ஆறுவது சினம்

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

கலாநிதி சந்திரலேகா வாமதேவா


மனிதருக்குள்ள வேண்டாத குணங்களுள் கோபமும் ஒன்றாகும். கோபம் வராதவர்களை நாம் காண்பது அரிது. மனிதருக்கு மனிதர் கோபத்தைக் வெளிக்காட்டும் முறையில் வேறுபாடுள்ளது போல கோபம் கொள்ளும் அளவிலும் மனிதரிடையே வேறுபாடுகள் உள்ளன. சிலர் எடுத்ததற்கெல்லாம் கோபிப்பார்கள். அவர்களுடன் பழகுவது மிகவும் கடினம். மிகச் சாதாரண விஷயங்களுக்கெல்லாம் எரிந்து விழுவார்கள். சிலர் மிகவும் சாந்தம் நிறைந்தவர்கள். ஆனால் அவர்களுக்கு கோபம் வந்தால் அது சற்று அதிகமாகவே வெளிப்படும். இதனையே சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று நாம் கூறுகிறோம். சிலர் கோபத்தை தமது உடல் அசைவுகளில் அதாவது body language ஆல் மட்டும் காட்டுவார்கள். சிலர் கோபம் வந்தால் சம்பத்தப்பட்டவருடன் பேசாது முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். பலர் கோபம் வரும் போது குரலைச் சிறிது உயர்த்துவார்கள். சிலர் பலத்த குரலெடுத்துக் கத்துவார்கள். சிலர் கோபத்தைச் செயலில் காட்டுவார்கள். பொருட்களைக் கடுமையாகக் கையாள்வது, அதாவது பெரிய சத்தமெழும்படி பொருட்களை வைப்பது. அதிகமாகப் பலர் கோபத்தைக் கதவு மூடும் முறையிலே காட்டுவார்கள் அதாவது கதவை அறைந்து மூடுவது. சிலர் கோபம் வந்தால் கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் எடுத்து வீசுவார்கள் அல்லது போட்டுடைப்பார்கள். அது மிகவும் ஆபத்தான கோபம். சிலர் ஒருவரில் காட்டமுடியாத கோபத்தை மற்றவரில் காட்டுவார்கள். அதாவது வேலைத்தலத்தில் மேலதிகாரியுடன் காட்ட முடியாத கோபத்தை வீட்டில் மனைவியிடம் அல்லது பிள்ளைகளிடம் காட்டுவார்கள்.

பல வருட கடும் தவத்தால் பெற்ற பலன்களை கோபத்தால் இழந்த முனிவர்கள் பற்றிய கதைகளை நாம் புராணங்களில் பார்க்கிறோம். அதாவது சிறு கோபம் எமது பெரிய பலன்களையெல்லாம் அழித்து விடுகிறது என்பதே அதன் பொருள். சாதாரண வாழ்வில் கோபம் எமக்கு எதிரிகளைச் சம்பாதித்துத் தருகிறது. அடிக்கடி கோபிப்பவர்களைப் பொதுவாக எவரும் விரும்புவதில்லை. சாந்தமும் பொறுமையுமே எமக்கு நண்பர்களைப் பெற்றுத் தருகிறது. சில வேளைகளில் ஒருவர் கோபிக்க மற்றவர் அந்தக் கோபத்துக்கு எதிராக தனது கோபத்தைக் காட்ட கோபம் தொடர்ச்சியாக முடிவற்றுப் போய்க் கொண்டிருக்கும். ஒருவர் கோபிக்கும் போது மற்றவர் எதிர்க் கோபம் காட்டாதிருப்பதே அது வளராமல் நிறுத்துவதற்கு ஒரே வழி.

