொல்லிவிட்டார். ஏதாவது வேலைக்கு, சின்ன வேலையாக இருந்தாலும் சரி போகட்டுமா என்று என் கணவரிடம் கேட்டேன்.
“தெலுங்கில் எம்.ஏ. பாஸ் செய்தவளுக்கு என்ன வேலை கிடைக்கும்?” என்றார் அவர்.
உண்மைதான்! என் ஆங்கில அறிவும் சுமார்தான். வேலை கிடைப்பது கஷ்டம்தான்.
“இருந்தாலும் உனக்கு வேலை பார்க்க வேண்டிய தலையெழுத்து என்ன?” என்றார்.
அவருடையது நல்ல வேலை. நான் வேலைக்குப் போகணும் என்ற அவசியமே இல்லைதான். இருந்தாலும், எப்போதும் வீட்டிலேயே கிடப்பதைவிட ஏதோ ஒரு வேலையை செய்ய வேண்டும் என்று தோன்றியது. வேலை கிடைக்காது என்றால் போகட்டும். மேற்கொண்டு ஏதாவது படிக்கலாம் என்று நினைத்தேன். இந்த நாட்டில் வயது வரம்பு இல்லாமல் என்ன கோர்ஸ் வேண்டுமானாலும் படிக்கலாம். பெரிய கல்லூரிகளில் சேருவதற்கு வசதி இல்லாதவர்கள் கம்யூனிடீ காலேஜுகளில் சேர்ந்துக் கொள்ளலாம். எங்கள் வீட்டிலிருந்து அரைமைல் தொலைவில் அப்படி ஒரு கல்லூரி இருந்தது. அங்கே ஏதாவது கோர்ஸில் சேரலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் என் இந்த விருப்பம் கூடக் கூட, என் கணவருக்கு என் மீது வெறுப்பு அதிகமாகிக் கொண்டே போயிற்று. வேலைக்குப் போக வேண்டுமென்பதற்காகத்தான் நான் படிக்கணும் என்று நினைப்பதாக அவர் நம்பினார்.
“வேலைக்கு போகும் மனைவிதான் வேண்டும் என்றால் எந்த டாக்டரையோ, கம்ப்யூட்டர் இன்ஜினியரையோ கல்யாணம் செய்திருப்பேனே? போயும் போயும் எம்.ஏ.தெலுங்கு இலக்கியம் படித்தவளை எதுக்கு?” என்றார். “இரண்டு வாரம்தான் விடுமுறை கிடைத்தது. இல்லாவிட்டால் வேறு நல்ல வரன் பார்த்து முடிவு செய்திருக்கலாம்” என்று தன்னையே நொந்துக் கொண்டார்.
அப்பா! நீங்க எப்போதும் எல்லாவற்றையும் விட சிறந்த சொத்து சுயகெளரவம் என்று சொல்வீங்க. “உன் கால்களில் நீ நிற்கவேண்டும்” என்று சொல்வீங்க.தெலுங்கு இலக்கியம் எம்.ஏ. படிக்க வைத்தீங்க. நம் நாட்டில் இருந்திருந்தால் ஏதாவது வேலை கிடைத்திருக்கும். உங்கள் விருப்பம், என் விருப்பம் இரண்டும் நிறைவேறியிருக்கும். ஆனால் பணக்காரன் என்றும், அமெரிக்காவில் நல்லவேலையில் இருப்பவன் என்றும், வரதட்சணை கேட்கவில்லை என்றும் ஸ்ரீநாத்துக்கு என்னைத் திருமணம் செய்து வைத்தீங்க. இங்கே என் படிப்பு எதற்கும் லாயக்கு இல்லாமல் போய்விட்டது. சில சமயம் உங்கள் மீது எனக்குக் கோபம் கூட வந்தது உண்டு. பெரியப்பாபவின் மகள்கள் இருவரும் எந்த பிரச்னையும் இல்லாமல் குடித்தனம் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அதிகமாக படிக்கவும் இல்லை. எந்த இடைஞ்சல்களும் இல்லை. எங்கே போனாலும் என்னையும் அழைத்துக்கொண்டு போவீங்க. இல்லாத யோசனைகளை என்னுள் புகுத்தியிருக்கீங்க என்று நினைத்துக் கொள்வேன்.
