இந்திய இலக்கியம்: வாழ்க்கைக் கூறுகளும் பண்பும்

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

வெங்கட் சாமிநாதன்


“தொல்காப்பியருக்கு அர்த்த சாஸ்திரமும், நாட்டிய சாஸ்திரமும் பரிச்சயமாக வெகு காலம் தேவையாயிருக்கவில்லை. ஹாலாவின் காதாசப்தசதி தமிழ் பேசும் நாட்டை வந்தடைந்தது மட்டுமல்லாமல் கஷ்மீரு க்கும் அது பயணம் செய்து ஆனந்தவர்த்தனருக்கு அவர் தம் த்வனி சித்தாந்தத்தை விளக்க உதாரணங் களைத் தந்ததுதவியது. தென்னாட்டிலிருந்து பாகவத புராணம் மிதிலைக்குச் சென்று வித்யாபதியின் கைகளுக்கு வந்தடைய அவர் அதை பனை ஒலைச் சுவடிகளில் பிரதி செய்தார். அறிவார்த்த தாகம் கொண்டிருந்த நம் அக்கால முன்னோர்களின் பயணங்கள் இந்த மாதிரியான கொடுக்கல் வாங்கல்களுக்கு பெருமளவில் உதவியாக இருந்திருக்கின்றன என்பது என்னவோ உண்மை. சாரங்க தேவரின் பெற்றோர்கள் காஷ்மீரை விட்டு நீங்கி மத்திய இந்தியாவுக்கு வந்து வாழத் தொடங்கியிராவிட்டால், இப்போது கர்நாடக சங்கீதத்திற்கே வேதமாகக் கருதப்படும் சங்கீத ரத்னாகரம் ஒரு வேளை எழுதப்பட்டிராது. ஆந்திராவிலிருந்து வல்லபாச்சாரியார் மதுராவிற்கும் வாரணாசிக்கும் சென்று வாழத்தொடங்கியிராவிட்டால் இன்று ஹிந்தி இலக்கித்யத்தின் பொக்கிஷமாகக் கருதப்படும் சுர் ஸாகர் இயற்றப்பட்டிராது தான். இப்படி எண்ணற்ற உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்று இந்தியாவின் ஒவ்வொரு மொழிப்பிரதேசமும் தன்னைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறதென்றால் அது ஒரு பிறழ்ச்சி தான். மொழி புரிதலுக்கான ஒரு சாதனம் மாத்திரமே ஆகியுள்ளது. இன்றைய இந்தியாவின் வரலாற்றைச் உருவாக்கு வோர் வெறும் மலையாகக் கிடக்கும் ஒன்றை (விந்திய மலைத் தொடர்) தாண்டிச் செல்லமுடியாத ஒரு பெரும் தடையாக ஆக்கிவிட்டிருக்கின்றனர். நடுவில் இருக்கும் அது இரு பக்கங்களின் பார்வையை மறைப்பது போல உயர வளர்ந்து கொண்டே போவது போல் இருக்கிறது. ஆனால் சாஸ்த்ரீய கலைகள் என்னவோ அத்தடையையும் மீறி தம் பரஸ்பர தொடர்பையும் தாக்கத்தையும் விடாது தொடர்ந்து வளர்த்துக்கொண்டு தான் இருந்திருக்கின்றன.”

(K.S ஸ்ரீனிவாசன், Ethos of Indian Literature p.128)