எப்போது எமக்குக் கோபம் வருகிறது ? பெரும்பாலும் பொறுமை குறையும் போது அல்லது நாம் மனத்தால் பலவீனம் அடையும் போது எமக்குக் கோபம் வருகிறது. கோபத்தை காட்டுவது எமது பலம் என்று நாம் தவறாக நினைக்கிறோம். கோபத்தை மற்றவரைப் பாதிக்காத வகையில் கையாள்வதே எமது பலம். கோபத்தினால் விளையும் அனர்த்தங்கள் ஏராளம். ஒரு கணம் ஏற்படும் கோபத்தை அடக்க முடியாமையால் கொலைகள் நடக்கின்றன. தாக்குதல்கள் நடக்கின்றன. குடும்பங்கள் குலைகின்றன. ஒருவரின் கோபத்தால் மற்றவரே பாதிக்கப்படுகிறார். சில வேளைகளில் முன்னர் ஒருபோதும் சந்திக்காதவருடன் ஏற்படும் அர்த்தமற்ற கோபத்தால் பெரும் அனர்த்தம் விளைகிறது. Road rage யைப் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். கார்களில் இருப்பவர்கள் சிறு சிறு பிரச்சினைகளுக்கு மிகக் கடுமையான வார்த்தை அல்லது சைகைப் பரிமாற்றம் செய்து கொள்வார்கள். இதனால் நடைபெற்ற கொலை பற்றிக்கூட நாம் சிட்னியில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளில் படித்தோம். இது மட்டுமல்ல கோபத்தால் ஏற்படும் அனர்த்தங்கள் பற்றி அடிக்கடி செய்திகள் வருகின்றன.

ஒரு கோடாஸ்வரர் தனக்குரிய கார் நிறுத்தும் (car park) இடத்தில் இன்னொருவர் தனது BMW காரை நிறுத்திவிட்டார் என்பதால் கோபம் கொண்டு அதற்குள் குண்டு இருப்பதாக பொலீஸை வரவழைத்து பெரிதும் ஆர்ப்பாட்டம் பண்ணிவிட்டார் என்று சில மாதங்களின் முன்னர் பத்திரிகையில் படித்த போது எத்தனை பணம் இருந்தென்ன கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்று நினைத்துக் கொண்டேன். கோபம் என்பது அதனைக் கொள்பவர், அதனை எதிர் கொள்பவர் என்று இருவரைப் பாதிக்கிறது. சில வேளைகளில் ஒருவரின் கோபம் ஒரே நேரத்தில் பலரைப் பாதிக்கிறது.

ஏன் எமக்கு கோபம் வருகிறது ? அதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் ? இவை பற்றிச் சிறிது விரிவாகப் பார்க்கலாம். உண்மையான தவறுகளால் அல்லது தவறுகள் போல உள்ளவற்றால் உந்தப்படுவதால் ஏற்படும் தீவிர உணர்வு, அதற்கெதிராகச் செயற்படவேண்டும் என்ற உள்ளப் போக்குடன் இணைந்து வரும் போது ஏற்படும் மகிழ்ச்சியற்ற நிலையே கோபம் என்று Oxford Dictionary கோபத்துக்கு வரைவிலக்கணம் கூறுகிறது. சினம் பலிக்கும் இடத்ததில் தான் அதனைக் காக்க வேண்டும். அது பலிக்காத அதாவது ஒருவனது அதிகாரம் செல்லாத இடத்தில் அதனைக் காத்தால் என்ன காவாது விட்டால்தான் என்ன என்கிறார் வள்ளுவர். சிரிப்பையும் மகிழ்ச்சியையும் கொல்லும் சினத்தை விட ஒரு மனிதனுக்கு வேறு பகைவர் உண்டோ என்றும் எவரிடத்திலும் கோபிக்காதிருத்தலே நல்லது ஏனெனில் கோபத்தால் தீமையே உண்டாகும் என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