ரொம்ப நேரம் வாதவிவாதம் புரிந்த விறகு நான் கம்யூனிடீ காலேஜில் சேருவதற்கு அவர் சம்மதித்தார். கம்ப்யூட்டரில் வேலை செய்ய கற்றுக் கொள்ளும் கோர்ஸில் சேர்ந்தேன். வர்ட் பிராஸஸிங் கற்றுக் கொடுத்தார்கள். முதல் கோர்ஸ் முடியும் போதே எங்க காலேஜில் ஸ்டாக் அடெண்டண்ட் வேலை காலியிருப்பதாக அறிவித்தார்கள். ரொம்ப சின்ன வேலை. லைப்ரரியில் புத்தகங்களைப் படித்துவிட்டு அப்படியே மேஜை மீது போட்டுவிட்டு போவார்கள். மறுபடியும் அவற்றை சரியான இடத்தில் வைப்பதுதான் அந்த வேலை. காலேஜில் வேலை பார்ப்பவர்கள் அங்கேயே ஏதாவது கோர்ஸ் இலவசமாக எந்த கோர்ஸ வேண்டுமானாலும் படிக்கலாம் என்று சொன்னார்கள். ஸ்ரீநாத்திடம் சொல்லாமலேயே அந்த வேலைக்காக அப்ளிகேஷன் போட்டேன். அங்கேயே படித்துக்கொண்டிருப்பவள் என்பதால் அந்த வேலையை எனக்கே கோடுத்தார்கள்.
வேலையில் சேர்ந்த அன்று ஸ்ரீநாத்திடம் சொன்னேன்.
“வேலை பார்க்க வேண்டிய தலையெழுத்து என்ன வந்தது? சும்மா பொழுது போகவில்லை என்று சொன்னதால் காலேஜில் சேருவதற்கு ஒப்புக்கொண்டேன்” என்றார் அவர்.
உண்மைதான். என் வேலைக்கு சம்பளம் வருடத்திற்கு பதினைந்தாயிரம் டாலர்கள். அவருடைய சம்பளத்தில் ஆறில் ஒரு பங்கு. ஆனால் என் வேலையைக் காப்பாற்றிக் கொள்ளணும் என்ற விருப்பம் என்னுள் பலமாக இருந்தது.
அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. ரொம்ப சண்டை போட்ட பிறகு “உன் தலையெழுத்து!” என்று சொன்னார்.
எதிர்பாராமல் எங்களுடைய வாழ்க்கையில் மாற்றம் வந்துவிட்டது. இவருடைய கம்பெனியை வேறொரு பெரிய கம்பெனி விலைக்கு வாங்கிவிட்டது. ரொம்ப பேரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள். ஸ்ரீநாத்தையும், மேலும் சிலரையும் க்ளீவ்லேண்ட் என்ற ஊரில் வேலை பார்க்க விருப்பமா? இல்லை இந்த ஊரிலேயே இருக்க நினைக்கிறீங்களா என்று கேட்டார்கள். அங்கே போனால் பிரமோஷன் என்று இல்லாவிட்டாலும் சிறிய அளவில் சம்பள உயர்வு, மற்ற வசதிகள் கிடைக்கும். போய்த்தான் ஆகணும் என்ற கட்டாயம் இல்லை. ஆனாலும் ஸ்ரீநாத் போகணும் என்று முடிவு செய்தார். அந்தச் சூழ்நிலையில் எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பெரிய படிப்பு படித்தவள் இல்லை. வேறு ஊருக்குப் போனால் அங்கே எனக்கு இந்த படிப்பு, வேலை கிடைப்பது சுலபம் இல்லை. இங்கே ஏதோ அதிர்ஷ்டம் இருப்பதால் இரண்டும் ஒன்றாக கிடைத்தன. கார் இல்லாவிட்டாலும் அரைமைல் தூரம்தான் என்பதால் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தேன். ஆனால் க்ளீவலேண்டில் என்னைப் போன்றவளுக்கு எப்படிப்பட்ட வாய்ப்புகள் இருக்குமோ தெரியாது இல்லையா.
