அ வ னா ன வ ன்

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

மு. முருகேஷ்


வண்டியை நிறுத்தி ஸ்டாண்டைப் போட்டான்.

அப்படியே முன்வந்து கண்ணாடியைப் பார்த்தான். கலைந்த தலைமுடியை சரி செய்தான். முகம் சாதாரணமாய் இருந்தது. தாடையை ஆட்டி, கண்களைச் சுருக்கி, பல்லைக் கடித்தான்.

கண்ணாடியில் விரிசல் விழுவது போல முகம் சிவந்து இறுக்கமானது. ‘இது போதும்’ என்று வீட்டின் வாசல் முன் வந்தான்.

தொண்டையைக் கனைத்துக் கொண்டே…

”ஏம்பா… சுந்தரோம், வெளிய வா!” என்றான்.

உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை. லேசாய் எரிச்சலானான். மீண்டும் குரல் கொடுக்க எத்தனித்த போது… உள்ளேயிருந்து ஒரு பெண் வெளியே வந்தாள்.

”அவர் இல்லீங்களே…!” சுரத்தேயில்லாமல் சொன்னாள்.

சட்டென்று பெருங்குரல் எடுத்துக் கத்தத் தொடங்கினான்.

”என்னா நினைச்சுக்கிட்டு இருக்காரு? கடனெ வாங்கி மாசம் மூணாச்சு. வட்டியும் கட்டாம, அசலையும் பைசல் பண்ணாம…?”

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் ஓரிருவர் வெளியே வந்து வேடிக்கை பார்த்தனர்.

அந்த வீட்டுப் பெண்ணுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கண்கள் கலங்கி விட்டன. சற்றி நின்று பலர் வேடிக்கை பார்ப்பது வேறு சங்கடத்தைக் கூடுதலாக்கியது.

”நஷ்டத்தில் போகுதுன்னு மில்லை மூடிட்டாங்க. வேற வேலை வெட்டியும் இல்லாம சாப்பாட்டுக்கே ரொம்பக் கஷ்டப் படறோங்க…”

சேலைத் தலைப்பால் பொங்கிவந்த அழுகையை அடக்கிக் கொண்டாள்.

”கடனை வாங்கும்போது மட்டும் எப்பிடியாவது கட்டிடறேன்னு சொல்லுவீங்க. ஆனா, கொடுத்த கடனைக் கேட்க வந்தா சாப்பாட்டுக்கே வழி இல்லேன்னு புலம்புவீங்க. எங்கிட்ட இந்தச் சாக்கு போக்கெல்லாம் சொல்றத விட்டுட்டு, ஒழுங்கா வர்ற ஒண்ணாந்தேதி வட்டியோட அசலையும் பைசல் பண்ற வழியப் பாருங்க. இல்லே… நான் மனுசனா இருக்க மாட்டேன். மானம் ரோசமிருந்தா, இன்னொரு வாட்டி வீட்டுக்கு வர்ற மாதிரி வச்சிடாதங்க!”

கொஞ்சமும் ஈரமற்ற கறாரான வார்த்தைகள். சுற்றி நின்ற பலருக்கும் கூட என்னவோ போலாகி விட்டது. என்னா மனுசன் இவன்… என்பதுபோல இவனைப் பார்த்தனர்.

வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினான். அவன் கிளம்பிய புழுதியும், புழுதிப் படலமும் அந்த இடத்திலேயே சுற்றிச் சுழலத் தொடங்கியது.

<*>

தெருவின் இரண்டு பக்கமும் மனிதத் தலைகள். வாயிலும், வயிற்றிலும் அடித்தபடி கதறும் பெண்கள்.

கண்கள் நிலைகுத்த, நாக்கு வெளித் தள்ளப்பட்டு, வாழ வழியற்று து¡க்கில் தொங்கிய நான்கு ஜீவன்கள்.

