ஆசி. கந்தராஜாவின் உயரப் பறக்கும் காகங்கள் ஒரு பார்வை

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

சந்திரவதனா


புலம் பெயர்வது எத்துணை அவலமானது என்பதை சரித்திரங்களில் படித்த போதோ அல்லது எமது முந்தையோர் கதையாகச் சொன்ன போதோ நாம் சரியாகப் புரிந்தோமா…!

இல்லை. ரசித்தோம், சிரித்தோம், அப்படியா…! என்று வியந்தோம். எம்மிடமும் அது வந்த போதுதான் அதன் வலி உணர்ந்தோம். புரண்டோம். அழுது புலம்பினோம். அதனால்தானோ என்னவோ புலம் பெயர் படைப்புக்களை புலம்பல் என்று சிலர் நகைக்கிறார்கள். அவர்கள் இன்னும் அதன் வலியுணராதோர். தலையிடியும் காய்ச்சலும் தமக்கு வந்தால்தான் தெரியும். எமக்கு வந்து விட்டது. அவர்க்கு வர வேண்டாம். அவர்கள் எம்வலி உணராவிட்டாலும் எமக்குக் கவலையில்லை. எமது படைப்புகள் எமது துயரத்தின் வடிகால்கள்.

இலக்கியமாக வரவில்லையா.. ? சிறுகதை என்ற சிறப்புக்குள் அடங்கவில்லையா.. ? கவிதையாக இனிக்க வில்லையா ? கட்டுரைக்குரிய கட்டுக்கோப்பு இல்லையா.. ? பரவாயில்லை. முடிந்தால் அவைகளுக்குள் அடங்க முயற்சிக்கிறோம். முடியாதவர்களைத் தொந்தரவு பண்ணாதீர்கள். புலம்பெயர் படைப்புக்கள் அத்தனைக்குமே புலம்பல் என்ற சாயம் பூசி வைக்காதீர்கள். அந்தக் காலப் படைப்புக்களிலும் சரி, தம் நிலம் வாழ்வோரின் இந்தக் காலப் படைப்புக்களிலும் சரி எங்கும் தர ரீதியான பல படைப்புக்கள் இருக்கின்றன. அது போலத்தான் புலம் பெயர் படைப்புக்களும். போர்க்களத்தில் நிற்கும் போது இரத்தம் சிந்தாதே என்றோ, மரணத்தின் முன் நிற்கும் போது கண்ணீர் சிந்தாதே என்றோ சொல்ல முடியாது. காலத்துக்கேற்ப களத்துக்கேற்ப படைப்பிலக்கியங்களின் தன்மைகளும் மாறும் என்ற யதார்த்தை உணர்ந்து கொள்ளுங்கள்.
துயரங்களைப் பேசவே மனிதர்கள் இல்லாது, பெரும் தனிமைத் தீயில் மூழ்கிக் கிடந்த புலம் பெயர்ந்தோர் மனம் பற்றி இன்று பலருக்குப் புரியாமலே கூடப் போகலாம். அல்லது புலப்பெயர்வின் தாற்பரியம் புரிய நாளாகலாம். அதற்காக இவைகள் பதியப் படாமல் போகக் கூடாது. மூல வேர்கள் ஊரில் ஊன்றி இருக்க, போரினால் பிடுங்கப் பட்டு இன்னொரு மண்ணில் தம்மை தாமே பதிய வைக்கும் போது அந்த மண்ணோடு ஒன்ற முடியாது எத்தனை தரம் வாடி வாடிச் சாய்ந்திருப்பார்கள். மீண்டும் மீண்டும் நம்பிக்கை நீர் ஊற்றி இன்று ஓரளவுக்காவது எழுந்து நிற்கிறார்கள்.

தமது வாய்க்கும், வயிற்றுக்கும் மட்டுமாக அல்லாது ஊரில் வாழும் உறவுகளுக்காயும் உழைப்பதற்கென வெளியில் சென்றாலும், தமது வாழ்விடங்களின் கலாச்சாரங்களோடு அரையும் குறையுமாயாவது இணைந்து கொண்டாலும், திக்கித் திணறியாவது வேற்று மொழியைப் பேசிக் கொண்டாலும் தமக்குள்ளே தாம் தனியே வாழ்ந்து கொண்டிருக்கின்ற…. அவர்கள் பேனாக்கள் எல்லாம் முடிந்தவரை பேசட்டும்.

இந்த எழுத்துக்கள் தனித்துவமானவை. புலம் பெயர்ந்த பின்னும் புலம் பெயர மறுக்கும் நினைவுகளோடு எழுதப் படுபவை.

