இரா மதுவந்தி
***
நடிகர் திலகம் மறைந்தார்
கடைசி வரை நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், கடைசி வரை சிவாஜியாக சினிமாவில் நடிக்காமல், பெரியாராக நடிக்காமல், இந்தியாவின் சிறந்த நடிகர் பரிசு பெறாமல் மறைந்து விட்டார்.
மனிதனின் அத்தனை பரிமாணங்களையும் சினிமாவிலும், சொந்த வாழ்க்கையிலும், பார்த்தவர். நண்பர்கள் எதிரிகளான போதுகூட தான் நம்பிய ஒரு விஷயத்தை விட்டுக் கொடுக்காதவர். நாஸ்திக வாதம் அரசாங்கத்தில் உட்கார்ந்திருந்த போதும், அவரது நெருங்கிய நண்பர்கள் அரசாங்கத்தில் இருந்தபோதும், போலி பம்மாத்து இல்லாமல், ஆமாம் நான் திருப்பதி சென்றேன் என்று சொன்னவர். சினிமாவில் சிறந்த நடிகராக இருந்தும், சொந்த வாழ்க்கையில் நடிக்காதவர்.
ஒரு முறை கமலஹாசன் ‘சிவாஜி கணேசனின் பாதிப்பு இல்லாத ஒரு நடிகர் கூட தமிழ்ச் சினிமா உலகில் கிடையாது ‘ என்று சொன்னார். உண்மைதான்.
எதிர்காலத்தில் ராஜாக்களும், அரசியல்வாதிகளும் மறக்கப்பட்டுவிடுவார்கள். சிறந்த கலைஞன் என்றும் இருப்பான்.
***
பாகிஸ்தான் சர்வாதிகாரி முஷாரஃப் அவர்களும் பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர்களும் பண்ணிய கூத்து
நான் நினைத்தபடி நடந்துகொள்பவர்கள் பற்றி எனக்கு பெரும்பாலான நேரங்களில் சந்தோஷம்தான் வரும். ஆனால், முஷாரஃப்பும் பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர்களும் நடந்துகொண்ட முறை நான் எதிர்ப்பார்த்தது தான் என்றாலும், நான் எதிர்பார்த்ததைவிட கீழ்த்தரமாக நடந்துகொண்டதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமும் கோபமும்தான் வருகிறது.
முதலாவது முஷாரஃப், இந்தியப் பத்திரிக்கையாளர்களுடன் காலைஉணவு அருந்துகிறேன் என்ற பெயரில் அடித்தக் கூத்து. அந்தப் பிரசாரப் பேச்சை ஒரு பாகிஸ்தானிய அதிகாரி செய்வதற்கும், ‘ஜனாதிபதி ‘ செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. காஷ்மீர் காஷ்மீர் என்று பத்தாயிரம் தடவை சொல்லி, அதைப் பற்றித்தான் நான் பேசினேன் என்று பத்தாயிரம் தடவை சொல்லி, வந்திருக்ககூடிய எந்த ஒப்பந்தத்தையும் முன்னாலேயே கிள்ளி எடுத்த செயல்.
உண்மையில் முஷாரஃப்புக்கு வந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. முன்பு ஒருமுறை மஞ்சுளா நவநீதன் எழுதியது போல, பாகிஸ்தான் சர்வாதிகாரிக்கு பேச்சுவார்த்தைதான் நோக்கமே தவிர பேச்சுவார்த்தை மூலம் வரும் ஒப்பந்தம் நோக்கம் அல்ல. அதை நிரூபிப்பது போல, எந்த ஒரு ஒப்பந்தமும் வரக்கூடாது என்று திட்டமிட்டது போலப் பேசிவிட்டு போய் விட்டார். இந்திய தலைவர்களால்தான் ஒரு ஒப்பந்தமும் வராமல் போய்விட்டது என்று இந்தியப் பத்திரிக்கைகளும் எழுதுவதில் எனக்கு ஆச்சரியமில்லை. கறிபிரியாணியும் முந்திரிப்பருப்புகளும் கொடுத்தால், ஜெயலலிதாகூட ஜனநாயகச் செம்மல் என்று எழுதும் கும்பல் இது. சர்வாதிகாரி சாப்பாடே போட்டிருக்கிறார். பின்னே ?
