இனவாதப் பேயை மிதிக்கும் இந்துமதம், இந்திய தேசியம்; துதிக்கும் துரோகக் கும்பல்கள்

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

ஜடாயு



ருவாண்டாவின் ரத்த அழிவின் பின்புலத்தில் “ஆரிய” வாதம் என்ற அருமையான, கருத்தாழம் மிக்க கட்டுரையை திரு. அருணகிரி திண்ணை (நவ .17) இதழில் எழுதியிருக்கிறார். இந்தியச் சூழலில் இனவாதம் பற்றிய சில எண்ணங்களை இங்கே முன்வைக்கிறேன். இதற்குத் தூண்டுதல் அளித்த திரு. அருணகிரிக்கு மிக்க நன்றிகள்.

“ஐந்து லட்சம் மக்கள் ஏறக்குறைய நூறு நாட்களுக்குள் படுகொலை செய்யப்பட்ட பரிதாபம் 1994-இல் ருவாண்டாவில் நிகழ்ந்தது. 20-ஆம் நூற்றாண்டின் கொடிய இன அழிப்புகளில் இது ஒன்றாக இருந்தபோதிலும் போதிலும், ரத்த ஆறு ஓடிய அந்த 100 நாட்களும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் மயான அமைதி காத்தன. ஐரோப்பியக் காலனீயம் செய்த ருவாண்டாவின் வரலாற்றுப்புரட்டலும், விதைத்த இனவேறுபாட்டுக் கற்பிதமும் நூறாண்டுகளுக்குப்பின் அந்த சிறிய நாட்டை பெரிய பிணக்காடு ஒன்றிற்குக் கொண்டு வந்து சேர்த்திருந்தது” என்று தொடங்கி ருவாண்டாவின் சீரழிவுக்கான பின்னணியை அருமையாக விவரித்திருக்கும் அவர், இந்தியச் சூழலில் இது போன்று நடப்பதற்கான சாத்தியக் கூறுகளை காலனிய சக்திகள் உருவாக்க முயன்றதையும், அது எவ்வாறு செயலிழந்தது என்பதையும் கூறுகிறார் :

“முதலாக, ஆரிய வாதம் பிராமணர்களையே உயர் ஆரியர்களாகக் காட்ட முயன்றாலும், யதார்த்தத்தில் அவர்கள் கல்வி, இலக்கியம், ஆன்மீகம் இவற்றிலன்றி (ருவாண்டாவின் டுட்ஸிகளைப்போல்) பொருளாதார பேராதிக்க சக்திகளாக இல்லையென்பது கண்கூடாய்த் தெரிந்தது. டுட்ஸிக்கள் ஹுடுகளுக்கெதிரான இன ஆதிக்கத்தினைக் கைக்கொண்டது போல் இந்தியாவில் நிகழவில்லை, மாறாக பல “ஆரியர்கள்” காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் “திராவிடர்களுடன்” இணைந்து உடமை இழந்தனர்; குடும்பம் இழந்தனர்; உயிரை இழந்தனர். திராவிடரின் தொன்மை இலக்கியங்களில் “ஆரியர்” மதிக்கப்பட்டிருந்தனர். திராவிட மொழிகள் என்பவை “ஆரியர்களால்” போற்றிப் வளர்க்கப்பட்டன. ருவாண்டா போல சிறிய நிலப்பரப்பாகவோ சிறு கலாசாரமாகவோ இருந்திருந்தால் ஒருவேளை இன்று வடகிழக்கில் பழங்குடிகளுக்கு நிகழ்வது போல இந்தியாவிலும் இன அழிப்பு நடந்திருக்கலாம். ஆனால் அகன்று விரிந்த பாரதத்தின் வலிமையான தொன்மைக்கலாசாரம் காலனீயத்தின் எளிய இனவாத வரையறைகளுக்குள் சிக்கி சிதறுண்டு போகாது, கம்பீரமாக இணைந்து உறுதியாக நின்றது. ருவாண்டாவைப்போல கிறித்துவமயமாக்கல் மூலம் விவிலிய மூளைச்சலவை செய்வது இந்தியாவில் எளிதில் சாத்தியமாகாமல் போனதும் கூட இனவாதம் ரத்தவெறி பிடித்து வளராமல் போனதற்கு முக்கியக் காரணம். மொகலாயக் கொடுமைகளைப் பலவாறு பார்த்திருந்த இந்து மதம், கிறித்துவத்தை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தது. கீதையின் அடிப்படையில் எழுந்த காந்தியடிகளின் இந்து தார்மீகத்தின் முன், கிறித்துவப் பிரச்சாரங்கள் எடுபடாமல் போயின.”

