இந்திய நரகம்

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue


ஒரு இந்தியன் செத்து நரகத்துக்குப் போனான்

ஆச்சரியமாக அங்கு ஒவ்வொரு நாட்டினருக்கும் நரகம் இருப்பதைப் பார்த்தான்.

முதலில் ஜெர்மன் நரகம் இருந்தது. அங்கு வாசலில் இருப்பவனிடம் ‘இங்கே என்ன பண்ணுவார்கள் ? ‘ என்று கேட்டான்.

அதற்கு அவன் ‘இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் போட்டு படுக்கச்சொல்வார்கள் ஒரு மணி நேரம். பிறகு ஜெர்மானியப் பேய் வந்து உன்னை சவுக்கால் மீத நாள் முழுவதும் அடிக்கும். ‘ என்றான்.

கேட்கவே நன்றாக இல்லை. ஆகவே அவன் அடுத்த நரகத்துக்குப் போனான். அடுத்தது அமெரிக்க நரகம். அடுத்தது ருஷ்ய நரகம்.. ஆக இப்படி. ஆனால் அவை எல்லாமே ஜெர்மானிய நரகத்தைப் போலத்தான் என்றும் தெரிந்தது.

இறுதியில் இந்திய நரகம் இருந்தது. அதன் வாசலில் நீண்ட வரிசை வேறு. சரி நம் ஆட்கள் தான் ஏராளமாயிற்றே அவர்கள் தான் நிற்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால், இந்தியர்களோடு ஜெர்மானியர்கள் அமெரிக்கர்கள் இன்னும் எல்லோரும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவனிடம் கேட்டான். ‘இங்கே என்ன பண்ணுவார்கள் ‘

அதற்கு அவன் ‘இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் போட்டு படுக்கச்சொல்வார்கள் ஒரு மணி நேரம். பிறகு இந்தியப் பேய் வந்து உன்னை சவுக்கால் மீத நாள் முழுவதும் அடிக்கும். ‘ என்றான்.

‘இதுவும் மற்ற நரகங்களைப் போலத்தான். அப்புறம் ஏன் இவ்வளவு கூட்டம் இங்கு இருக்கிறது ? ‘ என்று கேட்டான்

‘ஏனெனில், இங்கு மின்சாரம் கிடையாது. ஆகவே மின்சார நாற்காலி வேலை செய்யாது. முள்படுக்கையிலிருந்த முட்களை எல்லாம் யாரோ திருடிப்போய் விட்டார்கள். அப்புறம் இந்தியப்பேய் அரசாங்க குமாஸ்தா. ஆகவே, அது வரும், பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு காண்டானுக்கு காப்பி குடிக்கப் போய்விடும் ‘ என்றான்

Series Navigation

செய்தி

செய்தி