நேசகுமார்
பிராமணர்களும் தமிழகமும் என்ற தலைப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக ஒரு கட்டுரையை நான் தமிழ்-சி·பியில் எழுதப்போக, அதில் நான் பிராமணர்களை தாக்கியுள்ளேன் என்று கருதிய ஒரு பெண் வந்து “உன் குடும்பம் நல்லா இருக்குமய்யா” என்று வஞ்சப்புகழ்சியில் ஏசிவிட்டுப் பொக, தற்போதெல்லாம் உளவுபார்க்கும் வேலையில் வீட்டின் நண்டு-சிண்டு-பெரிசுகள் படையுடன் களம் இறங்கியிருக்கும் என்னுடைய இணை அதை வாசிக்கப் போக, வழக்கம் போல வீட்டில் மறுபடியும் கட்டப்பஞ்சாயத்து நிகழ்ந்தது. “பாழாப்போற மனுசன் இப்படி இணையத்துல எழுதறேன்னுட்டு எல்லாரோட வயித்தெறிச்சலையும் கொட்டிக்கிறானே” என்று என் மனைவி தாண்டித் தட்டாமாலை சுற்றி நான்காவது மாடியின் பலகணியிலிருந்து கணினியை உருட்டிவிடும் முஸ்தீபுகளில் இறங்கினார். நான்காவது படிக்கும் மகனிலிருந்து, வயோதிகத் தந்தைவரை எல்லோரும் என்னை பார்வையால் எரிக்க, நானும் அம்புலிமாமாவின் விக்கிரமாதித்தியன் போல் மனதிற்குள் ‘அ’ போட்டுவிட்டு பகிரங்கச் சத்தியம் செய்தேன் – இனிமேல் இணையம் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லையென்று.
***
இணையமில்லா இடைவெளியில் இனிய நிகழ்வுகள் பல நடந்தன. புத்தகங்கள், சினிமா, ஊர் சுற்றல், பிள்ளைகளுக்கு பாடம், இசை கேட்டல் ஆகியன இனிதே நிகழ்ந்தேறின.
வடபழனி கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பும் தருணத்தின் இணையின் விருப்பத்திற்கேற்க மேற்கே பயணித்து குன்றத்தூர் போக முடிவு செய்தோம். வழியில் குன்றத்தூருக்கு இரண்டரை கிலோமீட்டர் முன்னே, மாங்காடு என்று ஒரு மிஸ்லீடிங் பலகையைக் கண்டு வண்டியைத் திருப்பி உள்ளே செலுத்தினால் வந்தது விகாரம் ஒன்று.
புத்தவேடு என்று இன்று வழங்கும் அந்தச் சிறிய கிராமத்தில் அரச மரத்தருகில் வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்று சோழர்காலத்தய தியானநிலையில் இருக்கும் புத்தரின் சிலையைக் கண்டோம். ஒரு காலத்தில் இங்கே புத்தர் வந்து சென்றிருக்கிறார் என்றார் அங்கிருந்த பெரியவர். அழகிய முறையில் நவீன முறையில் அமைக்கப் பட்டிருந்த தியான மண்டபத்தில் புத்தரின் தங்க வர்ணச் சிலைக்கு முன்னே சிறிது நேரம் அமைதியை அனுபவித்து அமர்ந்திருந்தேன்.
அந்தக் கட்டிடத்தைக் கட்ட சிங்கள வணிகர் ஒருவர் பொருளுதவி புரிந்திருக்கிறார் என்று இலவசமாய்க் கொடுக்கப்பட்ட புத்தகம் சொன்னது. மூன்று சிங்களச் சிறுவர்களையும் கண்டேன். போன மாதம்தான் இதுகள் எல்லாம் துறவியரின் பாதைக்கான சங்கல்பத்தை இங்கு ஏற்றுக் கொண்டன என்று எனக்கு விவரித்தார் அங்கிருந்த பெரியவர். அந்தப் பிள்ளைகளிடம் பேச்சுக் கொடுத்தேன் – சிங்கள மொழி எனக்குத் தெரியாததாலேயும், ஆங்கிலமோ தமிழோ அவர்களுக்குத் தெரியாததாலேயும் ஒரு புன்னகையுடன் தொடங்கி, புரியாக் குழப்பத்தில் முடிந்தது அந்த சம்வாதம்.
