இரண்டு தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் – ஆங்கிலத்தில்

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

வெங்கட் சாமிநாதன்


இரண்டு தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் – ஆங்கிலத்தில்

இரண்டு இன்றைய தமிழ்க் கவிதைத் தொகுப்புகள், ஆங்கில மொழி பெயர்ப்பில் வெளி வந்துள்ளன. ஒன்று tamil poetry today, புது தில்லியில் இயங்கும் கதா நிறுவனத்தின் வெளியீடு. மற்றதும் அதே tamil poetry today என்ற தலைப்பில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இரண்டுமே சமீபத்தில் வெளிவந்தவை. சில மாதங்களுக்கு முன், முதலில் கதா வெளியீடும், இப்போது உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடும் வெளிவந்துள்ளன. இரண்டும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய, பேசப்படவேண்டிய வெளியீடுகள். இரண்டு தொகுப்புகளையும் தொகுத்ததும், மொழிபெயர்த்ததும் டாக்டர். கே. எஸ். சுப்ரமண்யன். டாக்டர். சுப்ரமண்யன், இந்திய வருவாய்த் துறையில் பணிபுரிந்து பின்னர் மணிலாவில் ஆசிய வளர்ச்சி வங்கியின் டைரக்டராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நான் சென்னைக்கு வந்த புதிதில், அதாவது எட்டு வருஷங்களுக்கு முன், என்னிடம் தானே அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த எளிமையும் சினேகபாவமும் என்னை வசீகரித்தன. நான் தமிழ் எழுத்தாளரிடையே காணாத குணங்கள் இவை. அது மட்டுமல்ல. அப்போதே அவர் சமகால எழுத்துக்களை நன்கு கவனித்தும் பரிச்சயம் கொண்டும் உள்ளவர் என்பது தெரிந்தது. இல்லையெனில் 50 வருடங்கள் வடக்கேயே காலம் கழித்தவனை, 22 வருடங்கள் மணிலாவில் காலம் கழித்தவர் தானே முன் வந்து அறிமுகம் செய்து கொள்வது என்பது நடக்காது.

பின்னர் தான் அவர் ஜெயகாந்தனின் எழுத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர் என்பதும் தெரிந்தது. ஜெயகாந்தனின் நாவலகள் சிலவற்றை (ஓரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஜெய ஜெய சங்கர, முதலானவை) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவரது இலக்கிய ரசனைக் கட்டுரைகள் பலவும் நான்கு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இப்போது அவர் சாகித்திய அகாடமியின் தமிழ் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். டாக்டர். சுப்பிரமணியன் மிக இனிமையான சுபாவம் கொண்டவர். தமிழ் எழுத்தாளர்களிடையே காணப்படும் போது கூட அவரது புன்னகை பூத்த முகம் மாறுவதில்லை என்றால் அவரது இனிமையும் சினேகமும் தரும் சுபாவம் எத்தனை அரியது என்பதற்கு அதுவே சான்றாகும்.

இரண்டு தொகுப்புகளும் கவனிக்கப்படவேண்டியவை, பேசப்படவேண்டியவை என்றேன். கதா தொகுப்பில் 89 கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு மாத்திரமும், இரண்டாவதான் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தொகுப்பில் 304 பக்கங்களுக்கு பாரதியிலிருந்து புதிய பெயராகத் தோன்றும் திருமேனி வரை நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைகள் அவற்றின் மூலத்தோடு, டா. சுப்ரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு தரப்பட்டுள்ளன. முதலில் வெளிவந்த கதா வெளியீட்டில் இடம் பெற்றுள்ள கவிஞர்கள் இரண்டாம் தொகுப்பில் இடம் பெறவில்லை. இரண்டு வேறுபட்ட நிறுவனங்கள் வெளியிடும் போது, ஒன்றை ஒன்று தொடர்பு படுத்தி ஒரே தொகுப்பின் இரண்டு பகுதிகளாக அவற்றைப் பார்க்கத் தோன்றாது. ஒன்றில் இடம் பெற்றுள்ளவர்கள் மற்றதில் இல்லை என்று டாக்டர். சுப்பிரமணியமே தன் முகவுரையில் சொல்லியிருப்பதைப் பார்த்த பிறகு தான் இரண்டையும் ஒன்றாகப் பார்க்கவேண்டும் என்று தெரிகிறது. இல்லையெனில் ஒவ்வொரு தொகுதியையும் தனித்துப் பார்க்கும் போது, அவர் இடம் பெற்றிருக்கும் போது இவர் ஏன் இல்லை, இது என்ன ரசனை? இதன் பின்னிருக்கும் அரசியல் என்ன என்றெல்லாம் நம் இன்றைய தமிழ் எழுத்துப் பின்னணியில் கேள்விகள் எழும். உதாரணமாக, சுப்ரமண்யன் சிற்பியின் கவிதை ரசிகர். அவரது நண்பர். சிற்பியைச் சிலாகித்து அவர் எழுதியுள்ள கட்டுரைகளை நான் படித்திருக்கிறேன். இரண்டாம் பெரிய தொகுப்பின் முன்னுரையில் அவர் சிற்பியின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டுள்ளதாகச் சொல்கிறார். அப்படியிருக்க சிற்பின் கவிதை அத்தொகுப்பில் இல்லையே, இது என்ன மாயம் என்று நான் எண்ணினேன். பின்னர் தான் அது கதா தொகுப்பில் சிற்பிக்கு இடம் கொடுத்துள்ளது பார்க்கத் தோன்றிற்று.

