இந்த வாரம் இப்படி – 9 சூன் 2001

This entry is part [part not set] of 18 in the series 20010610_Issue

மஞ்சுளா நவநீதன்


ஜெய்பூர் கால் தயாரித்த டாக்டருக்கு விருது

சில சமயம் விருதுகள் சில சரியான நபர்களையும் சென்றடையக் கூடும். டாக்டர் பிரமோத் கரன் சேதி என்ற இந்த டாக்டர் கால் ஊனமுற்றோர் பலர் வாழ்வில் முக்கியமான அங்கம் வகிக்கிறார். ஜெய்பூர் கால் என்ற இந்த செயற்கைக் கால் கொண்டு நடக்க மட்டுமல்ல ஓடியாடி , நடனம் கூடச் செய்ய முடியும் என்று நிரூபித்தவர் பல லட்சக் கணக்கான நபர்கள் இவர் உதவியால் சுதந்திர நடை பயின்றிருக்கிறார்கள். நடனக் கலைஞரும், நடிகையுமான சுதா சந்திரன் கூட இந்தக் கால்களை உபயோகித்திருக்கிறார் என்று எண்ணுகிறேன். இது மட்டுமல்லாமல் இதன் தொழில் நுட்பத்தைக் கொண்டு பைசா சேர்க்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் உள்ளூர் வாசிகளுக்கு இதனைக் கற்பித்து அவர்களைக் கொண்டே இந்தக் கால்களைத் தயாரித்து வினியோகிக்க உதவி வருகிறார். இதன் செலவும் மிகச் சொற்பமே. மாட்டுச் சாணத்தைக் கூட எப்படிக் காப்புரிமைச் சட்டத்தைக் கொண்டு அபகரிக்கலாம் என்று பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகிற குரூரமான உலகில் டாக்டர் சேத்தி அவர்களை நாம் சிரம் தாழ்த்தி வணங்க வேண்டும்.

வியட்நாம் கம்போடியா போன்ற நாடுகளில் கண்ணிவெடிகளால் கால் இழந்த மக்களுக்கு இந்த ஜெய்பூர் கால்களின் உதவி மகத்தான ஒரு பேறு .

இந்த பரிசு அகில உலக ரோட்டரி கிளப் வழங்கியிருக்கிறது. பரிசின் மதிப்பு கிட்டத்தட்ட 50 லட்சம் இந்திய ரூபாய்கள்.

*****

நேபாளம் படுகொலைகள் : ஊகங்களும் வதந்திகளும்.

நேபாளம் படுகொலைகள் பலவிதமான வதந்திகளைக் கிளப்பியுள்ளன. சில பத்திரிகையாளர்கள் சீனாவின் வேலை இது என்று குற்றம் சாட்டியுள்ளனர். இன்னொரு திபெத் உருவாகிறது என்பது அவர்கள் கவலை. பால் தாக்கரே போன்றவர்கள் பாகிஸ்தானின் உளவு நிறுவனம் ஐ எஸ் ஐ -யின் வேலை இது என்கிறார்கள். சரியான முறையில் செய்தி பரவ வாய்ப்பில்லாமல் ஊகங்களில் நாம் வாழ நேர்ந்தால் வதந்திகள் பரவத் தான் செய்யும். சரியான செய்தி வருமா என்று தெரியவில்லை. இதற்கிடையில், நேபாளத்தில் இந்திய எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. நேபாளப் படுகொலைகள் ஐ எஸ் ஐயின் வேலையில்லாவிடினும் கூட தொடர்ந்த இந்திய எதிர்ப்புப் போராட்டங்கள் ஐ எஸ் ஐயின் வேலையாய் இருக்கக் கூடும்.

இந்திய அரசாங்கம் இப்படிப் பரவும் வெறுப்பை எதிர் கொள்ளத் திட்டம் ஏது கொண்டுள்ளதாய்த் தெரியவில்லை.