மிகச் சரியான, ஆணித்தரமான, உறுதியான கூற்று. காலனிய அரசு மற்றும் கிறித்தவ மிஷநரிகளின் அதிகார பலத்திற்கும் மற்றும் ஐரோப்பிய “அறிஞர்களின்” அறிவுத் தீவிரவாதத்திற்கும் முன்னால் மிகச் சாதாரணமாகத் தோற்றமளித்த இந்திய தேசிய எழுச்சியின் நாயகர்களே இந்த இனவாதப் பேயை சரியாக இனம் கண்டு எதிர்த்தனர். சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர், ஆரிய சமாஜ் நிறுவனர் சுவாமி தயானந்தர், மகாகவி பாரதி, டாக்டர் அம்பேத்கர், ரவீந்திரநாதத் தாகூர், வீர சாவர்க்கர் மற்றும் பலர். இதற்காக இந்திய சமுதாயம் என்றென்றும் இவர்களுக்குக் கடமைப் பட்டுள்ளது. மகாத்மா காந்தி சித்தாந்த ரீதியில் ஆரிய இனவாதத்தை பெரிய அளவில் எதிர்கொள்ளாவிட்டாலும் அவரது சத்தியம், அகிம்சை சார்ந்த போர்முறை இனவாதம் என்னும் வன்முறைப் பேயை வளரவிடாமல் தடுத்தது என்பதில் ஐயமில்லை. டாக்டர் அம்பேத்கார் சாதிக் கொடுமைகள் உருவானதன் சமய, சமூக, அரசியல் காரணிகளை அலசி ஆராய்ந்து அவற்றிலிருந்து இனவாதம் என்ற கொள்கையை முற்றிலும் நிராகரித்தார். பாரதம் முழுவதிலும் உள்ளது ஒரே ஆரிய இனம் என்பதையும் தெளிவாகப் பதிவு செய்தார்.

சுவாமி விவேகானந்தர் காலனியம் விதைத்த இனவாதப் புரட்டை தமக்கே உரிய நடையில் எதிர்கொள்வதைப் பாருங்கள் (சுவாமிஜின் உரைகள் பாரதத்தின் எதிர்காலம், ஆரியரும் தமிழரும்):