தூர இருந்த படியே தாம் வாழ்ந்த காலத்து நினைவுகளோடு தாய் நிலத்தை நோக்குபவர்களும், இன்று போர் சற்று ஓய்ந்திருப்பதால் ஓடிச்சென்று தாய் நிலத்தைச் தரிசித்து வருபவர்களும் தரும் இப் படைப்புக்கள் முன்னைய எங்கள் இலக்கியத்திலிருந்து மாறு பட்டவைதான். இவைகளின் பார்வைகளும் கோணங்களும் வேறு கோணத்தில் அமைந்தவைதான். ஆனால் இன்றைய காலத்தின் பதிவுகளிவை.

இப்படைப்புக்கள் தருவது வெறுமே தாய்நிலம் பற்றிய செய்திகள் மட்டுமல்ல. அவரவர் தற்போது வாழும் புலம் பற்றிய செய்திகளும் கலந்தவை இவை. இதில் சிலருக்கு மட்டும் சிறப்பாக, ஒரு இடம் என்றில்லாமல் பல இடங்களுக்கும் சென்று அவை பற்றியும் தரும் வாய்ப்புக் கிடைக்கிறது.

இந்த வரிசையில் ஆசி.கந்தராஜாவின் படைப்புக்களும் பல் கலாச்சாரங்களைத் தனக்குள் கொண்டு உலகளாவிய நோக்கில் விரிந்திருக்கிறது. அவர் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராக இருப்பதால் அவருக்குப் பல்வேறு நாட்டுக் கலாசாரங்களையும் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவர் அவைகளை வெறுமனே விருப்போடு மட்டும் நோக்காது, விசனத்தோடும் நோக்கியிருக்கிறார். நோக்கியவற்றையும், நோக்கலில் அவருள் ஏற்பட்ட பாதிப்பையும் அவர் தன்நோக்கில் விவரிக்கவும் தவறவில்லை. அதனால் வாசகர்களுக்கு சில வேற்று நாட்டுக் கலாசாரங்களை அறிய வாய்ப்பாகியிருக்கிறது.

உயரப்பறக்கும் காகங்கள் இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. இவரது முதற் சிறுகதைத் தொகுப்பான பாவனை பேசலன்றி 2000 இல் வெளிவந்த போது அந்த வருடத்துக்கான சிறுகதைத் தொகுப்புக்களில், சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சிறீலங்கா சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

மார்கழி 2003 இல் பதிக்கப் பட்டு, 2004 இல் வெளியிடப்பட்ட இவ் உயரப்பறக்கும் காகங்கள் சிறுகதைத் தொகுப்பில் ஆபிரிக்க, அவுஸ்திரேலிய, யப்பானிய, வங்காளதேச… தாயகக்… களங்களை மையமாகக் கொண்ட பத்துச் சிறுகதைகள் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப் பட்டுள்ளன. இதில் தாயகத்தை மையமாகக் கொண்டது ஒரே ஒரு சிறுகதையாயினும் மற்றைய கதைகளிலும் இவரது நோக்கு தாயக நிலைக்களத்தை ஒப்பீடாகக் கொண்டே எழுதப் பட்டுள்ளது. மாறுபட்ட கலாச்சாரக் கோலங்களைக் காணும் போது இவர் மனதில் தோன்றும் வியப்பும் விசனமும் கதைகளில் வெளிப் படையாகத் தோன்றா விடினும் ஆங்காங்கு ஒட்டியிருந்து எட்டிப் பார்க்கின்றன. ஆனாலும் சரி பிழைகளைத் தானே தீர்மானித்துக் கதைகளுக்குள் புகுத்தாமல் ஒரு பார்வையாளனாக அவர் அதை எழுதியிருப்பது கதைகளுக்குத் தனிச் சிறப்பைக் கொடுக்கின்றது.

கைதடியைச் சேர்ந்த இவர் புலம் பெயர்ந்து பல வருடங்களின் பின் தன் தாய்நிலத்துக்குப் போய் புலம் பெயராத தனது பால்ய காலத்து நினைவுகளோடு சங்கமித்து நிற்பதுதான் இத் தொகுதியில் இடம் பெற்ற முதற் கதையான தவக்கோலங்கள். இவரது அனேகமான கதைகள் போலவே இக் கதையும் தான் சார்ந்து மட்டுமல்லாது, தன் இடம் சார்ந்தும் பேசுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் உள் நாட்டில் தயாரிக்கப் படும் பொருட்களுக்கு விதிக்கப் பட்ட வரி(தீர்வை) ஆயத்தீர்வை என அழைக்கப் பட்டதால் ஏற்பட்ட காரணப் பெயரான ஆயத்தடி பற்றியும் அந்தக் கால இளைஞரின் வாலிபத் துள்ளல்கள் பற்றியும் சுவாரஸ்யமாகக் கூறுகிறது. ஊரில் இருந்த போது அறியாத சில விடயங்களைக் கூட இக்கதை மூலம் அறிய முடிந்தது. இவரது கதைகளில் வரும் அந்தலை.. போன்ற சில சொற்கள் இவரது கதைகளின் மூலமே எனக்கு அறிமுகமாகிய புதிய சொற்கள்.