*****

முஷரபின் பேச்சும் தொடர்ந்த எதிரொலிகளும்

கடந்த வாரம் பாகிஸ்தானின் முதல் அதிகாரி (ஆம் அவர் தன்னை அப்படித்தான் நியமனம் செய்துள்ளார்.) பேசிய பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது. ‘ செங்கோட்டையில் பாகிஸ்தானியக் கொடி பறக்க விட வேண்டும் என்று மதச் சார்புள்ள கட்சிகள் பேசுவது கண்டிக்கத் தக்கது. பாகிஸ்தான் பற்றி மோசமான எண்ணத்தை ஏற்படுத்தும் விதமான பேச்சு இது. ‘ என்பது இவர் பேச்சின் சாராம்சம்.

பாகிஸ்தானின் வரலாற்றில், முதன் முறையாக இது போன்ற பொறுப்பற்ற பேச்சுக்களைக் கண்டித்து பேசிய முதல் பாகிஸ்தான் தலைவர் இவர்தான் இருக்கும். இருப்பினும்

பேச்சுவார்த்தையின் போது இந்த பொறுப்புணர்ச்சி தொடர்ந்தால் நல்லது.

****

நூலக ஆண்டு

அடுத்த வருடத்தை புத்தகங்களின் ஆண்டாக அறிவிக்கலாம் என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று அறிகிறோம். நல்ல காரியம் ஆனால் இதை நூலக ஆண்டு என்று அறிவித்து நூலக வசதியைப் பெருக்கினால் இன்னமும் பலன் உண்டு. 6 கோடி மக்கள் தொகை உள்ள தமிழ் நாட்டில் இன்னமும் 300 பிரதிகளும் 600 பிரதிகளும் நூலகங்களுக்காக வாங்குகிற அவல நிலை தொடர்கிறது என்பது வெட்கக்கேடான விஷயம். கிராம நூலகங்கள் அறவே இல்லை என்பதும், இருக்கிற நூலகங்களும் சரியாய்ப் பேணப் படாமல் கிடக்கின்றன என்பதும் அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து அரசாங்கங்கள் கல்வி மற்றும் படிப்பைப் புறக்கணித்தே வந்திருக்கின்றன என்பதும் வெட்கப் பட வேண்டிய விஷயம். அடிப்படைக் கல்வியை உயர் நிலைப் பள்ளிகளில் கட்டாயாமாய் ஆக்கி ஒரு சட்டம் வரவிருக்கிறது என்று அறிகிறோம். வரவேற்கத் தக்க வேண்டிய விஷயம்.

நூலகத் துறையிலும் புத்தகங்களை வாங்குவதற்கான விதி முறைகள் தரமான புத்தக வெளியீடுகளைச் சுத்தமாய்த் தவிர்க்கிற மாதிரி விலை நிர்ணயம் உள்ளது என்றும் அறிகிறோம்.

நூலகத் துறையை வளர்த்தெடுக்க கீழ்க்கண்ட விதிகளை அமல் படுத்தலாம்.

1. எல்லா தனியார் பள்ளிகளும் , கல்லூரிகளும் கட்டாயமாக ஒரு பொது நூலகத்தைப் பேண வேண்டும். இதைப் பொது மக்கள் உபயோகிக்கும் வகையில் சிறப்பாய்ச் செயல் படுத்த வேண்டும்.

2. கிராமப் பஞ்சாயத்து மற்றும் தாலுகா கலெக்டர் அலுவலகங்களின் அருகிலும், வாகனத்துறை போன்ற மக்கள் புழங்கும் இடங்களின் அருகிலும் நூலகங்கள் அமைக்கப் பட வேண்டும்.

3. அரசுப் பள்ளிகளில் நூலகம் பேணப் பட வேண்டும். புத்தக வெளியீட்டாளர்களுக்கு வரிச் சலுகையும் , மலிவு விலை தாள் வழங்குதலும் செய்யப் பட வேண்டும். இது வேறொரு வடிவத்தில் இப்போதும் உள்ள திட்டம் தான் என்று அறிகிறேன்.

4. கல்வித்திட்டத்தில் நூலகத்தைப் பயன் படுத்துவதையும் ஒரு பாடமாய் வைக்க வேண்டும். பாடப் புத்தகங்களுக்கு வெளியே படிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும்.

******

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்