இந்தி,இந்தியா, இந்தியன்

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

செல்வன்


என் ஜூனியர் மாணவன் ஒருவன் இந்தியன்.ஆவலோடு அவனை வரவேற்ற போது இந்தியில் பேசத் துவங்கி விட்டான்.எனக்கு இந்தி தெரியாது என்று சொன்னவுடன் “தேசிய மொழி தெரியாது என சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?” என்று கேட்டான்.

“தேசிய மிருகம் புலியை உன் வீட்டில் வளர்க்கிறாயா?தேசிய விளையாட்டு ஆக்கியை தினமும் ஆடுகிறாயா?” என்று கேட்டு அவன் நாவை அடக்கினேன்.

என் நாட்டுப்பற்றை அளக்க இந்தி பேசுவதுதான் அளவுகோலா?

ஆமை புகுந்த வீடும், இந்தி புகுந்த மாநிலமும் உருப்பட்டதாய் சரித்திரமே இல்லை.இந்தி புகுந்ததால் மராத்தி,குஜராத்தி,பன்சாபி,ராஜஸ்தானி,போஜ்புரி போன்ற மொழிகளில் திரைப்படத் துறை நசிந்து அழிந்து விட்டது.கர்நாடகாவில் கூட இப்போது அது நடக்கத் துவங்கி விட்டது.

இந்தி திணிப்பு பல பெயர்களில் மறைமுகமாக நடக்கிறது.வங்கி அலுவலர்கள் இந்தியில் கையெழுத்து போட வேண்டுமென்றெல்லாம் உத்தரவுகள் இருக்கிறதாம்.தமிழ்நாட்டில் இருக்கும் வங்கி ஊழியன் எதற்கையா இந்தியில் கையெழுத்திட வேண்டும்?பல தேர்வுகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே நடக்குமாம்.ஏன் தமிழ் என்ன இளிச்சவாய் மொழியா?
அமெரிக்காவில் குழந்தைகள் ஆங்க்கிலம் படிக்குது.அடுத்ததா கணக்கும், அறிவியலும் படிக்குது. நம்ம ஊர்ல ஆங்கிலம்,தமிழ், இந்தி, எல்லாம் படிச்சுட்டு அப்புறம் கணக்குக்கு வரதுக்குள்ள தாவு தீந்து போகுது.
அப்புறம் எங்கருந்து அறிவியல் வளர்ப்பது?

இந்தி விஷயத்தில் திமுக, அதிமுகவின் பின் வரும் கருத்துக்களை நான் மனபூர்வமாக ஆதரிக்கிறேன்.

1.தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடமாக கூடாது.விருப்பப் பாடமாக மட்டுமே இருக்கலாம்.

2.இந்தியை கட்டயாமாக சொல்லிதருவதால் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் துவக்க எம்.ஜி.ஆர் அரசு மறுத்துவிட்டது.அது மிக சரியான முடிவு.இந்தியை கட்டாயப் பாடமாக இருப்பதை ரத்து செய்துவிட்டு நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் துவக்க வேண்டும்.

3.அரசு அலுவல் மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும்.இந்தியை தூக்க வேண்டும்.

4.மறைமுகமாக இந்தியை திணிக்கும் வேலைகள் கூடாது.

இந்த இந்தி விவகாரம் அரசியலமைப்பு சபை கூட்டத்திலிருந்தே விவாதிக்கப் பட்டு வருகிறது. இந்தியும் ஆங்கிலமும் மையஅரசின் ஆட்சி மொழியாக 65 வரை இருந்தன. பிறகு ஆங்கிலம் (கொடுக்கப் பட்ட 15 வருட அவகாசம் முடிந்ததால்) விலக்கப் பட்டது. நமது இந்திஎதிர்ப்பு போராட்டத்தால் மீண்டும் துணை அரசு மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. நேரு அவர்களின் உறுதிமொழியான ” இந்தி பேசாதவர் விரும்பும்வரை ஆங்கிலம் துணை மொழியாக நீடிக்கும்” சேர்த்துக்கொள்ளப் பட்டது.

பெரும்பான்மையான இந்திய மக்கள் ஆங்கில அறிவு பெறாதவர்கள். அவர்களை ஆளும் அரசின் ஆணைகளை வேற்றுமொழியில் புரிந்து கொள்வதை விட தாய் மொழியில் புரிந்து கொள்வது எளிது என்பதாலேயே ஆட்சிமொழியாக மாநிலங்களில் வட்டாரமொழியும்(தமிழகத்தில் தமிழ்) மைய அரசில் இந்தியும் என அரசியலமைப்பு சட்டசபை தீர்மானித்தது.வடஇந்தியர்களின் ஆதிக்க மனப்பான்மையாலும், “இந்திகுடிமகன்க”ளாலும் ஏதோ இந்திதான் நமது தேசியமொழி போலவும், வட இந்தியக் கலாசாரம்,உணவுவகைகள் தான் இந்தியாவிற்குறியது எனவும் வெளிநாடுகளில் தோற்றமேற்படுத்தப் படுகின்றன. அதுபோலவே இப்போது இந்திய சினிமா என்றால் இந்தி சினிமாதான் என்று ஒரு பிம்பம் கட்டி எழுப்பப்படுகிறது.பாலிவுட்டே இந்திய சினிமாவின் முகவரி.