ந.பிச்சமூர்த்தியும், பிரமீளும் இல்லாத நவீன தமிழ்க் கவிதைத் தொகுப்பா? என்று ஒரு தொகுப்பையும், ஒரு முன்னுரை கூட இல்லாத, தொகுத்தவரின் பார்வையைச் சொல்லாத, நவீன தமிழ்க் கவிதையின் மூலவர்களைக் கூட கண்டு கொள்ளாத, ஒரு தொகுப்பு தொகுப்பா? என்று மற்றதையும் எண்ணத் தோன்றும். கதா நிறுவனம் தன் தொகுப்பிற்கான பதிப்பாளர் குறிப்புகளில், இத்தொகுப்பு நவீன தமிழ்க் கவிதை பிரதிநிதித்வப்படுத்துகிறது என்றோ முழுமையாகப் பிரதிபலிக்கிறதோ என்றோ நாங்கள் கூறமாட்டோம், நாங்கள் பதிப்பாளர்கள், ஆகவே எல்லா பதிப்பாளர்களுக்கும் உள்ள குறைகள் எங்களிடமும் உண்டு என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகவே அது பற்றியெல்லாம் பேசி டாக்டர்.சுப்ரமண்யத்தை சர்ச்சைக்குள் இழுக்க வேண்டாம். இரண்டையும் நாம் ஒன்றாகப் பார்த்தால், இதில் நவீன தமிழ்க் கவிதையின் பரப்பு முழுதையும் ஸ்வீகரித்துக்கொண்டுள்ளதைப் பார்க்கலாம். இதில் தேர்வு என்பது நம் ஒவ்வொருவரின் பலத்தையும் பலவீன ங்களையும் பிரதிபலிக்குமாதலால், அதை விட்டு விட்டு தமிழர் அல்லாதார்க்கு நவீன தமிழ்க் கவிதையின் குணத்தையும் பரப்பையும் தெரியச் செய்யும் ஒரு தொகுப்பாகக் கொண்டால் அதன் முழுமையை வரவேற்கத் தகுந்த ஒன்றாகக் காண்போம். இதில் எல்லோரையும் காணலாம். மூலவர்கள், பின் அவர்களைத் தொடர்ந்து ஐம்பது வருடங்களாக கவிதைக்கு வளம் சேர்த்தவர்கள், சித்தாந்திகள், பண்டிதர்கள், தம்மைக் கவிஞர்களாகவே எண்ணிக்கொள்ளாதவர்கள், தம்மைக் கவிஞர் என்று அங்கீகரிக்காவிட்டால், சண்டைக்கு வருபவர்கள், இன்றைய தமிழ் எழுத்துலகம் கவிஞர்களாகக் காணாத கவிஞர்கள், தமிழ் எழுத்துலகம் போற்றிக் கொண்டாடும் கவிஞரே அல்லாத கவிஞர்கள், நாம் கேள்வியே படாத பெயர்கள் எல்லாரும் இதில் இடம் பெற்றுள்ளனர். இப்படி ஒரு பரப்பை, முழுமையைச் சாத்தியமாக்கியுள்ளது, யாரையும் மனம் கோணப் பார்க்க விரும்பாத, சினேக பாவமும், தான் தரக்கூடியது புன்னகை பூத்த முகமே என்றிருக்கும் சுப்ரமண்யத்தின் சுபாவமுமே இத்தொகுப்பை சாத்தியமாக்கியுள்ளது என்று சொல்ல வேண்டும். இதில் இடம் பெற்றுள்ள எல்லோரையும் இத்தொகுப்பு பரவசத்தில் ஆழ்த்தும். அவர்கள் இனி சொல்லிக்கொள்ளலாம். என் கவிதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு, உலகமறியக் கிடைத்துள்ளது என்று. ஐம்பது அறுபதுகளில் முற்போக்கு எழுத்தாளர்கள் எல்லாம், எங்கள் கதைகள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது என்று. (அதாவது ரஷ்ய, செக் மொழிகளில்) இல்லையா பின்?