என் தயக்கங்களைப் பற்றி அவரிடம் சொன்னேன். அவருக்கு ரொம்ப கோபம் வந்துவிட்டது. வாய்க்கு வந்தபடி பேசினார். என்னுடைய வாழ்க்கைதான் எனக்கு முக்கியம் என்பதுபோல் நடந்து கொள்கிறேன் என்றும், அப்படி இருப்பவள் இந்தியாவிலேயே இருந்திருக்கணும் என்றும் சொன்னார். தன்னுடன் க்ளீவ்லேண்டிற்கு வரவில்லை என்றால் டைவோர்ஸ் தரப்போவதாக சொன்னார்.
என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை. வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. முதல் கோர்ஸ் முடிந்து இரண்டாவது கொர்ஸில் செர்ந்திருந்தேன். படிப்புக்காக எந்த செலவும் இருக்கவில்லை. எனக்குக் கிடைத்த சின்ன வாய்பபை நழுவவிடுவது கஷ்டமாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் “ஒரு வருடம் பொறுத்திருங்கள். பிறகு க்ளீவ்லேண்ட் போகலாம்” என்று சொன்னேன்.
அவருடைய கோபம் உச்சத்தைத் தொட்டது. வீட்டை விற்கப் போவதாகவும், இந்த ஊரில் நான் இருக்கணும் என்று நினைத்தால் என் வழியை நான் பார்த்துக் கொள்ளணும் என்றும், எங்கே இருப்பாயோ, என்ன செய்வாயோ உன் விருப்பம் என்றும் சொன்னார். நான் வேலை பார்க்கும் கம்யுனிடீ காலேஜில் என்னுடன் படிக்கும் பெங்காலி பெண் ஒருத்தி இருந்தாள். பெயர் கிரண்மயி. அவளுடைய வீடு பெரியது என்றும் அவர்கள் வீட்டில் ஒரு அறையில் வாடகைக்கு இருக்கலாம் என்றும் சொன்னாள். அவர்கள் வீடும் கல்லூரிக்கு அருகில்தான் இருந்தது. கிரண்மயியை எனக்கு நன்றாகத் தெரியும். அதனால் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டேன். ஸ்ரீநாத் க்ளீவலேண்டுக்குக் கிளம்பிப் போன அன்றே நான் கிரண்மயியின் வீட்டிற்கு குடிபோய் விட்டேன். எங்கள் வீட்டை ஸ்ரீநாத் விற்பதற்காக போர்ட் வைத்தார்.
அவருடன் க்ளீவலேண்டிற்கு போகாதது எனக்கே என் மீது வெறுப்பு ஏற்பட்டது. அவர் என்னை தினமும் போனில் அழைத்து பேசத் தொடங்கினார். தினமும் ஹோட்டலில் சாப்பிடுவது கஷ்டமாக இருக்கு என்றும், நான் உடனே வந்து விட்டால் நல்லது என்றும் சொன்னார். பத்து நாட்களுக்குள் ஏதாவது ஒரு முடிவுக்கு வரச் சொல்லியும், க்ளீவ்லேண்டிற்கு வராத பட்சத்தில் உண்மையாகவே எனக்கு டைவோர்ஸ் கொடுக்கப் போவதாகவும் பயமுறுத்தினார்.
இரண்டு வாரங்களில் அவருடைய போக்கு கடினமாக மாறியது. உடனே க்ளீவ்லேண்ட் வந்தால் சரி, இல்லாவிட்டால் என் காலேஜ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப் போவதாகவும், விவாகரத்து கொடுக்கும் பேச்சே இல்லையென்றும், சிகாகோவுக்கு வந்து என்னை கொன்றுவிடுவதாகவும் போனில் மிரட்டினார்.
அவர் அப்படியெல்லாம் பேசுவார் என்று கனவில் கூட ஊகிக்க முடியாத நான் கிரண்மயியிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன்.
எதுக்கும் நல்லது, போலீஸாரிடம் இந்த விஷயத்தை சொல்லிவிடு என்றாள். போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் ஆபீஸரிடம் சொன்னேன்.
“கேஸ் எழுதிக் கொள்ளட்டுமா?” என்று கேட்டார் ஆபீஸர்.
