இன்னொரு முற்றுப்புள்ளி….

This entry is part [part not set] of 20 in the series 20011001_Issue

சேவியர்.


இந்த தீவிரவாதம்
இதோ இன்னொருமுறை
மண்ணுக்குள்
மனித உயிர் காய்ச்சி ஊற்றியிருக்கிறது.

ஒரு போருக்காய் ஒரு பதிலடி,
அந்த பதிலடிக்காய் இன்னொரு போர்,
எப்போதுதான் முடியப் போகிறதோ
இந்த பல்லுக்குப் பல் போராட்டம்.

பாம்புகளோடு பகை கொண்டு
சந்தனக் காட்டை சாம்பல் வேட்டையாடுவதும்,
கண்ணி வெடிக் கணவாய்களில்
சிட்டுக் குருவிகளின் சிறகு உருவுவதும்
இன்னும் எத்தனை தலைமுறைக்கு தொடரப்போகிறதோ ?

ஒவ்வோர் நாட்டுக்கும்
எல்லைகள் போராட்டத்தில் அதிகரிக்கப்படுவதெல்லாம்
நடுகற்கள் தானே.
செங்கல் சூளைகளாய் கட்டிடங்களே எரிவது
சிவப்பு இதயத்துக்குள் தீக்கொள்ளி தேய்க்கிறது.

கடந்துபோன வரலாறுகளின்
பிரேதப்பரிசோதனைக் கூடங்களிலிருந்து
இன்னும் மனுக்குலம்
இரத்தம் நுகரத்தான் வேண்டுமா ?

ஒவ்வோர் நாட்டைச்சுற்றியும்
ஒவ்வோர் பெருஞ்சுவர்…
ஒவ்வோர் சிறைகளுக்குள்ளும்
ஓராயிரம் சிறைகள்.
எப்போதுதான் மனுக்குலம் கூண்டுகளை உடைத்து
இறக்கை நிமிர்க்கப் போகிறதோ.

ராணுவத்தை வைத்து
ராஜ்ஜியத்தை நிறுத்துவதெல்லாம்
முடிந்துபோன மூதாதையர்களோடு
மடிந்து போகட்டுமே.
இனியேனும் கருப்பு விமானங்களுக்குப் பதில்
வெள்ளைப்புறாக்கள் பறக்கட்டுமே.

பூமிக்கு இன்னோர் யுத்தம் பாரமாகும்,
பாரமாகிப் பூமி மெல்ல
விலகிச் சென்று உடைந்து மறைந்தால்,
சூரியச் சிதையின் மீது
பூமிப் பெண் உடன்கட்டை ஏறினால்,
எந்த அறிக்கை அதை நிறுத்த முடியும் ?

இயற்கை அழகை குழைத்துக் கட்டிய பூமி,
மனிதன் உழைப்பை வியர்த்துக் கட்டிய பூமி,
கலவரக் கைகளால் கலையத்தான் வேண்டுமா ?

கருப்புக் குயில்கள்
பாடித்திரியும் கரும்புச் சோலைகள்,
வெடிமருந்து வாசனை இல்லாத
சில்லெனும் தென்றல்,
இவற்றை விற்று விட்டு
பீரங்கியின் பதுங்கு குழிகளில்
எதைத்தான் பயிரிடுகிறீர்களோ ?

கனவுகளோடு கண்விழிக்கும்
காலைகளை விட்டு விட்டு,
தூக்கத்தோடு விழித்திருக்கும்
ஆந்தை இரவுகளை ஆதரிப்பதேனோ ?

காதலாகிக் கசிந்துருகும்
கவிதைத் தேசத்தில்
மண்டையோட்டு அறுவடை தான்
முக்கியமாய்ப் படுகிறதா ?

முற்றுப்பெறாதவை எதுவும்
வரலாறுகள் ஆவதில்லை…
இந்த ஆயுதக் கலாச்சாரத்தின் முற்றுப்புள்ளியாய்
ஓர்
அமைதிப் புறாவை அலகு பதிக்கச் சொல்லுங்கள்.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்