“ஐரோப்பிய வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள் சூத்திரர்கள் எல்லாம் பழங்குடியினர், அடிமைகள் என்று. சரித்திரம் மறுபடி மறுபடி நிகழும் என்பார்கள். அமெரிக்கர்களும், ஆங்கிலேயர்களும், டச்சுக் காரர்களும், போர்த்துகீசியர்களும் ஏழை ஆப்பிரிக்கக் கறுப்பர்களைக் கையகப் படுத்தி அவர்களைக் கொத்தடிமைகளாக்கித் தாங்கள் சுகபோகத்தில் வாழ்ந்தார்கள். அந்தக் கலப்புச் சேர்க்கைகளில் அடிமைகளாகவே பிறந்த குழந்தைகளை அடிமைத் தளையில் வாழ்க்கை முழுதும் வைத்திருந்தார்கள். இந்த சரித்திரப் பின்னணியிலேயே திளைக்கும் ஐரோப்பியச் சிந்தனை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் முன் தாவிச் சென்று பாரதத்திலும் இதே தான் நடந்திருக்கும் என்று கற்பனை செய்கிறது போலும்! கருப்புத் தோல் படைத்த பழங்குடிகள் நிறைந்திருக்கும் பாரதம், அங்கே திடீரென்று வெள்ளை ஆரியன் எங்கிருந்தோ வருகிறான் ! எங்கிருந்து என்பது கடவுளுக்கே வெளிச்சம். மத்திய திபேத்திலிருந்து வந்தார்கள் என்று வாதிடும் சிலர், மத்திய ஆசியாவிலிருந்து தான் என்று வாதிடும் பலர். தேசப்பற்றுள்ள பிரிட்டிஷ்காரர்கள் சாதிக்கிறார்கள் ஆரியர்கள் செந்நிற முடியுடையவர்கள் என்று. வேறு சிலர் சொல்லுகிறார்கள் இல்லை இல்லை அவர்கள் முடி கறுப்பு தான் என்று. சொல்லும் வரலாற்று ஆசிரியர் கறுப்புமுடி உள்ளவர் என்றால் ஆரியர்கள் கண்டிப்பாகக் கருப்புமுடிக் காரர்கள் தான். சமீபத்தில் சுவிட்சர்லாந்துக் குளக்கரைகளில் தான் ஆரியர்கள் வாழ்ந்தனர் என்று நிறுவுவதற்காக ஒரு முயற்சி நடந்து வருகிறது. இந்த சித்தாந்தம் எல்லாம் அந்தக் குளத்திலேயே மூழ்கிப் போகட்டும், அதற்காக நான் வருந்த மாட்டேன்! இப்பொழுது வேறு சிலர் ஆரியர்கள் வடதுருவத்தில் இருந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு போகிறார்கள். ஆரியர்களையும், அவர்களது இருப்பிடங்களையும் இறைவன் ஆசிர்வதிக்கட்டும்! இந்த எல்லா சித்தாந்தங்களிலும் இம்மி அளவாவது உண்மை இருக்கிறதா? நமது (வேத) நூல்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் ஒரு சொல், ஒரு சொல் கூட ஆரியர்கள் பாரத்திற்கு வெளியில் இருந்திருக்க வேண்டும் என்று காட்டுவதாகக் கூறமுடியாது. பண்டைய பாரதத்தில் காந்தாரமும் (ஆப்கானிஸ்தான்) இணைந்திருந்தது என்பது நினைவில் இருக்கட்டும். அவ்வளவு தான், வாதம் முடிந்து விட்டது. இப்பொழுது இருக்கும் சூத்திரர்கள் எல்லாம் ஆரியர் அல்லாதவர்கள் என்பது தர்க்கம், பகுத்தறிவு இரண்டிற்கும் ஒவ்வாத ஒரு வாதம். ஒரு சில ஆரியர்கள் இப்படி நூறாயிரம் பழங்குடி அடிமைகளை ஆண்டு கொண்டிருந்திருக்க முடியாது, அடிமைப் பழங்குடியினர் அன்றே அவர்களைச் சட்னியாக்கிச் சாப்பிட்டிருப்பார்கள்! பல்வேறு விதமான, சாதிகளும், குடிகளும், தொழில் பிரிவுகளும் எப்படி உருவாயின என்பதற்கான குறிப்புக்கள் மகாபாரதம் என்ற பெரும் இதிகாசத்தில் கிடைக்கின்றன. அவையே இதற்கான உண்மையான, அறிவுக்குகந்த விளக்கங்கள் ஆகும்.”

இனவாதம் உலகெங்கும் பரப்பப்பட்ட அந்தக் காலகட்டத்தில், சுவாமிஜி தம் தாய் நாடான பாரதத்தை இனக்குழுக்களின் அருங்காட்சியகம் (ethnological museum) என்ற அழகிய சொல்லால் குறித்தார். டார்டார்கள், பலூச்சிகள் போன்ற வடமேற்கின் காட்டுமிராண்டிகளை இந்துக் கலாசாரம் சீர்படுத்தி மேன்மை தாங்கிய ராஜபுத்ர, ஜாட் வீரர்களாக மாற்றியதையும், உலகத்தில் தங்கள் இனமே அழியும் அபாயத்தில் இருந்த பார்சிகளுக்கும், யூதர்களுக்கும் இந்து தேசம் அடைக்கலம் கொடுத்ததையும் அழகாக மேற்குறிப்பிட்ட உரைகளில் விவரிக்கிறார். உலகின் மிகப் பழைய இனங்களையும் அழிவிலிருந்து காத்த பெருமைக்குரிய கலாசாரம் எங்களுடையது என்று அன்றைய மேற்கத்திய உலகின் நகரங்களிலேயே சுவாமிஜி முழங்கினார்.

