இந்த வாரம் இப்படி – சூலை 7, 2001

This entry is part [part not set] of 15 in the series 20010707_Issue

இரா மதுவந்தி


(மஞ்சுளா நவநீதன் சுற்றுலா சென்றிருப்பதால்)

அதிமுகவின் சேதம் குறைப்பு வேலைகள்

மூன்று மாதத்தில் முடிவு சொல்லும்படி ஒரு நபர் கமிஷனை நியமித்திருக்கிறார் ஜெயலலிதா. கமிஷன் என்றாலே என்ன நடக்கும் என்பது தெளிவு. இதில் ஒரு நபர் கமிஷன் வேறு.

அதிமுகவுக்கு ஓட்டுப்போட்ட ஒரு கோடி மக்கள் மாறனையும் பாலுவையும் மத்தியமந்திரிப்பதவியிலிருந்து விலக்கும்படிக் கோரி தந்திகள் அனுப்பப் போவதாக செய்தி. அதிமுகவால் அரசாங்கத்து தந்தி துறைக்கு கொஞ்சம் வருமானம்.

காங்கிரஸ் கூட்டு தேர்தலோடு போயிற்று என்று சொன்ன ஜெயலலிதா, இப்போது தம்பி துரையை அனுப்பி சோனியாவிடம் கூட்டு இருக்கிறது என்று உறுதி கூறியிருக்கிறார். ஜெயலலிதாவை காங்கிரசாருக்கு நன்றாகவே தெரியும். காங்கிரசுக்கு ஜெயலலிதா மீது பாசம் ஒன்று மில்லை. அவர்களுக்கு பாஜகவை நெருக்கடி பண்ணுவதற்கு அவர்கள் பண்ணும் எல்லா வேலையிலும் முட்டுக்கட்டை போடுவதற்கு இன்னுமொரு வாய்ப்பு அவ்வளவுதான்.

ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் தரும் வாய்ப்பு காங்கிரசுக்கு வெடியாக வந்து வாய்க்கலாம். ஏற்கெனவே தேவையில்லாமல் ஜெயலலிதா எதிர்ப்புப் பேரணியை பாஜக தில்லியிலும், உத்தர பிரதேசத்திலும் நடத்திக்கொண்டிருக்கிறது. இது பாஜகவுக்கு ஆட்களைச் சேர்க்கவும், காங்கிரசை தனிமைப்படுத்தவும் உபயோகப்படும்.

இதே நிலைதான் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும். அவர்களுக்கும் பாஜக இருக்கும் தேசீய முன்னணியை அடிப்பதற்கு ஜெயலலிதா ஒரு ஆயுதம் அவ்வளவுதான். இது சரியான அணுகுமுறை அல்ல என்பது அவர்களுக்குச் சொல்ல யாரும் இல்லை போலிருக்கிறது.

நடுராத்திரியில் ஜோதிபாசுவை கைது செய்து அடித்து ஜெயிலில் போட்டு மருத்துவ உதவி இல்லாமல் தெருவில் உட்காரவைத்தாலும் அது எந்த அரசு என்பதைப் பொறுத்துத்தான் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்யும் போல. ஜோதிபாசுவை அடித்தது ஜெயலலிதா அல்லது சோனியா என்றால், கைது செய்தது சரிதான் ஆனால் கைது செய்த விதம் சரியல்ல என்று நல்லக்கண்ணு, வீரமணி, மணிசங்கர அய்யர், ஜெயபால் ரெட்டி போன்றோர்கள் அறிக்கை விடலாம். அது பாஜக அரசு செய்தால், மதவாத நாஜிக்கும்பல் அராஜகம் ஆடுகிறது, உடனே இந்த அரசைக் கலைக்க வேண்டும் என்று அறிக்கை விடலாம்.

ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதாகப் பேசிக்கொண்டிருப்பவர்கள், ஜனநாயக நெறிமுறைகளைப் கட்டாயமாக முன்னிருத்த வேண்டும். அது யாராக இருந்தாலும். அப்படி இல்லையென்றால், எதிர்காலத்தில் பாஜக இந்த வேலைகளைச் செய்தால், அதனை கண்டிக்க தார்மீக உரிமைகளை இழக்கிறோம் என்பதையும் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். என் கூட்டணி ஆள் என்று இன்று ஒரு அராஜகத்தை கண்டிக்காமல் விட்டால், எதிர்காலத்தில் எதிர்க்கூட்டணி செய்யும் அராஜகத்தை கண்டிக்க முடியாது என்பதும், அப்படி கண்டிக்கும்போது அது சந்தர்ப்ப வாதமாகத்தான் பார்க்கப்படும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