இதெல்லாம் போகட்டும். நான் இதை மிக முக்கியமான வரவாகக் காண்பதற்குக் காரணம், இப்படி ஒரு பெரிய தொகுப்பு இது வரை வந்ததில்லை. அதற்கும் மேல் டாக்டர். சுப்ரமண்யத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு. அவரது மொழிபெயர்ப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கவிதை மொழிபெயர்க்க இயலாதது. என்பார்கள். மொழி பெயர்ப்பில் காணாமல் போவது தான் கவிதை என்பார்கள். எல்லாமே உண்மை தான். ஆனால் வேறு வழி இல்லை. எவ்வளவு தான் குறை பட்டாலும், முலத்தில் இருக்கும் கவிதையின் ஒரு சில அம்சங்களாவது மொழிபெயர்ப்பில் தரக்கூடுமானால் அவ்வளவு தான் செய்யக் கூடியது. அது மொழிபெயர்ப்பாளனின் மொழி வல்லமையைப் பொருத்தது. என்னைக் கேட்டால், டாக்டர் .கே.எஸ் சுப்பிரமணியம் மிக சிரம சாத்தியமான ஒரு பெரும் காரியத்தைச் செய்துள்ளார் என்று தான் சொல்லவேண்டும். அவரது மொழிவல்லமையைக் கண்டு நாம் மகிழவேண்டும். அவரைப் பாராட்ட வேண்டும். மொழி பெயர்ப்பில் சாத்தியமே இல்லையென்று நாம் நினைக்ககூடும் பல இடங்களில் அவர் அதிக சாத்திய வெற்றியை அடைந்துள்ளார்.

உதாரணமாக, நான் கவிஞர் என மதிக்கும், ஆனால் தமிழ் உலகம் இது காறும் அறிந்திராத ஸ்ரீரங்கம் மோகன ரங்கனின் கவிதை ஒன்று. அதன் தமிழ் வடிவம் இதோ:

நால் வீதிக்குள்ளே பல நூற்றாண்டுகள்
சிந்திக்கிடக்கின்றன
பொறுக்குவாரின்றி நேரமின்றி
புவனத்தின் புள்ளியில்
போகின்றது வருவது எல்லாம்
காலத்தின் முதுகரங்கள்
கை தொட்ட கருங்கற்கள்
கதை சொல்லிப் பரந்து நிற்கும்
வாழ்கின்ற தலைமுறைக்குள்
வாழ்ந்த தலைமுறைகள்
வழிவழியாய் நினைவில் படிவமாகி
வீதி வழி போகின்ற உருவமாகும்
வற்றாத நினைவுகள்
வளங்கொழிக்கும் வயலரங்கம்
தூக்கத்தில் தொடர்கதையாய்
திகழும் உயிரரங்கம்

இது எவ்வளவு அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைச் சொல்லவே கவிதை முழுதையுமே தருகிறேன்.

Within four streets
Centuries lie scattered
None to collect the fragments, no time
On this dot, on the globe,
Flotsam and jetsam of ages
Leave their imprint.
Granite stones
Fashioned by time’s ancient hands
Witness to stories long past
Fast generations
Buried in the present
Etched as ethnic metaphors
Embodied forms walk the streets
Fields fertile
With lingering memories
A stage of pulsating life
A panorama of unbroken dreams.