மனநிலை பற்றிய அறிவில் வல்லுனரான பேராசிரியர் Gordon Parker என்பவர் Dealing with Depression: A Commonsense Guide to Mood Disorders என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். நீண்ட காலம் கோபம் பற்றி ஆய்வு செய்த போதும் ஒவ்வொருவரைப் போலவே தனக்கும் சில சந்தர்ப்பங்களில் கோபத்தில் ரத்தம் கொதிப்பதை அவர் ஒத்துக் கொள்கிறார். விடுமுறைக்காக New York க்குக் குடும்பத்துடன் சென்றிருந்த சமயம் Traffic lights க்கு முன் காரில் காத்திருந்த வேளையில் அவரது காருக்கு முன்னால் பக்கத்தால் நுழைந்த இன்னொரு காரைக் கண்ட போது அவருக்கு கோபம் தலைக்கேறியது என்றும் ஆனால் New York ஐச் சேர்ந்த அந்த மனிதர் ஒரு baseball bat ஐ எடுத்து மிகக் கடுமையாக அவருக்கு அசைத்துக் காட்டியதால் பச்சை light வந்ததும் After you sir என்று தனக்குள் கூறி அவரது காரை முன்னால் போக தான் அனுமதித்ததாகவும் Parker கூறுகிறார். இச் சம்பவம் அவரது நாளாந்த வேலையில் அவர் எதிர் கொள்ளும் அதே கேள்விகளை அவருள் எழுப்பின. New York ஐச் சேர்ந்த கார்க்காரர் போல கோபத்தை வெளிப்படையாகக் காட்டுவது ஆரோக்கியமானதா ? அல்லது Parker அந்தச் சந்தர்ப்பத்தில் செய்ததைப் போல அடக்கி வைப்பது ஆரோக்கியமானதா ? ஏன் கோபம் வருகிறது ? எப்படிப்பட்ட மனிதர் உடனே கோபமடைகிறார் ? போன்ற வினாக்களுக்குத் தனது நூலில் விடை தருகிறார் Parker.

மற்றவரால் புறக்கணிக்கப்படுதல், தேவையான சந்தர்ப்பத்தில் அவர்களால் கை விடப்படுதல், மனம் காயப்படுத்தப்படுதல், அவர்களால் கெடுதல் விளைவிக்கப்படல் ஆகியவற்றால் ஏற்படும் விரக்தியின் வெளிப்பாடே கோபமாக வெடிக்கிறது. ஆயினும் கோபம் எமக்கு depression வராது தடுக்கிறது. ஏனெனில் எம்மை நாமே குற்றம் சாட்டுவதால் depression வருகிறது. நாம் பிறரைக் குற்றம் சாட்டுவதாலே கோபம் வருகிறது. மன அழுத்தத்தால் மற்றவரில் கோபித்தல் என்பது தற்காலத்தில் ஒரு வாழ்க்கை முறையாகிவிட்டது. கோபத்தை எப்படிக் கையாள்வது என்று பயிற்றுவிப்பவர்கள் கோபத்தை அடக்காது வெளியே காட்டும்படி கூறுகின்றனர். ஆனால் Parker அதனை ஏற்கவில்லை. கோபத்தில் நல்ல கோபம் என்று எதுவும் கிடையாது. கோபமாயிருத்தல் என்பதற்கும், ஆக்கபூர்வமாக அல்லது தன்னுறுதியுடன் செயலாற்றுபவராக இருத்தல் என்பதற்கும் இடையில் பெரிய வேறுபாடுண்டு. ஒரு ஆக்கபூர்வமான மனிதர் தனது கருத்தைக் கோபப்படாது மற்றவர் அறியும்படி செய்கிறார். 1960 களிலும் 1970களிலும் பெண்ணியவாதிகள் மிகுந்த மன உறுதியுடன் தமது உரிமைக்காக வாதாடினர். அதனைக் கோபம் என்பது தவறு என்கிறார் பாக்கர்.