அவர் மீது கேஸ் போடுவதற்கு என் மனம் ஒப்பவில்லை. ஏதோ கோபத்தில் அப்படிச் சொல்லியிருப்பார் என்றேன்.
“உங்கள் விருப்பம்” என்றார் அவர்.
ஒரு வாரம் கழித்து லைப்ரரி மேனேஜர் டேவிட் என்னை தன் ஆபீஸ¤க்கு அழைத்தார். ஸ்ரீநாத் கடிதம் எழுதியிருக்கிறாராம். என்னைப் பற்றி ரொம்ப தரக்குறைவாக எழுதியிருக்கிறாராம். என்னுடைய நிலைக்கு தான் ரொம்ப வருத்தப் படுவதாகவும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேட்கச் சொல்லியும் டேவிட் சொன்னார். அவருடைய வார்த்தைகள் எனக்கு மிகுந்த தைரியத்தை அளித்தன.
ஸ்ரீநாத் என்னை தினமும் போனில் அழைத்து மிரட்டத் தொடங்கினார். நான் இல்லாவிட்டால் கிரண்மயியை, அவளுடைய பெற்றோர்களை கூப்பிட்டு வாய்க்கு வந்தபடி பேசுவார். என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விடச் சொல்லியும், இல்லாவிட்டால் தன் திருமணம் நாசமாவதற்கு அவர்கள் காரணமாவார்கள் என்றும் மிரட்டினார்.
போலீஸாரிடம் எல்லா விஷயங்களையும் சொல்லிவிடுவது நல்லது என்று தோன்றியது. கிரண்மயியின் தாய்க்கு உஷா என்ற பெண்மணியைத் தெரியும். அவளும் தெலுங்குக்காரிதான். குடும்பங்களில் கொடுமைக்கு ஆளாகியிருக்கும் இந்தியப் பெண்களுக்கு உதவி செய்வதற்காக அந்த அம்மாள் ஒரு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறாள். ஒரு நாள் நானும் கிரண்மயியும் அவளைப் பார்ப்பதற்காக போனோம்.
அவள் என்னை அன்போடு நடத்தினாள். ரொம்ப நாளாக அறிமுகம் இருக்கும் சிநேகிதியைப்போல் பேசினாள். “நீ என்ன செய்வதாக இருக்கிறாயோ சொன்னால் என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்” என்று சொன்னாள்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது பாதுகாப்பு என்றும், அவரால் எனக்கு எந்த விதமான ஆபத்தும் வராமல் தடுப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று கேட்டேன். முழு பாதுகாப்பு யாராலும் தரமுடியாது என்றும், ஆனால் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் பாதுகாப்புக்காக ப்ரொடெக்ஷன் ஆர்டர் வாங்கிக் கொள்ளமுடியும் என்றும் உஷா சொன்னாள். ப்ரொடெக்ஷன் ஆர்டர் என்றால் என்னிடமிருந்து தொலைவாக இருக்கணும் என்று அவருக்கு போலீஸார் கொடுக்கும் நோட்டீஸ். உஷா என்னுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து உறுதுணையாக இருந்தாள்.
இந்த ஆபத்து தப்பிவிட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே இரண்டு வாரங்கள் கழித்து கோர்ட்டிலிருந்து நோட்டீஸ் வந்தது. ஸ்ரீநாத் என்னிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று கேஸ் போட்டிருந்தார். அது மட்டுமே அல்லாமல், நான் அமெரிக்காவுக்கு வருவதற்கு திருமணத்தை ஒரு வழியாக பயன்படுத்திக் கொண்டேன் என்ற குற்றச்சாட்டை சுமத்தி, என்னை இந்த நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் புகார் செய்தார். டைவோர்ஸ் தரப்போவதாக சொன்னதற்கு நான் பயப்படவில்லை. ஆனால் என் மீது அநியாயமாக குற்றம் சுமத்தியதற்குக் கோபம் வந்தது. இரண்டுவார விடுமுறையில் இந்தியாவுக்கு வந்து, ஐந்து இடங்களில் பெண்பார்த்து விட்டு. அதில் என்னைத் தேர்ந்தெடுத்துவிட்டு இரண்டே நாளில் முகூர்த்தம் வைக்கச்சொல்லி, திருமணத்தை முடித்துக்கொண்டு, திருமணம் ஆன மூன்றாவது நாளே அமெரிக்கா திரும்பிப் போன மமனிதர், நான் அமெரிக்கா வருவதற்காகத்தான் திருமணம் செய்துகொண்டேன் என்று என் மீது கேஸ் போட்டது ரொம்ப அநியாயம் என்று தோன்றியது. எவ்வளவு நேரம் அழுதேனோ எனக்கே தேரியாது.