இந்தத் தவக்கோலங்கள் கதையைப் படித்து முடித்த பின்னர், எமது கலாசாரம் பண்பாடுகளுக்கு உள்ளே, பெரிய மனிசப் போர்வை போர்த்தி ஒளிந்திருக்கும் சின்னத்தனமான மனிதர்களின் செயற் பாடுகளில் நசுங்கிப் போகும் பல பெண்களின் வாழ்வும் அதற்கு உதாரணமான பூமணி ரீச்சரின் வாழ்வும்தான் மனதில் படிந்து நிற்கிறது.

பூமணி ரீச்சர் தனது வாழ்க்கையில் சில வசந்தங்களைத் தொலைத்திருந்தாலும், திருமணம் என்ற பந்தம் அவ வரையில் இல்லாது போயிருந்தாலும், அநாதரவாகி விட்ட குழந்தைகளுக்காக அவ நடாத்தும் ஆச்சிரமம் அக் குழந்தைகளின் வசந்த காலத்துக்கான அத்திவாரமாக மட்டுமல்லாது, தோற்றுப் போய் விட்டதாகக் கருதும் பெண்களுக்கு தோற்பதற்கெதுவுமில்லை. நல்லன செய்து இன்னொன்றில் வெற்றியைத் தேடி அமைதியைக் காணலாம் என்ற நம்பிக்கையை ஊட்டுவதற்கான அத்திவாரமாயும் அமைந்துள்ளது.

எமது சமூகக் கோட்பாட்டுச் சூறாவளியில் சிக்கிய போதும் மனம் தளர்ந்து வீழ்ந்து போகாமல், தன்னை அதிலிருந்து விடுவித்து போற்றத்தக்க ஒரு தாயாகச் சேவை புரியும் நாணயமிக்க பூமணி ரீச்சரின் வாழ்வை ஒரு தனிக்கதையாகவே எழுதியிருக்கலாம். கதையும் நினைவுக்கோலம் என்ற தன்மையிலிருந்து விடுபட்டு நறுக்கென்ற பாணியில் இன்னும் நன்றாகவும் உணர்வு பூர்வமாகவும் அமைந்திருக்கும்.

ஆபிரிக்க தளத்தைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட துர்க்கா தாண்டவம் கதையில் சீதனம் என்ற அவலம் அங்கு ஆண்கள் பக்கமாக இருப்பதையும், ஆபிரிக்கக் கலாசாரம் தாயின் தந்தையான பாட்டனே, தந்தையாக இருக்கும் கலாச்சாரச் சீர்கேட்டுக்கு உறுதுணையாக இருப்பதையும் காண முடிகிறது.

சலசலத்து ஓடும் நைல்நதியில் கதை ஆரம்பிக்கும் போது நதி என்ற வார்த்தையிலேயே மனதில் தோன்றும் இதமும் சிலிர்ப்பும், கதையின் உள்ளடக்கத்தில் தகித்துப் போகிறது. வொசாங்கோவின் தந்தையும், தாய் வழிப் பாட்டனும் ஒருவரே என்னும் போது வொசாங்கோவின் தாய் எலிசபெத்தின் வாழ்வும், அதனால் அவள் மனதில் ஏற்பட்டிருக்கும் உளவியல் தாக்கம் பற்றிய சிந்தனையும் வாசகர் மனதில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வளவுதான் என்று நிமிர முடியாமல், பல மனைவியருக்குக் கணவனாக இருக்கும் கிழவனின் அடங்காப்பிடாரி ஆசை இன்னும் தொடர்கிறது. வொசாங்கோவின் காதலியையும் தனது மனைவியாக்க வேண்டுமென்ற பேராசை அவனுக்கு. கிழவன் பணக்காரனாக இருப்பது கிழவனின் பலம். படிப்புகளின் மத்தியில் எப்படித்தான் பகுதி நேர வேலை செய்தாலும் வொசாங்கோவால் தந்தையளவுக்குப் பணம் சேர்க்க முடியவில்லை. சீதனம் ஆண்கள் கொடுக்க வேண்டுமென்பதால் வொசாங்கோவை விடக் கூடிய பணம் கொடுத்து, வொசாங்கோவின் காதலியை மசாய் இனத்தைச் சேர்ந்த அவளது குடிகாரத் தந்தையிடம் வாங்க முயல்கிறான் கிழவன்.

