இந்தக் கடிதத்தில் முகவரி இல்லை

This entry is part [part not set] of 36 in the series 20080717_Issue

ரெ.கார்த்திகேசு


அம்மா,

ஆரம்பிக்கும்போதே ரெண்டு துளி கண்ணீர் இந்த காகிதத்தில விழாம எழுதுணும்னுதான் பாக்கிறேன். இதுவரைக்கும் ரெண்டு பேப்பர் மாத்திட்டேன். ரெண்டும் கண்ணீர் பட்டு ஈரமாயி நைஞ்சு போச்சி. இந்த மூணாவது காகிதம் எடுத்து எழுதும்போது கண்ணீர அடக்கிக்கிட்டேன். எத்தன மொற அழுவறது? “சீ போன்னு”ன்னு கண்ணீர விரட்டிட்டேன். அங்கங்க ரெட்டு பொட்டு உளுவும். கண்டுக்காத!

அன்னக்கி போன்ல பேசினபோது எந்த விஷயத்தையும் தெளிவா உங்கிட்ட பேச முடியில! நீ அழுவ, நான் அழுவ, விக்கலும் விம்மலும்தான் அன்னக்கிப் பேசினிச்சி. ஒரு வேள நீ என்ன கன்னாபின்னான்னு திட்டியிருந்தேன்னா, நானும் உன்ன எதுத்துப் பேசி சில விஷயங்கள் விளக்கியிருப்பேன். ஆனா நீ அப்படிப்பட்ட அம்மா இல்ல! காணாமப் போன பொண்ணு குரல கேட்டவொண்ண எல்லாக் குத்தமும் மறந்து போயி பாசத்த அழுக மூலமாக் காட்டத்தான் ஒனக்குத் தெரியுது. நீ இப்படி அழுவும்போது நான் எப்படிப் பேசிறது? எனக்கும் அழுகதான் வந்திச்சி!

எங்க பள்ளிக்கூடத்தில தமிழ்க் கிளாசுக்குப் போனபோது அந்த வாத்தியார் ஒரு குறள் சொல்லிக் குடுத்தாரு.
“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்”
அப்ப நாங்கல்லாம் சிரிச்சோம். கூடப் படிக்கிற பொண்ணு பேரு தமிழ்ச் செல்வி. ஆனா கொச்சையா தமிழ்ப் பேசும்! கிளாச விட்டுப் போகும்போது “என்னாடி சொல்றாரு வாத்தியாரு? ஆருவலராம், புங்கனீராம், பூசலாம்… சீனம் பேச்சு மாதிரி இருக்கு!’ன்னுச்சி.

இது இப்படி சொன்னது வாத்தியாரு காதுக்குப் போச்சி. கூட இருந்த கோகிலாங்கிற பொண்ணு, தமிழ் வாத்தியாரோட செல்லம், போய் அவர் காதுல ஊதிடிச்சி.

அடுத்த கிளாசில வாத்தியார் தமிழ்ச் செல்விய கூப்பிட்டாரு. “இத பாரு தமிழ்ச் செல்வி. விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம் கட்டின மாதிரி உனக்கு உங்க அப்பா அம்மா பேர் வச்சிருக்காங்க. பரவால்ல. இதக் கேளு.

இப்ப நீ இருக்க, உங்க அம்மா இருக்காங்க. திடீர்னு நீ ஒரு நாளு காடில அடிபட்டு கால் ஒடைஞ்சி ஆஸ்பத்திரியில கெடக்கன்னு வச்சிக்குவோமே! கண்ண மூடி அர மயக்கமா படுத்துக் கெடக்க! ஒங்கம்மா கேள்விப்பட்டு ஓடியாராங்க. முதல்ல என்ன செய்வாங்க?”

“மெனாங்கிஸ் பண்ணுவாங்க” ன்னு சொன்னிச்சி அந்த தமிழ்ச்செல்வி. அது அப்படித்தான் எப்போதும் பேசும். நாலு வார்த்த பேசினா ரெண்டு வார்த்த மலாய்லதான் வாய்ல வரும்.

“தமிழ்ல சொல்லம்மா! நான் என்ன தமிழ் விளங்காதவனா, நீ மலாய்ல சொல்றதுக்கு?”

“அளுவாங்க!”

“அளுவாங்கல்ல? அந்த அளுகைக்கு என்ன அர்த்தம்?”

தமிழ்ச்செல்வி திருதிருன்னு முளிச்சிச்சி!

“அதுக்குக் காரணம் அவங்களுக்கு ஒம்மேல கோபமா?”

“இல்ல!”

“அப்புறம்?”

“சாயாங் பண்ணுறாங்க!”

“அதுதான் ‘அன்பு’ன்னு தமிழ்ல சொல்றோம். அப்ப அம்மாவோட கண்ணீருக்கு என்ன அர்த்தம்?”

“அன்பு!”