ஜவஹர்லால் நேரு ·பவுண்டேஷனின் நிதி உதவயுடன் எழுதப்பட்டுள்ள ஸ்ரீனிவாசனின் புத்தகம், இரண்டாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வரும் இந்திய இலக்கியங்களின் மூலம் வெளிப்படும் இந்திய உள்மனதின் குணமென்ன, அது உருவாகப் பின்னிருந்து ஊக்கும் சக்திகள் என்ன, அது தன் மொழி வேற்றுமைகளை யெல்லாம் கடந்து ஒருமை கொள்ள வைக்கும் அதன் சாரம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் ஒரு புதிய பார்வையை முன் வைக்கிறது. வேதங்கள், அல்லது ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாச காப்பியங்கள் தொடங்கி நம்மில் எத்தனையோ கிளிப்பிள்ளைப் பாடமாக சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி திணிக்கப்பட்டு வந்திருப்பதற்கெல்லாம் முற்றிலும் மாறாக, ஒரு புதிய பார்வை, நம்பிக்கை தோன்ற, திறம்பட நிறைய ஆதாரங்களோடும் வாதங்களோடும் முன் வைக்கப்பட்டுள்ளது இந்த புத்தகத்தில். ராமாயணம் மகாபாரதம் போன்ற மூல ஆதாரங்களை நாம் முற்றிலுமாக ஒதுக்கிவிடமுடியாது தான். ஏனெனில் அவற்றிலும் உண்மை உண்டு. ஆனால், அவை மட்டுமே உண்மை என்பதில்லை. அது பின்னப்பட்டது. இன்னம் சொல்லப்படவேண்டியதும் உள்ளன. மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது என்னவெண்றால், இதுகாறும் நம்மிடமிருந்து மறைந்திருந்த ஒரு புதிய பார்வையை ஸ்ரீனிவாசன் நம் முன் வைக்கிறார்.அந்தப் பார்வை, எல்லா இந்திய மொழிகளிலும் எழுதப்பட்டுள்ள இலக்கியங்கள் எல்லாவற்றையும் இந்திய இலக்கியம் என ஒருமைப்பட்ட ஒரு இலக்கிய பாரம்பரியத்தை விளக்குவது மட்டுமல்லாமல், இந்தியப் பரப்பின் ஒவியம், சங்கீதம், சிற்பம், நாட்டியம் என எல்லா கலைப் படைப்புக்களுக்குமான இந்திய அழகியலையும் விளக்குமுகமாக அந்தப் பார்வை விரிவு கொள்கிறது.

இது காறும் நமக்கு வழக்கமாகத் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டுள்ள பார்வையில், வேதங்களிலும் இதிகாசங்களிலும் பரவலாகக் காணும் பலமான சாரம், ஹிந்து மதக் கூறுகளும் அதன் அறம் சார்ந்த பண்புகளும் ஆகும். ஆனால் ஸ்ரீனிவாசன் கூறும் சாரமும் பண்பும் , இதிகாசங்களிலும் காவியங்களிலும் மட்டுமல்ல எல்லா இந்திய மொழிகளின் இலக்கியங்களிலும் பரவலாகக் காணப்படும் ஒன்று. அது அவை அனைத்திலும் உள்ளோடும் சரடுமாகும். இந்தியாவின் கலைகளிம் தான். அது மட்டுமல்ல. மதச் சார்பற்ற படைப்புகளிலும். கிறிஸ்து சகாப்தத்தின் முதல் ஆயிரம் ஆண்டுகளில் ஜைனர்களும் பௌத்தர்களும் படைத்தவற்றிலும் இக்கூறுகள் காணப்படும். பின்னர் வந்த முஸ்லீம் சூ·பி ஞானிகள் விட்டுச் சென்றவற்றிலும். இந்திய துணைக்கண்டத்தின் கவிஞர்களின் கவிதைகளிலும் கூட. நேற்றைய ரவீந்திரநாத் தாகூர் வரை என்று சொல்லவேண்டும். எனவே, நமக்குப் பழக்கமான, கோஷங்கள், கிளிப்பிள்ளைப் பாடங்கள், எதையும் குறிப்பிட்டுச் சொல்லாத பொதுப்படையான சொல்லாடல்கள் எல்லாவற்றையும் நாம் ஒதுக்கி விடலாம். ஆகையால் ஸ்ரீனிவாசன் சொல்ல வருவதை முதலில் பொறுமையுடன் காது கொடுத்துக் கேட்பது, பண்பும் அறிவார்த்த செயலுமாகும்.