மசாய் இன வழக்கப் படி திறந்த மார்புடன் பெண்கள் நடனமாட அவர்கள் முன்னிலையில் ஆடு வெட்டப்பட்டு அந்த ஆட்டின் குருதியால் மணமகளின் கைகள் நனைக்கப்பட்டு உரிய பணத்தை மணமகன் மணமகளின் தந்தையிடம் கொடுக்க மணமகள் தாரை வார்க்கப் படுவாள். வொசாங்கோ ஊரில் இல்லாத ஒரு நேரத்தில் அவன் தந்தையும் பாட்டனுமான கிழவன் வொசாங்கோவின் காதலியின் தந்தைக்குப் பணம் கொடுத்து இப் பரிசம் போடும் விழாவை நடாத்துகிறார். இவ்வேளையில் மனம் பொறுக்காத வொசாங்கோவின் தாயான.. கிழவனின் மகளும் மனைவியுமான எலிசபெத் ஆடு வெட்டும் கத்தியால் தந்தையை வெட்டுவதாகவே கதை முடிகிறது.

மூடத்தனமான அவர்களது கலாச்சாரம் முடிவடையாமல் இந்த 21ம் நூற்றாண்டிலும் தொடர்கிறதே என்ற வேதனையின் நடுவே, கதையின் முடிவு நியத்திலும் கதாசிரியர் கூறியது போலவே நடப்பதற்கான சாத்தியங்கள் இருந்தாலும், எலிசபெத் தந்தையான கிழவனை வெட்டுவது சற்றுச் சினிமாத் தனமாகவே தெரிகிறது. ஆனாலும் கதையை வாசித்த பின் ஆபிரிக்க கலாசாரம் மனதுள் ஒரு ஆழ்ந்த வெறுப்பு நிறைந்த விசனத்தைத் தோற்றுவிக்கிறது.

துர்க்கா தாண்டவம் தவிர இத்தொகுப்பில் இடம் பெற்ற வெள்ளிக் கிழமை விரதம், பாலன் பிறக்கிறான் ஆகிய இரு கதைகளும் ஆபிரிக்கத் தளத்தையும் அதன் கலாச்சாரங்களையும் மையமாகக் கொண்டே எழுதப் பட்டுள்ளன. இவைகளும் மனதைப் பாதிக்கக் கூடிய உள்ளடக்கத்தை தமக்குள் கொண்டவையாகவே அமைந்துள்ளன.

வெள்ளிக்கிழமை விரதம் சிறுகதையின் தலைப்பையும் கதை தொடங்கும் பாணியையும் பார்த்தால் பல்கலைக்கழகப் பேராசிரியர் வீரசிங்கம் ஊரில் கடைப்பிடித்த வெள்ளிக்கிழமை விரதத்தை ஆபிரிக்காவில் தொடர முடியாது போனதுதான் பிரச்சனை என்பது போலத் தோன்றும். ஆனால் உள்ளே உள்ள விடயமோ வேறு.

சீதனம் கொடுத்தால்தான் பெண் கொடுப்பார்கள் என்ற அவலத்தில், காதலியை மனைவியாக்க இளைஞர்கள் இரவு விடுதிகளிலும், உணவு விடுதிகளிலும் ஆடிப் பாடி உணவு பரிமாறி வேலை செய்ய, காதலிகள் தாம் விரும்பிய காதலனை கணவனாக்க, காதலனால் தனியே சேர்த்து முடிக்க முடியாத தந்தை சீதனமாகக் கேட்கும் பெரிய தொகைப் பணத்தைச் சேர்ப்பதற்காக இரவு விடுதிகளிலும், பார்களிலும் தமது உடலை விற்கிறார்கள். இந்தப் பணச் சேர்ப்பு வேலைக்காக அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் நாள் வெள்ளிக்கிழமை என்பதால், பேராசிரியர் வீரசிங்கத்தின் மனதில், தான் படிப்பிக்கும் விதம் சரியில்லையோ என்ற ஐயத்தை ஏற்படுத்துமளவுக்கு வெள்ளி மதியத்தில் பாடசாலைக்குப் பிள்ளைகளால் சமூகமளிக்க முடிவதில்லை.

வெள்ளிக்கிழமை தனது வகுப்பறை வெறிச்சோடிக் கிடப்பதற்கான காரணத்தை அறிந்து, அதை நேரில் காண விளைந்த போது, பணக்கார ஆபிரிக்கர்களை வளைத்துப் போட்டு பணம் சம்பாதிக்கும் குளோரியாவின் விலைமாதுச் சாகசம் பேராசிரியர் வீரசிங்கத்திடம் ஒரு வித அசூசையை ஏற்படுத்துகிறது. ஆனால் காசு கொடுத்து வாங்கக் கூடிய ஒரு பணக்காரக் கிழவனுக்கு பத்தாவதோ அன்றிப் பதினோராவதோ மனைவியாக இருப்பதை விட விபச்சாரம் செய்தாவது தனது காதலனுக்கு மனைவியாகலாம் என்பது குளொரியாவின் கருத்து. குளோரியா விற்பது உடலைத்தான் அன்றி அவள் மனதை அல்ல என்பது காதலன் மொறிஸின் தெளிந்த பார்வை. காதலை இழப்பதை விட இந்த நடை முறை தேவலை என்பது ஆபிரிக்க இளைய சமூகத்தின் கருத்து.

பெண்களின் உறுப்பு ஆண்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பது போல ஒரு காலத்தில் அவர்களின் உள் உறுப்பை வெட்டி வெட்டி, பின் மூடி மூடித் தைத்துக் கொடுமைப் படுத்திய அந்த ஆபிரிக்க கலாசாரத்துள் இப்படியுமொரு மாற்றம் ஏற்பட்டிருப்பது ஆச்சரியம்தான்.

இதே மாற்றங்களுக்கு நடுவில்தான் ஆபிரிக்காவின் இன்னொரு சமூகத்திடம் இரட்டைக் குழந்தை பிறப்பது அபசகுனம் என்ற அறியாமை நிறைந்த மூடக் கொள்கை இன்னும் இருக்கிறது. அது பற்றிக் கூறும் பாலன் பிறக்கிறான் கதையில் ?கங்கிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள் இந்தக் கலாச்சார வழக்குள் சிக்குண்டு ?கங்கியின் உறவினர்களால் கொல்லப் படாதிருக்க மருத்துவம் பார்க்க வந்த சிலுவை அணிந்த எலிசபெத் ஒரு குழந்தையைத் தனது குழந்தையாகப் பாவனை பண்ணுகிறாள்.

இந்த மாற்றங்கள், ஆபிரிக்கக் கலாசாரங்களோடு பின்னிப் பிணைந்திருக்கின்ற மூடத்தனங்களில் கொஞ்சங் கொஞ்சமாகவாவது மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை மனதில் தோற்றுவிக்கின்றன.

தேன் சுவைக்காத் தேனீக்கள் யப்பானியப் புலத்தை மையமாகக் கொண்ட கதை. புலமைப்பரிசில் பெற்று, பின் பட்டப் படிப்புக்கென யப்பானுக்குச் செல்லும் நளாயினியின் யப்பான் மக்களோடான வாழ்வும், பார்வையும் உலகத்திலேயே மிகச் சுறுசுறுப்பானவர்களும், தொழில் நுட்பங்களிலும் மிகவும் சிறந்தவர்களும் என்பதாக எமது மூளையில் ஆழப் பதிக்கப் பட்ட யப்பானியர்களின் வாழ்வின் இன்னொரு கோணத்தை எமக்குக் காட்டுகிறது.

நுண்ணிய மின்சாரக் கல்குலேற்றர்களைக் கண்டு பிடித்த யப்பானின் ஆரம்பப் பாடசாலைகளில் இன்னும் sorban என்னும் மணிகள் கோர்க்கப் பட்ட மரத்தாலான மணிச்சட்டம்தான் கணக்குச் செய்யப் பாவிக்கப் படுகிறது என்பது நளாயினிக்கு மாத்திரமல்ல, வாசகருக்கும் ஆச்சரியத்தைத் தரக் கூடிய சங்கதிதான்.

கடுமையாகப் படித்தும் போட்டிப் பரீட்சையில் சித்தியெய்தவில்லை என்பதற்காக தூக்கில் தொங்கி தன்னை மாய்த்துக் கொண்ட பன்னிரண்டு வயதுச் சிறுமி கெய்கோவின் தற்கொலையும், அதை அங்கு அவர்கள் ஏற்றுக் கொண்ட விதமும், இறந்தோர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளும் சாதாரணமும் யப்பானியக் கலாசாரத்தின் இன்னொரு கோணம். அவர்கள் கண்டு பிடிக்கும் அதிநவீன விடயங்களுக்கு மத்தியில் இத் தற்கொலைச் சமாச்சாரம் ஒரு சவாலோ…!

ஆசிரியர் இந்தக் கதையில் இன்னும் சற்றுக் கவனம் செலுத்தியிருந்தால் கதையை இன்னும் உணர்வு பூர்வமானதாக்கியிருக்கலாம். கதையை வாசித்து முடித்த பின் இக்கதையுள் புதையுண்டிருக்கும் துயரம் சரியான முறையில் வெளிப் படுத்தப் படவில்லையோ என்றொரு எண்ணம் தோன்றுகிறது.

அந்நியமாகுதல் வங்காளதேசத்தை தளமாகக் கொண்டு எழுதப் பட்ட கதையாயினும் உட்பொருள் சாதாரணமாகவே உள்ள மனிதர்களின் இயல்பான தன்மையை எடுத்துக் காட்டுவதாய் உள்ளது. அதிகார பலமுள்ள சின்னத்தனமான மனிதர்களின் அதிகார புத்தியில், கீழ் மட்டத்திலுள்ள அதிகார பலமற்றோர் அல்லலுறுவது எங்கும் நடக்கும் விடயங்களே!.

இக்கதையை ஆசிரியர் தானே கதை சொல்லியாக நின்று தன்னிலையில் கொண்டு செல்கிறார். வங்காள தேச ஆராய்சி நிலையமொன்றுக்கு பொஸ்னியாவைச் சேர்ந்த மல்கமை உதவியாளனாக இவர் அழைத்துச் செல்கிறார். அவன் ஒரு உதவியாளனான போதும் அவனது வெள்ளைத்தோலுக்கு கொடுக்கப் படும் பிரத்தியேக மதிப்பு அவ் ஆராய்ச்சி நிலைய மனேஜரின் சின்னத் தனத்தை இவருக்கு உணர்த்துகிறது. அதே நேரம் அங்கு உணவு கொண்டு வரும் பணியாள் யூசுப்பின் பண்பு இவரை மட்டுமல்ல மல்கமையும் கவர்ந்து கொள்கிறது. மனேயரிடம் அதிகார பலம் இருப்பதால் அங்கு அல்லலுறுபவன் பணியாள் யூசுப்பே. அவன் மல்கமுடன் சரளமாகப் பழகுவதையோ அல்லது அவனது மகன் தனது மகனை விட பள்ளியில் சிறப்பாக இருப்பதையோ அந்த மனேஜரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் யூசுப்பின் மகனின் உயர்கல்விக்கான பணத்தைக் கூடக் கட்ட முடியாதவாறு செய்து விடுகிறார் மனேஜர். இச் சம்பவம் கதை சொல்லியின் மனதைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்குவதைக் கதை உணர்த்துகிறது

கதையை வாசித்து முடித்த பின் அதிகாரத்தின் வெறியின் முன், கல்வி உலகத்தை எட்ட முடியாது போன ஏழை யூசுப்பின் மகனும், தொடரப் போகும் அவனது வாழ்வும் வாசிப்போர் மனதிலும் ஒரு சோகமான கேள்விக் குறியாகிறது.

இத் தொகுப்பில் இடம் பெற்ற மிகுதி நான்கு சிறுகதைகளும் ஆசி.கந்தராஜாவின் தற்போதைய வாழ்விடமாகிய அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு படைக்கப் பட்டவை.

இவைகளில் கோபுரதரிசனம் அவுஸ்திரேலியாவை வாழ்விடமாகக் கொண்ட அவுஸ்திரேலியத் தமிழரின் மேம்போக்குச் செயற்பாடுகளுக்கு ஈடு கொடுக்கும் கோயில், குளம், கலாச்சாரம், தமிழ் என்பவை பற்றி நாசூக்காகச் சொன்னாலும், அடிப்படையில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப் பட்ட அநீதியையே சுட்டுகிறது.

அவுஸ்திரேலிய மாப்பிள்ளை என்பதற்காக நாற்பது வயது தாண்டியவருக்கு இருபது வயது மட்டுமே நிறைந்த பார்வதியை இரண்டாம் தாரமாகக் கட்டி வைத்த பார்வதியின் யாழ்ப்பாணப் பெற்றோர், தனது முந்தைய தார மனைவியின் குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருக்க வேண்டுமென்பதற்காக பார்வதிக்கென ஒரு குழந்தை வேண்டுமென்பதை சிந்திக்கத் தவறிய பார்வதியின் கணவர் டொக்டர் நடராஜசிவம், தமது தந்தை மேம்போக்கு வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தினார் என்பதை உணராது தமது வாழ்க்கைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த பார்வதியின் தியாகத்தை உணரத் தெரியாத நடராஜசிவத்தின் பிள்ளைகள்… என்று எல்லோருமே குற்றவாளிகளாகிறார்கள். தண்டனை என்னவோ… தன் நிலை பற்றி சுயமாகச் சிந்தித்து தனக்கான முடிவுகளை தானே எடுக்கும் தைரியம் இல்லாது போன பார்வதிக்கு மட்டுந்தான்.

இக் கதை பெண்கள் மனதில் மட்டுமல்ல, பெண்பிள்ளைகளை இன்னொருவன் தலையில் கட்டி விட்டால் போதுமென்றும் நினைக்கும் பெற்றோருக்கும் விழிப்பை ஏற்படுத்தும் நல்லதொரு படிப்பினையான கதை.

ஒட்டுக்கன்றுகளின் காலம் அவுஸ்திரேலியாவைத் தன் களமாகக் கொண்டாலும், அனேகமான புலம் பெயர்ந்தோரின் பிரச்சனைகளைக் காட்டும் கதையாகிறது. இக்கதையில் ஆசிரியரின் சிந்தனை ஓட்டம் சற்று மாறு பட்டதாகவே அமைந்துள்ளது.

பொதுவாக எல்லோரும் தமது கதைகளிலும் சரி, கட்டுரைகளிலும் சரி தாம் வாழும் நாட்டையும் அவர்தம் கலாச்சாரத்தையும் திட்டிக் கொட்டிக் கொண்டு இருப்பார்கள். ஊரிலே சிகரெட் புகைத்தவர்களும், மது அருந்தியவர்களும், காதலித்தவர்களும் இந்த மூன்றும் தமது பிள்ளைகளிடம் வந்து விட்டாலோ, புலம் பெயர்ந்ததால் வெள்ளையர்களுடன் சேர்ந்து தமது பிள்ளைகள் கெட்டுப் போய் விட்டார்கள என்று புலம்புவார்கள். கலாச்சாரம் பண்பாடு என்பன எந்தெந்த விடயங்களில் எப்படிக் காக்கப் பட வேண்டும் என்று தெரியாமல் தாம் குழம்புவது மட்டுமல்லாது, வேற்று நாட்டவருடன் பழகினால் தமது பிள்ளைகள் கலாச்சார சீரழிவாளர்கள் ஆகி விடுவார்கள் என்று சொல்லி பிள்ளைகளையும் குழப்புவார்கள்.

இக் கதையிலே வரும் அபிராமியின் அப்பாவும் அம்மாவும் இந்தச் சாதாரணத்துக்குள் தம்மை மாய்த்துக் கொண்ட அப்பாவும் அம்மாவும்தான். நட்புக்குக் கூட வெள்ளையர்களை அண்டக் கூடாது என்ற கணிப்புடன் வாழ்ந்து, மூத்த மகள் சங்கீதா தமிழனான ராகவனால் ஏமாற்றப் பட்ட போது மனந்தெளிந்தவர்கள். பிள்ளைகள் தமிழருக்கேயுரிய தனித் திறமையுடன் சிறந்த புள்ளிகள் பெற்று நல்ல பாடசாலைகளிலும், பல்கலைக் கழகத்திலும் படிப்பவர்கள்.

அபிராமியின் அம்மா பின் தோட்டத்தில் – அவுஸ்திரேலிய மண்ணில் – யாழ்பாணக் கறிவேப்பிலையும், கத்தரியும், பிடலையும், மாமரமும், மல்லிகை, கனகாம்பரமும் நட்டு வளர்ப்பதுவும், அதனால் அங்கு குட்டி யாழ்ப்பாணம் உருவாவதும், அதே நேரம் அங்கு அதே தோட்டத்தில், அவுஸ்திரேலியரால் நாட்டப்பட்ட யூகலிப்ஸ் மரம் கிளை விட்டு வளர்ந்திருப்பதும், அந்த யூகலிப்ஸ் மரத்தை அவுஸ்திரேலிய கவுன்சிலை மீறி வெட்டி எறிய முடியாமற் போவதும் வார்த்தைகளுக்கும் அப்பாற் பட்டு பல விடயங்களைச் சொல்கின்றன. அந்த யூகலிப்ஸ் மரத்தையே கொழுகொம்பாக்கி பிடலங்கொடி அதில் பற்றிப் படர்ந்து விடுவது, கந்தராஜா கதையில் எதைச் சொல்ல வந்தாரோ, அதை ஒரு அழகிய ை ?க்கூ வுக்குள் அடக்கி விட்டது போன்றதான அற்புதமான சங்கதி.

முன்னிரவு மயக்கங்கள் சிறுகதையை வாசிக்கும் போது பாமாவிஜயம் படத்தில் இடம் பெற்ற

வரவு எட்டணா

செலவு பத்தணா

அதிகம் இரண்டணா

கடைசியில் தும்தளா

என்ற பாடல்தான் நினைவில் வருகிறது.