அடுத்தது, பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர்கள், இந்திய அதிகாரி நிருபமா ராவ் அவர்களின் மீது கையை வைத்து இழுத்து, அவரை ஓட ஓட துரத்தி இருக்கிறார்கள், போலீஸ் வந்து அவரைக் காப்பாற்றி இருக்கிறது. பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள் ஒரு இந்திய அதிகாரியை துரத்துகிறார்கள். இந்தியப் பத்திரிக்கையாளர்கள் ஒரு மனிதாபிமானத்துக்காகவாவது அவரைக் காப்பாற்ற வேண்டாமா ? சூராதி சூரர்களான இந்தியப் பத்திரிக்கையாளர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். தனியாக ஈஸிச்சேரில் உட்கார்ந்து வாஜ்பாயியையும் அத்வானியையும் லாரல் ஹார்டி என்று கேலி செய்து எழுத நேரம் வேண்டாமா ? வெட்கம்.
இந்திய அரசு நாகரீகத்துடன் வரும் விருந்தினர் மனம் கோணவேண்டாம் என்பதற்காக, இந்தியா வருகிறேன் என்று சொன்ன இந்திய முஸ்லீம் தலைவராக இருக்கும் நாடுகடத்தப்பட்ட அல்டாஃப் ஹ்உசேனுக்கு இந்தியா வர அனுமதி தரவில்லை. ஆனால், அந்த நாகரீகம் எல்லாம் முஷாரஃப் அவர்களுக்கு இருக்கும் என எதிர்பார்க்க இயலுமா ? காஷ்மீர் தனியாகப் பிரிய வேண்டி போராடிக்கொண்டிருக்கும் ஹ்உரியத் தலைவர்களுடன் தேநீர் அருந்துவேன் என்று கூறி தேநீரும் அருந்தினார். வாஜ்பாயி பாகிஸ்தான் சென்றால், அங்கிருக்கும் எல்லா பிரிவினை வாதிகளுடனும் உட்கார்ந்து பேசி அவர்களுக்கு ஆதரவு தருவதாக அங்கேயே சொல்லிவிட்டு வர தைரியம் இருக்குமா ? அப்படிச் செய்தால், நமது பத்திரிக்கையாளர்கள்தான் வாய்பாயியை சும்மா விட்டுவிடுவார்களா ?
பாகிஸ்தான் சர்வாதிகாரி பாகிஸ்தான் சென்றதும் கார்கில் எல்லைக்கோடுகளில் மீண்டும் குண்டுகள் வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன.
***
காஷ்மீரில் இருக்கும் கோவிலுக்குச் செல்லும் இந்து யாத்திரீகர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கையாலாகாத இந்திய அரசு, முட்டாள்த்தனமான யாத்திரீகர்கள், கொலைகார போராளிகள், இந்துக்கள் கொலையை ருசித்து உண்ணும் பாகிஸ்தான் ராணுவம், இந்திய அரசே செய்திருக்கும் என தடயங்கள் தேடும் இந்தியப் பத்திரிக்கையாளர்கள், இந்துக்கள் இறக்கும் போது இறுக்க கண்ணை மூடிக்கொள்ளும் உலகம்.
***
ஏன் இந்தியா பாகிஸ்தான் உச்சி மாநாடு தோல்வி அடைந்தது என்று சொல்லி எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் இணைக்கப்பட்டிருந்த படம் மேலே இருக்கிறது.
நம்மை வாழ்வின் அவலங்களிலிருந்து மீட்டெடுப்பதே இது போன்ற நகைச்சுவை உணர்வுதான்.
***
- ஆசிாியரும் மாணவனும்
- G8 உச்சிமாநாடு விளக்கம் (கேள்வி பதில்கள்)
- காஷ்மீர் பிரச்னை
- இந்த வாரம் இப்படி, சூலை 22, 2001(நடிகர் திலகம் மறைவு, முஷாரஃப் கூத்து, இந்து யாத்திரிகர்களும், இந்து கிராமத்தவர்களும் கொலை)
- அன்பே…
- ஹைக்கு கவிதைகள்
- நிரந்தர நிழல்கள்
- சேவியர் கவிதைகள்
- ‘போதும் எழுந்து வா ‘
- நன்றி !மீண்டும் வருக !
- மின்னணுக் கல்வி அறிவு (மி.கல்வி அறிவு)/(e-literacy)
- பாசிப்பருப்பு சாம்பார்