மேற்கண்ட தமிழ்க் கவிதையில் தமிழ் மொழியின் சொல்லாட்சி தரும் நயத்தை, ஆங்கிலத்தில் கொணர்வதில் உள்ள சிரமங்களை மீறி தன் மொழிபெயர்ப்பில் அதற்கேயான ஒரு சப்த நயத்தை உருவாக்குவதில் சுப்ரமணியம் வெற்றி பெற்றுள்ளார் என்று சொல்ல வேண்டும். அதே சமயம் மூலத்தில் மிகச் சாதாரணமாகத் தோன்றும் உரைநடை போன்றே தோற்றத்தில் கவித்வத்தை கொண்டு வந்துவிடும் ராஜமார்த்தாண்டனின் கவிதையின் மொழிபெயர்ப்பில் சில வரிகள் மாத்திரம், மாதிரிக்கு:

In a tree’s branches,
A couple of playful squirrels.
Flitting in and out of sight
From nowhere
A crow landed on a branch
Stole a glance
Right
Left
Cawed a parting message and
Disappeared

On the street
Human faces
Criss-crossing
In fitful spurts

From this angle
At this moment
The world is beautiful

வெகுவாக தமிழிலும் ஆங்கிலத்திலும் என்னைக் கவர்ந்த இந்த கவிதையில் ‘from this angle’ மாத்திரம் கொஞ்சம் எனக்கு நெரடலாகப் படுகிறது. ஆனால் சுப்ரமண்யன் சொல்கிறார்: “நான் ஒரு கவிதையை மொழிபெயர்ப்பது நான் அதை எப்படி உள்வாங்கிக்கொண்டேன் என்பதையும், அது என்னுள் எழுப்பி பிரதிபலிக்கும் அலைகளையும் பொருத்தது. பின் எப்போதாவது அதை மொழிபெயர்பேனானால், அது வேறாகவும் இருக்கக் கூடும்” மிக சத்தியமான வார்த்தைகள். கடைசியில் எனக்கு மிகவும் பிடித்துப் போன ஒரு கவிதையின் மொழிபெயர்ப்பு மாத்திரம். உமாமகேஸ்வரியின் கவிதை இது. இதன் மூல தமிழ் வடிவம் என்னிடம் இப்போது இல்லை.

Can’t figure out
When it came to be
This stain on my dress
Black-red of my first period
Pale yellow of the first coitus
The puss flowing from bruised minds
Dirty yellow rubbed off
The finger nails
Of shit pit cleaners
Ash flying from the house of death
Green of envy
Violet of passion
Venomous teal of hatred
Permanent black of burnt dreams
A churning of hues
Defying identity
Obstinacy beyond washing
The stain is stuck
On me
Like an enveloping and ravaging body.