“பெரிய சாமி வெளியே போயிருக்கார். பிறகு வாருங்கள், அவரிடம் பேசலாம்” என்றார் அந்தோனி – அங்கிருந்தவர். தலைமை பிக்குவைப் பார்த்துப் பேச நான் விரும்பியதைச் சொன்னபோது இப்பதில் கிட்டியது. சரியென்று தலையாட்டினேன். புத்த’ங்’ சரண’ங்’ கச்சாமி என்று பாலியைத் தமிழுடன் குழப்பி எழுதப்பட்டிருந்த தட்டியொன்று ‘நிப்பானங்’ பற்றி அறிவித்து பக்கத்தில் நின்றது. ‘ம்’ போட்டால் தமிழர், ‘ங்’ போட்டால் சிங்களவரா – யாராவது தெரிந்தவர்களைக் கேட்டுத் தெளியவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
பெரிய சாமி – மேன்மைமிகுந்த இரத்தினசோதியும் சிங்களவர்தான் – ஆனால் தமிழர்கள் மேல் பரிவு உள்ளவர் – தனது கிட்னியை தானமாகக் கொடுத்தவர் – என்றெல்லாம் சொன்ன சிறிய இலவச பிரசுரம் வழக்கம் போல குன்றத்தூர் முருகனுக்கு மொட்டை போட்டால் கிட்னி சரியாகிவிடும் என்ற தமிழர்களின் மூட நம்பிக்கையை இடிக்கத் தயங்கவில்லை. புத்தருக்குத் தேவையோ இல்லையோ, ‘சங்கத்துக்குத்’ தேவை மற்றவர்களைத் தாழ்த்தி தம்மை உயர்த்திக் கொள்வது என்று தோன்றியது.
பாலி மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்ட ஒரு சிறிய பாசுர நூலைத்தந்தார் அந்தோனி. பவுத்த சங்கத்துக்கு சிரம் பணிவோம் என்ற தொணியில் இனிய தமிழில் எழுதப் பட்டிருந்த பாக்களைப் பார்த்து திகைத்து நின்றிருந்தேன் சில கணங்கள். உணவுத் தீட்டு என்ற ஆன்மீகக் கருத்து விகாரப்பட்டு இன்று சாதித்தீட்டாக நிற்பதை செல்வநாயகி எனும் எழுத்தாளர் (மரத்தடியில் தொடர்ந்து எழுதிவருபவர்) ஒரு வலைப்பதிவில் எழுதியிருந்தார். அது போன்றே, சத் சங்கம் அல்லது ஆன்றோர் உறவு என்ற ஆன்மீக உணர்வுடையோர்களின் உறவின் மேன்மை இன்று ‘சங்கம்’ என்ற பெயரில் நிறுவனப்படுத்தப்பட்டு விளங்கும் துறவிப் பெயர்தாங்கிகளின் கூடாரத்தைத் தூக்கிப் பிடிப்பதாக பவுத்தத்தில் வக்கிரப்பட்டுப் போயிருக்கும் விந்தையை நினைத்து வியந்து நின்றேன்.
சென்ற முறை காசிக்குச் சென்றிருந்தபோது பெற்றோர்களுடன் அங்கிருக்கும் சாரநாத்துக்கும் சென்றிருந்தேன். அங்கும் பிக்குகள் சிங்கள இறக்குமதிகள் தாம். சிங்கள தேசத்தின் அனகாரிக தர்மபாலரின் மார்பளவுச் சிலையொன்று பழமையான ஸ்தூபிக்குப் பக்கத்தில் இருந்த கட்டிடத்தின் முன் நின்றது புத்தவேடில் வழங்கப் பட்ட ஒரு தமிழ்ப் பிரசுரத்தில் விவேகானந்தருடன் சிகாகோவில் உரை நிகழ்த்திய அனகாரிகரைத் தூக்கிப் பிடித்து, விவேகானதரை விட அவர் சிறந்தவர் எனப்புகழப்பட்டார் என்று எழுதியிருக்க, மீண்டும் இந்த மட்டம் தட்டும் வேலை மனதை உறுத்த பிரசுரத்தை விட்டு சுற்றும் முற்றும் கண்ணைச் சுழட்டினேன். தியாண வகுப்பொன்றைப் பற்றிய பிரசுரம் ஒட்டப் பட்டிருந்தது. அந்தோனியிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன். எப்படி பவுத்தத்தால் ஈர்க்கப் பட்டார் என்ற கேள்வி இயல்பாகவே மனதில் எழுந்தது. ” புத்தர் கடவுளைப் பற்றிப் பேசவே இல்லை, கடமைகளைப் பற்றித் தான் பேசினார், நல்லதைச் செய், நல்லவனாய் இரு என்றார். அது என்னை ஈர்த்தது” என்றார் அந்தோனி. ‘ம்’ போட்டுக் கொண்டேன்.