இந்தி பல வழிகளிலும் நடுவண் அரசால் திணிக்கப்பட்டு வருகிறது.மத்திய அரசின் பல திட்டங்களின் பெயர்களும் இப்போது இந்தியிலேயே இருக்கின்றன. சம்பூர்ண கிராமீன் ரோஜ்கார் யோஜனா, சர்வ சிக்ஷா அப்யான், ப்ரதான் மந்த்ரி க்ராம் சடக் யோஜ்னா.. என்று. இவை முன்பு போல ஆங்கிலத்தில் இருந்திருந்தால் அழகிய தமிழில் மொழிபெயர்த்திருப்பார்கள். (ஜவகர் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் என்பது போல). புரிந்துகொள்ளுதல் எளிது.இப்போது அவற்றை எஸ்.ஜி.ஆர்.ஒய், எஸ்.எஸ்.ஏ,பி.எம்.ஜி.எஸ்.ஒய் திட்டம் என்றெல்லாம் சுருக்கி பாமரர்களிடம் இருந்து தூரப்படுத்துகிறார்கள்.

மதுரையில் இருந்து தில்லி செல்லும் தொடர்வண்டிக்கு சம்பர்க் க்ராந்தி என்று பெயர்.இந்தப் பெயரே அந்த வண்டி அவ்வளவாகப் பிரபலம் ஆகாததற்குக் காரணம்.

தில்லியில் மத்திய அரசு நிறுவனங்களில் வாரத்தில் ஒரு நாள் எல்லா அலுவல்களும் இந்தியிலேயே நடைபெறவேண்டும் என்று ஒரு நடைமுறை உள்ளதாம்.அன்று இந்தி “படித்த” தமிழர்களே விடுப்பு எடுத்துவிடுவார்களாம். அல்லது அன்றைக்கு நடைபெறவேண்டிய கடிதப்போக்குவரத்தை தள்ளிப்போட்டுவிடுவார்களாம்.

நடுவண் அரசின் சில பத்திரிகை விளம்பரங்கள் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆங்கிலத்தில் வரும். ஆனால் தினத்தந்தியில் முழுக்க இந்தியில் வரும்.

மொழிபெயர்க்கப்பட்டு வரும் விளம்பரங்களிலும் இந்தியில் தகுந்த சொற்கள் இன்றி ஆங்கில வார்த்தைகளை அப்படியே எழுதினால் தமிழிலும் அதுமாதிரியே எழுதுகிறார்கள். சான்றாக உடல் நலம் பற்றி வந்த விளம்பரத்தில் ஜிஞ்ஜலி சீட்ஸ், ப்ளாக் க்ராம் என்றெல்லாம் இருந்தது.

மராட்டிக்காரர்களும், மலையாளிகளும், வங்காளிகளும் நம்மைவிடப் பலமடங்கு தத்தம் மொழிகளின் மீது பற்று கொண்டவர்கள். ஆனால் அவர்கள் இந்தியின் ஏகோபித்த மேலாண்மையை ஏற்றுக்கொண்டுவிட்டதால் நமக்கு மட்டும் ‘குறுகிய புத்தி’ பட்டம் கிடைக்கிறது.

ஒரு மாநிலம் பிற்படுவது ஹிந்தி கற்றுக்கொள்வதாலோ, இல்லாததாலோ அல்ல. 8-ம் வகுப்பு வரை இந்தி படிக்கும் மலையாளிகள் சந்தித்தால் மலையாளத்தில்தான் பேசிக்கொள்கிறார்கள். தமிழர்களைப்போல் அவசர மதிப்பு வேண்டி ஆங்கிலத்துக்குத் தாவுவது இல்லை. மிகுந்த மொழிப்பற்றும், இலக்கியச் சிந்தனையும் உடையதாய் கேரளம் திகழ்கிறது- ஹிந்தியை அங்கீகரித்தும் கூட. ஹிந்தி அங்கீகரிக்கப்பட்ட மராட்டியத்திலோ, அவர்களது மேடை நாடகச் சூழலும், படைப்பிலக்கியச் சூழலும் இந்தியாவிலேயே சிறந்ததாய் உன்னத படைப்புகளையும், நடிக மணிகளையும் வெளிக்காட்டுவதாய், தமிழக நாடகச் சூழலை விடப் பன்மடங்கு ஆரோக்கியமானதாய்த் திகழ்கிறது.

