இடிபாடுகளுக்குள்ளே தொலைந்த இந்திய ஞானம்

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

எஸ். காமராஜ்


பதின்னான்கு ஹெக்டேர் நிலப்பரப்பில் புல்வெளிகள், மலர்ச்செடிகள் வளர்க்ககப்பட்ட நடைபாதையோரங்கள், ஆங்காங்கே ஒன்றிரண்டு சுற்றுலாப்பயணிகள் பேருந்துப்பயணத்தில் கண்ணில்படுகிற பழங்காலகட்டிடங்கள் எல்லாம் மொத்தமாக ஒரே இடத்தில் குவித்து வைத்தது போலக் கேட்பாரற்றுக்கிடக்கிறது நாலந்தா. கருப்பும் சிகப்பும் கலந்த நிறத்தில் பிரம்மாண்டமான
கல்லறைபோல, நிராயுதபாணியான குட்டிச்சுவர்களாக நிற்கிறது. காலமும் கயவர்களும் இடித்தது போக எஞ்சி நிற்கிற வகுப்பறைகள், அதிலிருக்கும் இருண்டுபோன விளக்குமாடங்கள், அந்தப்பதினான்கு ஹெக்டேரில் எங்கு ஒரு துளி மழை விழுந்தாலும் அது பிரதானக்கோவிலுக்கு முன்னாள் இருக்கிற தெப்பத்துக்கு வந்துசேரும் அமைப்புக் கொண்ட பழங்கால விசித்திராமாக விரிந்து கிடக்கிறது. பேசப்படாத பெரும் வராலற்றுப் பல்கலைக்கழகம் நாலந்தா. ( அந்தக்கால இந்தியாவின் தலைநகரான பாடலிபுத்திரத்திலிருந்து ) பாட்னாவிலிருந்து மூன்று மணிநேரப்பயண தூரத்தில் இருக்கிற நாலந்தா. பயணம் முழுக்க பசேரென்று விரித்துக்கிடக்கிற வயல்வெளிகள் மட்டுமே கடந்துபோகிறது. வயல் வெளிகள் இல்லாத
இடங்களில் ஆழமும் அகலமுமான பெரிய்ய நதிகள் குறுக்கிடுகிறது. அரசுப்பேருந்துகள் என்றால் என்ன என்று மக்கள் கேட்கிறார்கள். அதுதான் இல்லையென்றாலும் கூட இந்தத் தனியார் பேருந்துகளும் எங்கே போயின என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் தனையாருக்கு கொடுக்கவேண்டும் என்று சொல்லுகிறவர்களை ஒரு பத்து நாள் பீகார் ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களுக்கு அனுப்பவேண்டும். சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் மொத்த பீகாரே இருண்டு போகிறது.

அதற்கப்புறம் முன்னேறுகிற ஒவ்வொரு அடியிலும் ஏதாவதொரு எச்சரிக்கை சமிக்ஞை வந்துகொண்டே
இருக்கிறதால் சாதாரண பயணம் என்பது கூட ஒரு சாகசத்தை எதிர்கொள்கிற செயலாகிறது. எல்லவற்றையும்
சகித்துக்கொள்கிற இதயத்தோடு கடந்து அந்த பிரதேசத்துகுள் நுழைகிற யாத்திரிகர்களிடம் ஆயிரத்து ஐநூறு வருச நினைவுகளிலிருந்து எதாவது ஒரு சின்னக் கதையை எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறது நலாந்தா. அடுக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு செங்கலும் புதைந்து கிடக்கிற கோடிக்கணக்கான கனவுகளின் செதில்களாகத்தெரிகிறது. ஒன்பதாம் வகுப்பு வரலாற்றுப் பாடம் ஒன்று உயிரோடு எழுந்து நிற்கிறது. இப்போது பாடலிபுத்திரம், கனிஷ்கர், சீனயாத்திரிகர், என்கிற மனப்பாடம் பண்ணிய
வார்த்தைகள் ஞாபகத்தின் அடி ஆளத்திலிருந்து வெளியேறூகிறது. கட்டிடம் கட்டுவதில் என்ன கலை இருக்கமுடியும் என்கிற பாமர எண்ணங்களைத் தவிடு பொடியாக்கி நிற்கிற பிரம்மாண்டம் நாலந்தா.