***
‘ம்’ என்றவுடன் ஷோபாசக்தியின் நாவல் நினைவுக்கு வந்தது. இந்த இடைவெளியில் படித்த நல்ல நாவல் அது. நாவலை தொடர்ந்து ம் போட்டுக்கொண்டிருக்கும் ஈழத்தவர்களுக்கு சமர்ப்பித்துள்ளார். படித்து முடிக்கும்போது நாமும் ம் போடத்துவங்கிவிடுகின்றோம். வேறெதும் செய்ய வழியில்லா நிலையில் நாமென்ன செய்ய முடியும்.
ஈழத்துப் போராட்டத்தின் இன்னொரு முகத்தை, முகங்கள் மாறிப்போன துயரத்தை கடந்த கால, நிகழ்கால நினைவுக் கலவையுடன் சேர்ந்து கட்டமைக்கப் பட்ட நாவல். படித்து முடித்தவுடன் வழக்கம் போல சோகமும் வெறுமையும் மனதைக் கவ்விக் கொண்டது. நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு மதம் அல்லது அமைப்பு – அதன் தோற்றுவாய் நல்லதாக இருந்தால் கூட நாளடைவில் எப்படி அரக்கத்தன்மை பெற்றுவிடும் என்பதற்கு சிங்கள-பவுத்தமே நல்ல உதாரணம் என்று தோன்றியது. வெளிக்கடைச் சிறையில் தமிழ்க்கைதிகளைக் கைவேறு கால்வேறாகப் பிய்த்து குவியலாக புத்தரின் முன்னே சமர்ப்பித்ததை ஷோபாசக்தி எழுதியிருந்தது நினைவிலாடியபோது புத்தவேடு புத்தர் புன்னகையுடன் தியானத்திலிருந்து எழுந்து வந்தார். பக்கத்தில் மாறன் விகாரமான இளிப்போடு, “பாருய்யா நேசகுமார் – இந்த ஆண்டி அன்னைக்கு என்னை விரட்டிட்டான் – மிருக பலியைத் தடுத்த இவனுக்கு மனுசப் பலி கொடுக்க வச்சுட்டேன் பார்த்தியா” என்றான். மாறனின் அடியார்கள் புத்தரின் முகமூடியுடனும், காவியுடையுடனும், பவ்யமாக “மாறன் சரணங் கச்சாமி” சொல்லிக் கொண்டு தமிழர் உள்ளிட்ட இலங்கையர் வரிப்பணத்தில் வாங்கிய விமானச்சீட்டுகளுடன் சாரிசாரியாய் மீனம்பாக்கத்தில் வந்திறங்கி எக்மோரிலிருக்கும் மகாபோதி நிலையத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். அனகாரிக தருமபாலர் எல்லாளனை வீழ்த்திய துத்துகமனுவைப் பற்றிய ஒரு உரையை சிங்களக் குடியானவர்களிடையே உணர்ச்சிததும்ப நிகழ்த்திக் கொண்டிருந்தார்,”அனேக தமிழர்களைக் கொன்று குவித்த அபயக் கிராமணியின் மனதிலே கிலேசமும் குற்றவுணர்வும் உண்டான நேரத்திலே, அருகர்கள் எண்மர் வானிலே தோன்றி, பவுத்தம் தழைத்திட இந்தப் புனிதப் பூமியில் இரத்த ஆறு ஓடுவது புத்தரின் போதனைகளுக்கு முரணாகாது. நீவிர் கொன்றவர் மனிதர்கள் அல்லர் – மனிதத் தோற்றமளித்த பாவிகள், மேலான பவுத்த சங்கத்தை ஏற்க மறுத்த அவர்கள் விலங்கினுக்கொப்பானவர்கள். எனவே இராஜனே உம்மால் உயிரிழந்த மனிதர்களின் எண்ணிக்கை இரண்டேதான், அதிகமில்லை என்று அருள்வாக்களித்தனர்”. கேட்டுக் கொண்டிருந்த சனங்கள் ‘ம்’ போட்டுக் கொண்டிருந்தார்கள்.