“எனக்கு ஒம்மேல ரொம்ப அன்பு இருக்குன்னு அம்மா வாய் தொறந்து சொல்லணுமா? அப்பதான் ஒனக்குத் தெரியுமா?”

அந்தப் பிள்ள இல்லன்னு தலய அசச்சது. “அப்ப அவங்க வாய் தொறந்து சொல்லாம அவங்க உன்ன ‘சாயாங் பண்ணுறாங்க’ன்னு ஒனக்கு எப்படித் தெரியும்?”

“அளுகைய பாத்தா தெரியும்!”

“அதத்தாம்மா இந்தக் குறள் சொல்லுது! அதப் போய் கேலி பண்ணலாமா?”

தமிழ்ச்செல்வி தலயக் குனிஞ்சிக்கிட்டு இருந்திச்சி.

அம்மா, நான் தலயக் குனிஞ்சிக்கிட்டுதான் இத எழுதிறேன். அன்னக்கி உன்னோட அழுகையத் தாங்க முடியாம போனக் கீழ வச்ச பிறகிலிருந்து வாத்தியாரு அன்னக்கி அந்த மண்டுக்குச் சொன்ன புத்திமதி இந்த மண்டுக்கு ஞாபகம் வந்திடிச்சி!

நான் சொல்ல நெனைக்கிற சங்கதிய உங்கிட்ட எப்படி சொல்றதின்னு தெரியாமத்தான் இப்ப அந்தப் பழய கதைய இப்படி நீட்டி எழுதிக்கிட்டு இருக்கேன்.

அம்மா,

உன் அழுகையெல்லாம் முடிஞ்சி நீ பேச முடியிற நேரத்தில நிச்சயமா ஒரு கேள்வி கேப்ப! “ஏண்டி இப்படி செஞ்ச?”

இப்ப நானும் எனக்குள்ள அதத்தாம்மா கேட்டுக்கிட்டு இருக்கேன். ஏண்டி இப்படி செஞ்ச? ஏண்டி இப்படி செஞ்ச? ஏண்டி இப்படி செஞ்ச?

என்ன மூணு தடவ எழுதிட்டேன்னு பாக்கிறியா? மூணு தடவ என்னம்மா? முன்னூறு தடவ எனக்குள்ள இந்தக் கேள்வி வந்திருச்சி. பதில்? அதும் பலமாதிரி வருது. எது சரின்னுதான் புரியில!

அவரோட, என்ன உயிருக்குயிரா காதலிக்கிறேன்னு வீரம் பேசினார, அந்தப் பையனோட அம்மாவும் இந்தக் கேள்விய கேட்டாங்க. “ஏண்டி இப்படி செஞ்ச? அப்ப “அந்த முட்டைக் கண்ணுன்னு” சொன்னேன். ஆமா, அந்த முட்டக் கண்ணு, காதில போட்டிருந்த கடுக்கன், இறுக்கிப் போட்ட ஜீன்ஸ், பள்ளிக்கூடத்தில மறைவா இழுத்து ஊதிற சிகிரெட், எல்லாரையும் எடுத்தெரிஞ்சி பேசிற அழகு இதெல்லாம் சேந்துதான்னு நெனைக்கிறேன்.

எல்லாத்துக்கும் மேல, “நீதான் என் தேவி, என் உயிர், என் உலகம்”னு அவர் பேசின வசனம். அதுதான் என்ன மயக்கிடிச்சி போல.

ஆனா அதுக்கு முன்னாலேயே பல காரணம் இருக்கும்மா! முதல்ல நம்ம வீட்டில இத்தன சினிமாப் படங்களுக்கு இடங் கொடுத்திருக்க கூடாது. நாமெல்லாம் கூட்டா ஒக்காந்து வீடியோ பாக்கிறோம். நீயும் அப்பாவும் கதைகளைக் கேலி பேசிச் சிரிச்சி மறந்திட்றீங்க. ஆனா பருவ வயசில என் மனசில அது எத்தன ஆசைகளைத் தூண்டுதின்னு நீங்க யோசிச்சுப் பாக்கிறதில்ல. அப்படித்தான் அண்ணனுக்கும் இருக்கும்னு நெனைக்கிறேன்.