அருணகிரி மேலும் கூறுகிறார்: “இனமேன்மை ஓர் இயற்கை நிஜம்’ என்பது அன்றைய ஐரோப்பாவில் மிகப்பிரபலமாய்ப் பரவிக்கொண்டிருந்த ஒரு தத்துவம் . இதற்கு ஊற்றுக்கண்ணாக விளங்கியதும் உத்வேகம் கொடுத்ததும் விவிலியத்தின் மீதான ஐரோப்பாவின் வெறித்தனமான குருட்டு நம்பிக்கை. விவிலியத்தின் பெருவெள்ளத்தில் தப்பிய நோவாவிற்கு ஜாபத், ஷெம், ஹாம் என்று மூன்று மகன்கள். இவர்களே உலகின் அனைத்து உயர் இனங்களுக்கும் தோற்றுவாய் என்ற விவிலியக்கருதுகோள் அன்றைய ஆதிக்க ஐரோப்பாவால் அழுத்தமாக நம்பப்பட்டது; இதையொட்டிய கருத்தாக்கங்கள் காலனிநாடுகளில் வரலாறென்ற பெயரில் வலுவாகப் பரப்பப்பட்டன”

பைபிளோடு நிற்காமல் பாரதத்தின் சமய மரபுகளையும் இந்தப் போக்கில் திரிக்க காலனியாதிக்கம் செய்த சதிகள் நாம் அனைவரும் அறிந்தவை.

நிறம்: ரிக்வேதத்தில் வரும் ஒளி இருள் தொன்மப் படிவங்களை கறுப்பு பழங்குடியினர், வெள்ளை ஆரியர் என்று திரிக்க முயன்றது பெருமளவில் எடுபடவில்லை. கலப்பு மணங்களை சில வரையறைகளுடன் அனுமதித்த, நெகிழ்ச்சியுடைய சமூக அமைப்பைக் கொண்டிருந்த இந்து சமுதாயத்தில் எல்லா சாதிக்காரர்களும், தங்கள் கலப்பு மூதாதையர்கள், வசிப்பிடத்தின் தட்பவெப்பம் மற்றும் உணவுப் பழக்கங்களால் வடிவமைக்கப் பட்ட எல்லா நிறங்களிலும் இருந்தார்கள்! தமிழ்நாட்டுக் கன்னங்கரேல் பிராமணர்களும், பஞ்சாபின் பொன்னிற தலித்துகளும் எந்த விதமான நிறவெறித் தத்துவமும் இங்கு காலூன்றுவதற்குப் பெரும் சவாலாக இருந்தார்கள். கருமுகில் வண்ணனையும், கருப்பழகி திரௌபதியையும், பொன்னார் மேனியனையும், இவற்றோடு பச்சை அம்மனையும், மஞ்சமாதாவையும் கூட ஒன்றாகப் போற்றி வணங்கிய கலாசாரம் இந்த நிறப் பிரிவினை வாதத்தை எளிதாக விழுங்கி விட்டது.

தேவர்,அசுரர்: புராணங்களின் படி, கஷ்யப முனிவரின் இரு மனைவியர் அதிதி, திதி. அதிதியின் மக்கள் தேவர்கள், திதியின் மக்களான தைத்யர்கள் அசுரர். இத்தகைய கதைகள் தெய்வ, அசுர இயல்புகள் ஒரே மனத்தில் உதிப்பவை என்பதற்காகக் கூறப் பட்டன. தைத்யர்களின் குலத்தில் மாமனிதர்களான பிரகலாதனும், மகாபலியும் உதித்தார்கள். ஆனால், புராணங்களின் இந்த உருவகப் படிமத்துக்கு இனவாதப் பூச்சு தரும் முயற்சிகள் காலனிய, கிறித்தவ அறிஞர்களால் கடுமையாக செய்யப் பட்டன. பிரம்மாவின் பேரனான வேத அறிஞன் ராவணன் திடீரென்று திராவிடப் பழங்குடியினரின் பிரதிநிதியாக்கப் பட்டான். ராமனுடன் உறவு கொண்டாடிய உண்மையான பழங்குடியினரான படகோட்டி குகன், வேட்டுவப் பெண் சபரி, கழுகன் ஜடாயு மற்றும் காட்டுவாசி வானரர்கள் ஆரிய சதிகாரர்கள் ஆனார்கள். கிறித்துவ மதத்தின் ட்ரேட்மார்க் சொத்தான கடவுள், எதிர்க்கடவுள் (சாத்தான்) கொள்கையை இனவாதத்துடன் குழைத்துத் தந்த இந்த சதிவேலைகள் கொஞ்சம் வெற்றியடைந்தன என்றே சொல்லவேண்டும். ஒரு குறிப்பிட்ட இருள் சூழ்ந்த காலகட்டத்தில் தமிழகம் போன்ற இடங்களில் இந்தக் காலனியப் பிதற்றல்கள் ஏதோ உண்மை வரலாறு போல ஏற்கப்பட்டு இன்றும் ராவணன், அசுரன் போன்ற பெயர்களில் சாதீய, இனத்துவேஷம் பேசும் மனநிலை பிறழ்ந்த பித்துக்குளிகளை உருவாக்கியிருக்கிறது.