***

பாமக தலைவர் ராமதாஸ் அதிமுக முன்னணியை விட்டு தேசீய முன்னணிக்குத் தாவுகிறார்

ஏறத்தாழ எதிர்ப்பார்த்ததுதான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

கலைஞர் கருணாநிதி சிறைக்கு கொண்டுசெல்லப்பட்ட விதம் காரணமாக மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தி (அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டவர்கள் மத்தியிலேயே அதிருப்தி அதிகமாகிறாற்போல இருக்கிறது) இந்த தாவல் காரணம் அல்ல என்பதை ராமதாஸ் தெளிவு படுத்தியது அவரது நேர்மையை காட்டுகிறது. தன்னை மதிக்கவில்லை என்பதையே அவர் காரணமாகச் சொல்லியிருக்கிறார். குறைந்தது கலைஞர் நடத்தப்பட்ட விதம் சரியில்லை என்பதால் போகிறேன் என்று சொல்லியிருந்தாலாவது இது போன்ற நடவடிக்கைகளுக்கு ஜனநாயகச் சமூகத்தில் வரும் எதிர்ப்புகளை பலப்படுத்தும் முயற்சியாக இருக்கும்.

தன்னை மதிக்கவில்லை என்பதைக் காரணமாகச் சொல்வதன் மூலம் ‘சுயநல அரசியலை ‘த்தான் அவர் வலுப்படுத்துகிறார்.

இது சம்பந்தமாக மூப்பனார் அளித்த பேட்டி நகைச்சுவை ததும்பியது. நீண்ட கேள்விகளுக்கு ஒரு வரி பதில்கள். எதற்கெடுத்தாலும் ‘நீங்களே சொல்லுங்களேன் ‘ என்பது போன்று கேள்வி கேட்பவர்களையே பதில் சொல்லும்படி கேட்பது.

பாஜகவின் அரசியல் ஏடு செய்த முட்டாள்தனம்

சமீபத்தில் பாஜக அரசியல் ஏடான பிஜேபி டுடே என்ற இதழ் சீனா பற்றி சில அரசியல் கட்டுரைகளை வெளியிட்டு வந்திருக்கிறது. நான் இது போன்ற அரசியல் கட்சி பத்திரிக்கை குப்பைகளைப் படிப்பதில்லை. நியூஸ் டுடே என்ற இந்தியா டுடே இணையத்தளத்தில் இந்த இதழ் செய்த முட்டாள்தனம் பிரபலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் தெரிந்த விஷயம்.

காஷ்மீரத்தின் பல பகுதிகளை (முக்கியமாக லடாக் போன்ற சீன ஆக்கிரமிப்புப் பிரதேசங்களை) சீனாவின் பகுதிகளாகக் காண்பித்து சீன வரைபடத்தைக் காண்பித்திருக்கிறது. அதே நேரம் இந்த வரைபடம் சீனாவின் அரசாங்க வரைபடம் தெரியாமல் அச்சில் சென்று விட்டது என்றும் கோர முடியாது. ஏனெனில் சீனாவின் அரசாங்க வரைபடத்தில் அருணாச்சல பிரதேசம் சீன பகுதியாக காண்பிக்கப்பட்டிருக்கும். இந்த வரைபடத்தில் அருணாசல பிரதேசம் இந்தியப் பகுதியாகக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் காஷ்மீரப்பகுதிகள் சீனப்பகுதிகளாகக் காண்பிக்கப் பட்டிருக்கின்றன.

பாஜக அரசோ, தேசீய முன்னணி அரசோ காஷ்மீரத்தை அதிகாரப்பூர்வமாக பிரித்து யாருக்கேனும் தாரை வார்த்தால், எந்த பாஜக ஆளும் ஓட்டுக் கேட்டு பிரச்சாரம் செய்ய முடியாது என்பது பாஜக தலைவர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.

***

மணிப்பூர் பிரச்னை என்ன ?