நம் மாநிலத்திலோ மொழி என்ற உன்னத தெய்வச்சிலை ஓட்டுப்பொறுக்கிகளால் கேவலம் காழ்ப்பு அரசியலுக்கான கருவியாகவும், ஆட்சியேற உதவும் படிக்கல்லாகவும் குறுக்கப்பட்டதன் விளைவு ஆங்கிலம் பேசுவது நாகரிகமாகவும் நல்ல தமிழ் என்பது நாதியற்றும் கிடக்கின்ற சூழலில் வந்து நிறுத்தியிருக்கின்றது.

அமெரிக்காவில் சிறப்பான விஷயம் மொழி என்பது குறித்து அவர்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுவதில்லை என்பது. மதிப்பு, மானம் என்பதெல்லாம் சரியாக ஆங்கிலம் பேசுவதோடு தொடர்புடையது என்பது போன்ற விக்டோரிய கால காலனீய மதிப்பீடுகளை உதறித்தள்ளி அது வெகுதூரம் வந்துவிட்டது. பரிசுத்த ஆங்கிலத்தை விட “பட்லர்” அமெரிக்கன் அதிகமாக விரும்பப்படுகிறது. சந்தேகமிருந்தால் அடுத்த முறை அமெரிக்கனிடத்தில் “how’dya doing?” என்பதற்குப்பதிலாக “how are you doing?” என சொல்லிப்பாருங்கள்.இலக்கணப்பிழையோடு பேசுவது சரி எனச்சொல்லவில்லை. ஆனால் அதை வைத்து மட்டுமே ஒருவர் இறுதி மதிப்பிடப்படுவதில்லை.

(ஆங்கிலத்தை விடுங்கள். தமிழை தமிழ்நாட்டில் எத்தனை பேர் இலக்கணப்பிழையின்றிப் பேசுகிறார்கள்/ எழுதுகிறார்கள்?)

மொழி ஒரு கலாசாரக் கடத்தியாக மட்டுமன்றி தொடர்புக் கருவியாகவும் உள்ளது. தமிழ் படிப்பதால் என்ன உபயோகம் என்று கேள்விகள் வரும் காலத்தில் இருக்கிறோம். இந்தக்கேள்விகளுக்கு “தமிழ்த்தாய், இனமானம்” போன்ற சலித்துபோன ஜல்லியடிப்புகள் தாண்டி பதிலை யோசிக்க வேண்டும். தமிழை வளர்க்க தமிழ்நாட்டை வளர்க்க வேண்டும். இங்கு வந்த குஜராத்தியரும் சவுராஷ்டிரரும் தமிழ் படித்ததும், டெல்லியில் தமிழன் ஹிந்தி கற்பதும் வாழ்நிலை சௌகரியம் கருதி. தமிழ்நாட்டில் (தமிழ் மற்றும் மற்ற) மக்கள் வந்து வாழும் வகையில் வசதி, வரவேற்பு, கட்டுமானம், தொழில் நிலை, உயர்கல்வி, தண்ணீர், மின்சாரம், கணிணி என மக்களைத்தொடும் விஷயங்கள் வளர வேண்டும். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் பரவியது ஆட்சியால் விளைந்த வணிகத் தொடர்பினாலும் அவை தந்த வாழ்வியல் ஆதாரங்களாலும்தான்.

பிற மொழிக்காழ்ப்பும், பிற மொழி அறியாமையுமே தமிழ்ப்பற்றாகி விடாது. அக்காலத்தமிழறிஞர்களும் இலக்கியவாதிகளும் பிற மொழிகளையும் நன்கு பயின்றிருந்தனர். மற்ற மொழி அறியாததால் தமிழை விரும்புகிறேன் என்பது தமிழ்ப்பற்று ஆகிவிடாது. பிறமொழி வெறுப்பு தமிழ்ப்பற்றாக வெளிப்படுவது தமிழுக்குப்பெருமை அன்று. அது தமிழுக்குத் தமிழன் செய்யும் அவமானம்.

மறுப்பதிலும் உடைப்பதிலும் அல்ல ஏற்பதிலும் உருவாக்குவதிலுமே இந்தியத்தனம் இருக்கிறது.

இந்த கட்டுரைக்கு கருத்துக்களை அளித்து சிறப்பான முறையில் உதவியவர்கள்.

திரு அருணகிரி (http://www.blogger.com/profile/20433928 )

திரு மணிமலர் மணியன் (http://manimalar.blogspot.com/)
திரு செந்தழல் ரவி (http://tvpravi.blogspot.com/ )
திரு செல்வம் ( http://kopparamulungi.blogspot.com/ )
அனானிமஸ் சகோதரர் ஒருவர்

www.holyox.blogspot.com
http://groups.google.com/group/muththamiz?hl=en

Series Navigation

செல்வன்

செல்வன்