”பாவம் அப்ராணி மனுசங்க. மில்லு வேலையும் இல்ல. கூலி §லைக்கிம் வழியில்ல. வெறும் பச்சத் தண்ணியக் குடிச்சிட்டுக் காலத்தை ஓட்டலாம்னா, கடன் கொடுத்தவன், மானம் போறா மாதிரி ரோட்ல விட்டுக் கேள்வி கேட்குறான். வேற வழி தெரியாம இப்பிடிக் குடும்பமே மொத்தமாத் து¡க்குல தொங்கீட்டாங்களே… இவங்களை இப்பிடியாக்கின அந்தப் பாவிக்கு நல்ல சாவே வராது… நாக்கில நரம்பில்லாமப் பேசுனானே…”

அழுதுகொண்டே பெண்கள் கொட்டித் தீர்த்த வார்த்தைகளுக்குக் கால் முளைத்து எழுந்து, அப்படியே விர்ரென்று கிளம்பி, அவனருகே வந்து கழுத்தை இறுக்கிப் பிடித்தன.

சுவாசிக்க முடியாமல் திணறினான். நெஞ்சு பயமாய்த் துடித்தது. கால்களை உதைத்துக் கொண்டான்.

‘ஆ…’வெனப் பதறிக் கொண்டு எழுந்தான். உடம்பெங்கும் வியர்த்திருந்தது. பக்கத்தில் குழந்தைகள் நல்ல து¡க்கத்தில் இருந்தார்கள்.

”என்னய்யா, எதாவது கெட்ட கனா கண்டியா? தண்ணியக் குடிச்சிட்டுத் து¡ங்கு…” அவன் மனைவி மேகலா எழுந்து போய்த் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். அப்படியே வாங்கி மடக் மடக்கெனக் குடித்தான். வாயிலிருந்து வழிந்து மேலெல்லாம் ஈரமானது. தலை விண் விண்ணென்று கனத்தது. படுத்தாலும் இனி து¡க்கம் வராது.

இந்த அவஸ்தை இன்றா நேற்றா… இந்த இருபது வருஷமாய்ப் படுகிற வேதனைதானே?

எழுந்து வெளித் திண்ணைக்கு வந்தான். வேப்ப மரக் காற்று முகத்தில் மோதியது. அப்படியே கண்களை மூடிக் கொண்டான்.

மனசின் உள்வெப்பம் வெளியேறுவது போன்ற உணர்வு.

<*>
அப்பா இறந்தபோது திருப்பதிசாமிக்கு வயசு பதினாறுதான். எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அப்பாவுக்கு வைத்த கொள்ளி இவனது படிப்பையும் சேர்த்தே பொசுக்கியது.

இனியும் இந்த கிராமத்தில் என்ன செய்ய? சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைமை. அம்மா வியாதிக்காரி. அம்மாவுடன் புறப்பட்டு இந்த சிறு நகரம் பெயர்ந்தான். புண்ணியகோடி அவனுக்குத் து¡ரத்து உறவு. அவனுக்கு அடைக்கலம் அளித்ததை மறக்க முடியுமா?

அவர் பார்ட்னராய் இருந்த ·பைனான்ஸ் கம்பெனியில் சேர்த்து விட்டார். மாசம் ஐந்நு¡று ரூபா சம்பளம். பெடல் இல்லாத சைக்கிள் ஒன்றையும், நாலு பக்கமும் மஞ்சள் பூசிய அட்ரஸ் நோட்டு ஒன்றையும் அவனிடம் தந்தார். வட்டி வசூல் செய்து வருகிற வேலை திருப்பதிசாமிக்கு வாங்கித் தந்தார்.

இவனும் பொழுதெல்லாம் சுத்தி சுத்தி வந்தான். வசூலுக்குப் போகிற எல்லா இடத்திலும் தயாராய் பதிலொன்றை வைத்திருந்தார்கள். கேட்டுக் கேட்டு காது வலியெடுத்ததுதான் மிச்சம்.

கன்னத்தில் குழி விழுகிற சிரிப்பும், யாரிடமும் அதட்டலாய்க் கேட்காத குழந்தைக் குரலுமான திருப்பதிசாமி அநேக இடங்களில் வெறுங் கையோடு திரும்பி வந்தான்.

புண்ணியகோடிக்கும் பார்ட்னருக்கும் ஒருமாதிரியாகி விட்டது.