இதுனால தனிமையில இருக்கிற போது வர்ர நெனைப்புங்க, ராத்திரியில வர்ர கனவுங்க…. அஜித், விஜய், கமல், ரஜனி மாறி மாறி வருவாங்க. ஆனா அவங்கெல்லாம் நேர்ல வராத போது, இந்த சிகரட் ஊதிற காலிப் பயல்தான் அதுக்குப் பதிலா கதாநாயகனா ஆயிட்றான். உனக்கு எப்படிம்மா சொல்லுவேன்? நீ ஒரு காலத்தில பருவப் பெண்ணா இருந்ததான? நெனைச்சுப் பாரு புரியும்,

இன்னொண்ணு. நீயும் அப்பாவும் அண்ணனும் எவ்வளவுதான் பாசமா இருந்தாலும் எனக்கு சுதந்திரம் கொடுக்காம அடக்கித்தான் வச்சிங்க. என்னக் கொஞ்சிற நேரத்தில கொஞ்சுவிங்க, ஏதோ சின்னக் குழந்தயக் கொஞ்சிற மாதிரி. ஆனா என்ன மதிச்சிப் பேசிறதில்ல. குடும்ப விவகாரங்கள அண்ணங்கிட்ட பேசிற மாதிரி ஏங்கிட்ட மனம் விட்டுப் பேசிறதில்ல. பொட்டப் பிள்ளதான அப்படிங்கிற எண்ணம் உங்ககிட்ட எப்போதும் இருக்கு.

அம்மா, உனக்கு உன் காலத்துக்கு அது பொருத்தமா இருக்கலாம். ஆனா என் காலம் பெண் பிள்ளைகளும் ஆண்களுக்குச் சமம்னு நெனைக்கிற காலம். நீங்க என்னச் சமமா நெனைக்காத போது, இந்தப் பையன் என்ன சமமா நெனைச்சி அன்போட பேசினாரு. அவருகிட்ட நான் மனந்தொறந்து பேச முடிஞ்சது. மனம் விட்டு சிரிக்க முடிஞ்சது.

ஆனா அதெல்லாம் பொய்யின்னு இப்ப தெரிஞ்சிக்கிட்டேன். அவரோட அம்மாவோட பேசப் பேச இது ஒரு உருப்படாத காலிப் பயல்னு தெரிஞ்சிக்கிட்டேன். அம்மா ஒரு முரட்டு ஆசாமி. என்னப் பாதுகாப்பா வச்சிருக்காங்க. அந்தப் பையன் என்னக் கிட்ட நெருங்க விட்றதில்ல.

என்னக் கொண்டுவந்து நம்ம வீட்டில விட்டிர்ரேன்னும் சொல்றாங்க. ஆனா நாந்தான் கொஞ்ச நாள் இங்கேயே தங்கியிருந்து எல்லாத்தையும் யோசிக்கலாம்னு இருக்கேன்.

எப்படி வந்து உங்க மூஞ்சில முழிக்கிறது? இந்தப் பையன் அப்பாவையும் அண்ணனையும் உன்னையும் எடுத்தெறிஞ்சி பேசினபோது பேசாம இருந்திட்டு, இப்ப எந்த முகத்தோட வந்து உங்க முன்னால நின்னு, நான் உங்க மகன்னு ஏத்துக்குங்கன்னு சொல்றது?

பள்ளிகூடத்துக்கு எப்படி மறுபடி போறது? எப்படி மற்ற கூட்டாளிங்களோட பழகுறது? வெட்கக் கேடா இருக்கு!

அம்மா, உங்கிட்ட இப்ப சொல்றேன். போன ரெண்டு மூணு வாரமா இந்த வாழ்க்கைய இப்படியே முடிச்சுகிட்டா என்னன்னு ஒரு யோசனை வர்ரதும் போறதுமா இருக்கு. பயப்படாத அம்மா! அந்த எண்ணத்தோட ரொம்ப போராடிக்கிட்டுத்தான் இருக்கேன். இல்லன்னா இதுக்குள்ள என் கத முடிஞ்சிருக்கும் இல்லியா? இந்தக் கடிதத்துக்கு பதிலா தற்கொலக் கடிதம்தான் எழுதியிருப்பேன்!

அதுக்குத்தாம்மா ஒரு துணிச்சல இப்ப தேடிக்கிட்டு இருக்கேன். எல்லாத்தையும் ஒதறிட்டு ஒரு புது வாழ்க்கையத் தொடங்கணுன்னு எனக்கு மனசுக்குள்ள நெனைப்பு வந்துக்கிட்டே இருக்கு. ஆனா அதுக்கான துணிச்சல் இன்னும் வரல.

வரணும், வந்தாகணும்.

அது வராம இருக்கிறதினாலதான் இந்த கடிதத்தில நான் இருக்கிற முகவரிய நான் குறிப்பிடல. என் மனம் தெளிவான பிறகு நான் எழுதிற அடுத்த கடிதத்தில முகவரி எழுதிறேன். உனக்கு சம்மதமானா நீ வந்து கூட்டிட்டுப் போ.

அல்லது ரொம்ப துணிச்சல் வந்திட்டா நானே நம்ம வீட்டு வாசல்ல வந்து நிப்பேன். அப்ப இன்னொரு தடவ நாம் ரெண்டு பேரும் கட்டிப் பிடிச்சி அழலாம். அது ரொம்ப சுகமா இருக்கும்.

என்னைக்கும் உன் மகள்,

சுமதி.


karthigesur@gmail.com

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு