ஆட்டோகிராப்

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

அப்துல் கையூம்


ஆட்டோகிராப் என்றதுமே சேரனின் திரைப்படம்தான் ‘சட்’டென்று நமக்கு நினைவில் வரும். வாழ்க்கையில் நாம் சந்தித்த – நமக்கு பிடித்தமான – நபர்களிடம் ஆட்டோகிராப் வாங்கி வைத்திருப்போம். அதை பாதுகாத்து வைத்திருக்கும் சுகமே அலாதியானது.

புரோநோட்டு அல்லது காசோலையில் காணப்படும் கையெழுத்துகளுக்கு ஒரு விலையுண்டு. ஆனால் ஆட்டோகிராப் கையெழுத்துக்கள் விலைமதிப்பற்றது. அந்த கிறுக்கல்கள் ஆயிரமாயிரம் கதைகள் சொல்லும். கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைக்கும் சுறுக்கெழுத்து அவைகள்.

ஆங்கிலத்தில் ‘கிராஃப்’ என்றாலே தொடர்புகளை காட்டும் வரைபடம் என்று பொருள். 20 பக்கங்கள் கொண்ட ஐந்தொகை காட்டும் வரவுச்செலவு கணக்கை ஒரு சிறிய ‘கிராஃப்’ வரைபடம் முழு சாராம்சத்தையும் உணர்த்திவிடும்.

நட்பின் ஆழத்தை நாசுக்காய் உணர்த்தும் தற்கையெழுத்துச் சுவடிக்கு ‘ஆட்டோகிராப்’ என்ற அர்த்தமுள்ள பெயரிட்டார்களே, அவர்களுடைய முதுகில் ஒரு சபாஷ் போட வேண்டும். ஆழ்ந்த உட்கருத்தோடு சூட்டப்பட்ட பெயர் என்பதினால்.

அன்னம் விடு தூது, புறா விடு தூது என்று காப்பியங்களில் நாம் படித்திருப்போம். நட்புக்கு ஆட்டோகிராப் விடும் தூது அளவிட முடியாது. தூது சென்றடைந்தவனை அது இறக்கை கட்டி பறக்க வைக்கும். அத்தூது ஆழ்மனதையும் ஊடுருவும் சக்தி படைத்தது.

ஆட்டோகிராப் என்பது நட்பிலக்கணத்தின் மேற்கோள் புத்தகம்; கடந்துப் போன நினைவுகளின் கையடக்க கைப்பிரதி; ஆழமான உறவுகளின் ஆவண ஏடு; அர்த்தமுள்ள அகராதி; பள்ளிச் சரித்திரத்தின் குறிப்புதவி நூல் (Reference book); சங்கமத்தின் சங்கப் பலகை; உணர்வுகளின் ஓலைச்சுவடி; இளம் பிராயத்தின் இதிகாசம்; தோழமையின் தொல்காப்பியம். இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.

உலகத்திலேயே மிகச் சிறிய வசீகரமான கவிதை உண்டெனில் அது ஆட்டோகிராப் வசனமாகத்தான் இருக்க முடியும். சந்தம் இருக்கின்றதோ இல்லையோ பந்தம் இருக்கும். விடலைப் பருவத்தின் வியாக்யானத்தை அந்த ஓரிரு வரிகள் விவரித்து விடும். புரட்டிப் பார்க்கையில் மனதில் ஒரு சொல்லவொணா தாக்கத்தை ஏற்படுத்தி நம்மை ஒரு நிமிடம் நிலை குலையச் செய்துவிடும்.

சமய கிரகந்தங்களுக்கு எதிர்ப்பதம் என்னவென்று எனைக் கேட்டால் தயக்கமின்றி “ஆட்டோகிராப்” என்று பதிலுரைப்பேன். வேதங்கள் மனதை இலகுவாக்கும். அதற்குமாறாக ஆட்டோகிராப்போ மனதை கனக்க வைத்து விடும். ஒவ்வொரு புரட்டலின் போதும் ஆழ்மனதில் மூச்சுக்காற்றினூடே ஒரு விசும்பல் ஒலியும் சேர்ந்தெழும்.

டயரிக்கும் ஆட்டோகிராப்பிற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. முன்னது தேதி சொல்லும். பின்னது பழைய சேதி சொல்லும். டயரி உள்ளத்தை பதிவு செய்யும். ஆட்டோகிராப் உள்ளத்தின் ஆழத்தை பதிவு செய்யும். வருடம் கழிந்ததும் டயரியின் மதிப்பு போய்விடும். வருடங்கள் கூடிப்போக ஆட்டோகிராப்பின் மதிப்பும் கூடிக்கொண்டே போகும்.