“என்ன நின்னுக்கிட்டே தியானமா” இணை இடித்தது. “இங்க பாருங்க, இந்த புத்தவேடு மாதிரி நல்ல விஷயத்த இணையத்துல எழுதுங்க, எப்படி சுத்தமா வச்சிருக்காங்க பாருங்க இந்த இடத்த. எப்பப் பாத்தாலும், எவன் கூட சண்டைக்குப் போகலாம்னு பார்க்காதீங்க. நல்ல விஷயம் நம்மளச் சுத்தி இந்த மாதிரி நிறைய இருக்கு” யாளி உச்சியிலிருக்க இணை உபதேசம் செய்தது. விபாஸனா கலக்கத்தில் இணைக்கு ‘ம்’ போட்டேன்.
இணைக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற எழுதியும் விட்டேன்!
***
படித்த மற்றுமொரு புத்தகம் – புஸ்பராஜா எழுதிய ‘ஈழப் போராட்டட்த்தில் எனது சாட்சியம்’. ‘ம்’மிலும் இதன் தாக்கம் இருக்கிறது. ஷோபாசக்தியும் புஸ்பராஜாவும் நண்பர்கள் என்பதால் இந்த ஓவர்லேப்பிங் இருக்கலாம். ஈழப் போராட்டத்தின் பலவித பரிமானங்களை சற்றே அமெச்சூர்தனத்துடன் விவரிக்கும் அருமையான புத்தகம். குறை, நிறை என்று சொல்ல நிறைய இருக்கிறது என்றாலும், எழுத ஆரம்பித்தால் தனியொரு கட்டுரையாகவே எழுதவேண்டும் என்பதால், மையத்தை விட்டு விளிம்பில் தட்டுப் படும் பலவித தீவுகளில் ஒன்றில் இறங்குகின்றேன்.
போலீசாரிடம் அடிபட்டு மருத்துவமனையில் கிடந்த நிலையில் தன்மீது காதல் கொண்ட ஒரு மருத்துவத் தாதிப்பெண் பற்றியும் காதலின் சுகம், அது தகர்ந்து போனது, அதற்குக் காரணமான சமூகநோயான சாதிப்பாகுபாடுகள், அன்றைய காதலி பின்னாளில் புதுக்கணவருடன் தன்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனது என்று புஸ்பராஜா எழுதியிருக்கும் அந்தப் பகுதி சுவையானது, சுகம் கலந்த சோகத்தை கண் முன்னே நிறுத்துவது.
***
புத்தகங்கள் தவிர படங்கள் சிலதைப் பார்த்தேன். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது – ·பனா. குற்றால அருவி வானத்திலிருந்து கொட்டியது போன்றதொரு மழைநாளில் மும்பையில் நண்பர் வீட்டில் தேநீரைச் சுவைத்துக் கொண்டே பார்த்த படம். குஜராத்தில் தடுக்கப்பட்டதிலிருந்தே படம் பார்க்கும் ஆர்வம் எனக்கு இருந்தது. ஆமிர்கான் – காஜோல் ஜோடி வேறு படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியிருந்தது. கூடவே, இனிமையான பாடல்வேறு. சுபானல்லாஹ், சுபானல்லாஹ் என்ற இனிமையான பாடலை இப்போதும் நான் முனுமுனுக்கின்றேன்(இராமதாஸ்-திருமாவளவன் மன்னிப்பார்களாக).
அழகிய காதல் கதைதான் – இந்தக் காதலும் சோகம் கலந்ததுதான். நிறைவேறாத, சோகம் கலந்த காதல்களே அமரத்துவம் பெறுகின்றன என்று வலைப்பதிவர் ஒருவர் எழுதியிருந்தார். அது சரிதான். அமரத்துவம் என்பது அருகியிருக்கும் வரைதானே விரும்பப்படும். அலுமினியம் கண்டுபிடித்த புதிதில் தங்கத்துக்கு நிகராக கொண்டாடினார்களாம். பிறகு ஆளுக்காள் தோண்டி எடுக்க ஆரம்பித்தவுடன் தூக்கிப் போட்டுவிட்டார்கள். அந்தக்காலத்தில் எங்கள் வீட்டில் அலுமினியம், ஹிந்தாலியம் பாத்திரங்களைத் தனியாக வைத்திருப்பார்கள் – கவுச்சி சமைக்கவென்று. ‘எவர்சில்வர்’ பாத்திரங்கள் ‘உயர்ந்த’ மரக்கறிவகைக்கென்றே பளிச்சென வீற்றிருக்கும். நிறைவேறிய காதல்கள் அலுமினியமாக, ஹிந்தாலியமாக விரும்பும் ஆனால் வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாப் பொருள்களாக ஒதுங்கிவிட, நிறைவேறாக்காதல்கள் சமூகத்தில் காவியங்களாக மாற்றம் பெறுகின்றன – நம் மனதிலும்தான். நிஜத்தை மறுதளிப்பதே மனதிற்கு சந்தோஷத்தைத் தருகிறது. நண்பர் சொல்வார், மனது வாழ்வதே resistanceல் தான் என்று. உள்ளதை உள்ளபடியே ஏற்றுக் கொண்டால் அங்கே மனதிற்கு வேலையில்லை. ஆதலால், மனம் எப்போதுமே நிக்ழ்காலத்தை மறுத்து பெண்டுலம் போல கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் தாவி தன்னுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்கிறது என்பார் அவர்.
