இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா.. ?

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

சந்திரவதனா


பெற்றோரே சிந்தியுங்கள்!

இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா.. ?

புலம்யெர் வாழ்வில் பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் இந்தச் சாமத்தியச்சடங்கும் ஒன்றாக இருக்கிறது.

ஒரு பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப் படும் பருவம் அவள் பூப்பெய்தும் பருவம்தான். இது பற்றிய சரியான புரிந்துணர்வு புலத்தில் பல பெற்றோர்களிடம் இல்லை. இந்த நிலையில் நாம் இது பற்றிப் பேச வேண்டியதொரு கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த 21ம் நூற்றாண்டில், இத்தனை தூரம் நாம் பல்வேறு துறைகளிலும் வளர்ந்து விட்ட நிலையில் சாமத்தியச் சடங்குகள் அவசியந்தானா ? சாமத்தியச் சடங்கு எமது கலாசாரத்தில் ஏன் இடம் பிடித்துக் கொண்டது ? என்பது போன்றதான கேள்விகளுக்கு மிகத் தெளிவான கருத்துக்களோ அல்லது விளக்கங்களோ எனக்கு இதுவரை சரியான முறையில் கிடைக்க வில்லை.

பல பெரியவர்களுடன் சாமத்தியச்சடங்கு பற்றிப் பேசிப் பார்த்த போது ஒவ்வொருவரும் சொன்ன அதற்கான காரணங்கள், ஒவ்வொரு விதமாகவே இருந்தன.

1 – ஆண் பெண் பாகுபாடின்றி விளையாடித் திரிந்தவளை ஆண்களில் இருந்து பிரித்து வைப்பதற்காக..

2 – எனது வீட்டில் ஒரு குமர் இருக்கிறாள். மணமகன்மார் பெண் கேட்டு வரலாம் என்பதைத் தெரியப் படுத்துவதற்காக..

3- ருதுவானால்தான் அவள் முழுமையான பெண் என்ற உடல் ரீதியான அங்கீகாரம் சமூகத்திடம் இருந்து கிடைக்கும் என்பதற்காக…

என்று காரணங்கள் நீண்டன.

இப்படியான கருத்துக்களின் மத்தியில்,

‘இவள் இனி உங்கள் பிள்ளை நீங்கள்தான் அவளைக் காக்க வேண்டும் ‘ என்று சொல்லி ஊர்மக்களிடம் பிள்ளையை ஒப்படைப்பதற்காக… சாமத்தியச் சடங்கு நடக்கிறது.

என்றும் ஒரு புலம் பெயர்ந்த பெரியவர் சொன்னார்.

இப்படியானதொரு கருத்தைக் கேட்க…, சிரிப்பாக இல்லை…! கற்றவர் ஆழ்ந்து ஆராய்ந்து ஆக்க பூர்வமானதொரு கருத்தை ஆணித்தரமாகத் தருவார் என்று தான் எதிர் பார்த்தேன். கருத்துக்கள் தருவது அவரவர் சுதந்திரம். ஆனால் எம்மத்தியில் உள்ள கற்றவர்கள் இப்படியான உப்புச் சப்பற்ற கருத்துக்களைத் தருவது எமது சமூகத்தை, எமது கலாசாரத்தை, எமது பண்பாட்டை நாமே அவமானப் படுத்துவதற்குச் சமானமாகிறது.

குறை பிடிக்கவும், குற்றம் பிடிக்கவும், பருவம் பார்த்துத் தருணம் தேடி பெண்ணைச் சீரழிக்கவுமே சமூகத்துள் ஒரு கழுகுக் கூட்டம் காத்திருக்கும். ஊரவர்தான் அப்படியென்றால் உள்ளுக்குள் அதைவிடக் கேவலம்.

அனேகமான பாலியல் வன்முறைகளும், பாலியல் துர்ப்பிரயோகங்களும் வீட்டுக்குள்தான் நடக்கின்றன. மாமாவால், சித்தப்பாவால், அக்காவின் கணவனால், அப்பாவின் நெருங்கிய நண்பனால்…. இப்படித்தான் பெரும் பான்மையான பாலியல் வன்முறைகளும், பாலியல் துர்ப்பிரயோகங்களும் அரங்கேறியுள்ளன. இன்னும் இன்னும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

வெளிநாட்டவர் மத்தியில் ஓரளவுக்காவது இவை வெளிச்சத்துக்கு வருகின்றன. ஆனால் எம்மவரிடையே இவை குமுறல்களாகவும், கோபங்களாகவும் ஆற்றாமையாகவும் பெண்களுக்குள் அடங்கிக் கிடக்கின்றன.