மனிதர்கள் தமக்கு ஏற்படும் கோபத்தை சமூகம் அங்கீகரிக்கும் வகையில் வெளிப்படுத்தலாம். அதாவது தலையணையில் குத்துதல், கடிதமொன்றை எழுதி அதனை அனுப்பாது விடுதல், பூனையையும் சுவரையும் உதைக்காது ஏதாவது மென்மையான பொருளை உதைத்தல் ஆகியவற்றின் மூலம் தமது கோபத்தைத் தணித்துக் கொள்ளலாம். பல முறைகள் பழையன போல தோன்றினாலும் அவை பயனுள்ளவை. இந்த வகையில் ஒருவர் தான் அடக்கி அடக்கி வைத்த கோபம் ஒரு நாள் வெடிப்பதைத் தவிர்க்கலாம். கோபத்தை வெளிப்படையாகக் காட்டாதவருக்கு ஏற்படும் கோபத்தில் உள்ள ஆபத்து என்னவெனில் ஒட்டகத்தின் திமிலில் நீர் சேர்வது போல கோபம் உள்ளே சேர்கிறது. வெளிப்படையான மனிதர்களால் தயக்கமும் வெட்கமும் உள்ள மனிதர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அது பின்னர் அவர்களுடைய தன்னம்பிக்கையைப் பெரிதும் தகர்க்கிறது. அத்துடன் அது இறுதியில் அவர்கள் தம்மைத் தாமே ஒன்றுக்கும் பயனற்றவர் என்று கூறும் நிலைக்கு எடுத்துச் செல்கிறது என்று Parker கூறுகிறார்.

பெண்களை விட ஆண்களே கோபத்தை வெளியில் அதிகம் காட்டுபவர்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் பெண்களது பங்கு சமூகத்திலும் வேலைத்தலத்திலும் அதிகரித்து வருவதால் அவர்களும் மிக விரைவாகக் கோபத்தை வெளியே காட்டுகிறார்கள். மரபு ரீதியாகப் பெண்கள் தங்களது கோபத்தைத் தம் மீதே காட்டுபவர்கள். ஆண்கள் பொதுவாகத் தமது பொறுப்பை ஏற்றுக் கொள்பவர்கள். ஆனால் இன்று பெண்கள் தங்களது பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்களும் கோபத்தை வெளியே காட்டுகிறார்கள்.

ஒவ்வொருவரின் கோபமும் அவரவருக்குரிய பண்பாட்டினால் செல்வாக்குறுகிறது. ஒருவர் தமக்குரிய பண்பாட்டுக்கு அமைவாகவே கோபத்தை வெளிப்படுத்துகிறார். இன்றைய சமூகங்களில் கோபத்தை வெளிப்படுத்துவது அதிகரித்து வருகிறது. Jerry Springer இன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மனிதர்கள் தமது கோபத்தை வெளிப்படையாகக் காட்டத் தயங்குவதில்லை. ஜப்பானில் படிநிலை சமூக அமைப்பு அதாவது hierarchical society காணப்பட்ட போதும் boss இன் முகம் பதிக்கப்பட்ட boxing bags கொண்ட வேலை தொடர்பான உடற்பயிற்சிக்கூடம் அமைப்பது நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தொழிலாளர் அங்கு போய் boss இன் முகத்தைக் கொண்ட boxing bag இல் பல குத்துக்களை விட்டு கோபம் தணிந்தவராக வேலைக்குப் போக முடிகிறது.

எமது கோபத்தை நாம் அறிந்து கொள்வது மிக பயனுள்ளது மட்டுமல்ல உதவிகரமானதும் கூட. இதனால் எதிர் மறையான விஷயங்கள் நடக்கும் போது எவ்வாறு நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான முறைகளை நாம் எமக்குள்ளே அமைத்துக் கொள்ளலாம். அப்படியானால் தர்க்கபூர்வமாகச் சிந்தித்தல் என்பது கோபத்தைத் தோற்கடிப்பதற்கான முறை என்பதை இது கருதுகிறதா ? இவ்வினாவுக்கு ஆம் என்று பதிலளிக்கிறார் பண்டைய ரோம தத்துவஞானியாகிய Seneca என்பவர். தத்துவஞானி என்பவர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவர். ஆகையால் கோபம் அவரது சிந்தனைப் போக்கைத் தடுக்கும். எனவே தான் Seneca கோபத்தைத் தோற்கடிக்க தர்க்கம் உதவும் என்று கருதுகிறார்.

கோபத்தைக் கையாள்வதற்கு Parker நான்கு வழிமுறைகளைக் கூறுகிறார். முதலாவது நாம் கோபமடைந்துள்ளோம் என்று அறிந்து கொள்ளுதல். பலர் தாம் கோபம் கொள்வதை அறிந்து கொள்வதில்லை. பயம் அல்லது காயப்படுதல் ஆகியனவாகவே அவர்களது உணர்வுகள் வெளிப்படுகின்றன. அவர்கள் சக்தியற்றவராக, சிறுமையாக்கப்பட்டவராக, மதிப்பிழந்தவராக உணர்வதுடன் அந்த உணர்வுகளில் தொடர்ந்திருக்க விரும்புவதில்லை. வேறு சிலர் தமது அனுபவங்களை அசை போடுவதால் கோபமடைவதுடன் பழிவாங்குதலையும் தமக்குள் வளர்த்துக் கொள்கிறார்கள். வேறு சிலர் கசப்பு அடைந்தவர்களாக விரக்தியுறுகிறார்கள். கோபமுற்றவரது அழிக்கும் சக்திக்கு அஞ்சுவதென்பது பலருக்கும் இயல்பானதே. இதனாலேயே சில குடும்பங்களில் கோபத்தை வெளிப்படுத்துதல் என்பது சகித்துக் கொள்ளப்படுவதில்லை. கோபம் பிள்ளைகளைத் திக்குமுக்காடச் செய்யலாம் பெற்றோரை அடக்கியொடுக்கலாம். கோபம் நியாயப்படுத்தப்பட்டோ படாமலோ இது நடைபெறலாம். அது குழப்பத்தை ஏற்படுத்துவதுடன் கோபப்படுபவருக்கு அசெளகரியத்தையும் உண்டாக்குகிறது.

நாம் எமது சொந்த நடத்தையை கவனிக்க வேண்டும். நாம் வேண்டுமென்றே எரிச்சலூட்டப்படுகிறோமா ? எம்மைக் கோபமூட்டுகிறவர் எமது இயல்புகளின் கவர்ச்சியற்ற பகுதிகளை எமக்கு நினைவூட்டுபவராக இருக்கலாம். நாம் ஏன் கோபம் கொள்கிறோம் என்று அறிந்து கொள்வோமாயின் அது எமது கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் துணைபுரியும். எமது கோபத்திலிருந்து நழுவாமல் அதனை, அதாவது நான் கோபமடைபவர் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக எது எம்மைக் கோபமடையச் செய்கிறது என்பதை அடையாளம் காணவேண்டும். ஒன்றும் சரியாக இல்லை என்பதையே கோபம் சமிக்ஞை இட்டுக் காட்டுகிறது. எம்மைக் குறிப்பாகக் கோபப்படுத்தும் சூழ்நிலையை நாம் அடையாளம் காணுதல் அவசியம். நாம் கவனிக்கப்படவில்லையா ? அல்லது மற்றவர் நினைத்தபடியெல்லாம் நடப்பதற்கு இடம் கொடுக்கிறோமா ? நாம் நம்பிக்கை கொண்டிருக்கும் ஒன்றை விட்டுக் கொடுக்க வேண்டுமா ? எமக்கு முக்கியமான ஒன்றை யாராவது சீரழித்து விட்டார்களா ? சிறிது கோபம் ஆறியதும் எமது கோபம் நியாயமானதா என்று நம்மை நாமே கேட்க வேண்டும். சில வேளைகளில் முன்னர் ஏற்பட்டு மாற்றப்படாத காயங்களையும் பயங்களையும் கோபம் தூண்டிவிடுகிறது.

மூன்றாவது நாம் கோபம் என்ற உணர்வு பற்றி என்ன செய்யலாம் ? எது எம்மைக் கோபப்படுத்துகிறதோ அதனை விளங்கிக் கொள்ளவதன் மூலம் எம்மைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். அது என்ன என்று கண்டு பிடித்து அது பற்றி நண்பர்களிடம் அபிப்பிராயம் கேட்கலாம். நாம் பழைய கோபங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது மன்னிக்க வேண்டும் அல்லது மறந்துவிட வேண்டும். மற்றவர்களது மனப் போக்குகளை எம்மால் மாற்றுவது கடினம். எனவே நாம் எம்முடையதை சீர்திருத்தலாம்.