இதன் மகத்தான ஆரம்பம், கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாடு 12 வருடகாலம் நீடித்த பஞ்சம் ஒன்றினால் பீடிக்கப்பட்ட போது, பத்ரபாஹ¥ என்னும் ஜைன முனிவர் மகத நாட்டு மன்னும் தன் சீடனுமான சந்திர குப்த மௌர்யனோடு மகத நாட்டை வீட்டு நீங்கி மேற்கொண்ட நீண்ட தெற்கு நோக்கிய பயணத்தில் கடைசியாக இந்நாளைய மைசூர் ராஜ்யத்தில் உள்ள சந்திரகிரி என்னுமிடத்திற்கு வந்து அங்கு ஒரு மடத்தை ஸ்தாபித்ததிலிருந்து தொடங்குகிறது. அவர் மேற்கொண்ட இந்த தெற்கு நோக்கிய பயணத்தின் பாதை தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க தக்ஷ¢ணபாதம் ஆயிற்று. அதன் பின் தான் இந்தியாவின் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே துவங்கிய இருவழி வணிக பரிமாற்றத்திற்கும் வழி பிறந்தது. வணிகம் மாத்திரமல்ல, இந்த தக்ஷ¢ணபாதம் வழிதான் ஜைன பௌத்த முனிவர்கள் தெற்கு நோக்கி தம் மதப் பிரசாரத்தையும் தொடங்கினர். அவர்கள் எங்கு சென்றாலும், தாங்கள் சென்ற நாட்டையும், மக்களையும் நெருங்கி அறிந்ததோடு அவர்கள் பேசும் மொழியையும் கற்றார்கள். இந்த செயல்பாடும் வழிமுறையும், அவர்கள் மதம் அவர்களுக்கு விதித்துள்ள ஜனபாத பரிக்க்ஷ¡வாகும். அவர்களுக்கு விந்திய மலைத் தொடர் ஒரு தடையாக இருக்கவில்லை. இம்மலைத் தொடர் அதன் இருபாலும் இருக்கும் நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு தடையாக இருந்தது என்று சொல்லப்பட்டதும் ஆனதும் சமீப காலத்தில் தான்.

கி.பி. 10-ம் நூற்றாண்டு வரை இந்திய துணைக்கண்டத்தின் பரப்பு முழுதிலும் வியாபித்திருந்த முக்கிய மொழிகள், சமஸ்கிருதம், பிராகிருதம், பின் தமிழ் ஆகிய மூன்றும் தான். சமஸ்கிருதமோ வடக்கே சமூகத்தின் மேலதட்டு மக்களும் கற்றோரும் மாத்திரம் கையாண்ட மொழியாகத் தன்னைக் குறுக்கிக் கொண்டிருந்தது. தமிழும் பிராகிருதமும் தான் சாதாரண மக்களும் ஒருவருக்கொருவருடனான தொடர்பு மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் விளங்கின. ஜைனர்களும் பௌத்தர்களும் கையாண்ட மொழி தெற்கே தமிழும் வடக்கே பிராகிருதமுமாக இருந்தது. தெற்குக் கோடியில் காணும் அசோகனின் கல்வெட்டுக்கள் கூட ஒன்று பிராகிருதத்தில் அல்லது தமிழ் ப்ராஹ்மியில் இருந்தன.

பிராகிருதத்தில் மலர்ந்த முதல் இலக்கியம் ஹாலா என்னும் சதவாஹன அரசன் (கி.பி. 20-24) தொகுத்த காதா சப்த சதி என்னும் கவிதைத் தொகுப்பாகும். கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து பல நூற்றாண்டுகள் கால நீட்சியில் பிறந்த சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டது வெகுகாலம் பின்னர் தான். இதுகாறும் கவனிக்கப்படாத ஆனால் சிறப்பாகக் குறிப்பிடவேண்டிய சில விசேஷ கூறுகள் இவ்விரண்டு தொகுப்புகளிலும் பொதுவாகக் காணப்படுகின்றன.