இவைகளை வெளியில் சொல்லி கலாச்சாரம், பண்பாடு, என்று வாயளவில் உச்சரித்து மனதுள் போலியாக வாழும் மனிதமல்லாதவர்களின் முகத்திரைகளைக் கிழித்தெறிய எம் பெண்களிடம் தைரியம் இல்லை. வெளியில் தெரிந்தால் சமூகமும், அதன் கலாச்சாரமும், அதன் பண்பாடும், பாதிக்கப் பட்ட பெண்ணையே பாழுங்கிணற்றில் தள்ளி விடும் என்ற பயம்.

இந்த நிலையில் நன்கு யோசித்துப் பாருங்கள்.

ஒரு பெண் தன்னைக் காத்துக் கொள்ள எமது கலாச்சாரமும் பண்பாடும் உதவுகிறதா ? அல்லது விழிப்புணர்வும் தைரியமும் உதவுகிறதா ?

என்று.

எமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் காத்து, எமது முகங்களை அழிய விடாது காப்பது ஆண், பெண் இருபாலாரதும் கடமை. அதற்காகப் போலிகளை, கலாச்சாரம், பண்பாடு என்று பொய்யாகப் பெயர் சூட்டி பெண்களில் திணித்து அவர்களை அடக்க நினைப்பது மடமை. இந்தப் பொய்களின் வேசம் புரியாது, போலிக் கலாச்சாரங்களில் தம்மைப் புதைத்துக் கொள்வது எம் பெண்களின் அறியாமை.

முதலில் எமது பெண்பிள்ளைகளிடம், எந்தப் பிரச்சனையையும் பெற்றோருடன் பேசி தம்மை நெருங்கும் துட்டர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளும் தைரியம் வர வேண்டும். பெற்றோர்களுடன் அவர்கள் இப்படியான விடயங்களை இயல்பாகப் பேசும் துணிவு ஏற்படும் படியாகப் பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்.

எமது முன்னோர்கள் வரையறுத்த அனேகமான கோட்பாடுகள் அர்த்தமுள்ள, அவசியமான விடயங்களுக்காகவே இருந்தன. அவைகள் ஒவ்வொன்றுக்குமான கரு ஆரோக்கியமானதாகவும் அழகியதாகவும் இருந்தது.

ஆனால் நீண்ட கால ஓட்டத்தில், காரணங்கள் திரிபு பட்டது மட்டுமல்லாது காரியங்களும் ஆணாதிக்க மேலோங்கலில் மிகுந்ததொரு சுயநல நோக்குடன் கட்டாயமாகத் திரிக்கப் பட்டு, இன்றைய கால கட்டத்தில் ஏன் ? எதற்கு ? என்ற சிந்தனைகளெதுவுமின்றி, உண்மையான, தேவையான விடயங்கள் புறக்கணிக்கப் பட்டு, கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வைக்குள் பொய்யான விடயங்கள் தொடர்கின்றன.

வருத்தமான விடயம் என்னவெனில் அனேகமான பெண்களுக்கு இந்தப் பொய்யான திணிப்புகளின் போலி வடிவம் புரிவதில்லை. தாம் போலிக் கலாசாரத்தில் பொசுங்கிக் கொண்டிருப்பது பற்றி அவர்கள் எந்த வித பிரக்ஞையும் கொள்வதுமில்லை.

உண்மையில் சாமத்தியச் சடங்கை கோலாகலமாக ே ?ால் எடுத்து விழாவாகச் செய்யும் அனேகமான பெற்றோருக்கு சாமத்தியச் சடங்கு செய்வதற்கான காரணம் என்னவென்றே தெரியாது.

1 – வீடியோ கமராவில் எடுப்பதற்கும்,

2 – என் வீட்டுச் சாமத்திய வீடு மற்றையவர் வீட்டை விடப் பெரிதாக நடந்ததெனக் காட்டுவதற்கும்,

3 – இப்படிப் பெரிதாகச் செய்யாவிட்டால் என்ன நினைப்பார்கள் என்பதான போலி கெளரவத்துக்கும்,

4 – கொடுத்த மொய்யை திரும்பப் பெற்றுக் கடன் கழிப்பதற்கும்..,

என்றதான இன்னும் பல காரணங்களைக் காரணமாகக் கொண்டுதான், பூப்படைந்த பெண்ணைக் காட்சிப் பொருளாக வைத்து இன்று புலம்பெயர்மண்ணில் பெரும்பாலான சாமத்தியச்சடங்குகள் நடைபெறுகின்றன. இதற்கு வெறுமே கலாசாரம், பண்பாடு என்று போலி முலாம் பூசப் படுகிறது. அவ்வளவுதான்.

