இந்த நூற்றாண்டின் மகள்.

This entry is part [part not set] of 28 in the series 20080918_Issue

துரை பிரபாகரன்


(நன்றி: மங்களம் 11 ஆகஸ்ட் 2008)

ஸாராம்மாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. மிகவும் கவலையாக இருந்தது.
மகளிடமிருந்து தகவல் வந்து மூன்று வாரமாகிவிட்டது இன்றைக்கும் செய்தி ஏதுமில்லை. சாதாரணமாக வாரத்திற்கொரு முறையாவது போனில் பேசுவாள்.
ஆனால்…..இப்போது மூன்று வாரமாக ஒன்றுமில்லை.
லைலா பிடிவாதமாக எம்.பி.ஏ. படிக்க பெங்களூருக்குத்தான் போகவேண்டும் என்றதற்கு அவள் கணவர் பிலிப்போஸ் சம்மதித்தபோதே ஸாராம்மா வேண்டாமென்று எதிர்ப்பு தெரிவித்தாள்.
எம்.ஏ.-யில் பர்ஸ்ட் கிலாஸுடன் பாஸானவுடனே படிப்பை நிறுத்திவிடலாமென்றும் அவளைக் கல்யாணம் செய்துகொடுத்துவிடலாமென்றும் ஸாராம்மா சொல்லிப்பார்த்தாள்.
ஆனால் பெங்களூரில் எம்.பி.ஏ. படிக்கவேண்டுமென்பதுதான் அவள் மகளின் விருப்பம். எல்லாவற்றிலும் ஈஸிகோயிங் ஆசாமியான பிலிப்போஸ் அவள் இஷ்டப்படியே ஆகட்டும் என விட்டுவிட்டார்.
அவர் மகளுடைய படிப்பு விஷயங்களில் அவ்வளவாக அக்கறையுள்ள ஒரு தகப்பன் என்று சொல்லமுடியாது. ஸாராம்மாவின் கண்டிப்பினாலும் பாசமிக்க தூண்டுதலினாலும்தான் அவள் முதல் வகுப்பில் தேறினாள். எம்.பி.ஏ. படிக்கவேண்டுமென்றால் கொச்சியிலோ அல்லது இங்கேயே பக்கத்தில் ஏதாவதொரு இடத்திலோ படிக்கட்டுமே என்று சொல்லிப்பார்த்தாள். மகளின் படிப்பு மட்டுமல்லாது மற்ற விஷயங்களையும் கவனித்துக்கொள்ளலாமே என்பது தாயின் எண்ணம்.
ஆனால் லைலா கட்டாயம் பெங்களூருக்கோ ஹைதராபாத்துக்கோ போய் படிக்கவேண்டும் என்றெண்ணிணாள். பப்பா பச்சைக்கொடி காட்டியதும் அவள் கட்சி வென்றது. வேறுவழியின்றி ஸாராம்மாவும் முழுமனதில்லாமல் மகளை பெங்களூருக்கு படிக்க அனுப்பிவைத்தாள்.
‘நமக்கு இருப்பது ஒரே ஒரு பிள்ளை. அவளையும் இப்படிக் கையைவிட்டுப் பறந்துபோகும்படி விட்டுவிடுவதினால் வரும் எதிர்பாராத விளைவுகள் என்னவென்று உங்களுக்குப் புரியவில்லையா’ என்று ஸாராம்மா அவ்வப்போது தன் கணவரிடம் புலம்பிக்கொண்டுதானிருந்தாள்.
அப்படிக்கேட்கும்போதெல்லாம் பிலிப்போஸ் பதிலுக்கு அவளைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பார் அவ்வளவுதான். எனினும் ஒரு நாள் மனைவியின் நச்சரிப்பைத் தாங்கமுடியாமல் ‘அவள் ஒன்றும் கைக்குழந்தையில்லை. அவளுக்கு அவளது எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்கத் தெரியும். தன்னை பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ளவும் அவளால் முடியும்.’ என்றார்.
ஒரு நாள் ஸாராம்மா கணவரிடம் மெதுவாகக் கேட்டாள்:
“எதற்கும் நாம் ஒரு எட்டு பெங்களூருக்குப்போய் நம்ம பிள்ளையோட படிப்பு விஷயத்தைப்பற்றியும் ஹாஸ்டல் வசதிபற்றியும் தெரிந்துகொண்டு வந்தாலென்ன?”
“உனக்கு ஏன் இவ்வளவு பதற்றம்…..? முதலில் அது ஒரு கிறிஸ்து சபை நடத்தும் ஒரு பெயர் பெற்ற புரொபஷனல் காலேஜ். அப்புறம் அவள் ஒய்.டபிள்யு.சி.ஏ.யில் தங்கியிருக்கிறாள். அவர்கள் நம்மைவிட நன்றாக அவளைப்பார்த்துக்கொள்வார்கள். அதுமட்டுமில்லை மூன்று மாதத்துக்கு ஒருதடவை அவள் இங்கே வரலாம்.” என்று ஸாராம்மாவின் விண்ணப்பத்தின்மீது பிலிப்போஸ் தீர்ப்பளித்தார்.
எனினும் பெரிய நகரத்தில் தன் மகள் தனியாக இருப்பதை நினைக்கும்போது ஸாராம்மாவுக்கு கவலையாகத்தான் இருந்தது. அவளுக்கு ஒன்றும் ஆகாது; அவள் என் மகள். அவளை நானல்லவா வளர்த்தேன். என்றெல்லாம் ஸாராம்மா தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள். ‘ஒருவேளை படிப்பில் கவனக்குறைவாக இருந்துவிட்டால் என்னாவது?’ என்று எண்ணும்போது கவலையும் மனக்கஷ்டமும் அதிகமானது.