மதம், மொழி: பாரதத்தில் வாழ்ந்த தொன்மை மக்களின் சமயக் கூறுகளை நேரடியாக உள்வாங்கியவை வேத, சைவ, வைணவ, சாக்த மதங்களே. இதோடு ஒப்பிடுகையில் ஆரிய கௌதமர் (தம்மபதம் பெரும்பாலும் புத்த பகவனை இப்படித் தான் குறிப்பிடுகிறது) உருவாக்கிய பச்சை ஆரிய மதம் பௌத்தம். சமணமும் அப்படியே. ஆனால், ஐரோப்பியர்கள் எழுதிய வரலாற்றுக் கதையாடல்களில் இந்த விஷயங்கள் பலவிதமாகத் திரிக்கப் பட்டு குழப்பப் பட்டது. இந்த காலனியாதிக்க மூளைச்சலவையே இன்று வன்முறையை ஆதரிக்கும் ஆனால் பவுத்தத்தைப் போற்றுவதாகக் காட்டிக்கொள்ளும், அதே சமயம் வந்தேறி ஆரியர்களைத் தூற்றும் இந்து எதிர்ப்பு போலி அறிவுஜீவிகளை உருவாக்கியிருக்கிறது.

கால்டுவெல் பாதிரியார் திராவிட மொழி இலக்கணம் என்ற பெயரில் எப்படி மறைமுகமாக ஆரிய திராவிட இனவாதக் கருதுகோளை விதைத்தார் என்பது பற்றி திரு. வஜ்ரா சங்கரின் “ஏசுவும், கிறுத்துவர்களும் ஆரியர்களா” என்ற பதிவில் அருமையான விளக்கம் உள்ளது. இலங்கையில் இதன் விளைவு இன்னும் பயங்கரமானது. திராவிட மொழிக்குடும்பத்தில் உள்ள மலையாளத்தை விட சிங்களத்தில் சம்ஸ்கிருதத் தாக்கம் குறைவு, இரண்டும் ஏறக்குறைய ஒரே அளவு திராவிட (தமிழ்) மொழிக்கூறுகள் கொண்டவை. ஆனால், காலனிய மொழியியல் சிங்களத்தை வேண்டுமென்றே இந்தோஆரிய மொழிக்குடும்பத்தில் தள்ளியது. சிங்களவர் ஆரியர் என்றும் தமிழர் திராவிடர் என்பதுமான தேவையில்லாத இந்த இனவாதப் பரிமாணம் இலங்கைப் பிரசினையை இன்னும் தூபம் போட்டு வளர்க்க உதவியது.

இப்படி, இந்து ஆன்மீகமும், இந்திய தேசியமும் வெறுத்து ஒதுக்கிய இந்த இனவாதப் பேயை இந்தியச் சூழலில் இன்றும் துதித்துப் போற்றுபவர்கள் யார்?

1) கிறிஸ்தவ மிஷநரிகள், மதமாற்ற வெறியர்கள்

இந்தப் பேயை உருவாக்கிக் கட்டவிழ்த்துவிட்ட பெருமைக்குரிய இவர்கள் சமயம் கிடைக்கும்போதெல்லாம் இதைத் துணைக்கு அழைப்பார்கள். வடமேற்கு மாநிலங்களான திரிபுரா, மணிப்பூர், மிசோரம் இவற்றில் பழங்குடிகளில் ஒருவரோடு ஒருவரை மோதவிட்டு ஜமாத்தியாக்கள் போன்ற இனங்களைப் படுகொலை செய்து அழிப்பது, NLFT போன்ற கிறித்தவ அல்-கொய்தா குழுக்களை உருவாக்கியது, வடமேற்கின் குடிகளை பாரத கலாச்சாரத்திலிருந்தும் தேசியத்திலிருந்தும் மேலும் மேலும் தனிமைப்படுத்தியது இவை சில மிஷநரி சாதனைகள். மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கட் மாநிலங்களில் உள்ள பழங்குடியினரது நிலங்களை வந்தேறி ஆரியர்கள் பறித்துக் கொண்டதாகவும், இப்போது அவையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து பாரத்திலிருந்து பிரித்து “தலித்ஸ்தான்” என்றொரு தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் பிரசாரங்களைத் தூண்டுவிடுவது, காஞ்சா இளையா போன்ற மறை கழன்ற கேசுகளை வைத்து இந்து போன்ற நாளேடுகளில் ஆரிய ஆக்கிரமிப்பு பற்றி எழுத வைப்பது. இனவாதப் பேயை வைத்து இப்படிப் பல திட்டங்கள் மிஷநரிகளிடம் உள்ளன.