(இந்த விஷயத்துக்கு உதவி – மஞ்சுளாவின் குறிப்புகள்)

நாகாலாந்து மானிலத்தைச் சுற்றி, மணிப்பூர், அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. மணிப்பூர் மாநிலம் முன்பு ஒரு அரசரின் கீழ் இருந்தது. மணிப்பூர் அரசர் ஆண்ட பகுதிகள் பின்னர் மணிப்பூர் மாநிலமாக அறிவிக்கப்பட்டன. மணிப்பூர் மானிலத்தின் வடக்குப் பகுதிகளில் நாகா இன மக்கள் வசிக்கிறார்கள். நாகா மக்களுக்குள் சுமார் 18 ஜாதியினர் இருக்கிறார்கள். மணிப்பூரின் வட பகுதியில் வாழும் நாகா மக்கள் தாங்களும் நாகா மக்களுடன் இணைந்து சுதந்திர அகண்ட நாகாலாந்து உருவாக்க வேண்டும் என்று ஒரு போராட்டம் ஆரம்பித்தார்கள். நாகாலாந்து சோஷலிஸ்ட் கவுன்ஸில் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. (இதற்கு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பாப்டிஸ்ட் சர்ச் உதவி வந்திருக்கிறது. நாகாலாந்து மக்களில் 90 சதவீதத்தினர் பாப்டிஸ்ட் கிரிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். 10 சதவீததினரே இன்று இந்துக்களாகவும் பாரம்பரிய கடவுள்களையும் கும்பிடுபவர்களாக இருக்கிறார்கள்) இது சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டு பல வருட காலம் நடந்து வந்திருக்கிறது.

இவர்களுக்கு தொடர்ந்து சீனாவும் பாகிஸ்தானும் உதவி வந்திருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்னர், இந்திய அரசாங்கம் இந்த தீவிரவாத குழுவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது.

அந்த சமாதானப் பேச்சு வார்த்தையின் முதல் படியாக போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யலாம் என்று முடிவு செய்தார்கள். ஒப்பந்தத்தில் ஒரு பிரச்னை. நாகா தீவிரவாதிகள் போர் நிறுத்த ஒப்பந்தம் அகண்ட நாகாலாந்து முழுமைக்கும் இருக்க வேண்டும் என்று கேட்டார்கள். மத்திய அரசு நாகாலாந்து மட்டுமே போர் நிறுத்த ஒப்பந்தம் என்று சொன்னது. ஆனால் பெரும்பான்மையான நாகா தீவிரவாதிகள் மணிப்பூரின் வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். எனவே போர் நிறுத்தம் வந்தும் தீவிரவாதமும் கொலைகளும் கொள்ளைகளும் நிற்கவில்லை. எனவே ஒப்பந்த வார்த்தைகளை மாற்றி ‘அகண்ட நாகாலாந்து ‘ என்று எழுதுவதற்குப் பதிலாக ‘எல்லா இடங்களிலும் ‘ என்று எழுதி போர் நிறுத்த ஒப்பந்தம் எழுதப்பட்டது.

இதற்கு பலத்த எதிர்ப்பு மணிப்பூரில் வந்திருக்கிறது. மணிப்பூர் மக்கள் இந்த ஒப்பந்தம் ‘அகண்ட நாகாலாந்துக்கு ‘ முன்னோடியானது என்று கருதி எதிர்க்கிறார்கள். இது சுற்றுப்புற மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், போன்ற மாநிலங்களிலும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

இதற்கு மத்திய அரசும், மந்திரிகளும், நாகாலாந்து மாநில அரசும் தீவிர மறுப்பு தெரிவித்திருக்கின்றன. அகண்ட நாகாலாந்து உருவாக எந்தவித நோக்கமும் இல்லை என்று கூறியிருக்கின்றன. ஆனால் நாகா தீவிர வாதிகள் அகண்ட நாகாலாந்து எங்கள் நோக்கம் என அறிவித்து இந்தப் பிரச்னையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

மணிப்பூர் தனி நாடாக்கக் கோரும் தீவிரவாதிகள் இந்தப் பிரச்னையை தனதாக்கிக் கொண்டு, மணிப்பூரைச் சேர்ந்த நாகா மக்களை துன்புறுத்தவும், மணிப்பூர் அரசாங்கத்தைச் சார்ந்தவர்களைக் கொல்லவும், மத்திய அரசாங்கக் கட்டிடங்களைத் தாக்கவும் துவங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கும் சீனா, பாகிஸ்தான் போன்ற அரசாங்கங்கள் உதவுகின்றன.