ஒருக்கால் கோர்ட்டில் அவருக்குச் சாதகமாக முடிவு வந்தால், என்னை இந்தியாவுக்கு அனுப்பிவைத்து விட்டால் நீங்கள் அவமானத்தால் குன்றிப் போய்விடுவீங்க என்று பயந்தேன்.
உஷாவின் வீட்டிற்கு சென்று அவளிடம் எல்லா விஷயத்தையும் சொன்னேன். இது போன்ற விஷயங்கள் அவளுக்கு புதுசு இல்லை போலும். நிறைய பேர்கள் கணவன்மார்கள் இது போல் கேஸ¤கள் போட்டிருக்கிறார்கள் என்றும், பயப்பட வேண்டியது இல்லை என்றும் சொன்னாள். மறுநாள் மாலையில் ஒரு லாயர் ஆபீஸ¤க்குப் போனோம். அவள் ஒரு சீனப் பெண்மணி. பெயர் மைசங். உஷாவுக்கு நல்ல சினேகிதி. என் கேஸை தானே வாதிக்கப் போவதாக உஷாவிடம் வாக்குறுத் தந்தாள். அவளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் பணம் எதுவும் இல்லை. நான் சம்பாதித்த பிறகு அவளுடைய பாக்கியைத் தீர்த்து விடுவதாக சொன்னேன். அதைப் பற்றிய கவலை வேண்டாம் என்றும், தங்களுடைய நிறுவனம் லாயர் பீஸை கொடுத்து விடும் என்றும் உஷா சொன்னாள். எனக்கு உடன் பிறவாத சகோதரியாக உஷா இருந்தாள். கடந்த நான்கைந்து மாதங்களில் இரண்டு முறை கோர்ட்டுக்குப் போனேன். இரண்டு முறையும் உஷா என்னுடன் கோர்ட்டுக்கு வந்தாள். க்ரீன் கார்ட்டுக்காக தன்னைத் திருமணம் செய்துகொண்டதாக ஸ்ரீநாத் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டில் கொஞ்சம் கூட உண்மையில்லை என்று உஷா என் சார்பில் சாட்சியம் சொன்னாள். ஸ்ரீநாத் என்னைக் கொன்று விடுவதாக மிரட்டியதை, நான் போலீஸாரிடம் பாதுகாப்பு கேட்டதை உஷாவும் போலீஸ் ஆபீஸரும் ஜட்ஜிடம் சொன்னார்கள்.
கடைசியில் ஜட்ஜ் எங்கள் திருமணத்தை ரத்து செய்வதற்கு ஒப்புக்கொண்டார்.
இப்பொழுது நான் கிரண்மயியின் வீட்டில்தான் இருக்கிறேன். கம்யூனிடீ காலேஜில்தான் வேலை செய்கிறேன். இரண்டு மூன்று வருடங்கள் இங்கே வேலை பார்த்துவிட்டு கொஞ்சம் பணத்தைச் சேர்த்துக்கொண்டு லா படிக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். அப்பா! உங்களைப் போலவே நான் வக்கீல் ஆகப்போகிறேன்.
திருமணம் செய்துகொடுத்து அமெரிக்காவுக்கு என்னை அனுப்பிவைத்தீங்க. நான் இங்கே சந்தோஷமாக குடித்தனம் செய்துகொண்டிருந்தால் உங்களுக்கு மன அமைதி கிடைத்திருக்கும். வாழ்க்கையை நான்குச் சுவர்களுக்கு இடையே கழிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. குடித்தனம் இல்லாவிட்டாலும் நான் சந்தோஷமாக, சுகமாக இருக்கிறேன். இந்த கவரின் மீது என்னுடைய புதிய முகவரி இருக்கிறது. இனி மேல் கடிதங்களை இந்த முகவரிக்கு எழுதுங்கள்.