மூன்றடுக்குமாடிகள் கொண்ட பலநூறு அறைகள் இருந்திருக்கிறது. வகுப்பறைகள், தங்கும் விடுதி, குளிப்பிடம், விளையாட்டுத்திடல், கலை அரங்கம், தியான மண்டபம் என வடிவமைக்கப்பட்டிருக்கிறது. யுவான் சுவாங்கும், பாஹியானும் வந்து மண்ணெடுத்துப்போன பலகலைக்கழகம். உலக நாடுகள் முழுவதிலிருந்தும் ஆயிரமாயிரம் மாணவர்களை பீகாரை நோக்கி இழுத்து வந்த கல்வித்திட்டம். இயற்பியல், வானசாஸ்திரம், மருத்துவம், மனோதத்துவம் என இந்த இருபத்தோறாம் நூற்றாண்டில் செழித்துப்பணம் கொழிக்கிற பாடத்திட்டங்களை ஆயிரத்து ஐநூறு வருசத்துக்கு முன்னாள் இந்தியா உலகுக்கு
சொல்லிக்கொடுத்திருக்கிறது. என்கிற ஆச்சரியத்தைச்சொல்லுகிறது நுழைவாயிலில் இருக்கும் கல்வேட்டு. இந்த
துணைக்கண்டத்தின் மதம் குறித்த கலகக்குரலை முதன்முதலில் முன்வைத்த குருகோவிந்த் சிங், அஹிம்சையை ஆயுதமாக மாற்ற முயற்சித்த மஹாத்மா காந்தி, இஸ்லாத்தின் சூவ்பித்தத்துவம் எல்லாம் இந்த மண்ணில் கால்பதித்துத்தான் கிளம்பியிருக்கிறது. உலகத்துக்கு ஜனநாயகம் அல்லது மக்களாட்சி என்கிற சொல்லைமட்டுமல்ல அதன் மூலக்குறுகளைத் தேடி அறிமுகப்படுத்திய பல்கலைக்கழகம். பாலி மொழி என்கிற பொது மொழியை உருவாக்கிய நாலந்தா. இவ்வளவு மகோன்னதங்களை ஒராயிரம் ஆண்டுக்கு முன்னரே உலகுக்கு அறிமுகம் செய்த நாலந்தா இருந்த இந்தியா ஒரு குண்டூசியைக்கூட கண்டுபிடிக்கமுடியாமல் உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கிறது. அது தனது அறிவை எப்படித்தொலைத்தது. தொட்டணைத்தூறும் மணற்கேணி என்ற வள்ளுவனின் சொல் எப்போது பொய்யாகிப் போனது?. உலகுக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் ஆதி ஆசான்கள்
எங்குபோனார்கள்? வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்த புத்தமதத்தோடு நமது அழியாச்செல்வமும் சீனா
ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் விழுந்து விட்டது. நாலந்தாவை இடித்த பின்னர் அதிலிருந்த ஓலைச்சுவடிகளைத் தீவைத்து கொளுத்தியபோது அது மாதக்கணக்கில் எறிந்ததாகச்சொல்லுகிறார்கள். அந்த அவகாசத்தில் யாராவது வந்து அணைத்து விட மாட்டார்களா என்கிற ஏக்கத்தில் எரிந்த தீயிடம் இருந்த இறக்கம் கூட மனிதர்களிடம் இல்லாமல் போனது. எனவே எறிந்து சாம்பாலான சுவடிகளோடு ஆயிரத்து ஐநுறு வருட அனுபவம் தொலைந்து போனது. விரட்டியடிக்கப்பட்ட மாணவர்களோடு, கொலையுண்ட ஆசிரிய அறிஞர்களின் குருதியோடு உறைந்துபோனது இந்தியக் கண்டுபிடிப்புகளின் ஊற்றுக்கண். அந்த இடத்தில் ஒரு ஆரம்பப் பாடசாலை கூட இப்போது இல்லை என்பதுதான் சோகங்களின் சிகரமாகிப்போயிருக்கிறது. நடை பாதை தவிர்த்த ஏனைய இடங்களில் கைபடவே கூசுகிறது. அங்கிருக்கிற செங்கல்லின் ஒரு துகளையாவது திருட்டுத்தனாமய் பிய்த்துக் கொண்டுவரத்துடிக்கிற மனசை நமது பேரப்பிள்ளைகளும் வந்து தொட்டுதடவிப் போகவேண்டும் என்கிற பேராசை அடக்கிவிடுகிறது.