யேர்மனிய மருத்துவர்கள் கூறுகிறார்கள் –

ருதுவாகும் பருவத்தில், ஒரு பெண் பிள்ளையின் உளத்திலும், உடலிலும் பல் வேறு மாறுதல்கள் ஏற்பட்டு அவள் ஒரு அசாதாரண நிலைக்குத் தள்ளப் படுகிறாள். இந்த அசாதாரண நிலை அவள் மனதை மேலும் குழப்பாத வகையில், பெற்றோர்கள் ‘இது சாதாரண விடயந்தான் ‘ என்பதை அவளுக்கு விளங்கப் படுத்த வேண்டும். தாழ்வு மனப்பான்மையோ தற்பயமோ அவளுக்கு ஏற்படாத வகையில் அவளுடன் நிறையப் பேச வேண்டும். ஆதரவுடன் நடக்க வேண்டும் என்றும்.

இந்த நேரத்திலான அவளின் உடலின் அதீத வளர்ச்சியினால் அவள் தோள்மூட்டுகளிலும், முதுகுப் பகுதியிலும் ஏற்படும் உபாதைகளின் தன்மையை உணர்ந்து அவளுக்குத் தாராளமான ஓய்வைக் கொடுக்க வேண்டும். அவளின் தோள்மூட்டுக்களும், முதுகும் வலுப்பெறக் கூடிய வகையில் சில உடற் பயிற்சிகளை அவள் செய்ய வழி சமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும்..

யேர்மனியப் பாடசாலை உளவியல் ஆசிரியர்கள் சொல்கிறார்கள் –

பூப்படையும் நிகழ்வை சாதாரண நிகழ்வாக எடுக்காமல் இப்படிப் பெருவிழாவாகக் கொண்டாடிப் பெரிது படுத்தும் போது, அது அந்தப் பெண்பிள்ளைகளின் மனதில் பல்வேறு பட்ட சலனங்களையும், உளவியற் தாக்கங்களையும் ஏற்படுத்தி அந்தப் பிள்ளைகளைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்ல வழி கோலுகின்றது என்று.

ஆனால் இங்கே புலத்தில் என்ன நடைமுறைப் படுத்தப் படுகிறது ? பல அத்தியாவசியத் தேவைகளை பெண்பிள்ளைகள் எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில், அத்தனையையும் விடுத்து வெறுமே சாமத்தியச் சடங்கு என்ற பெருவிழா நடாத்தப் படுகிறது. இப்படிச் செய்வதால் அந்தப் பெண்பிள்ளைகள் என்ன பயனைப் பெறுகிறார்கள் ?

இதைச் சண்டையாகவோ, ஆண் பெண் பாலாருக்கிடையிலான விவாதமாகவோ எண்ணாமல் யதார்த்தமாக எல்லாப் பெற்றோர்களும் சிந்தித்துப் பாருங்கள்.

யேர்மனிய மருத்துவர்கள் கூறிய இந்த ஆதரவுகள் பெற்றோர்களிடமிருந்து கிடைக்காத பட்சத்தில்தான் பெண்பிள்ளைகள் மற்றவர்கள் மேல் கோபப் படுபவர்களாகவும், எரிச்சால் படுபவர்களாகவும் காணப்படுகிறார்கள். அல்லாதுவிடில் அழுமூஞ்சிகளாகி விடுகிறார்கள்.

இந்த உடல் ரீதியான மாறுதல்கள் ஆண்களிடமும் ஏற்படுகிறதுதான். அது சற்று வேறுபாடானதாக இருந்தாலும் அவர்களுக்கும் இந்த நேரத்தில் அன்பு ஆறுதல் அரவணைப்பு என்பன தேவைப் படுகின்றன. அது கிடைக்காத பட்சத்தில்தான் அவர்களும் எரிச்சல், கோபம், மெளனம் என்பவற்றிற்கு ஆளாகிறார்கள். ஆனால் ஆண் பிள்ளைகளுக்கு வெளியில் செல்லவும் அவர்கள் விரும்பியதைச் செய்யவும் தாராளமான சுதந்திரம் இருப்பதால் பெண்பிள்ளைகளிடம் ஏற்படுமளவுக்கு பாதிப்பு ஆண்பிள்ளைகளிடம் ஏற்படுவதில்லை.

அதனால் முக்கியமாக, கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்பிள்ளைகளைக் கட்டி வைக்கும் எமது சமூக அமைப்பில் வளர்ந்து கொண்டிருக்கும் எமது பெண்பிள்ளைகளுக்கு இந்த சமயத்தில் பெற்றோரினது முழுஆதரவும் தேவை என்பதை தமிழ்ப் பெற்றோர்கள் மறந்து விடவோ அலட்சியப் படுத்தி விடவோ கூடாது.

சந்திரவதனா

யேர்மனி

28.3.2001

Series Navigation

சந்திரவதனா

சந்திரவதனா