***

கதார் – இன்னொரு தணிக்கை முயற்சி

சமீபத்தில் தர்மேந்திராவின் பையன் சன்னி தியோல் நடித்த கதார் திரைப்படம் வெளிவந்திருக்கிறது. வழக்கம் போல கதாநாயகம் வீரதீரச் செயல்கள் செய்கிறான். ஒரே வித்தியாசம் வில்லன்கள் தெளிவாகப் பாகிஸ்தானிய ராணுவமாகக் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு பல எதிர்ப்புகள். முக்கியமாக தங்களை முஸ்லீம் பிரதிநிதிகள் எனச் சொல்லிக்கொள்பவர்களிடமிருந்து. பல இடதுசாரிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஒரு எதிர்ப்பு முஸ்லீம்களை இந்தியாவின் சித்தரிப்பதை எதிர்த்து. இன்னொரு எதிர்ப்பு – பாகிஸ்தானும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்திருக்கும் இந்த நேரத்தில் இது போன்ற பாகிஸ்தானிய எதிர்ப்பு படங்கள் சமாதானத்துக்கு நல்லதல்ல என்பது பற்றி.

‘படத்தின் கதை பாகிஸ்தான் பிரிவினையின் போது நடக்கிறது. பாகிஸ்தான் பிரிவினையின் போது உச்சத்தில் இருந்த மத உணர்ச்சிகளை ஒரு கதாபாத்திரமாவது காட்டித்தானே ஆகவேண்டும் ? இந்தப்படத்தை எடுக்கும்போது இந்தியாவும் பாகிஸ்தானும் வெள்ளையர்கள் கற்றுக்கொடுத்த கிரிக்கெட்டைக் கூட விளையாட மாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்தன. படம் வெளிவரும்போது அரசாங்கம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினால் அதற்காக படம் எடுத்தவர் பிலிமை கொளுத்தவா முடியும் ? ‘ என்று எதிர்ப்புகளுக்கு எதிர்வாதம் செய்யப்பட்டிருக்கின்றன.

முஸ்லீம் இந்து பிரச்னையை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பதிலும், அந்த ஞாபகத்தின் மூலம் மக்களுக்கு இடையே வன்மத்தையும், கோபத்தையும் வளர்ப்பதிலும் இந்திய மக்களுக்குப் பிரயோசனமில்லை.

எப்போதோ ஒரு தவறு யாரோ ஒருவர் இழைத்தார்கள் என்பதை மனத்தில் வைத்துக்கொண்டு, பரம்பரை பரம்பரையாக முரண்டு பிடிப்பது என்பது தவறான வழி. அப்படிப்பார்த்தால் இன்று ஒருவர் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் அலைய முடியாது. எந்த ஜாதிக்காரர்களும் எந்த மதக்காரர்களும் சுத்தத் தங்கம் என்று தங்களை வர்ணித்துக் கொள்ள முடியாது. ஆனால் தங்களை நடுநிலைக்காரர்கள் எனக்கூறிக் கொண்டு ஒரு பக்கம் சார்ந்து பேசுபவர்கள் மறுபக்கத்தில் தீவிரவாதத்தை வளர்த்துவிடுகிறார்கள்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி

என்பது குறள்.

தலித்துகளும், தேவர்களும், வன்னியர்களும் பழங்கால வன்மத்தை மனதில் கொண்டு இன்னும் வெறுப்பு வளர்ப்பதும், வெறுப்பு வளரும்படி பலர் பேசுவதும், அப்படி பேசுவது கருத்து சுதந்திரம் என்று உரிமை கொண்டாடுவதும் மக்களுக்கு நல்லதல்ல. அதே போலத்தான் இந்த கதார் கதையும். நடந்திருக்கலாம். அதை ஒரு ஆவணமாக நேர்மையாக நம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும். அது மக்களிடையே வெறுப்பு வளர்க்கும் சாதனமாகி விடக்கூடாது. நாஜிகள் யூதர்களை கொன்றார்கள் என்பது உண்மைதான். அதற்காக இன்றைய இஸ்ரேல் ஜெர்மானியர்கள் மீது நிரந்தரப் பகை என்று அறிவிக்கவில்லை. தவறுகளிலிருந்து எல்லோருமே கற்றுக்கொள்கிறோம். இருதரப்பும் நேர்மையாக கற்றுக்கொள்ளும்படி ஆவணங்களை உருவாக்குவதும், வெளிப்படையான வன்முறையற்ற கருத்துச்சுதந்திரமுமே தூக்கி நிறுத்த வேண்டியவை.

***

Series Navigation

இரா மதுவந்தி

இரா மதுவந்தி