டாக்டர் சுப்ரமண்யம் இரண்டு மொழிகளிலும் பெற்றுள்ள மொழி வல்லமை தரும் சொல்லட்சியும், ரசனை உணர்வும், முலத் தமிழ்க் கவிதையில் இல்லாத அழகுகளையும் மொழி அனுபவத்தையும் சுப்ரமண்யத்தின் ஆங்கிலம் தந்து விடுகிறது. மொழி பெயர்ப்பில் இப்படி நேர்வதும் உண்டு. எங்களுக்குக் கிடைத்துள்ள மொழிபெயர்ப்புகளிலிருந்து பார்த்தால் சுப்ரமண்ய பாரதி அப்படி ஒன்றும் பெரிய கவிஞராக எங்களுக்குத் தெரியவில்லையே என்று சொன்ன வேற்று மொழி கவிஞர்களை நான் அறிவேன். அவர்களே, “அவர் அன்று கவிதை வாசித்தாரே, நன்றாக இருப்பது போலத்தானே இருந்தது,?” என்று சில பிரசினையான கவிஞர்களை அவர்கள் ரசித்தது உண்டு. இதெல்லாம் மொழி செய்யும் மோசடி, அல்லது மாயாஜாலம். முன்னால் சொன்னது போல, மொழிபெயர்ப்பில் கவிதை மறைந்து விடுவதும் உண்டு, மூலத்தில் இல்லாத அழகு மொழிபெயர்ப்பில் நுழைந்து விடுவதும் உண்டு.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தொகுப்பிற்கு டாக்டர் சுப்ரமணியம் ஒரு நீண்ட முன்னுரை கொடுத்துல்ளார். அதில் பல விஷயங்களைப் பற்றி விரிவாகவே பேசுகிறார். இந்த முன்னுரையின் முன் வரைவை டாக்டர் வீ அரசு, டாக்டர் சிற்பி பாலசுப்ரமணியம், பின் டாக்டர் ம. ராஜேந்திரன் ஆகிய மூவரிடமும் பார்க்கக் கொடுத்து அவர்கள் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டுள்ளதாகவும், முடிந்த வரை மொழிபெயர்ப்புகளை சம்பந்தப்பட்ட கவிஞர்களுக்குக் காட்டி அவர்களது ஒத்துழைப்பையும் பெற்றதாகச் சொல்கிறார். இத்தனை பெரிய தொகுப்பை உருவாக்குவதும், மொழிபெயர்ப்பதுமட்டுமல்லாமல், அதற்கு மேலும் சென்றுள்ள டாக்டர் சுப்ரமண்யத்தின் உழைப்பு சாதாரணமாகக் காணக்கிடைக்காதது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இன்றைய நவீன தமிழ் கவிதை வரலாறு நிறைய வாத பிரதிவாதங்களை கட்சியாடல்களை தன்னுள் கொண்டது. இதில் சுப்ரமண்டத்தின் நிலையைச் சொல்ல இரண்டு இடங்களைச் சொல்லலாம். ஒன்று சி.சு.செல்லப்பாவும் அவரது எழுத்து பத்திரிகையின் பங்களிப்பைப் பற்றியது. இது தமிழ் கவிதை வரலாற்றில் ஒரு மைல் கல் என்று சொல்லத்தக்க நிகழ்வு என்றும் அது தன் காலத்திய ஏமாற்றங்களையும் தேக்கத்தையும், கண்டு பிறந்த அந்நியப்பட்ட உணர்வுகளையும் விரக்தியையும் பிரதிபலிக்கும் அக உலக வெளியீடாகியது அக்கவிதை என்று சொல்வதோடு, வானம்பாடி இயக்கக் கவிதைகள் இடது சாரி சித்தாந்தங்களின் கோஷ வெளிப்பாடாகியது என்றும் அவற்றை உரத்து சத்தமிடுபவை என்று சிலர் சொன்னாலும், வானம்பாடி கவிஞர்கள் கவிதையை ஜனநாயகப்படுத்தினர் என்பதைச் சொல்லவேண்டும் என்றும் டாக்டர் சுப்ரமண்யன் கூறியுள்ளார். இம்மாதிரியெல்லாம் கவிதைகள் எழுதப்படுகின்றன, இன்றைய காலகட்டத்தில் என்று சொல்வது போல சுப்ரமண்யம் எல்லா வண்ணங்களையும் குரல்களையும் தொகுத்துள்ளது போல, இவை பற்றி இவ்வாறெல்லாம் அபிப்ராயங்களும் வெளிவந்துள்ளன என்று எந்த ஒரு பக்கமும் தான் சாய்ந்து விடாமல் நடந்தவற்றை எல்லாம் பதிவு செய்வது போல ஒரு முன்னுரையும் சுப்ரமண்யம் தந்துள்ளார்.

நம் ஒவ்வொருவருடைய தேர்வும் ரசனையும் வேறுபட்டாலும், என் அளவில் சுப்ரமண்யம் தான் எடுத்துக் கொண்ட கவிதை ஒவ்வொன்றையும் மொழிபெயர்த்து அதற்குத் தந்துள்ள ஆங்கில வடிவையும் அதன் மொழியையும் ரசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் சுவாரஸ்ய அனுபவத்தையும் தந்தது. அதைத் தான் நான் மாதிரிக்கென தந்துள்ள மேற்கோள்களில் காட்ட முயன்றுள்ளேன்.

______________________________________________________________________________________________________________

tamil new poetry: ஆங்கிலத்தில் டாக்டர் கே.எஸ் சுப்ரமண்யன், Katha Poets Cafe வெளியீடு. விலை ரூ. 200

tamil poetry today: ஆங்கிலத்தில் டாக்டர் கே.எஸ் சுப்ரமண்யன், வெளியீட்டாளர், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை. விலை ரூ 150

வெங்கட் சாமிநாதன்’17.12.07

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்