·பனாவும் ஒரு நிறைவேறாக் காதல் கதையைத்தான் சொல்கிறது – ஆனால், இந்தியச் சுழலில் சர்ச்சையை உண்டாக்கக் கூடிய காதல் கதை. காஷ்மீர் தீவிரவாதிக்கும் – கண்ணு தெரியாத காஷ்மீரக் கன்னிக்கும் கண்ணாலம், அதில் ஜிகாதிக் கூட்டமெல்லாம் ஊர்கோலம் என்ற ரீதியில் ஒரு கானாப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் குணால் கோஹ்லி. கல்மனம் கொண்ட தீவிரவாதியாக இருந்துவிட்டு, கடைசியில், அன்பின் காரணமாக விட்டுக் கொடுத்து உயிரையும் இழக்கும் ஆமிரைப் பார்த்தாவது பாகிஸ்தானிலிருந்து உள்ளே வரும் மதராசா புத்திரர்கள் மனம் மாறுவார்களா என்று பார்க்கலாம். பாகிஸ்தானில் அனைத்து தரத்தினரும் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பார்கள் என்று தோன்றுகிறது. தாவூத் இப்ராகிம் வகையறாவுக்கு திருட்டு விசிடிக்களை பாகிஸ்தானில் விநியோகம் செய்வது தற்போதைய முக்கியத் தொழில் என்பதால் தங்கு தடையின்றி இப்படம் பாகிஸ்தானிகள் வீட்டில் ஓடி வெற்றிகரமாக நூறாவது நாள் கொண்டாட பிரார்த்திப்போம்.
***
நேசகுமார்
- கீதாஞ்சலி (81) கடந்ததின் மீது கவலை!
- கபாலகார சுவாமி கதைப்பாடல் அறிமுகம்
- 500 டாலர் நகைச்சுவை
- SIVANANDA ORPHANAGE IN CHENNAI TAMIL NADU
- சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-4
- ஆனந்தவிகடனுக்கு என்ன நேர்ந்தது?
- விரைந்து தமிழினி வாழும்
- வானலையில் நூல் வெளியீடு
- ஜெயந்தி சங்கரின் கதை மாந்தர்கள்
- பெண்ணின் இடம் அல்லது அழியும் பூர்வீக வீடு
- தமிழ் இணைய இதழ்கள் – ஒரு முன்னோட்டம்
- கடித இலக்கியம் – 13
- கலக்… கலக்… கானிஸ்பே
- வண்ணக் கோலங்கள் !
- ஒரு கோரிக்கை
- அல்லாவை மொழியியல் ரீதியாக புரிந்துக் கொள்வது
- கண்ணகியும் ஐயப்பனும்
- கஅபா ஒரு சிறுவிளக்கம்
- மனிதகுல எதிரிகள்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 29
- பெரியபுராணம் – 96 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- மரணத்தை எதிர் கொள்ளுவது பற்றி
- இன்னும் எஞ்சி இருக்கவே இருக்கிறது
- முத்தம் போதும்
- “ஹாங்காங் தமிழ்க் கல்வியின் மேன்மை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது”
- கணிதம் என்பது அறிவியல் மொழி
- பொய்யை விட அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை
- இணையமில்லா இடைவெளியில் – புஸ்பராஜா, ம்!, புத்தவேடு விகாரம், மும்பாய், ·பனா.
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 6 : யோகியின் பார்வையினூடே வாழ்க்கை
- தமிழ்வழி வாழ்வு மெல்லப் போகும் பொருட்காட்சியகத்துக்கு!
- யு க ங் க ள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-9)
- க ட வு ளே !