Parker கூறும் நான்காவது வழிமுறை எமது கோபத்தை வெளிப்படுத்துவதற்கு வேறு வழிமுறைகளைக் கண்டறிவதாகும். கோபத்தை வெளிப்படுத்துவது என்பது சற்று தந்திரமானது. எனவே தான் உடனடிக் கோபத்திலிருந்து எம்மை சற்று தொலைவுபடுத்துவது நல்லது. உடனே கோபத்தைக் காட்டக்கூடாது. பதிலாக சற்று ஆறவிட்டு எமது அறிவு நிலைக்குத் திரும்ப வேண்டும். விரைவாக ஒரு நடை போய் வரலாம். அல்லது குஷனை அடிக்கலாம். அல்லது தலையணைக்குள் முகத்தை நன்கு புதைத்து பெரிதாக சத்தமிட்டுக் கத்தலாம். இவற்றுக்கு மாற்றாக அடி இலாச்சிக்குள் வைக்கும் வகையில் நாம் அந்த நேரத்தில் எப்படி உணர்கிறோம் என்பதை எழுதலாம். அப்படி எழுதும் கடிதத்தை மறு நாள் படித்துச் சிரித்து விட்டு நாம் எப்படி செயற்படப் போகிறோம் என்று பட்சபாதமின்றி எமக்குள்ளே தீர்மானம் செய்து கொள்ளலாம். எமது கோபத்தைக் காட்டக் கூடாது என்பதல்ல. ஆனால் உடனே காட்டுவது வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கோபத்தை ஏற்படுத்தியவருடன் கதைத்து எமக்கு எது கோபமூட்டியது என்பதைத் தெளிவாகச் சொல்லி இதைத் தீர்ப்பதற்கான தீர்வு எது என்பதைக் கூறுவது பயன் தரும். நக்கலாக அல்லது புண்படுத்தும் முறையில் கூறுவது பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கவே உதவும். எனவே நேராகப் பேசவேண்டும். நாம் அவரது கருத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களது உணர்வுகளுக்கு நாம் பொறுப்பில்லை என்பதால் இதனை அச்சுறுத்தல் இல்லாத முறையில் நாம் கையாளலாம்.

கோபம் வராதவர் யாருளர் ? எனவே பாக்கர் கூறிய இந்த நான்கு முறைகளும் கோபத்தை நாம் ஆரோக்கியமான முறையில் கையாள்வதற்கு உதவும். இவ்வாறு ஆரோக்கியமான முறைகளில் கோபத்தைக் கையாள்வதென்பது எம்முடன் வேலை செய்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தவர், மற்றும் சமூகத்தில் உள்ள அனைவருடனும் எப்போதும் சுமுகமான ஆரோக்கியமான தொடர்பைப் பேணுவதற்கு உதவி செய்யும். சிலவேளைகளில் எம்முடன் பழகும் சிலர் எம்மைக் கோபமூட்டும் காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களைச் சரியான முறையில் புரிந்து கொள்வதன் மூலமும் எம்மை நாமே நெறிப்படுத்துவதன் மூலமும் இதற்குச் சுமுகமான தீர்வைக் காணலாம். கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பல வகுப்புகள் அதிகமான நாடுகளில் நடைபெறுகின்றன. கோபத்தைக் கையாளமுடியாதவர்கள் இவ்வாறான வகுப்புகளுக்குப் போவதன் மூலம் தம்மை நெறிப்படுத்திக் கொள்ளலாம். கோபம் குறைவதால் குடும்பத்தில் மட்டுமல்ல சமூகத்திலும் ஏன் நாட்டிலும் சுமுகமான நிலை உருவாகும். எனவே கோபம் கொள்வதைக் குறைப்போம் அல்லது மற்றவருக்கு பிரச்சினை ஏற்படுத்தாத வகையில் அதனை ஆரோக்கியமாகக் கையாள்வோம்.

—-

vamadevk@bigpond.net.au

Series Navigation

கலாநிதி சந்திரலேகா வாமதேவா

கலாநிதி சந்திரலேகா வாமதேவா