அம்மாவைக் கேட்டேன் என்று சொல்லுங்கள். என்னைப் பற்றி நீங்கள் கவலைப் படவேண்டாம் என்பது என்னுடைய வேண்டுகோள்.
அன்புடன் சுமதி

************************************************************************************************

நெல்லூர்,
மார்ச் 26, 1996
அன்புள்ள சுமதிக்கு,
அம்மா அநேக ஆசீர்வாதம். உன் கடிதத்தைப் படித்துவிட்டு நான் ரொம்பவும் சந்தோஷப்பட்டேன். கடந்த ஒரு வருடமாக உன்னைப் பற்றி நாங்கள் ரொம்ப கவலைப் பட்டுக் கொண்டிருந்தோம். நாங்கள் வருத்தப் படுவோம் என்று நீ எங்களிடமிருந்து மறைத்து வைத்த விஷயங்கள் எங்களுக்கு முன்னாடியே தெரிந்துவிட்டன. உன் மாமனார் இங்கே வந்திருந்தார். “உங்க மகள் எங்க மகனுடன் குடித்தனம் செய்யவில்லை. புத்தி தெரிந்துகொண்டு நல்லபடியாக நடந்துகொண்டால் சரி. இல்லையா டைவோர்ஸ் கொடுத்து விட்டு எங்க மகனுக்கு வேறு வரனை பார்த்துக் கொள்கிறோம். உங்க மகளுக்கு புத்திமதி சொல்லுங்கள்” என்று சொன்னார்.
அவர் கிளம்பிப் போன பிறகு உங்க அப்பாவும் நானும் இந்த விஷயமாக நிறைய பேசினோம். “ஏதோ ஒரு காரணம் இருந்தால் தவிர என் மகள் இப்படிச் செய்திருக்க மாட்டாள். இவ்வளவு தொலைவில் இருந்துகொண்டு நாம் அவளை இப்படி நடந்துகொள் அப்படி நடந்துகொள் என்று சொல்வது சரியில்லை” என்றார் அப்பா. இந்த விஷயத்தைப் பற்றி நீயாக எழுதும் வரையில் நாங்கள் எதுவும் கேட்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தோம்.
உன் கடிதம் எங்களுக்கு சந்தோஷத்தை அளித்தது. எல்லாவற்றையும் விட முக்கியமானது உன்னுடைய நிம்மதி. நீ மனஅமைதியுடன் சுகமாக இருந்து வந்தால் அதைவிட எங்களுக்கு வேறு என்ன வேண்டும்? உங்க அப்பாவும் சந்தோஷப்படுவார், இந்த விஷயங்களைத் தெரிந்துகொண்ட பிறகு. அவர் நேற்றுதான் ஹைதராபாத்திற்கு போயிருக்கிறார். அவருக்கு கட்சி ஈடுபாடு இன்னும் குறையவில்லை. மனித உரிமைகள் அது இது என்று அடிக்கடி ஹைதராபாத்துக்கு போய் வருவார். உனக்கு உடனே கடிதம் எழுதவேண்டும் என்று தோன்றியதால் எழுதிவிட்டேன். அப்பா திரும்பி வந்த உடன் அவரும் கடிதம் எழுதுவார்.
உனக்கு உஷா, கிரண்மயி போன்ற சினேகிதிகள் கிடைத்தது ரொம்ப அதிர்ஷ்டம். அவர்களை விசாரித்தேன் என்று சொல்லு. எப்பொழுதாவது இந்தியாவுக்கு வந்தால் நம் ஊருக்கு வந்து நம் வீட்டில் தங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக சொல்லு.
நடந்து முடிந்து போன விஷயங்களைப் பற்றி நினைத்துக் கொண்டு மனதை கஷ்டப்படுத்திக் கொள்ளாதே. வாரம் ஒரு முறையாவது கடிதம் எழுது.
பிரியமுடன்,
உன் அம்மா.

முற்றும்

தெலுங்கில் அரி சீதாராமய்யா
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் email id; tkgowri@gmail.com


tkgowri@gmail.com

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்