ஆட்டோகிராப்பில் உயிர் எழுத்துண்டு. மெய்யெழுத்துமுண்டு. சுருங்கச் சொன்னால் உயிருக்குயிரான எழுத்துக்கள்; பசாங்கு இல்லாத மெய்யான எழுத்துக்கள். மொத்தத்தில் அவை உயிர்மெய் எழுத்துக்கள். ஆச்சரியம் என்னவெனில் அத்தனையும் மெல்லினங்கள்.

வல்லினத்தில் வசனம் எழுதும் நண்பர்களும் உண்டு. ஆனால் உள்ளர்த்தம் சுத்தமாக இருக்கும். ஒரு நண்பன் என் ஆட்டோகிராப்பில் “நீ என் செருப்புக்குச் சமம், விவரம் அடுத்த பக்கத்தில்” என்று எழுதியிருந்தான். ‘ஜோட்டால்’ அடித்ததுபோல் இருந்தது. கொதித்துப் போனேன். அடுத்த பக்கத்தை படித்ததும் அப்படியே நெகிழ்ந்துப் போனேன்.

“Friends are like shoes, some loose, some tight, some fit just right.
They help you walk through life. Thanks for being my size”

Colourful Memories என்று சொல்லுவார்கள். வண்ணமயமான எண்ணங்களை இந்த ஆட்டோகிராப் சுவடி தாங்குவதாலோ என்னவோ பல வண்ணங்களில் காகிதங்கள் கலந்திருக்கும். அந்த ‘கலர் பக்கங்கள்’ நம் கண்முன்னே விரித்துக் காட்டும் மெகா தொடரில் ‘பிளாக்-அண்ட்-ஒயிட்’ பிளாஷ்பாக் காட்சிகள் இடம்பெறும்.

ஆட்டோகிராப்பின் நீல நிற காகிதத்தில் என் நண்பனொருவன் இப்படி எழுதியிருந்தான் :

“This Page is Blue
My friendship is true”

சமீபத்தில் அறிவுமதியின் அற்புதமான கவிதையொன்றை இணையதளத்தில் படிக்க நேர்ந்தது. (நினவிலிருந்ததை வைத்து எழுதுகிறேன். வார்த்தைகள் சிலது மாறியிருக்கலாம்.)

“அவள்
ஆட்டோகிராப்பில்
கையெழுத்திட்டாள்.
அது
பிரிவதற்கான உடன்படிக்கை என்பதை
அறியாமலேயே”

எத்தனை ஆழமான வரிகள்? தேசத்தின் உறவுக்காக உடன்படிக்கை போடுவதுண்டு. நேசத்தின் பிரிவுக்காக போடப்படும் உடன்படிக்கை என்பது விந்தையன்றோ?

தஞ்சை சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்டில் நான் ஆரம்ப பள்ளிப் படிப்பை முடிக்கையில் பள்ளித் தோழி சுபா என் ஆட்டோகிராப்பில் எழுதிய வார்த்தைகள் இது :

When twilight drops her curtain
And pins it with a star,
Remember that you have a friend
Though she may wander far.

இரவு வேளைகளில் அந்த வானத்துக் கறுப்பு திரைச்சீலையில் குத்தப்பட்டிருக்கும் அந்த நட்சத்திர குண்டூசியை காணும்போதெல்லாம் சுபாவின் முகம் என் கண்ணில் பளிச்சிடும். அதே கண்சிமிட்டல். அதே குறுகுறு பார்வை.

பள்ளிவாழ்க்கையின் ‘கிளைமாக்ஸ்’ காட்சிகளில் அதிகமான நண்பர்கள் எழுதும் வாசகம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

“There are many Silver ships
There are many Golden ships
But the best ship is friendship”

எனது கல்லூரி வாழ்க்கையின் அடையாளமாக நான் பாதுகாத்து வைத்திருந்த ஆட்டோகிராப்பை புரட்டியபோது நண்பன் ரஃபி எழுதிய வாசகம் என்னைக் கவர்ந்திழுத்தது.

“உன் நினைவுகள்
என் மனதில்
போட்டோகிராப்பாய்
பதிந்திருக்க
நீயேன் வீணாக
ஆட்டோகிராப்பை
நீட்டுகிறாய்”

என்று எழுதியிருந்தான். அன்று அவனுள் பீறிட்டெழுந்த கற்பனை வேகம் இன்று அவனை நாகூர் ரூமி என்ற பெயரில் நாடறிந்த ஒரு எழுத்தாளனாக அடையாளம் காட்டி இருப்பதை நினைக்கையில் மனதுக்குள் ஒரு மத்தாப்பு.