2) இடது சாரிகள்

இந்திய தேசியம் என்ற வலுவான கட்டமைப்பை சித்தாந்த ரீதியாக உறுதி செய்யும் எல்லா விஷயங்களையும் முன் நின்று எதிர்க்கும் கூட்டம் இது. இந்தியா எல்லா விதங்களிலும் பிளவுபடுதல் (Balkanisation) தங்களுக்கு உதவும் என்பதை நன்கறிந்து அறிவுஜீவித் தனத்துடன் அதற்கான திட்டங்களை செயல்படுத்துபவர்கள். வரலாற்றின் உண்மைத்தன்மை, ஆதாரங்கள் போன்றவை பற்றி மிகவும் கரிசனப் படுவதாகக் காட்டிக் கொள்பவர்கள், ஆனால் பயங்கரத் தந்திரத்துடன் வரலாற்றைத் திரிப்பவர்கள், மறைப்பவர்கள். பக்கம் பக்கமாக பாரசீக, அராபிய முஸ்லீம் வரலாற்று ஆசிரியர்களே பதிவு செய்து வைத்திருக்கும் இந்துக்களின் மீதான ஆக்கிரமிப்பு, படுகொலைகள் போன்ற 300 ஆண்டுகள் முந்தைய சமீப கால ஆதாரங்களை மூடி மறைத்தோ, இல்லை என்று சாதித்தோ அல்லது நியாயப் படுத்தியோ கூடப் பேசுவார்கள். ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய, முழு ஊகங்களின் அடிப்படையில் கட்டிய ஆரிய இனவாதம் அசைக்க முடியாத உண்மை, அதுவும் அந்த ஆரிய முனிவர்கள் பசு மாமிசம் சாப்பிட்டது பக்கத்திலிருந்து பார்த்தது போன்ற உண்மை என்றெல்லாம் சாதிப்பார்கள்.

ஆரியர்களது இந்து கலாசாரம் இந்தியாவிற்கு வெளியிருந்து வந்தது, இந்தியாவிற்கென்று சொந்தமாக ஒரு சமுதாய, கலாசார சிந்தனையும் கிடையாது என்பதாக நிறுவினால் மார்க்சிய, லெனினிய, மாவோயிச, ஸ்டாலினிச சித்தாந்தங்களையெல்லாம் நாம் பின்பற்றித் தான் ஆகவேண்டும் என்று நியாயப் படுத்த இது உதவுகிறது அல்லவா?

3) இஸ்லாமிஸ்டுகள்:

இந்தக் கூட்டத்தின் உறுப்பினர்கள் இணைய உறுப்பினர்கள் சிலர் அவ்வப்போது தங்களைச் சாடுபவர்களை வந்தேறி, பார்ப்பன, ஆரியக் கும்பல் என்றெல்லாம் சாடுவதால் பட்டியலில் இடம்பெறுகிறது. யூத இன வெறுப்பையும், அழிப்பையும் சமயக் கொள்கையாகவே கொண்ட இஸ்லாம், ஹிட்லரை விடப் பன்மடங்கு பெரிய இனப் படுகொலைகளையும், இன அழிப்பையும் பல நூற்றாண்டுகளாக செய்துவரும் வன்முறை சித்தாந்தமான ஜிகாத், இவற்றை நியாயப் படுத்த வேண்டுமல்லவா? அதனால் அவ்வப்போது ஆரியர்களும் இப்படி ஆக்கிரமிப்பு செய்தார்களே என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போவார்கள், அவ்வளவு தான்.