”என்னடா வெறும் பதிலைக் கேட்டுக்கிட்டு வரவா உன்னை அனுப்ச்சது? எதாச்சும் சத்தங் கொடுத்தாத்தான் காசு பெரளும் தெரியுதா?” என்றார் புண்ணியகோடி.

”இவனுக்கு முகமே சரியில்லையே. எப்பப் பார்த்தாலும் சிரிக்கிற மாதிரியே இருக்கே? கோபமா ரெண்டு வார்த்தை சொன்னாத்தானே பயந்திட்டுக் கடனைக் குடுப்பாக…” பார்ட்னர் புண்ணியகோடியைப் பார்த்துச் சொன்னார். நீ வெச்ச ஆள்த்தானய்யா? – என்கிறாப் போல இருந்தது அந்த அதிருப்திப் பார்வை.

”இல்ல. இவனை நான் தயார் பண்றேன்…” என்றார். திருப்பதிசாமியைப் பின்னால் உட்காரச் சொன்னார். பைக் கிளம்பியது. உருமிக் கிளம்பிய வண்டியும் அதன் வேகமும்… திருப்பதிசாமி லேசாய் நடுங்கினான்.

வேலாயுதம் வீட்டின் முன் பைக்கை நிறுத்தினார் புண்ணியகோடி. ”இப்ப பாரு” என்று அவன் காதில் கிசுகிசுத்தார். பின் அவன் வீட்டு வாசலுக்குப் போய் அதட்டலாய்க் கத்தினார்.

”டோய் வேலாயுதோம், வா வெளியே… கடனை வாங்கிக்கிட்டு இப்பிடி அலைய வுடுறியே, நீயெல்லாம் நாணயமான மனுசனா?… சோத்துல உப்புதான் போட்டுத் தின்றியா, இல்ல…”

வேலாயுதம் பதறிப் போய் வெளியே வந்தான்… இத்தனை நாளாய் திருப்பதிசாமி வந்து நின்றபோதெல்லாம் நாளைக்கி நாளைக்கி… என்று அலட்சியமாய் அனுப்பியவனா இவன், என்றிருந்தது.

”இல்லிங்க சார்… எப்டியாவது…” என்று குழைகிறான் வேலாயுதம்.

”யோவ் இந்தச் சாக்கு போக்கெல்லாம் என்ட்ட வேணா. என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது. இன்னும் ரெண்டே நாள். அசலும் வட்டியுமா கணக்கைச் சரி செய்யல, அப்பறம் நான் என் வழியில போயி வசூல் செய்றா மாதிரி ஆகிப் போவும் பாத்துக்க…” கடுகடுப்பும் ஒங்காரமுமாய்ப் புண்ணியகோடியின் குரல் அந்தப் பிரதேசத்தையே அதிர வைப்பதாய் இருந்தது. அவர் முகம் சிவந்து உடம்பே குலுங்கியது ஆத்திரத்தில்.

வேலாயுதம் பாதி உயிர் பறிபோன நிலையில் செயலற்று நின்றான்.

”வாடா” என்றார் அவனைப் பார்த்து. பைக் படபடவென்று கிளம்பியது. ஓடிப்போய்ப் பின்னால் தொற்றிக் கொண்டான். ”இனி பாரு. ரெண்டே நாள்ல பய கைல காசோட வந்து நிக்கிறானா இல்லியான்னு…” திரும்பிப் பார்க்காமல் இவனிடம் பேசினார். வண்டி ஓடிக் கொண்டிருந்தது.

திருப்பதிசாமிக்கு எது புரிந்ததோ இல்லையோ, கடனை வசூலிக்கும் வழி தெளிவாய்ப் புரிந்தது.

<*>
அந்தா இந்தான்னு வருஷமும் இருபது ஓடிப்போச்சு. திருப்பதிசாமி கல்யாணமும் முடித்து, இப்போது அவன் ரெண்டு பிள்ளைங்களுக்குத் தகப்பன். அந்தத் துருப்பிடித்த சைக்கிள் மாத்திரம் மாறவேயில்லை.

”இங்க பாருப்பா, நான் கடைசியாச் சொல்லிட்டேன். கடனுக்கு வட்டி மாத்திரமாவது வந்து கட்டுற வழியப் பாரு. இல்லே ரோட்டுல கழுத்தில் துண்டைப் போட்டுக் கேக்கிறாப் போல ஆய்ப்போகும் பாத்துக்க…”
கோபமாய்ச் சொல்லிவிட்டு சைக்கிளை மிதித்தான். கம்பெனி வர இறங்கிக் கொண்டான்.

வாசலில் புண்ணியகோடியும் பார்ட்னரும் சேரைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ‘பய தேறிட்டான்…’ என்கிறதாய் அவர்கள் அவனை மகிழ்ச்சியுடன் பார்த்தார்கள். அங்கிருந்தே பார்த்துக் கொண்டிருந்தார்கள் போலும்.

<*>
பழைய டைரிக்குள்ளிருந்து கீழே விழுந்தது அந்தப் புகைப்படம். ஏழாம் வகுப்பில் மற்ற பிள்ளைங்களுடன் பள்ளிக்கூடத்தில் எடுத்தது. ரெண்டாவது வரிசையில் தலை நிறைய எண்ணெய், அழுந்த வாரிய தலை. கன்னக் குழி. கைகளைக் கட்டிக் கொண்டு சிரித்தபடி நின்றிருந்தான் திருப்பதிசாமி… எதையோ தேடப் போக எதுவோ கிடைக்கிறது…

சற்று நேரம் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் – ‘எஞ் சிரிப்பாணித் தங்கமே…’ – அம்மா அவனை அப்படித்தான் கொஞ்சும்.

பையன்கள் ரெண்டு பேரும் அப்பா இருக்கிற பயத்தில் குனிந்தபடி பாடம் படித்துக் கொண்டிருந்தார்கள்.

”ஏல இங்க வாங்க…” அவனது குரல் அதிர்வில் பயந்து விட்டார்கள் அவர்கள்.

குரலை சற்று தணித்து ”சும்மா வாங்கல…” என்றான். அவர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர்.

”அப்பா பக்கத்துல வாங்கல” நெருக்கமாய்ப் பிள்ளைங்களை அணைத்துக் கொண்டான். பிஞ்சு உடல்கள் பயத்தில் உதறின.

”எலேய் அப்பாவோட பள்ளிக்கோட படம்டா இது… இதுல அப்பா எங்கருக்கேன் சொல்லுங்க பாப்பம்…”

முகத்தில் மெலிதான ஆர்வம் கிளைக்க பிள்ளைங்களுக்குப் படத்தைக் காட்டினான்.

பெரியவன் கீழ்வரிசையில் ஒருத்தனைக் காட்டினான். ”இதாப்பா?”

அது இவனில்லை. சிடுமூஞ்சி வரதராசன் அல்லவா அது?

சின்னவன் ”இதோ!” என்று காட்டுகிறான். கோபக்கார மாரிமுத்து…

திருப்பதிசாமிக்குச் சலிப்பேற்பட்டது.

அதற்குள் சின்னவன் அம்மாவிடம் அந்தப் படத்தை எடுத்துப் போனான். ”அம்மா இதுல அப்பா எங்க இருக்காங்க காட்டுங்கம்மா…”

மேகலாவுக்கும் குழப்பமாய் இருந்தது. தவறாய் இன்னொரு நபரையே அவளால் காட்ட முடிந்தது.

திருப்பதிசாமி பொறுமை யிழந்தான். ”யாருமே சரியாச் சொல்லல… அந்தா ரெண்டாவது வரிசை. நாலாமத்த ஆளு. ஷோக்காத் தலைய வாரிட்டு நிக்கல, சிரிச்சிக்கிட்டு, கையக் கட்டிக்கிட்டு…”

நம்பவே முடியவில்லை பையன்களால். மேகலா அவனைப் பார்த்தாள். ”இந்த முகத்தையும் சிரிப்பையும் எப்ப தொலைச்சீங்க?” என்று கேட்டாள்.

*****

Series Navigation

மு. முருகேஷ்

மு. முருகேஷ்