ஒரு சில பழைய பாடல்கள் நம்மை கடந்த காலத்திற்கு ‘பிக்னிக்’ அழைத்துச் செல்லும். ஒரு சில சினிமா படங்கள் சொல்லாமல் கொள்ளாமலேயே நம்மை ‘தரதர’வென்று இழுத்துச் சென்று இளமைக் கால மணற்வெளியில் ‘சம்மர் கேம்ப்’பே போட்டுவிடும்.

“பசுமை நிறைந்த நினைவுகளே! பாடித் திரிந்த பறைவைகளே!” என்ற பாடல் வானொலியில் ஒலிக்கும்போதெல்லாம் என் பள்ளி வாழ்க்கைக்கு சர்ரென்று ஒரு ‘U-Turn’ எடுத்து அவசர அவசரமாக ஓடிச்சென்று என் வகுப்பிலுள்ள குட்டி மேஜை நாற்காலியில் அமர்ந்து அந்த கரும்பலகையில் காட்சிதரும் இளமைக்கால திரைப்படத்தில் மூழ்கி விடுவேன்.

40+ ஆசாமிகளுக்கு இந்தப் பாடல் என்றால் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் “முஸ்தபா முஸ்தபா” பாடலை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

பாலுமகேந்திராவின் “அழியாத கோலங்கள்” படத்தை பார்த்துவிட்டு தூக்கமிழந்து பலநாட்கள் தவித்திருக்கிறேன். ஒன்றாகவே இருந்து ஒன்றாகவே பழகிய சிறுவயது நண்பர்களில் ஒருவன் – அந்த குண்டுப்பையன் – இறந்து விடுவான். அதை தொடர்புபடுத்தி உயிரோடு இருந்த என் நண்பன் உண்மையாகவே இறந்து விட்டால் நாமும் இதுபோல அழுது புரள்வோமோ என்று கற்பனைச் செய்து தலையணையில் முகம் புதைத்து குலுங்க குலுங்க அழுதிருக்கிறேன். இப்பொழுது நினைத்தால் படுஅபத்தமாகப் படுகிறது. அன்று அந்த சோக நினைவுகள் ஒரு சுகத்தை அளித்ததென்னவோ உண்மை.

சமீபத்தில் பார்த்த “பள்ளிக்கூடம்” திரைப்படமும் அதேபோன்று ஒரு தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது. தங்கர்பச்சனின் கதாபாத்திரத்திற்கு இணையான ஒரு வெகுளியான குணச்சித்திர பாத்திரத்தை ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் சந்தித்திருக்கக்கூடும்.

இரவு வேளையில் படுக்கையில் மல்லாந்து படுத்துக் கொண்டு மென்மையான, காலத்தால் அழியாத; இன்னிசை மழையில் இலயிக்கையில் மனதை யாரோ மயிலிறகால் இதமாய் வருடிக் கொடுப்பதைப் போன்ற ஒரு சுகமான உணர்வு ஏற்படும்.

அன்றிரவு பஹ்ரைன் வானொலியில், வாய்ஸ் எஃப். எம். 104.2 அலைவரிசையில், ஜக்ஜித் சிங்கின் ஒரு ‘ஜபர்தஸ்த்’ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. “ஓ காகஸ் கி கஷ்தி. ஓ பாரிஷ் கா பாணி” என்று குழைந்து குழைந்து பாடி மனுஷர் என் இதயத்தை இலகுவாய் பிசைந்துக் கொண்டிருந்தார். இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் என் உடம்புக்குள் ஏதோ ஒரு ரசாயன மாற்றம் ஏற்படும். இளமைக்காலத்தில் நான் சுவைத்த அந்த காக்காய்க்கடி கமர்கட்டின் வாசத்தை என் நாசி மானசீகமாய் உணரும். “ஆயிரம் தாமரை மொட்டுக்களே! வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்!” என்று பாடிய வண்ணம் என்னைச் சுற்றி வெள்ளை உடை தரித்த தேவதைகள் ஒன்று கூடி ‘டிஸ்கோ டான்டியா’ ஆடுவார்கள்.

அந்த அற்புதமான கஜலின் அர்த்தங்களை அருந்தமிழில் மொழிபெயர்த்து அசைபோட்டுப் பார்த்தேன். கடைவாயில் கடலை மிட்டாயாய் இனித்தது.

“என் செல்வத்தை பிடுங்கிக்கொள்
நான் சம்பாதித்த புகழ் அத்தனையும் பறித்துக் கொள்
என் வாலிபத்தை வேண்டுமானலும் எடுத்துக் கொள்
ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம்
என் குழந்தை பருவத்தை மாத்திரம் திருப்பித் தந்து விடு
மறக்க முடியாத அந்த மழைத் தூறல்
ஆஹா.. அந்த காகிதக் கப்பல்.”