இந்தக் கவிதைகள் எல்லாமே சாதாரண மக்களின் காதல் வாழ்க்கையைத் தான் சொல்கின்றன. அவர்கள் வியாபாரிகளாகவோ, வேடுவர்களாகவோ, பயணிகளாகவோ இப்படி ஏதோவாகதான் இருப்பார்கள். வெகு அரிதாகவே கடவுளைப் பற்றியதாகவோ அல்லது அரசனைப் பற்றியதாகவோ இருக்கும். இவை அவன், அவள் பின் தோழி ஒருத்தி இவர்களிடையே நடக்கும் உரையாடலாக இருக்கும். ஆனால் அவர்கள் பெயர்கள் எங்கும் குறிப்பிடப்படுவதில்லை. காதல் நிறைவேறியதன் மகிழ்ச்சி, அல்லது தோல்வியுற்றதன் துக்கம், ஏமாற்றம், காத்திருப்பதன் தவிப்பு, அல்லது தன் காதல் மறுக்கப்பட்டதன் சோகம், அல்லது காதலர் இரகசியமாக சந்தித்துக்கொள்ள ஒரு இடத்தைக் குறித்தல், இப்படியாக விஷயங்கள் வெகு நளினத்துடன், அழகுடன் எல்லாவற்றையும் வார்த்தைகளில் கொட்டி விடாமல் குறைந்த வார்த்தைகளில், குறிப்புணர்த்தும் மொழியில் இக்கவிதைகள் வெளிப்படுத்தும்.

காதல் உணர்வு மேலிடுகையில், காடென்ன, இருளென்ன, வன விலங்குகள் தானென்ன, எந்த ஆபத்தும் ஒரு பொருட்டாகத் தோன்றுவதில்லை.

“இன்றுயான் நடுநிசி இருட்டிலந்தச்
செல்வனைக் காணச் செல்லவேண்டும்”
என்றவள் கண்ணிமை இறுக மூடி
இல்லந் தனில் நடை மெல்லப் பயின்றாள். — (காதா சப்த சதி – 349: சுசரிதன்)

நற்றிணையில் நல்லாவூர் கிழாரின் படல் ஒன்று. தலைவிக்கு தோழி சொல்வதாக உள்ள பாட்டு. இந்த கொடிய இரவில் தலைவன் வராதிருத்தலே நன்று என்று சொல்கிறாள் தோழி.

கானமும் கம்மென்றன்றே: வானமும்
வரை கிழிபன்ன மை இருள் பரப்பி,
பல் குரல் எழிலி பாடு ஒவாதே;
மஞ்சு தவழ இறும்பில் களிறு வலம் படுத்த
வெஞ்சின உழுவைப் பேழ்வாய் ஏற்றை
அஞ்சுதக உரறும்; ஓசை கேளாது
துஞ்சுதியோ- இல, தூவிலாட்டி!
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே; சாரல்
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும்,
நிலம் பரந்து ஒழுகும், என் நிறை இல் நெஞ்சே?

தனக்கும் தன் தலைவனுக்கும் இடையே தனிமையில் நடந்ததையெல்லாம் கேட்டிருந்த கிளி, வருவார் போவாருக்கெல்லாம் அந்தக் கதையைச் சொல்வதைக் கண்டு நாணமுறுகிறாள் தலைவி:

படுக்கையறையின் பக்கலிலிருந்து
கூண்டினிற் பூவையைக் கொண்டேன் செல்லாய்?
இரவில் யாங்கள் இயம்பிய மறைமொழி
உலகமறிய உரைகின்றதுவே ( காதா சப்தசதி – 452. ஹாலா)

நாச்சியார் திருமொழியில் ஆண்டாளுக்கும் தன் கிளியிடம் அதே கோபம் தான்.

கூட்டிலிருந்து கிளி எப்போதும் கோவிந்தா! கோவிந்தா! என்றழைக்கும்
ஊட்டக் கொடாது செறுப்பானாகில் உலகளந்தான்! என்று உயரக்கூவும்
நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவாரகாபுரிக் கென்னை உயர்த்திடுமின். (தொடரும்)

வெங்கட் சாமிநாதன்
/23.8.08

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்