மஞ்சுளா நவநீதன்
(அறிவியல், தொழில்நுட்பம் மட்டும்)
குப்பையாக்கப்பட்ட கியோட்டோ ஒப்பந்தம்
க்யோட்டோ சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தை அமெரிக்கா ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்று தீர்மானமாக அறிவித்திருக்கிறது. இது உலகமகா மடத்தனம் என்று ஐக்கியநாடுகள் சபையும், ஐரோப்பிய நாடுகளும், பிரிட்டனும் தீர்மானமாக அமெரிக்க அரசை எதிர்க்கின்றன. இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கும் தொழிலதிபர்களும், நிறுவனங்களும் இன்றைய அமெரிக்க ஜனாதிபதிக்கு நெருங்கியவர்களாக இருப்பதனால்தான் இந்த சுற்றுச்சூழல் எதிர்ப்பு என்று பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு சில வழிகளில் ஆதரவாக இருக்கும் கியோட்டோ ஒப்பந்தத்தை அமெரிக்கா எதிர்த்து வந்தது. கிளிண்டன் காலத்தில் கூட இது அறைகுறையாகவே ஒப்புக்கொள்ளப்பட்டது (பல மாறுதல்களுக்குப் பின்னர்). இருந்தும் இன்றைய மாறிவிட்ட அமெரிக்க அரசு இதை சுத்தமாக எதிர்ப்பது சுற்றுச்சூழல், மற்றும் தட்பவெப்ப முன்னேற்றங்களுக்கு மிகவும் பின்னடைவு.
இது மாதிரியான போக்குகளைப் பார்த்து இந்திய மற்றும் தமிழக சுற்றுச்சூழல் ஆய்வாளர்களும், ஆதரவாளர்களும் மனம் தளராமல் பூமியின் மேல் தொங்கும் புகைப்பேதாளத்தை இறக்க மீண்டும் மீண்டும் முனைவது விட்டுவிடக்கூடாது.
**
மான்சாண்டோ நிறுவனம் மரபணு மாற்றிய உணவுப்பொருட்களை விற்க தீவிர முயற்சி
விதையில் டெர்மினேட்டர் ஜீன் என்னும் மலடு ஜீனைப் போட்டு விற்க முயற்சி செய்த மான்சாண்டோ நிறுவனத்தை என்ன அழித்தாலும், மீண்டும் மீண்டும் சாம்பலிலிருந்து உயிர்பெறும் ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் மீண்டும் மரபணு மாற்றிய உணவுப்பொருட்களை விற்க தீவிர முயற்சி எடுக்கப் போவதாக தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் மாடுகளுக்கு மட்டும் கொடுப்பதற்கு அனுமதி பெற்ற சோளத்தை மக்களுக்கும் விற்று பெரிய பிரச்னையில் இந்த நிறுவனம் மாட்டிக் கொண்டது. இருந்தும் மனம் தளராமல் இவர்கள் உலக விவசாயத்தை கட்டுப்படுத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதுபோல அமெரிக்க டாலர் துணையோடு போரில் இறங்கிவிட்டார்கள்.
உலகமயமாதலின் இன்னொரு முகம் இது போன்ற உலகமயமான நிறுவனங்கள். வியாபாரத்தடைகள் நீக்கப்பட்ட உலக சந்தையில், முன்னேறிய அறிவியலின் துணைகொண்டு, முன்னேறாத நாடுகளை அடிமைப்படுத்த இன்னும் கிழக்கிந்திய கம்பெனிகள் தயார். நாம் ஏமாளியாக இருந்தால் தோல்வி நமக்குத்தான். (இந்தப்பிரச்னைகள் எல்லாம் புரிந்துகொண்டு விவாதம் செய்யக்கூட தமிழகத்தில் ஆள் இல்லை. இந்த விஷயங்களைப் புரிந்து கொண்டு தமிழர்களிடம் விளக்கக்கூடிய அரசியல்வாதிகளான இரா.செழியன், சிதம்பரம், குருமூர்த்தி, சுப்பிரமணியசாமி போன்றவர்கள்கூட தமிழகத்தின் விஷச்சூழலில் சிக்கி சின்னாபின்னமாகி அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள்.)
**
86000 மைல் அகலமுள்ள சூரியப்புள்ளி
இந்த சூரியப்புள்ளி கடந்த 24 மணிநேரமாக பெரிதாகிக்கொண்டே வருகிறது. இதன் சூரிய காற்று இன்னும் இரண்டுவாரத்துக்கு உலகத்தை பாடாய்படுத்தப்போகிறது என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். அதிக பட்ச அழிவு, சில செயற்கை துணைக்கோள்கள் அழிவும், சில இடங்களில் மின்சாரம் பாதிப்பும் இருக்கும் என்று சொல்கிறார்கள். (நமது பாதுகாப்பு கவசமான வாயு மண்டலத்தை அழிப்பதற்கு அரசியல் பண்ணும் அமெரிக்காவும் இன்னும் முன்னேறிய நாடுகளும் சற்று சிந்தித்தால் தேவலை)
***
மிர் விண்வெளி ஆராய்ச்சிக்கலம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது.
மிர் (சமாதானம்) என்ற ஆராய்ச்சிக்கலத்தை அன்றைய சோவியத் யூனியன் அனுப்பியது. அந்த சோவியத் யூனியனே கலைந்து போனபின்னரும் பயனுள்ளதாக பலகாலம் வேலை செய்துவந்த இந்த ஆராய்ச்சிக்கலம், பசிபிக் பெருங்கடலில் பிஜித்தீவின் அருகே விழுந்து தன் வாழ்வை முடித்துக்கொண்டது.
இதிலிருந்து இந்தியர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறைய. அறிவியலும்,தொழில்நுட்பமும், அரசியலும் கூடத்தான்.
**
கிளாடியேட்டர் பட விருது
கிளாடியேட்டர் படத்துக்கு ஆஸ்கார் விருது என்றதும் போய் இந்தப்படத்தை டிவிடியில் எடுத்து பார்த்தேன். மார்க்கஸ் அரேலியஸ் என்ற ரோமானிய மாமன்னனின் மகனுக்கு அரசை கொடுக்காமல் தளபதிக்குக் கொடுக்கிறான். (நாடோடி மன்னன் திரும்பத்திரும்ப ஞாபகத்துக்கு வந்தது அமெரிக்கர்களின் தவறல்ல). மகன் அப்பனைக் கொன்றுவிட்டு அரசனாகி தளபதியைக் கொல்ல நினைக்கிறான். தளபதி எவ்வாறு பழிவாங்குகிறான் என்பதை சின்னத்திரையில் காண்க.
கதாநாயகனான ரஸ்ஸல் க்ரோவை விட வில்லனான அரச மகனின் நடிப்பு பிரமாதம். இருந்தும் ஏன் அவருக்கு ஒரு ஆஸ்கார் குறிப்பு கூடக் கொடுக்கப்படவில்லை ? கதாநாயகன் இறந்ததும் அவனைக் கொண்டாடும் ரோமானிய மக்களுக்கும், குடியரசு முறை, முடியரசு முறையைவிட சிறந்தது என்று படம் எடுத்த கிளாடியேட்டர் படத்துக்கு விருது கொடுத்த ஆஸ்காருக்கும் அதிக வித்தியாசமில்லை.
** **