ஜக்ஜித்சிங்கின் அந்த கொஞ்சல் மொழி என்னை என்னவோ செய்தது. Nostalgic ஜுரத்தில் ஜன்னி கண்டு குளிர்க்காய்ச்சல் வந்தது போல் ஒரு பிரக்ஞை. அந்த பால்ய பருவம் திரும்பவும் வருமா? கவலை என்றால் ‘கிலோ என்ன விலை?’ என்று கேட்கின்ற வயதல்லவா அது? கரைந்து போன காலம் திரும்ப வராததுதான். ஆனால் மனமென்ற சிறையில் மறுபடியும் பூட்டி வைத்து, அந்த மலரும் நினைவுகளை அசைபோட்டு அழகுற ரசிக்க முடியுமே?. அந்த பழைய ஞாபகங்களில் அப்படியே மூழ்கிட முடியும். இயந்திர வாழ்க்கையை கணநேரமாவது மறக்க முடியும். நிகழ்காலத்து பிரச்சினைகளை சற்று நேரம் மூட்டைகட்டி வைக்க உதவும் காயகல்பம் அல்லவோ அது?

கரைந்துப் போன அந்த ‘காலச்சுவடு’கள் கவண் எறியாய் (Catapult) ஏன் என்னைத் தாக்குகிறது? பம்பரமாய் ஏன் எனக்குள் சுழல்கிறது? எனக்குள்ளே இந்த கேள்வியை வேள்வி நடத்தி பார்த்தேன். அவ்வரிகள் ஆன்மாவிலிருந்து பீறிட்டெழும் அனுபவம் கலந்த வரிகள் என்பதினாலா? இல்லை; இதயத்தில் புதைந்துக் கிடக்கும் என் இளம் பிராயத்து நினைவுகளை ஏர்க்கலப்பையாய்க் கிளறுவதாலா? சரியாக சொல்லத் தெரியவில்லை.

சிறுவனாக இருக்கையில், புதிதாக வாங்கிய என் பம்பரத்தை தரையில் வட்டத்தின் நடுவில் வைத்து நண்பர்கள் அவரவர்கள் பம்பரத்தை சுழல வைத்து ‘அபிட்’ என்று ஆணியால் ஓங்கி குத்துகையில் என் இதயமே வெடிப்பது போல் இருக்கும்.

நியு காலேஜில் படிக்கையில் ராகிங்கின் போது ஒருவன் “நீச்சல் தெரியுமா?” என்று கேட்க, “தெரியும்” என்று நான் சொல்ல “ எங்கே தரையில் நீச்சல் அடித்து காட்டு” என்று அவன் சொல்ல, “இல்லை எனக்கு தண்ணீரில்தான் அடிக்கத்தெரியும்” என்று நான் சொல்ல, ஒரு டம்ளர் தண்ணீரை தரையில் ஊற்றி “இப்போது அடி பார்ப்போம்” என்று அவன் கூற, அந்த அனுபவம் எனக்கு இதயம் தாங்கும் இதயத்தை – ஒரு மனோபக்குவத்தை அளித்தது.

அண்மையில் நான் கேள்வியுற்ற ஒரு சேதி என் மனதில் பேரிடியாய் தாக்கியது. பலகாலம் என்னோடு ஒன்றாகப் பழகிய என் வகுப்புத் தோழன் ரஸ்மாரா. கம்பத்தைச் சேர்ந்தவன். இவன் அகால மரணம் எய்தி விட்டான் என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. உண்மையென்று அறிந்ததும் என்னையறியாமல் தேம்பித் தேம்பி அழுதேன்.

அன்று எதிர்பாராத விதமாக ஆட்டோகிராப் ஒன்று என் கண்ணில் தென்பட்டது. அதில் அவன் எழுதியிருந்த வார்த்தைகள் வாழ்க்கையின் அர்த்தங்களை எனக்கு கற்பித்தது.

“உறவு என்றொரு சொல்லிருந்தால்
பிரிவு என்றொரு பொருளிருக்கும்”

கண்ணதாசனின் வரிகளை எழுதியிருந்தான்.

“ஏ இறைவா!” அவன் ‘பிரிவு’ என்று குறிப்பிட்டது இந்த பிரிவைத்தானா? என்னை அறியாமலே கண்ணீர்த் துளிகள் உருண்டோடின.

அருகே நின்ற என் ஆறு வயது மகள் மோனா கேட்டாள் “ஏன் டாடி அழுவுறீங்க?” . அவளது பிஞ்சு விரல்களை என் கன்னத்தை தடவிக் கொண்டிருந்தது.

“ டாடி இந்த பழைய புஸ்தகத்தே மேலேந்து எடுத்தேனா? அதான் கண்ணுலே தூசி விழுந்துடுச்சு. நீ போய் படிடா” என்று சமாளித்தேன்.


vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்