மூன்று வாரங்களாயும் மகளிடமிருந்து ஒரு விபரமுமில்லையென்றதும் ஒரு இனம்புரியாத பயம் தோன்றியது. ஸாராம்மாவால் தாங்கமுடியவில்லை. இப்படி மகளைப்பற்றிய பலவிதமான சிந்தனைகளுடன் தவித்துக்கொண்டிருக்கும்போது போஸ்ட்மேன் அவளுடைய கடிதத்துடன் வந்தார்.
அதிக ஆவலோடு கவரைப்பிரித்துப் பார்த்தாள். அது வழக்கமாக அவள் எழுதும் கடித்தைவிட நீளமாயிருந்தது. முதல் வரியைப்படித்ததுமே ஸாராம்மாவுக்கு தூக்கிவாரிப்போட்டதுபோல் இருந்தது.
பிரியமுள்ள மம்மி,
இதைப் படித்ததும் மம்மி அதிர்ச்சியில் விழுந்துவிடக்கூடாது. சோபாவிலோ கட்டிலிலோ உட்க்கார்ந்தபின் கடிதத்தைத் தொடர்ந்து படிக்கவும்.
நான் ஒரு விஷயத்தை எப்படி மம்மிக்கு தெரியப்படுத்துவது என்று சங்கடப்பட்டதால்தான் கடிதம் எழுத இவ்வளவு தாமதமாகிவிட்டது. இப்போது தாமதமில்லாமல் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன். நானும் என்னுடன் படிக்கும் ஒரு கர்நாடகாக்காரரும் ஒருவரையொருவர் விரும்புகிறோம். அவர் ஒரு இந்து ஷெட்டி.
ஸாராம்மா தலையில் இடி விழுந்ததுபோல் அதிர்ந்துபோனாள். மயக்கமே வந்துவிடும்போலிருந்தது.
ஆனால் நல்ல குணம். நல்ல வசதியான குடும்பம். என்னை உயிருக்கு உயிராய் நேசிக்கிறார். என்னைக் கல்யாணம்பண்ண முடியாவிட்டால் செத்துவிடுவேன் என்று சொல்கிறார். சனிக்கிழமையானால் நாங்கள் எங்கேயாவது பிக்னிக் போவது வழக்கம். இனி என்னவானாலும் சரியென்று திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளோம். இங்கேயே வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன் ஏனென்றால் நான் இப்போது கர்பமாயிருப்பேனோ என்று எனக்கு சந்தேகமாயிருக்கிறது.
அதிர்ச்சியில் ஸாராம்மாவுக்கு தலை சுற்றி மயக்கம் வந்தது. அந்தக்கடிதம் அவள் கைகளிலிருந்து நழுவிக் கீழே விழுந்தது. அவள் தொண்டை வறண்டது; நெற்றியில் வேர்வை பெருக்கெடுத்தது. நடுங்கும் கைகளால் கீழே கிடந்த கடிதத்தை எடுத்து தொடர்ந்து வாசித்தாள்.
மம்மியும் பப்பாவும் என் விருப்பத்திற்கு எதிராக நிற்கமாட்டீர்கள் என்று எனக்குத்தெரியும். எனது சந்தோஷம்தான் உங்கள் சந்தோஷமென்றும் தெரியும்.
ஸாராம்மாவுக்கு மயக்கத்தில் வெறும் புள்ளிகள் மட்டுமே கடிதத்தில் இருப்பதுபோல் தோன்றியது. சற்று நிதானித்து மீண்டும் தொடர்ந்தாள்.
…..எனக்கு யார்மீதும் காதலுமில்லை ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. படிப்பு முடிந்து நான் அங்கு வந்ததும் மம்மி சொல்லும் சிரியன் கிறிஸ்தவ மூடன் யாராயிருந்தாலும் அவனையே கல்யாணம் பண்ணிக்கொள்வேன். சரியா?
ஆனால் எனக்கு வேறொரு விபத்து நேர்ந்து விட்டது. முதலிலேயே அதைச்சொல்லியிருந்தால் மம்மி மிகவும் கோபமாக என்னைத் திட்டத்தொடங்கிவிடுவீர்கள். அதனால்தான் முதலில் இல்லாத ஒரு விஷயத்தில் மம்மி ஒரு பெரிய அதிர்ச்சியடையட்டும் என எண்ணினேன். அதற்கப்புறம் என்னைத்திட்ட மம்மிக்கு மனம் வராது என்பது எனக்குத்தெரியும். நான் எனது முதல் செமெஸ்டர் பரிட்சையில் பெயில். ஏனென்றால் பரிட்சைக்கு முதல் நாள் தாங்கமுடியாத தலைவலியால் படுத்த படுக்கையாகிவிட்டேன். கவலை வேண்டாம். அதை இம்ப்ரூவ் செய்து அடுத்த செமெஸ்டரில் கிலாஸ் வாங்கி பாஸ் பண்ணிவிடுகிறேன். போதுமா?
நான் பெயிலாயிட்டேன் என்று தெரிந்தபோதிலும் மம்மியின் முகத்தில் ஒரு சிரிப்பு வருமென்று எனக்குத்தெரியும். அது போதும். பப்பாவிடமும் இந்தக்கடிதத்தைக் காட்டவும்.
அன்புடன்,
லைலாமோள்.


doraiprabhakaran@gmail.com

Series Navigation

துரை பிரபாகரன்

துரை பிரபாகரன்