ஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

ஆசாரகீனன்


இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறிய முஸ்லிம் பெண் எழுத்தாளர் ஆஸ்ரா நொமானி. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் பணிபுரிந்தவர். பாகிஸ்தானில், யூதர்களை வெறுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் டேனியல் பெர்ல் இவருடன் பணிபுரிந்தவர்.

பெட்ரோ-டாலர்களின் துணையுடன் சவுதி அரேபியா உலகெங்கும் பரப்பி வரும் – இந்திய மற்றும் உலக இடதுசாரிகளின் அபிமான புரட்சி சக்தியான – வஹாபிசத்தின் காரணமாக மசூதிகளில் மேலெழுந்துள்ள பால் சமத்துவமின்மையை, பெண்களை ஓரம் கட்டும் போக்கைத் தீவிரமாக எதிர்ப்பவர் ஆஸ்ரா நொமானி. இது சம்மந்தமாக இவர் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதிய எனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன் என்ற கட்டுரையை திண்ணை வாசகர்களுக்காக தமிழில் மொழிபெயர்த்திருந்தேன்.

ஆஸ்ரா நொமானி தந்த்ரிகா (Tantrika) என்ற புத்தகத்தை ஏற்கனவே எழுதியுள்ளார். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இவரை வெறுக்க இது ஒன்றே போதாதா ? மற்ற மதங்களைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாகவும், அவற்றை ஒழித்துக் கட்டுவதைத் தவிர வேறெந்த குறிக்கோளும் இல்லாதவர்களாகவும் பிற முஸ்லிம்களை மூளைச்சலவை செய்வதுதானே இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் – குறிப்பாக வஹாபிஸ்டுகளின் ஒரே நோக்கம். உலகை அடியோடு புரட்டி மாற்ற முயலும் இந்த வகை சைக்ளோப்பியன் பார்வைதானே இடதுசாரிகளுக்கு மிகவும் பிடித்தமான வழிமுறை ?

இவர் 2003-ஆம் ஆண்டு தம் மகன் ஷிப்லியுடன் ஹஜ் யாத்திரை சென்றார். ஹஜ் யாத்திரை அனுபவங்கள் பற்றியும், அமெரிக்க மசூதிகளில் நிலவும் பால் சமத்துவமின்மையை எதிர்க்கும் தம் போராட்டம் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை தற்போது எழுதியுள்ளார். Standing Alone in Mecca : An American Woman ‘s Struggle for the Soul of Islam என்ற தலைப்பிலான இந்தப் புத்தகம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இது சற்றொப்ப 320 பக்கங்களைக் கொண்டுள்ள கடின-அட்டை (hardcover) பதிப்பு. அமெரிக்காவின் HarperSanFrancisco பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தின் தொடக்கப் பக்கங்களைப் படிக்க ஆஸ்ரா நொமானியின் இணைய தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க எவாஞ்சலிக்க-கிறிஸ்தவ ஏகாதிபத்தியத்தின் மொழியான ஆங்கிலத்தில் படிக்க விரும்பாத பிற அடிப்படைவாதிகள் மற்றும் இடதுசாரி பல-பண்பாட்டியப் போராளிகளின் வசதிக்காக, இர்ஷத் மஞ்ஜியின் ‘Trouble with Islam ‘ புத்தகத்தைப் போலவே இந்தப் புத்தகமும் விரைவில் அரபி மொழியில் மொழிபெயர்க்கப்படும் என்று நம்புவோமாக!

இந்தப் புத்தகத்தை தமிழிலும், பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட விரும்பும் பதிப்பகத்தார் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: letters@asranomani.com

முஸ்லிம் விழிப்புணர்வு அமைப்பு மற்றும் தெற்காசிய பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை இணைந்து நியூயார்க் நகரில் மார்ச் 16, 2005 அன்று நடத்த இருக்கும் புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தப் புத்தகத்தின் சில பக்கங்களை ஆஸ்ரா நொமானி படித்துக் காட்ட இருக்கிறார். பின்னர் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்வும் உண்டு. இந்த நிகழ்ச்சி Gallery Arts India-வில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புத்தக வெளியீட்டை ஒட்டி நியூயார்க் நகரப் பகுதியில் ஆஸ்ரா நொமானி பங்கு பெறும் மற்றொரு முக்கிய நிகழ்வு – முஸ்லிம் பெண்கள் தலைமையில் நடக்க உள்ள தொழுகை ஆகும். மார்ச் 18 2005 வெள்ளிக் கிழமை, நியூயார் நகர மசூதி ஒன்றின் பின் பகுதியிலிருந்து அதன் முன் பகுதிக்கு பெண்கள் அணிவகுத்துச் செல்ல இருக்கின்றனர். அதன் பின்னர் மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை தொழுகையும் வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்க உள்ளன.

ஆண்களும், பெண்களும் கூட்டாகக் கலந்து கொள்ளும் இந்த வெள்ளிக் கிழமை தொழுகைக்கு விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய துறைப் பேராசிரியர் முனைவர் அமினா வதூத் (Dr. Amina Wadud) தலைமை வகிப்பார். வெள்ளி சிறப்புச் செய்தியையும் வழங்குவார். இவர் Quran and Woman: Rereading the Sacred Text from a Woman ‘s Perspective என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். பெண்கள் தொழுகைக்குத் தலைமை தாங்கலாம் என்பதை இந்தப் புத்தகத்தில் இவர் அழுத்தமாக நிரூபித்துள்ளார்.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியின் மூலம் முஸ்லிம் பெண்கள், இஸ்லாத்தில் எஞ்சியுள்ள ஆணாதிக்கப் பார்வையால் வரலாற்றுப் போக்கில் தாம் இழந்த உரிமையை, இருபாலரும் தொழும் மசூதிகளில் தொழுகைக்குத் தலைமை தாங்கும் தங்கள் உரிமையை மீட்டெடுக்க உள்ளனர். மசூதிகளில் பெண்கள் பின் வரிசைகளில் மட்டுமே இருந்து தொழு வேண்டும் என்ற தற்போதைய நடைமுறையை உடைத்து முன் வரிசைகளுக்கு அணிவகுத்துச் செல்ல உள்ளனர்.

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்