4) போலி மதச்சார்பின்மை வாதிகள்:

காலனியப் பார்வைகள் மூலம் தன் சொந்த நாட்டின் கலாசாரத்தைக் “கண்டுபிடித்து அறிந்த” டிஸ்கவரி ஆஃப் இந்தியா புகழ் ஜவகர்லால் நேருவின் சிந்தனைகளைக் கருத்தியல் அடிப்படையாகக் கருதுவதால் ஆரியப் படையெடுப்பும், இனவாதமும் உண்மை என்று முன்பு நம்பியவர்கள். தற்போது பொருளாதாரச் சீர்திருத்தம் தவிர மற்ற எல்லா சித்தாந்த சமாசாரங்களிலும் இடது சாரிகளால் கடத்தப் படுவதால், போட்டி மதச்சார்பின்மைக்காக இடது சாரிகளை விடத் தாங்கள் ஒரு படி மேல் என்பதாகக் காட்டத் துடிப்பவர்கள். ஆரிய இனவாதத்திற்கு எதிராக இந்துத்துவம் மிகத் தெளிவான, உறுதியான நிலைப்பாடு எடுத்துள்ளதால், தேசியவாதத்தை பலவீனப் படுத்தும் இந்தக் கொள்கைக்கு வலியச் சென்று தோள்கொடுக்கிறார்கள்.

5) திராவிட இயக்கங்கள்

ஒரு காலகட்டத்தில் காலனிய சக்திகளின் ஆரிய, திராவிட ஏமாற்று வேலைக்குப் பலியான ஆடுகள் என்பதால் பரிதாபத்திற்குரியவர்கள். இந்த இனவாதத்தின் எல்லாக் குப்பைகளையும் மற்றெல்லா கும்பல்களையும் விட அதி விசுவாசமாக நம்பி தீபாவளியை மறுத்து, பிள்ளையாரை உடைத்து, தங்கள் மொழியின் பேரிலக்கியமான கம்ப ராமாயணத்தையே கொளுத்தி எல்லாம் செய்யும் அளவுக்கு ஒரு காலகட்டத்தில் போனவர்கள். தமிழின் மேன்மையை நிலை நிறுத்தும் உத்வேகத்தில் பல உண்மையான அறிஞர்களும் ஒரு அடையாளம் வேண்டி இந்த இனவாதச் சேற்றுக்குள் இழுக்கப் பட்டது சோகம். தமிழகத்தில் சாதீயத்திற்கெதிரரன போராட்டம் நாராயண குருவோ, அம்பேத்கரோ இல்லாமல் ஈ.வே.ரா.வால் முன் நடத்தப் பட்டதால் பகுத்தறிவுப் பகலவன்களும் கூட ஆரிய இனவாதத்தைக் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று.

முதல் சொன்னப் பட்ட மூன்று குழுக்கள் போல, கடைசி இரண்டு குழுக்களுக்கும் இனவாதத்தை நியாயப் படுத்தவேண்டிய கட்டாயம் இல்லை. ஆரிய ஊடுருவல் பச்சைப் பொய் என்பதை இந்த நூற்றாண்டின் அறிவியல், தொல்லியல், வரலாற்று ஆராய்ச்சிகள் சந்தேகமில்லாமல் நிரூபித்து வருகின்றன. சிந்து, சரஸ்வதி நதிக்கரைகளில் பிறந்து, கங்கைத் தீரத்தில் செழித்த அதே பாரதக் கலாசாரம் தான் காவிரின் கரைகளில் பொங்கிப் பெருகிப் புகழ் சூடியது. அந்த கலாசாரத்தின் மைந்தர்கள் தான் நாம் அனைவரும்.

மதச்சார்பின்மை வாதிகளே! உங்கள் மீது அநியாயமாகத் திணிக்கப் பட்ட இந்த ஆரிய இனவாதக் கொள்கையை நிராகரியுங்கள்.

திராவிட இயக்க சகோதரர்களே! தனிநாட்டுக் கொள்கையையும், கடவுள் மறுப்புக் கொள்கையும் அண்ணா அறுபதுகளில் அதிகார பூர்வமாகக் கைவிட்டது போல, ஆரிய இனவாதக் கொள்கையையும் திராவிட இயக்கம் நிராகரிக்க வேண்டும். இந்தத் துரோகக் கும்பலில் இருந்து வெளிவர வேண்டும்.


http://jataayu.blogspot.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு