இந்த சோஷலிசத்துக்கு எதிரான மார்க்சீயம்

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

ராயன்


சமுதாய மாற்றத்தின் தேவைக்காக எத்தனையோ கோட்பாடுகள் தோன்றியுள்ளன.ஆனால் அவை காலத்தால் ஒதுக்கப்பட்டு விட்டன. ஏனெனில்,சமுதாய மாற்றத்தின் தேவை என்பது, உண்மையான மனித விடுதலையின் தேவை என்பதைத் தங்களின் அடிப்படையாக, மையமாகக் கொள்ளவில்லை.அல்லது அந்த நோக்கத்துக்காகச் செயல்படவில்லை. மனிதனின் விடுதலைக்காகத் தோன்றிய சமயங்களும் , மெய்யியல்களும் மனிதனைவிட மேம்பட்டவையாக நின்று அவனைச் சிறுமையாக்கிச் சிறை வைத்தன.அதனால் மனிதனின் சுதந்திரம், விடுதலை என்பது இந்த அமைப்புக்குள் முன்னிலும் சிக்கலாகியது. சமயங்கள், மனிதனின் விடுதலை அவனது நம்பிக்கையில்தான் உள்ளது என்றன. அவன் இறைவனை நம்ப வேண்டும்.இறைவனிடம் தன்னை ஒப்புவிக்க வேண்டும்.அதுவே அவன் விடுதலை என்றன. இந்தக் கருத்து மனிதனுக்கு, அவனது வாழ்க்கைச் செயலுக்கு எதிரானதாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது. இனியும் அப்படித்தான். ஆனால் மனித விடுதலையை, சமயங்கள் மீதும், இறைவன் மீதும் வைக்கும் நம்பிக்கையிலிருந்து ஒரு போதும் பெற முடியாது. அது வரலாற்றுச் செயல்களிலிருந்து பெறக்கூடியது. அதுவும் சமுதாயம் முழுமைக்குமான விடுதலை. அதுவே மனித விடுதலையை சுதந்திரத்தைச் சாத்த்தியப்படுத்தும். இந்த வரலாற்று உண்மையைக் கூறியவர் மார்க்ஸ் .

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஐரோப்பாவில் கார்ல் மார்க்சின் சோஷலிசச் சிந்தனைகள் பாட்டாளி வர்க்க வரலாற்று நிகழ்வில் பெறும் மாறுதலைக் கொண்டு வந்தது. மார்க்ஸ், சுரண்டலற்ற சமுதாயம் ( மனிதன் சகமனிதனைச் சுரண்டுகிற போக்கை ஒழித்த சமுதாயம் ) பற்றியும், மனிதன் முதலாளித்துவ சமுதாயத்தில் தன்னிலிருந்தும், தன் சக மனிதனிடமிருந்தும், தான் செய்த உற்பத்தியிலிருந்தும் ‘அந்நியமாகி’ இருப்பது பற்றியும், வரலாற்றில் நிகழ வேண்டிய அவனது விடுதலை பற்றியும் கூறியுள்ளார். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலம், சமுதாயத்தின் எல்லா வகையான சுரண்டல்களையும், ஒடுக்கு முறைகளையும் ஒழித்து, அந்நியமாதலைக் கடந்து, மனிதனின் உண்மையான விடுதலையைப் பெற முடியும். அந்த உண்மையான விடுதலை என்பது உண்மையான சமுதாய விடுதலை ஆகும். சுரண்டலற்ற சமுதாயமே விடுதலை பெற்ற சமுதாயம். விடுதலை பெற்ற சமுதாயமே பொதுவுடமைச் சமுதாயம் ஆகும். ஆகவே மனிதனின் விடுதலை என்பதும் , சமுதாய விடுதலை என்பதும் வெவ்வேறானதல்ல. இரண்டும் பிரிக்க முடியாதது என்பதை மார்க்ஸ் தெளிவு படுத்தி உள்ளார்.

“உலகத்தை விளக்குவதல்ல, மாற்றுவதே இன்றையக் கடமை” என்ற மார்க்சின் கருத்தை அடியொற்றி இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரஷியப் புரட்சியும், பின்பு சீனப் புரட்சியும் ஏற்பட்டுச் சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்தன. அதன் பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் சோஷலிச நாடுகளாக மாறின. கியூபா, வியத்நாம் போன்ற நாடுகளிலும் புரட்சியின் மூலம் சமுதாய மாற்றம் நிகழ்ந்து சோஷலிச நாடுகளாக உருவாயின. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால், சோவியத் ரஷ்யாவின் சோஷலிசக் கொள்கை, நடைமுறை பற்றிய விமர்சனங்களும், ஆய்வுகளும் வெளிவந்தன. அதேபோல் மாவோவின் மறைவுக்குப்பின் எழுபதுகளின் இறுதியில் சீனாவில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றி விமர்சனங்களும்,ஆய்வுகளும் வளிவந்தன.அதில் பல அதிர்ச்சி அளிக்கக் கூடிய விஷயங்கள் இருந்தன.சோவியத் ரஷ்யாவைப் போன்றே சீனவிலும் சோஷலிசத்துக்குள்ளே முதலாளித்துவ அமைப்புகள் உருவாயின.பாட்டாளி வர்க்கம் மீண்டும் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியது .கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளின் அதிகார வர்க்கத்தினரே சுரண்டும் வர்க்கமாக உருவாகி விட்டனர் என்கிற உண்மை, மார்க்சீயர்களைச் சுட்டது.( இந்த வர்க்கத்தைத்தான் மிலவான் ஜிலாஸ் புதிய வர்க்கம் (NEW CLASS) என்றழைத்தார்.)

சோஷலிச சமுதாயத்தில் கலை, இலக்கிய பண்பாட்டு வளர்ச்சி முத்லாளித்துவத்தில் இருந்ததை விட மேன்மையாக விளங்கும் என்று மார்க்சீயர் நம்பினர்.கலை இலக்கிய படைப்பாளிகளும் அதே நம்பிக்கையில் தங்கள் படைப்புகளை உருவாக்கினர்.ஆனால் அதற்கு நேர் மாறாக நிகழ்ந்தது. கலை இலக்கிய பண்பாட்டு வளர்ச்சிக்குரிய சுதந்திரத்தைச் சோஷலிசக் காவலர்கள் மறுத்தனர். கட்சிகளின் கட்டளைப்படி கலை இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப் பட்டது.இந்தச் சீரழிவுகளுக்குப் பிறகு, சோஷலிச சமுதாயங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை தகர்ந்த போது, மார்க்சீயத்தின் தோல்வியை முதலாளித்துவம் பிரகடனம் செய்தபோது, உலகிலுள்ள, மார்க்சீயத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்துமார்க்சீயர்களும்,மார்க்சீயத்தின் தேவையை உறுதிப் படுத்தினர். இன்றும் முதலாளித்துவத்துக்கு மாற்று சோஷலிசமே என்று பிரகடனம் செய்தனர். அதற்கான மார்க்சிய இயங்கியல் அடிப்படயிலான சமூக ஆய்வுகள் வெளிவந்தன. அதனடிப்படையில் மேலை நாடுகளில் பாட்டாளி வர்க்கப் புரட்சி சாத்தியமில்லை என்பதைக் கண்டனர். ஆனால், விளிம்பு நிலையிலுள்ள மூன்றாம் உலக நாடுகளில் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் சாத்தியப்பாடு குறித்து பால் ஸ்வீஸி போன்றோர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அதே சமயம் கலை இலக்கியத் துறைகளில் மார்க்சீய அறிஞர்களின் கொள்கைப் படைப்புகளின் வளர்ச்சி மிகப் பெரிய அளவில் நிகழ்ந்தன.ஜார்ஜ் லூகாக்ஸ், பிஸர் மெஷரி, வால்டெர் பெஞ்சமின், பெர்த்தோல்ட் பிரக்ட் போன்றோரின் சிந்தனைகள் இன்னும் முக்கியத்துவம் உடையதாகத் திகழ்கின்றன. இவ்வகையில் மார்க்சீய இலக்கிய விமர்சன வளர்ச்சியை டெர்ரி ஈகிள்டன் தன் கட்டுரையில் விரிவாக விளக்கி உள்ளார். மார்க்சீயத்தில் ( சோஷலிச நாடுகளுக்கு வெளியே ) ஏர்பட்ட இச்சுதந்திரமான சிந்தனைப் போக்கு தமிழக மார்க்சீயர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இங்கும் மார்க்சீய நோக்கில் தமிழ் இலக்கியம், வரலாறுகள் ஆய்வு செய்யப்பட்டன. ஞானி , க.வீரய்யன் போன்றோரின் கட்டுரைகள், பழந்தமிழ் இலக்கியங்கள் போராட்டங்களின் வரலாற்றை உள்ளடக்கியவை என்பதை வெளிப்படுத்தி உள்ளன. “இந்திய வரலாற்று ஆய்வுகள்” எல்லாம் மார்க்சிஸத்தின் வெளிச்சத்தில் தான் தெளிவு பெற்றன என்கிற உண்மையை மறுக்க முடியாது. உலகில் உள்ள மார்க்சீயரல்லாத வரலாற்று அறிஞர்கள் எல்லாம் வரலாற்றைப் புரிந்து கொள்வதில் மார்க்சீயத்தின் தேவையை அங்கீகரித்துள்ளனர்.

மார்க்சீயம் பல துறைகளிலும் ( மெய்யியல், அரசியல், பொருளாதாரம், சமூகவியல், பண்பாட்டியல்) செல்வாக்குடன் திகழ்கின்ற கோட்பாடு. எனவே தமிழக மார்க்சீயர்கள் அத்துறைகளின் வாயிலாக மார்க்சீயத்தை உள்வாங்கிக் கொண்டு அல்லது பயின்று, தமிழகத்தில் மார்க்சீயச் சிந்தனை வளத்தைப் பெருக்கும் விதமாகச் செயலாற்றினர். அதன் விளைவே எழுபது – எண்பதுகளில் தோன்றிய மார்க்சீய சிற்றிதழ்கள் ( பரிமாணம்,படிகள், இலக்கிய வெளிவட்டம், மார்க்சீயம் இன்று, நிகழ் ) போன்றவை. இவற்றில் எழுதிய ஞானி, எஸ்.என்.நாகராஜன், எஸ்.வி.ராஜதுரை,ராஜ்கவுதமன் போன்ற மார்க்சீய சிந்தனையாளர்கள் தமிழக மார்க்சீய சிந்தனைக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். இதில் கோவையிலிருந்து வெளிவந்த “பரிமாணம்’ என்னும் மார்க்சீய இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே “மார்க்சீயத்தின் புதிய பரிமாணங்கள்’ என்னும் இந்நூல்.(தொகுத்தளித்தவர் : ஞானி.) இந்தக் கட்டுரையில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் யாவும் இந்நூலினுடையதே. முந்தைய சோஷலிச சமுதாயங்களிலிருந்து மாறு பட்டதும், பாட்டாளி மக்கள் முழுதும் பங்கேற்கக் கூடியதும், அதிகாரத்தை மையமாக்காமல் மக்களிடம் பகிர்ந்தளிக்கக் கூடியதுமான ( மக்களுக்கான ) சோஷலிசத்தை விரும்பும் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

-ராயன் –

(காலஞ்சென்ற தோழர் ராயன் என்கிற திருவொற்றியூர் ராகவன் எழுதிய இக்கட்டுரையின் பிரதி எதையோ தேடும் போது எனக்குக் கிடைத்தது .அதனை ‘திண்ணை’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அவாவினால் உந்தப்பட்டு அனுப்பி வைக்கிறேன்.பிரசுரிப்பின் மிக்க நன்றி.)

புதுவை ஞானம். November 14, 2006

Series Navigation

ராயன்

ராயன்