இதோ கல்விச்சுற்றுலாவுக்கு வந்த கல்லூரி இளைஞர்களும், யுவதிகளும் கடலை தின்றுவிட்டு குப்பையை அந்த
பிரம்மாண்டத்துக்குள் எறிந்துவிட்டுப்போகிறார்கள். நாலந்தா அவர்களுக்கு ஒரு பத்து மதிப்பெண்ணுக்குண்டான கட்டுரையாகச் சுருங்கிப்போயிருக்கலாம். அல்லது இடைவிடாத கனிணிப்படிப்பில் ஏற்பட்ட சலிப்பைப் போக்குகிற உல்லாச இடமாகக்கூட இருக்கலாம். அங்கு வாசலில் உட்கார்ந்து குளிர்பாணம் விற்கிற, புத்தர் சிலை விற்கிற, இன்னும் குதிரை வண்டிகளை ஓட்டிப் பிழைப்புச் செய்துகொண்டிருக்கிற பீகார்ச்சனங்கள் அறியாதவற்றை, அந்த குதிரை வண்டிகளில் ஏறிவந்து நாலாந்தாவைப் பார்த்துவிட்டுப் பேரதிர்ச்சியோடு வாயடைத்துத் திரும்பிப்போகிறான் வெளிநாட்டுக்காரன். இங்கே தான் கல்லறைகளைக்
கோவிலாகப்போற்றுவதும், கல்விச்சாலைகளைக் கல்லறையாக மாற்றுவதும் நடக்கிறது. எத்தனை முறை பீகாரைச் சுற்றி வந்தாலும் அதோ அங்கே கண்ணில் படுகிற கிராமத்து, நகரத்துக் கட்டிடங்கள் வசிப்பிடங்கள் வெளிப்பூச்சு இல்லாமல் செங்கல் வெளியே தெறிகிற கட்டிடங்களாகவே காணப்படுகிறது. ஆம்,.. இடிபட்டுச் செங்கல் சுவராக நிற்கிற நாலந்தாவின் அந்த கண்ணீர் பிரம்மாண்டத்துக்கு பீகார் செலுத்து வாழ்நாள் அஞ்சலியாகவோதான் நினைக்கத்தோன்றுகிறது. கம்ப்யூட்டர் கனவான்களும், செல்போன் சிங்காரங்களும் துடியாய்த் துடித்து மீனாட்சியம்மன் கோவிலை உலக அதிசயமாக அறிவிக்கச் சொல்லும் போது
தெறிக்கிற தேசப்பற்று நாலந்தாவைப் புறந்தள்ளுவது ஏன் என்கிற பெருங்கேள்விகள் மேற்கூறையில்லாத
நாலந்தாவிலிருந்து இன்னும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.


skraj_125@yahoo.co.in

Series Navigation

எஸ். காமராஜ்

எஸ். காமராஜ்