சுந்தரமூர்த்தியும் மனைவியும் அவர்களது பிள்ளைகளுடன் சிட்னியில் நடக்கும் நண்பனின் மனைவியின் நாற்பதாவது பிறந்த நாளுக்குச் சென்று வருவதே கதை. அது ஒரு சந்தோசமான சந்திப்பாக இல்லாமல் பொறாமையும், எரிச்சலும் கலந்ததாக இருப்பதுவும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், கோயில்களையும், விழாக்களையும் உண்மையான கலாச்சார உயர் நோக்கின்றி தமது சுயபிரதாபத்துக்கான கருவிகளாகப் பாவித்துக் கொண்டு கலை வளர்க்கிறோம் என்று சொல்லுவதுவும் மனித மனங்களின் அறியாமையைப் பறை சாற்றுகின்ற அவலங்கள். வெளிப் பகட்டுக்காக தமக்கு மிஞ்சிய செலவுகளும், பெருமை காட்டுவதற்காக கார், வீடு என்ற பிரதாபங்களும்…. நினைத்துப் பார்த்தால் சிரிப்பை ஏற்படுத்தும் சின்னத் தனங்கள். இந்த விரலுக்கு மீறிய செயற்பாடு அவுஸ்திரேலிய மண்ணில் மட்டும் என்றில்லாமல் புலம் பெயர்ந்தோர் சிலர் மத்தியில் அனேகமான எல்லா நாடுகளிலும் வேரூன்றி விளையாடுகிறது. வாழ்வதற்கு வீடும், வசதிக்குக் காரும், பழகுவதற்கு மனிதரும் என்றில்லாது காருக்கும், வீடுக்கும், யாருக்குமாய் வாழ்வு என்பதாய் மாறிக் கொண்டிருக்கும் மாயையில் குடும்பத்தில் நிலவ வேண்டிய அமைதியும், சந்தோசமும் தொலைந்து போவதை கதை சொல்கிறது.

உயரப் பறக்கும் காகங்கள் சிறுகதையில் ஆசிரியர் மீண்டும் தன்னிலையில் நின்று கதை சொல்கிறார். தாயகத்தில் இருந்து ஷம்பியா, அவுஸ்திரேலியா என்று ஊர்க்கோலம் போகும் இக்கதை பள்ளிக் கூடத்திலிருந்து இன்றைய வாழ்வு வரை பயணிக்கிறது. தாயகத்திலேயே கொழும்பு மோகம், நுனி நாக்கு ஆங்கிலம் என்று வாழ்பவர்கள் இருக்கிறார்களே. அப்படியான ஒரு பேர்வழிதான் இவரோடு ஒன்றாகப் படித்த சுகுமார்.

இயல்பான வாழ்விலிருந்து விலகி, உயர்வென்று நினைத்து பகட்டாய் வாழ்ந்து பறங்கிப் பெண்ணை மணந்து, அவுஸ்திரேலியப் பெண்ணை மணந்து கடைசியில் இலங்கைத் தமிழ்ப்பெண்ணையே மணந்து நிம்மதி தேடிய சுகுமார் வடை, கொழுக்கட்டையுடன் இவர் வீட்டுக்கு வருகிறார். ஒரு தசாப்தகாலம் சிட்னியில் வாழ்ந்தாலும் யாழ்ப்பாணக் கலாச்சாரத்துடன் வரவேற்கும் இவர் மனைவி அவரை இன்முகத்தோடு வரவேற்கிறார். இதில் கந்தராஜா கூற முனைந்த யாழ்ப்பாணக் கலாச்சாரமும், வரவேற்பும், அழகும் இதமானவையே. தமிழ்மணம் வீசும் காதலும் அதனால் கிடைக்கப் போகும் அடையாளங்களும் தமிழ் சந்ததிக்கான வித்துக்களே. இருந்தாலும் வெள்ளை மனைவியர்கள் தவறானவர்கள், யாழ்பாணப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாலேயே சுகுமார் இப்போது நிம்மதியாக வாழ்கிறார் என்பதான கதையின் பிரமைத் தொனியை என்னால் முற்று முழுதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

முடிவாக,

144 பக்கங்களே கொண்ட இப் புத்தகத்தின் உள்ளே, சில இடங்களில் கருத்தையே மாற்றும் அளவுக்கு எழுத்துப் பிழைகள் சற்று அதிகமாகவே காணப் படுகின்றன. எதிர்காலத்தில் இப்படியான பிழைகள் தவிர்க்கப் பட வேண்டியது அவசியம். புத்தகத்துக்கான பதிப்புரையை பொன்.அநுராவும் முன்னுரைகளை செங்கை ஆழியனும், இந்திரா பார்த்தசாரதியும் எழுதியுள்ளார்கள்.

புலம்பெயர்ந்தோரது சமூகப் பிரச்சனைகள், பழக்க வழக்கங்கள், இரட்டைக் கலாச்சாரத்துடனான தத்தளிப்புகள், புலம் பெயர்ந்திருக்கும் மண்ணின் தன்மைகள், கலாசாரங்கள்…. என்று சமூகப் பிரக்ஞை நிறைந்த எமக்கு எட்டாத பல புதிய விடயங்களை ஆசி.கந்தராஜா எமக்குத் தந்துள்ளார். தொடர்ந்தும் கதை எழுதுவதிலான உத்திகளிலும், சூட்சுமங்களிலும் மேலும் மேலும் மேன்மை பெற்று இன்னும் இன்னும் சிறப்பான படைப்புக்களை இவர் எங்களுக்குத் தர வேண்டும்.

சந்திரவதனா

யேர்மனி

—-

chandraselvakumaran@gmail.com

Series Navigation

சந்திரவதனா

சந்திரவதனா